நீலகிரி

நீலகிரி 


இயற்கையின் வரங்கள்


நீலகிரி

 
Nilgiri data

நீலகிரி மாவட்டம் இந்திய மாநிலமான தமிழ்நாட்டின் முப்பதொன்று மாவட்டங்களில் ஒன்று. இம்மாவட்டம் மேற்குத் தொடர்ச்சி மலையில் அமைந்துள்ளது. இம்மலைத்தொடரில் உள்ள நீலகிரி என்னும் மலையாலேயே இம்மாவட்டம் இப்பெயர் பெற்றது. இதன் தலைநகர் உதகமண்டலம் ஆகும். இங்குள்ள உயரமான மலைமுடி தொட்டபெட்டா ஆகும். குன்னூர், கோத்தகிரி, கூடலூர், அரவங்காடு ஆகியன இம்மாவட்டத்தில் உள்ள பெரிய ஊர்கள்.
எல்லைகள்: மேற்குத்தொடர்ச்சி மலையில் அமைந்த மலை மாவட்டம். இதன் மேற்கே கேரள மாநிலமும், வடக்கில் கர்நாடக மாநிலமும், கிழக்கிலும், தெற்கிலும் கோயம்புத்தூர், ஈரோடு மாவட்டங்களும் எல்லைகளாக அமைந்துள்ளன.
வரலாறு: இறுதி மைசூர் போரையடுத்து நீலகிரி பீடபூமி கிழக்கிந்தியக் கம்பெனியின் ஆளுகைக்குட்பட்டது.
1800-இல் டாக்டர் பிரான்சிஸ் புச்சானன் என்பவர் இப்பகுதிக்கு கால்நடையாகச்சென்றடைந்தார். 1812-இல் வில்லியம் கீஸ் மற்றும் மக்மோகன் என்னும் இரு ஆங்கிலேயர் இப்பகுதிக்குச் சென்றனர்.
கோயம்புத்தூர் ஆட்சித்தலைவராக இருந்து கல்லிவனே கோவையிலிருந்து நீலகிரிக்கு முதல் பாதை அமைத்தவர். உதக மண்டலத்தைக் கண்டுபிடித்தவரும் இவரே..
1882-இல் இது ஒரு தனி மாவட்டமானது.
மக்கள்
2001-ஆம் ஆண்டுக் கணக்கெடுப்பின் படி இம்மாவட்டத்தின் மக்கட்தொகை 7,62,141. கல்வியறிவு 81.44%. இது தமிழகத்திலேயே அதிக கல்வியறிவு பெற்ற மாவட்டங்களுள் ஒன்று.
இம்மாவட்டத்தில் பல பழங்குடி இன மக்கள் வசிக்கின்றனர். தோடர் இவர்களுள் குறிப்பிடத் தகுந்தவர்கள். இவர்கள் தவிர பணியர்கள், படகர்கள், பெட்ட குறும்பர், கசவர் ஆகியோரும் உள்ளனர். கோத்தகிரிப் பகுதிகளில் கோத்தர் எனும் பழங்குடியினர் வாழ்கின்றனர்.இருளர்கள் கீழ்பில்லூர் பகுதியில் வாழ்கிறார்கள்.
நீலகிரி மாவட்டத்திற்கு நல்ல சாலை வசதி உள்ளது. மேலும் மேட்டுப்பாளையத்தில் இருந்து தொடர்வண்டிப் பாதையும் உள்ளது. பற்சக்கர முறையில் இருப்புப்பாதை அமைக்கப்பட்டுள்ளது இதன் சிறப்பு. ஐ.நா கல்வி, அறிவியல், பண்பாட்டு நிறுவனத்தால் உலகப் பாரம்பரியக் களங்களுள் ஒன்றாக நீலகிரி மலை இரயில் பாதை அறிவிக்கப்பட்டுள்ளது.
இம்மாட்டத்தில் எட்டு இடங்களில் நீர் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
குந்தா நீர்மின்னாக்கத் திட்டம்
பைக்காரா ஆகியன இவற்றுள் குறிப்பிடத்தகுந்தன.
இயற்கை இன்னிசைபாடும் மேற்குத் தொடர்ச்சி மலையின் இதயம்
அடிபடைத் தகவல்கள்:
தலைநகர் உதகமண்டலம்
பரப்பு 2,452 ச.கி.மீ.
மக்கள்தொகை 7,62141
ஆண்கள் 2,78,251
பெண்கள் 3,83,790
மக்கள் நெருக்கம் 299
ஆண்-பெண் 1,014
எழுத்தறிவு விகிதம் 80,10
இந்துக்கள் 5,99,147
கிருத்தவர்கள் 87,272
இஸ்லாமியர் 72,766
அட்சரேகை: 100.38-110.49N
தீர்க்கரேகை: 760-770.15E
முக்கிய அணைகள்: பைக்காரா, சாண்டி நல்லா, முக்குருத்தி, அவலாஞ்சி
முக்கிய இடங்கள்
அவலஞ்சி குன்று: ஊட்டியிலிருந்து 25 கி.மீ. தொலைவில் உள்ள மேல் பவானிக்குச் செல்லும் வழியில் உள்ளனது. இங்கிருந்து பார்த்தால் பசுமை பளத்தாக்கும், குளிர் நீர்த்தேக்கங்களும் பளிச்சென தெரியும்.
தாவரவியல் பூங்கா(): எம்.சி. ஐவோர் என்ற ஆங்கிலேயரால் 1947-67 காலகட்டத்தில் உருவாக்கப்பட்டது. இதன் பரப்பளவு 22 ஹெக்டேர் மலர்கள், செடிகள், மூலிகைகள் என அரிய வகைத் தாவரங்களை இங்கு காணலாம்.
