ஊட்டி:நீலகிரி மாவட்டத்தில், வீதிகளில் சுற்றித்திரியும், மன நலம் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம், மாநில தலைமை செய லருக்கு அனுப்பியுள்ள மனு:
ஊட்டி, குன்னூர், கோத்தகிரி, கூடலூர் உட்பட பல இடங்களில், மன நலம் பாதிக்கப்பட்ட, ஆதரவற்றவர்களின் நடமாட்டம் அதிகரித்து வருகிறது. இவர்களில் பெரும்பாலானோர் கோவை, மேட்டுப்பாளையம், கேரளா, கர்நாடகா என பிற மாவட்டம், மாநிலங்களை சேர்ந்தவர்கள்.
பகல் நேரங்களில் வீதிகளில் சுற்றித் திரியும் அவர்கள், இரவு நேரங்களில், தங்க இடம் இல்லாமல், சாலை ஓரங்கள், குப்பைத் தொட்டிகள், பஸ் ஸ்டாண்ட், பொதுக்கழிப்பிடம், அரசு கட்டடங்கள், பராமரிப்பில்லாமல் பாழடைந்து கிடக்கும் கட்டடங்களில் அடைக்கலம் புகுந்து விடுகின்றனர்.
ஓட்டல், திருமண மண்பட வாசல்களில் தவம் கிடக்கும் அவர்கள், வெளியே வீசப்படும் எச்சில் இலைகளில் உள்ள உணவை, உணபதை பல இடங்களில் பார்க்க முடிகிறது. அவர்களில் பலர் கஞ்சா, மதுவுக்கு அடிமையாகி இருப்பதும் தெரிய வருகிறது. ஊட்டி உட்பட சில இடங்களில் இரவு நேரங்களில், உறைய வைக்கும் குளிர் தாங்க முடியாமல் இறந்து போனவர்களும் உண்டு.
நடவடிக்கை அவசியம்
"மனநலம் பாதிக்கப்பட்டு, ஆதரவற்ற நிலையில் சுற்றித் திரியும் மக்களை, காப்பகங்களில் சேர்க்க வேண்டும்' என, மாவட்ட கலெக்டரிடம் மனு வழங்கிய போது, சமூக நலத் துறையிடம் முறையிட சொன்னார்கள்.
சமூக நலத்துறையினரிடம் கேட்ட போது, போதிய நிதி ஆதாரம் இல்லாததால், வாகனங்கள் மூலம் அவர்களை அழைத்து சென்று மனநல காப்பகங்களில் சேர்க்க போதிய நிதி ஆதாரம் இல்லை என, கூறினர்.
எனவே, மாவட்ட சுகாதார துறை மூலம் இயக்கப்படும் நோயாளிகள் ஊர்தியை, இத்தகைய பணிகளுக்கு பயன்படுத்த வேண்டும். நீலகிரியில், மன நலம் பாதிக்கப்பட்டவர்களை குணமாக்க உரிய காலநிலை இருப்பதால், மாவட்டத்தில் மனநல காப்பகம் அமைத்து, பாதிக்கப்பட்டவர்களுக்கு சிசிச்சையளிக்கவும், சிகிச்சைக்கு பின், அவர்களை முதியோர், ஆதரவற்றோர் காப்பகங்களில் சேர்க்கவும் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அப்போது தான் அவர்கள் மீண்டும், வீதிகளில் சுற்றித்திரிய மாட்டார்கள். வெளி மாவட்டம், பிற மாநிலங்களில் இருந்து மனநலம் பாதிக்கப்பட்டோர் நீலகிரிக்கு அழைத்து வருவதை தடுக்க, சோதனை சாவடிகளில் உரிய கண்காணிப்பு மேற்கொண்டு, அவற்றை தடுக்க வேண்டும். இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்
No comments:
Post a Comment