நீலகிரி மலையைக் காண்பதற்கு நீலமாக இருப்பதால், ‘நீலகிரி’ என அழைக்கப்படுகிறது.உதகமண்டலம் என்ற பெயருக்கு பல வகைகள் காரணங்களாக கூறப்படுகின்றன. ‘ஒத்தைக் கல் மந்து’ என்ற பெயரே உதகமண்டலம் ஆயிற்று என தோதவர் சொல்கின்றனர். மூங்கில் காடு இருந்தாலும், நீர் அதிகம் இருந்ததாலும் இப்பெயர் பெற்றது என பலவாறு உரைக்கின்றனர்.
பொது விவரங்கள்:
எல்லைகள்:
கிழக்கில் கோயம்புத்தூர், பெரியார் மாவட்டங்களையும்; மேற்கிலும், தெற்கிலும் கேரள மாநிலத்தையும்; வடக்கில் கர்நாடக மாநிலத்தையும் கொண்டு விளங்குகிறது.
உள்ளாட்சி நிறுவனங்கள்:
நகராட்சி-2: உதவை, குன்னுர். நகரியங்கள்-1, ஒன்றியங்கள்-4, பேரூராட்சிகள்-21. பஞ்சாயத்துக்கள்: 27, கிராமங்கள்-54.
சட்டசபை தொகுதிகள்-
1; குன்னுர், உதகமண்டலம், கூடலூர்.
பாராளுமன்றத் தொகுதி-
1, நீலகிரி.
கல்வி:
பள்ளிகள்: தொடக்கப்பள்ளி 379; நடுநிலை 59; உயர்நிலை 57; மேநிலை 39; கல்லூரி 3; தொழிற்கல்லூரிகள் 7.
வரலாறு:
வரலாற்று காலந்தொட்டு இப்பகுதி சேரநாட்டின் ஒரு பகுதியாகும். இம்மாவட்டத்தில் காடுகளும், மலைகளும் மிகுதியாக காணப் படுகின்றன. அதனாலே இங்கு பழங்குடியினர் அதிகமாக வாழ்ந்து வருகின்றனர். கி.பி. 10 ஆம் நூற்றாண்டிலிருந்து இப்பகுதிகளை கங்கர்கள், கடம்பர்கள், ஹொய்சானர்கள், நாயக்கர்கள், மைசூர் அரசர்கள், கேரளவர்மா முதலியோர் இப்பகுதிகளை ஆண்டதற்கான விவரமான வரலாற்று ஆதாரங்கள் கிடைத்துள்ளன. ஹொய்சாள மன்னன் தன்னாயகா ‘நீலகிரி கொண்டான்’ என்ற சிறப்புப் பெயரோடு ஆண்டதாகத் தெரிகிறது.
15 ஆம் நூற்றாண்டில் இப்பகுதிகளுக்கு விஜயம் செய்த சேசுசபைத் துறவிகள் இப்பகுதிகளைப் பற்றி தம் குறிப்பேடுகளில் விவரித்துள்ளனர். ஆங்கிலேயர் இப்பகுதிகளை ஆளத் தொடங்கிய பின்னரே பல நகரங்களும் வசதிகளும் பெருக ஆரம்பித்தன. சென்னை கவர்னர் 1829 இல் உதகைக்கு விஜயம் செய்தார். அவர் வருகைக்கு முன்பே சுல்லிவன் என்பவர் முயற்சியில் கடலூர்ப் பகுதி வளர்ச்சி யடைந்திருந்தது. 1830 இல் ஜேம்ஸ் தாமஸ் கோவை மாவட்ட ஆட்சியராக இருந்தபொழுது, நீலகிரி மாவட்ட மலைகளில் பெரும்பகுதி, கோத்தகிரி தவிர்த்து, மலபாரில் இணைக்கப்பட்டன. 1831-32 இல் அவலாஞ்சி, சிஸ்பாரா, குந்தா, பகுதிகளில் சாலைகள் காப்டன் முர்ரே என்பவரின் தலைமையில் போடப்பட்டன.
1832 இல் சர்ச் மிஷனரி சொசைடி தோற்றுவிக்கப்பட்டு ஆங்கிலேயப் பள்ளி ஒன்றும் கட்டப்பட்டது. 1868 ஆம் ஆண்டுச் சட்டம், நீலகிரி மாவட்டத்திற்கு தனி மாவட்ட ஆட்சியரை நியமிக்கும் அதிகாரத்தை வழங்கியது. 1893 இல் ஆக்டர்லோனி பள்ளத்தாக்கும், 1877 இல் வடனாடு பகுதியில் தென்கிழக்குப் பகுதியிலும் நீலகிரி மாவட்டத்துடன் இணைந்தன. படிப்படியாக மாவட்டம் வளர்ச்சியடைந்தது. ஆங்கிலேயரால் இங்கு காப்பி, தேயிலை, சீன்கோனா பழவகைகள் அறிமுகப்படுத்தப்பட்டு சாகுபடி செய்யப்பட்டன.
இயற்கை வளங்கள்
ஆறுகள்:
நீலகிரி மலைவளம் மிகுதியுள்ள மாவட்டம். அதனால் இங்கு மலைகளிலிருந்து ஓடிவரும் ஓடைகளால் பல ஆறுகள் உருவாகியுள்ளன. அவைகளில்: சீகூர் ஆறு, சாந்தி நல்லா ஆறு, முதுகாடு ஆறு, கல்ஹட்டி அருவி, செயின்ட் கேதரின் அருவி, கூனுர் ஆறு, காட்டேரி அருவி, குலகம்பை ஆறு, குந்தா நதி, பிலிதடாஹல்லா ஆறு, பைக்காரா நதி, மேயாறு முதலியன உள்ளன.
அணைகள்:
பைக்காரா, முக்குருத்தி, சாண்டிநல்லா, சிளன்மார்கன், மரவகண்டி, அப்பர் பவானி, எமரால்டு, குந்தா, அவலாஞ்சி, போர்த்திமந்து, பார்சன்ஸ் வேலி, முதலிய அணைகளிலிருந்து நீர் தேக்கப்பட்டு விவகாரத்திற்கும், நீர்மின் உற்பத்திக்கும் பயன்படுத்தப்பட்டு வருகின்றன.
பைக்காரா:
அணையின் நீளம் 705 அடி. 100 அடி ஆழமுள்ளது. 3080 அடி உயரத்திலிருந்து தண்ணீர் கீழேயுள்ள மின்சார உற்பத்தி நிலையத்திற்கு செங்குத்தாய் வீழ்கிறது. இவ்வணை மூன்று கட்டமாக முடிக்கப்பட்டு 1933 இலிருந்து இன்று பலவாறு வளர்ச்சியடைந்துள்ளது. இன்று 13,600 கிலோ வாட் ஆம்பியர் மின்சாரம் உற்பத்தி செய்யக்கூடிய இரண்டு இயந்திரங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
மோயாறு திட்டம்:
பைகாராவின் நான்காவது கட்டமாகும் இவ்வணை. இங்கு 12,000 கிலோவாட் ஆம்பியர் மின்சாரம் உற்பத்தி செய்யக் கூடிய மூன்று இயந்திரங்கள் உள்ளன. இந்த திட்டத்தின்படி கட்டப்பட்டுள்ள அணைக்கு மரவகண்டி அணை என்று பெயர். இத்தேக்கத்தின் மூலம் 2 கோடி 80 லட்சம் கன அடி தண்ணீர் தேக்க முடியும்.
குந்தாமின் திட்டம்:
இந்திய-கனடா நாட்டு ஒப்பந்தப்படி ரூ.12.5 லட்சம் உதவியுடன் இத்திட்டம் 1956 ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்டது. குந்தா, பெரும்பஹல்லா, காரமடை, பல்லூர், உதகை (அருகே) என 5 இடங்களில் அமைந்துள்ளன. 1961 ஆம் ஆண்டு உற்பத்தி 1,40,000 கிலோ வாட்டுகளாகும். மற்ற மூன்று அணைகளிலும், 1,90,000 வாட்டுகள் உற்பத்தி செய்யப்படுகின்றன.
சாந்தி நல்லா நீர்த்தேக்கம்:
உதகை-மைசூர் பாதையில், உதகையிலிருந்து 11 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. 540 லட்சம் யூனிட் அதிக மின்சக்தி இங்கு பெறப்படுகிறது.
காமராஜ் சாகர்: உதகையிலிருந்து 7 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கு 540 லட்சம் யூனிட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது.
காட்டுவளம்:
1948 அக்டோபர் முதல் மரம் நடுவிழா தொடங்கியது. 20 ஆண்டு திட்டம் வகுக்கப்பட்டு 3000 ச.மைல் பரப்புக்கு காடுகளைக் கையகப்படுத்தி சவுக்கு, யூகலிப்டஸ், வாட்டில் பட்டை மரங்களாகவும் ஏராளமாக நட்டு வளர்க்கத் தொடங்கினர். இதன் மூலம் பல விரிந்த காடுகள் ஆயிரக்கணக்கான ஏக்கர்களில் பரவியுள்ளன. தேக்கும், ரப்பரும் அதிகளவு வளர்ந்துள்ளன. இக்காடுகளில் உள்ள மூலிகைகள், இந்திய மருத்துவ ஆராய்ச்சித் துறையால் ஆய்வு செய்யப்பட்டு, நன்கு பராமரிக்கப்படுகின்றன. இதன் மூலம் பல அரிய மருந்துகள் கண்டுபிடிக்கப்பட்டு, மக்களுக்கு உதவுகின்றன.
பழச்சாகுபடி:
1946 ஆம் ஆண்டிலிருந்து பழங்களைப் பற்றிய ஆய்வுகள் நடந்து வருகின்றன. அதன்படி நீலகிரியில் கூனுர், பர்லியார், கல்லார் என்ற இடங்களில் ஆய்வு நிலையங்கள் அமைத்திருக்கிறார்கள். அங்கு 6000 அடி, 2,500 அடி, 1500 அடி உயரங்களில் சாகுபடி செய்யக்கூடிய பழ இனங்களைப் பற்றிய ஆய்வுகள் செய்யப்படுகின்றன. கூனுரில் முக்கியமாக ஆப்பிள், பேரி, ப்ளம் முதலியனவும், பரிலியாரிலும், கல்லாரிலும் மங்குல்தான், ஆரஞ்சு, பலாவும்; ஏலம், ஜாதிக்காய், கிராம்பு, முதலிய வாசனைப் பொருட்களும் உற்பத்தியாகின்றன.
கால்நடை வளம்:
நீலகிரி மாவட்டத்தில் கால்நடைகள் நிறைய வளர்க்கப்படுகின்றன. தோதவர்கள் என்ற பழங்குடியினர் எருமைகள் நிறைய வளர்ப்பதால் அவர்களை ‘எருமைகளின் நண்பர்கள்’ என்றே குறிப்பிடுகின்றனர். நீலகிரி மாவட்டத்தில் காளை மாடுகள் விநியோகத் திட்டம் மலைவாழ் மக்களுக்கு வழங்கப்படுகிறது. காளைகளை நன்கு பேணி வளர்க்கும் தனிப்பட்டவர்களுக்கு அரசு உதவி செய்கிறது.
ஆட்டுப்பண்ணை:
1948 ஆம் ஆண்டு சுமார் 600 ஏக்கர் நிலத்தில், வெல்லக்கடவுன் என்ற இடத்தில் ஆட்டுப்பண்ணை விஞ்ஞான முறையில் அமைக்கப்பட்டு, செயல்பட்டு வருகிறது. சாந்தி நல்லா என்ற இடத்தில் உள்ள செம்மறியாட்டு இனம் ஆண் பெண்ணுக்கு 2.5 கிலோ கம்பள ரோமத்தைத் தருகிறது. ஒரு செம்மறியாட்டினால் 75 ரூ. வருமானம் மாதந்தோறும் கிடைக்கும். இதுபோலவே இந்தியாவிலேயே சிறந்த கம்பளி உரோமத்தைக் கொடுக்கும் ‘நீலகிரி இனம்’ வளர்க்கப்பட்டு கம்பளி உரோகம் தொழில் வளர்ச்சியடைந்து வருகிறது. ஆடுகள் போலவே கோழிகளும் உதகமண்டலம், கூனுர் விலங்கு மருத்துவமனைகளில் பண்ணைகளில் வளர்க்கப்படுகின்றன. பழங்குடிகளில் சில பிரிவுகள் பன்றிகள் வளர்த்து வருவாயைப் பெறுகின்றனர்.
பழங்குடியினர்:
நீலகிரி மாவட்டத்தில் மலைவாழ் மக்களின் தொகை கணிசமாகக் காணப்படுகிறது. இங்கு பாரம்பரியமாக இருந்து வரும் பழங்குடிகள்: 1) இருளர் 2) குறும்பர் 3) பனியர் 4) தோதவர் 5)படகர் 6) கோதவர் 7) நாயக்கர் என்ற ஏழு பெரும் பிரிவுகள் ஆகும். இவர்களில் பழமையான இனத்தவர் தோதவர் ஆவர். தோதவரும், படகரும் உதகமண்டலத்திலும், மற்ற ஐவரும் நீலகிரியிலுமாக வாழ்கின்றனர். இப்பழங்குடிகளில் இருளரே கடுமையான உழைப்பாளிகள். வேளாண்மையிலும் ஈடுபடுகின்றனர். படகர் கல்வி, வாழ்க்கை வசதி, உணவு, வணிகம் போன்றவற்றில் சிறந்து விளங்குகின்றனர். இவர்கள் குடகில் புறப்பட்டு மைசூரில் இருந்து நீலகிரி வந்தவர்களாகும். இவர்கள் பேசும் மொழிகளில் தமிழ், மலையாளம், கன்னடச் சொற்கள் காணப்படுகின்றன. தோதவர் வாழும் இடம் ‘மந்து’ எனப்படும்; படகர்கள் வாழிடம் ‘பதி’ எனப்படும்; அதுபோல கோதவர் வாழிடம் ‘கோகால்’ என அழைக்கப் படுகிறது. குறும்பர் பேசும் மொழியில் நல்ல தமிழ்ச் சொற்கள் இடம் பெறுகின்றன. குறும்பரில் பல வகையுண்டு அதில் பெட்ட குறும்பர் 28 சந்ததிகளாகப் பிரிந்துள்ளனர். இவர்களைத் தவிர ‘கசவர்’ என்ற பழங்குடிகள் நீலகிரி மாவட்டத்தில் சில ஊர்களில் வசிக்கின்றனர். பழங்குடி மக்களிடத்தில் அடிப்படை தேவையை நிறைவு செய்துகொள்ளும் மனப்பான்மையே காணப்படுகிறது. மற்ற மாநில பழங்குடிகளோடு ஒப்பிடும்போது நீலகிரிப் பழங்குடியினர் நல்ல நாகரீகம் பெற்றவர் என்றே சொல்லலாம்.
தொழில் வளர்ச்சி:
பெரிய தொழிற்சாலைகள் 126; சிறிய தொழிற்சாலைகள்-105; தேயிலை தொழிற்சாலைகள் 167;
மிதமான கால நிலை நிலவுவதால் எலக்ட்ரானிக் பொருட்கள் உற்பத்தி அதிகம் உள்ளது. புகைப்படச் சுருள் (இந்து) தயாரிப்பு; துப்பாக்கி மருந்து தொழிற்சாலை போன்றவை குறிப்பிடத்தக்கன.
ஜெரோனியம், பினாயில், யூகாலிப்டஸ் எண்ணெய் போன்றவையும் தயாரிக்கப்படுகின்றன. ஊசி தொழிற்சாலை, புரோட்டின் தயாரிப்பு, போன்றவையும் குறிப்பிடத்தக்கவை.
கொயினா உற்பத்தி:
நீலகிரியில் அரசு சின்கோனா தோட்டம் 2,500 ஏக்கருக்கும் அதிகமான நிலத்தில் பயிராகிறது. ‘நடுவட்டம்’ என்னுமிடத்தில் கொயினா மருந்து உற்பத்தியாகிறது. இது காய்ச்சலுக்கு ஏற்ற மருந்து.
வாட்டில் பட்டை உற்பத்தி நிலையம்:
1948-49 இல் சுமார் 8300 வாட்டில் மரப்பதியங்கள் விநியோகிக்கப்பட்டு இன்று சுமார் 6000 ஏக்கர் நிலத்தில் பயிராகிறது. இப்பட்டையிலிருந்து தைலம் இறக்கப்பட்டு ஏற்றுமதி செய்யப்படுகிறது.
பைரோசைட் எண்ணெய்:
‘பைரீத்ரம்’ செடியின் பூவிலிருந்து ‘பைரோசைட்’ எண்ணெய் எடுக்கப்படுகிறது. இது ஈ கொடு போன்றவற்றைத் தடுக்கும் பூச்சிக் கொல்லி மருந்தான இது இங்கு உற்பத்தி செய்யப்படுகிறது.
யூகலிப்டஸ் எண்ணெய்:
இம்மாவட்டத்தில் அதிகமாக வளர்ந்துள்ள இம்மரத்திலிருந்து எண்ணெய் எடுக்கப்படுகிறது. வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்படுகிறது. சுமார் 7 இலட்சம் ரூபாய்க்கு கூட்டுறவு சங்கம் மூலம் உற்பத்தி செய்யப்படுகிறது.
ஊசி தயாரிக்கும் தொழிற்சாலை:
உதகையிலுள்ள கேத்தியில் தையல் ஊசிகள் கிராமபோன் ஊசிகள், கொக்கிகள் போன்ற 300 விதமான ஊசிகள் செய்யப்பட்டு தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
வெடி மருந்து தொழில்:
மத்திய அரசின் வெடிமருந்து தொழிற்சாலை கூனுரிலிருந்து 4வது மையில் உள்ள அரவங்காட்டில் அமைந்துள்ளது. இங்கு அக்கினி திராவகம், கந்தக திராவகம், துப்பாக்கி மருந்து போன்றவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
கச்சா பிலிம் தொழிற்சாலை:
1967ஆம் ஆண்டில் 14 கோடி முதலீட்டில் இந்துஸ்தான் போட்டோ பிலிம் உற்பத்தி நிறுவனம், மத்திய அரசால் தொடங்கப்பட்டது. ஆண்டுக்கு சுமார் 50,000 ச.மீ. பிலிம் சுருள் தயாராகிறது. 2000 மேற்பட்டோர் பணியாற்றுகின்றனர்.
கூட்டுறவு பால் உற்பத்தி:
1946 ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. 1975 ஆம் ஆண்டு நாள் ஒன்றுக்கு 14,679 லிட்டர் கொள்முதல் செய்யப்படுகிறது. இதன் மூலம் 6890 கால்நடை வளர்ப்போர் பயனடைந்து வருகின்றனர். தீவிர பால் பெருக்குத் திட்டத்தின்படி 59,000 லிட்டராக உயர்ந்துள்ளது.
உருளைக்கிழங்கு:
உருளைக்கிழங்கு உற்பத்தியில் 6 கோடி ரூபாய்க்கும் மேலாக விற்பனை நடந்து வருகிறது. சுமார் 75 இலட்சம் ரூபாய்க்கு காய்கறிகளின் விற்பனை செய்யப்பட்டுள்ளன.
தேயிலை:
நீலகிரி மாவட்டத்தில் மட்டும் 20,000 ஏக்கர் தேயிலை சிறு விவசாயிகளால் பயிர் செய்யப்படுகிறது.
வேளாண்மை:
9.70 இலட்சம் ஹெக்டேர் நிலமே வேளாண்மைக்குப் பயன்படுத்தப்படுகிறது. நெல், இஞ்சி, ஆரஞ்சு, மிளகு நிலக்கடலை ஆகியவை உற்பத்தி செய்யப்படுகின்றன.
இருப்புப் பாதை:
மேட்டுப்பாளையம் முதல் உதகமண்டலம் வரை இரயில் பயணம் செய்ய சுற்றுலா பயணிகள் மிகுந்த ஆர்வம் காட்டுகின்றனர். உதகமண்டலம்-ரன்னி மேடு வரையிலான 23 கி.மீ. இரயில் பாதை தனியார்வசம் விடுவதற்கான ஒப்பந்தம் 1996 இல் கையெழுத்தாகியுள்ளது.
சுற்றுலா மையங்கள்:
உதகை மலைவாசத்தலங்களின் அரசி என்று அழைக்கப்படும் உதகமண்டலம் சுற்றுலா சொர்க்கமாகும். தாவரவியல் பூங்கா, உதகமண்டலம் ஏரி, தொட்டபெட்டா, முதுமலை வன விலங்கு புகலிடம், சிம்ஸ்பார்க், குன்னுர், கோடநாடு வியூ பாயிண்ட், கோத்தகிரி, கல்லட்டி நீர் வீழ்ச்சி உதகை, ஊட்டி, கோத்தகிரி, குன்னுர் மிகச்சிறந்த கோடை வாழிடங்களாகும். இதனால் இந்தியாவின் மற்ற மாநில மக்களும் வெளிநாட்டினரும் பெருமளவில் வருகின்றனர்.
உதகை மலர் கண்காட்சி:
உதகமண்டலத்தில் ஒவ்வோராண்டும் மே மாதத்தில் மலர்க் கண்காட்சி நடைபெறுவது வழக்கம். மலர்க் கண்காட்சி பார்ப்பதற்காக பல வெளிநாட்டவரும் வருகை புரிகின்றனர். இக்கண்காட்சியில் காணவேண்டிய பூக்கள்: பிளாங்கெட் ஃபிளவர், ஸ்வீட் பீ பான்சி, வயோலா, மங்கி பிளவர், கப்பிளவர், பிளாக் பெரிலில்லி, போன்றவை; இத்தகைய 50 வகையான மலர்கள் கண்காட்சியில் இடம்பெறும்.
தொட்டபெட்டா:
கடல்மட்டத்திற்கு மேல் சுமார் 8640 அடி உயரத்தில் அமைந்துள்ளது. உதகை ரயிலடியிலிருந்து 10. கி.மீ. தொலைவில் உள்ளது. இதன் உச்சிவரை செல்ல நல்ல சாலைகள் உண்டு. இங்குள்ள கண்ணாடி அறையிலிருந்து இயற்கைக் காட்சிகள் ரசிக்கலாம். இங்கிருந்து உதகை, கூனுர், வெலிங்டன், குந்தா, கோயம்புத்தூர் முதலிய இடங்களைப் பார்த்துக் களிக்கலாம்.
உதகை ஏரி:
தமிழ்நாடு அரசு மீன்வளத் துறையினர் ஏரியில் பல படகுகளை விட்டிருக்கின்றனர். அதில் காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை உல்லாச பொழுது போக்கலாம். மாலையில் குதிரைச் சவாரிக்கும் வசதி உண்டு. உதகை ரயிலடிக்கு அருகில் இந்த ஏரி அமைந்துள்ளது.
தோடர் கிராமம்:
முத்திநாடு மந்து பகுதியில் உள்ளது. இங்கு தோடர் பண்பாட்டைக் காணலாம். கிராமத்தின் உயர்ந்த இடத்திலிருந்து சிகடர் பள்ளத்தாக்கின் செங்குத்தான தோற்றத்தை நன்கு பார்க்கலாம்.
மார்லி மண்டு ஏரி:
இது உதகை ரயிலடியிலிருந்து 5 கி.மீ. தொலைவில் உள்ளது. அழகான ஏரியாகும். இங்கு காலை, மாலையில் காலார நடந்து போகலாம்.
குதிரை பந்தயம்:
இந்தியாவில் உள்ள மலைவாழிடங்களில் இங்கு மட்டுமே குதிரைப்பந்தயம் கோடை காலத்தில் நடைபெறுகிறது.
வென்லாக் சமவெளி:
உதகை-மைசூர் வழித்தடத்தில் உதகையிலிருந்து 8 கி.மீ. தூரத்தில் அமைந்துள்ளது. சுமார். 40 ச.மைல் பரப்புள்ளது. இதைப் போன்றதொரு இயற்கை அழகு நிறைந்த இடத்தை இந்தியாவில் வேறெங்கும் காணமுடியாது என்று வெளிநாட்டாரே வியக்கின்றனர். செப்டம்பர்-அக்டோபர் மாதங்களில் மாலை நேரங்களில் சூரிய அஸ்தமனம் காண்பதற்கு அரிய காட்சிகளில் ஒன்று. இங்கு பார்க்க வேண்டியவை: இந்துஸ்தான் போட்டோ பிலிம் நிறுவனம், காமராஜர் சாகர், தமிழக அரசு ஆட்டுப் பண்ணை, உதகை நாய்கள் பராமரிப்பு நிலையம், ஜிம்கானா கிளப்பின் கோல்ப் விளையாட்டு திடல்.
ஏல்க் மலை:
உதகை மார்க்கெட் பகுதியிலுர்நது சுமார் ஒரு மணி நேரம் நடந்தால் ஏல்க் மலைச் சிகரத்தை அடையலாம். இதன் உயரம் 8000 அடி; இங்கிருந்து முழு உதகையைக் கண்டு களிக்கலாம். லவ்டேல் தேயிலைத் தோட்டங்களை காணலாம். இங்கு முருகன் கோவில் ஒன்று இருக்கிறது.
வேலி வியூ:
உதகை-கூனுர் சாலை தடத்தில் 5 கி.மீ. உள்ளது. இங்கிருந்து கெட்டிப் பள்ளத்தாக்கில் அமைந்துள்ள கிராமங்கள், இயற்கை எழில் சூழ்ந்த இப்பிரதேசத்தில், சிறு சிறு பொட்டுக்களைப் போன்று தோன்றுவதைப் பார்ப்பதே அழகு!
வில்கன் மீன் பண்ணை:
உதகை ரயிலடிக்கு அருகில் உள்ளது. இங்கு மிர்ரர் சார்ப், கோல்டன் சார்ப், சீதர் சார்ப் போன்ற சிறந்த மீன்கள் வளர்க்கப்பட்டு விற்கப் படுகின்றன.
கேரின் மலை:
உதகை நகரிலிருந்து 2 மைல் தொலைவில் உள்ளது. உதகை ஏரியின் தெற்கே 7,500 அடி உயரத்தில் இருக்கிறது. உயர்ந்த மரங்கள் நிறைந்த இப்பகுதி அழகு மிக்கது.
புலிமலை:
கூனுருக்கு போகும் வழித்தடத்தில் ஆறாவது கி.மீ. தொலைவில் உள்ளது. ஒரு கிலோ முன்னால் பிரியும் சாலை வழியாகச் சென்றால், புலிமலை நீர்த்தேக்கத்தை அடைய லாம். மலையில் இயற்கையாக அமைந்த பல குகைகள் காணப்படுகின்றன.
ஸ்டோடவுன் சிகரம்:
இச்சிகரம் சுமார் 8300 அடி உயரத்தில் உள்ளது. உதகையில் இதுவே இரண்டாவது உயர்ந்து சிகரம். செங்குத்தான இச்சிகரத்தை ஏறிக் கடக்க முடியாது. ஸ்பென்சர்ளி மலையிலுள்ள புனித ஸ்டீபன்ஸ் தேவாலயத்திலிருந்து சுமார் 3 கி.மீ. தொலைவில் வலது பக்கம் செல்லும் காடு வழியாக மலையுச்சியை அடையலாம். மலை ஏறுபவர் களுக்கு ஏற்ற இடம்.
கல்ஹட்டி அருவி:
உதகையிலிருந்து சுமார் 13 கி.மீ. தொலைவில் உள்ள இவ்விடத்தில் 120 அடி உயர்ந்த பகுதியிலிருந்து நீர்வீழ்ச்சி கொட்டுகிறது. சல்ஹட்டி கிராமம் வரை பேருந்து செல்லும். அங்கிருந்து சுமார் 4 கி.மீ. தொலைவை நடந்து கடக்க வேண்டும்.
முகுர்த்தி ஏரி-சிகரம்:
மைசூர்-உதகை வழியாக, உதகையலிருந்து 243வது கி.மீ. தொலைவில் இடதுபுறமாகத் திரும்பி 10 கி.மீ. தொலைவு சென்று அங்கிருந்து வலதுபுறமாகத் திரும்பி ஒரு கி.மீ. சென்றால் முகுர்த்தி ஏரியை அடையலாம். சுற்றிலும் மலைகளால் சூழப்பட்ட இந்த ஏரி 6.5 கி.மீ. நீளமானது. பல பறவை இனங்களை இங்குக் காணலாம். இந்த ஏரியின் மேற்கில் உள்ளது 8380 அடி உயரமான முகுர்த்தி சிகரம்.
உதகை அரண்மனைகள்:
இந்தியாவில் இருந்த சுதேச சமஸ்தானங்களின் அரசர்கள், ஜமீன்தார்கள் கோடைக் காலத்தைக் கழிக்க இங்கு அரண்மனைகள் சிறிய அளவில் கட்டியுள்ளனர். அவற்றில் குறிப்பிடத்தக்கவை: ஆரன்மூர் அரண்மனை, பரோடா, மைசூர், நவநகர், நைஜாம் அரண்மனை. இவற்றில் ஆரன்மூர் அரண்மனையை மட்டும் மாவட்ட ஆட்சியர் அனுமதி பெற்று பார்க்க முடியும். இது தமிழ்நாடு சுற்றுலா வளர்ச்சித் துறை அலுவலகத்திலிருந்து 3 கி.மீ. தொலைவில் உள்ளளது.
முதுமலைப் புகலிடம்:
தமிழகத்திலுள்ள விலங்குகள் புகலிடங்களில் முதுமலையே சிறப்புப் பெற்று விளங்குகிறது. உதகமண்டலம், மைசூர் வழித்தடத்தில் இருக்கிறது. 1940-ஆம் ஆண்டு துவங்கப்பட்ட இது பின்னர் 114 சதுர மைல் பரப்பளவில் விரிந்து காணப்படுகிறது. இப்புகலிடம் நீலகிரி பகுதியிலுள்ள மோயாறு பக்கத்தில் இருக்கிறது. ஆற்றின் மறு கரையில் கர்நாடக மாநிலத்தின் பாந்தியூர் புகலிடம் உள்ளது. இரண்டு புகலிடங்களும் அருகருகே இருப்பதால், விலங்குகளும் இரண்டிடத்திற்கும் போய்வர ஏற்ற சூழல் அமைந்துள்ளது.
இயற்கைச் சூழல்:
முதுமலை உயர்ந்த மலைகளும், ஆறுகளும் மழை இருப்பதால் உயர்ந்த மரங்களும் சூழ அமைந்துள்ளது. 3000-3800 அடி குத்துயரம் உள்ள இடத்தில் அமைந்துள்ளதால், இங்கு சராசரி 55 அங்குலம் மழை பெய்கிறது. வெப்ப அளவு 55 முதல் 90 டிகிரி பாரன்ஹஂட் அளவினது. கோடைக்காலத்தில் அருகிலுள்ள வறண்ட காடுகளிலிருந்து இப்பகுதிக்கு விலங்குகள் வந்துவிடும். இங்கு பயிர் வகைகளும், விலங்குகளுக்கு தேவையான அளவு உணவும் கிடைத்து விடுகிறது. இங்குள்ள மரங்கள் பாதி இலையுதிர்க்கும் வகையை சார்ந்ததால் இலையுணவு விலங்குகளுக்கு பெருத்த தீனி கிடைக்கிறது. முதுமலை யானைகளுக்கும், புலிகளுக்கும் தாயகமாக விளங்கி வருகிறது. கார் என்று சொல்லப்படும் காட்டுக் காளையும், சம்பூர் மான்களும் இங்கு உள்ளன. இவை தவிர எலிமான், வேலிமான், சிறுத்தை, சாதாரண குரங்கு (மா முகமுக), எபினட் குரங்கு என்கிற செம்முக மந்தி, மலபார் அணில் போன்றவைகளும் உள்ளன. வனத் துறையினரால் யானைகள் போற்றிக் காக்கப்படுகின்றன; இங்கு யானைகள் பலவித வேலைகளையும் செய்து வருகின்றன. பறவை இனங்களில் ஹனி புகார்ட், மலபார் டிரோகான், கருந்தலை மஞ்சட் கொழும்பன், மரங்கொத்தி, மீன்கொத்தி போன்றவைகள் சாதாரணமாகப் பார்க்க முடியும்.
கூனுர்:
சிம்ஸ் பூங்கா:
1874-ஆம் ஆண்டு சென்னை மாநிலத் தலைமைச் செயலாளராக பணியாற்றிய ஜே.டி.சிம்மால் தோற்றுவிக்கப்பட்டதால் ‘சிம்ஸ்’ சுமார் 30 ஏக்கர் நிலப்பரப்பில் அரசு மலர்க் கண்காட்சி மைதானத்தையொட்டி அமைக்கப்பட்டுள்ளது. பல வெளிநாட்டு மரங்களும், செடிகளும் இங்கு பயிரிடப்படுகின்றன.
பாஸ்ட்சர் இன்ஸ்டிடியூட்:
இவ்வாராய்ச்சி நிலையம் 1907 ஆம் ஆண்று தோற்றுவிக்கப்பட்டது. இங்கு வெறிநாய் கடிக்கு ஆராய்ச்சிகளும் மருத்துவமும் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இங்கு இளம்பிள்ளைவாதத் தடுப்பு நோய்க்கான போலியோ மருந்துகளும் தயாரிக்கப் படுகின்றன. ஒவ்வொரு சனிக்கிழமையும் பார்வையாளர்கள் இவ்வாராய்ச்சி நிலையத்தைச் சுற்றிப் பார்க்க அனுமதிக்கப்படுகின்றனர். இதன் அருகிலேயே மத்திய அரசின் பட்டு உற்பத்தி ஆராய்ச்சி நிலையம் உள்ளளது.
பழ ஆராய்ச்சி நிலையம்:
கூனுரில் 1920-இல் அரசுத் துறையால் தொடக்கப்பட்டது. சுமார் 5600 அல்லது 5900 அடி கொண்ட மலைச்சரிவில் 16.10 ஏக்கர் நிலம்பரப்பில் ஆப்பிள், பிளம், பீச், பர்சிம்மன், லெமன், ஆப்ரிகாட் முதலிய பழவகைகள் பயிரிடப்படுகின்றன. 1949-இல் தொடங்கப்பட்ட நர்சரி ஒன்றும் ஆய்வுகளை மேற்கொண்டு வருகிறது.
லாஸ் அருவி:
காட்டேரி-கூனுர் ஆறுகள் கூடும் இடத்தில் கூனுருக்கு அப்பால் 7 கி.மீ. தொலைவில் காணப்படுகிறது. சிறிய அருவி என்றாலும் பார்ப்பதற்கு இன்பமளிக்கும்.
விளக்குப் பாறை (லேம்ஸ் பாறை):
கூனுர் சாலை வழியாக இதை அடையலாம். இங்கிருந்து கோயமுத்தூர் மாவட்டத்தின் செழிப்பான சமவெளிப் பகுதிகளைக் காணமுடியும்.
லேடி கானிங் சீட்:
கூனுலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து, கூனுரின் மலைச்சரிவுகளில் பயிராகும் தேயிலைத் தோட்டங்களைச் சிறப்பாகக் காணலாம்.
துர்கம்:
கூனுரிலிருந்து 15 கி.மீ. தொலைவில் உள்ளது. இவ்விடம் சுமார் 6000 அடி உயரத்தில் அமைந்துள்ளது. இப்பகுதியில் சுமார் 3 கி.மீ. தொலைவுக்கு நடந்து கடக்க முடியாத பகுதிகளும் உள்ளன. இங்கு பாழடைந்த கோட்டை ஒன்று காணப்படுகிறது.
டால்பின் மூக்கு:
சுற்றுலாப் பயணிகளுக்கு ஏற்ற இடம். கூனுரிலிருந்து 12 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து காதரைன் அருவியின் அழகை காணமுடியும்.
ராலியா அணை:
கூனுரிலிருந்து 11 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்துதான் கூனுர் மக்களுக்கு தண்ணீர் வழங்கப்படுகிறது. இங்கு நகராட்சிக்குச் சொந்தமான பயணியர் விடுதி உண்டு.
ஸ்டான்லி பூங்கா:
கூனுர் ரயில் நிலையத்திலிருந்து 5 கி.மீ. தூரத்தில் இருக்கிறது. இங்கு ஸ்கவுட் மாணவர்கள் ஆண்டுதோறும் வந்து தங்கி பயிற்சி மேற் கொள்வார்கள். தங்குவதற்கு வசதியாக மரத்தாலான குடிசைகளும், நல்ல குடிநீர் வசதியும் செய்யப்பட்டுள்ளன.
கோத்தகிரி
பழங்குடிகளான ‘கோத்தர்களின் மலை’ என்ற பொருளிலேயே இவ்வூர் அழைக்கப்படுகிறது. கோத்தகிரி கூனுரிலிருந்து 21 கி.மீ. தொலைவிலும்; மேட்டுப் பாளையத்திலிருந்து 34 கி.மீ. தூரத்திலும் உள்ளது. இரயில் வசதி உண்டு. சாலை வழியாக செல்வதென்றால் கூனுர், உதக மண்டலம், மேட்டுப் பாளையம் முதலிய ஊர்களிலிருந்து செல்லமுடியும். ஊட்டியிலிருந்து 31 கி.மீ. தொலைவில் உள்ளது. தங்குவதற்கு வசதியாக பயணிகள் பங்களா, உணவு விடுதிகள், தரமான தங்கு விடுதிகள் முதலியவை உள்ளன. இங்கு பார்க்கத்தக்க இடங்கள்:
ரங்கசாமி பாறை:
இது பழங்குடிகளின் புனிதத்தலம். செங்குத்தான பாறை வடிவங்களையே ‘ரங்கசாமி’ என்று அழைக்கின்றனர். இவ்விடம் கோத்தகிரியிலிருந்து 19 கி.மீ. தொலைவில் உள்ளது. இது சுமார் 5855 அடி உயரத்தில் காணப்படுகிறது. எளிதில் யாராலும் ஏறமுடியாத அமைப்பினை கொண்டு காட்சியளிக்கிறது.
புனித காதரின் அருவி:
உல்லாச பயணிகளுக்கு ஏற்ற பொழுதுபோக்கான இடம். கோத்தகிரியிலிருந்து 8 கி.மீ. தொலைவில் உள்ளது.
எல்க் அருவி:
இந்த அருவியும் 8 கி.மீ. தொலைவில் கோத்தகிரியின் அருகில் உள்ளது. இயற்கை அழகு மிகுந்து காணப்படும் இடங்களில் இதுவும் ஒன்று.
கோடநாடு வியூபாயிண்ட்:
இவ்விடம் கோத்தகிரியிலிருந்து 16 கி.மீ. தொலைவில் உள்ளது. இங்கிருந்து நோக்கினால், நீலகிரியின் கிழக்கு மலைச்சரிவுப் பகுதிகளையும், செழிப்பான விரிந்து பரந்து கிடக்கும் சமவெளிப் பகுதிகளையும் ரசிக்கலாம். பவானி ஆறு ஊர்களைச் சுற்று மெல்ல ஓடி வரும் தூரத்து அழகு வியக்க வைப்பதாகும்.
தங்கும் இடங்கள்:
அ) அபயாரண்யம் விருந்தினர் மாளிகை
ஆ) காருகுடி வனத்துறையினரின் தங்குமிடம்
இ) மசினிகுடி வனத்துறையினரின் தங்குமிடம் (காரு குடியிலிருந்து 8 கி.மீ.)
மேலே கண்ட இடங்கள் காட்டுக்குள் இருப்பதால் மாவட்ட வனத்துறை அதிகாரியின் அனுமதி பெற்றால்தான் இவ்விடங்களில் தங்க முடியும்.
விலங்குகள் நீரருந்த வரும் இடங்களில் உயரமான பரண் அமைக்கப் பட்டுள்ளது. அவற்றிலிருந்து கண்டுகளிக்கலாம். பிடிக்கப்பட்ட யானையின் மீதேறி பாகனுடன் உள்ளே சுற்றிப் பார்க்கலாம். இங்கு வேட்டையாடவோ, மீன்பிடிக்கவோ தடை செய்யப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...