சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம்

சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம்

சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 21 ன்படி லோக் அதாலத்தில் வழங்கப்பட்ட சமரச தீர்ப்பின் மீது ஒரு உரிமையியல் நீதிமன்றத்தில் தான் அந்த தீர்ப்பினை நிறைவேற்றுவதற்கான மனுவை தாக்கல் செய்ய முடியும் என்று மேற்படி சட்டத்தில் கூறப்பட்டுள்ளது.

ஆனால் சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் (Legal Services Authorities Act) பிரிவு 21(1) ன்படி லோக் அதாலத்தால் வழங்கப்படும் ஒவ்வொரு தீர்ப்பும் உரிமையியல் நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்ப்பாணையாகவே கருதப்படும்.

அல்லது வழக்கின் தன்மைக்கு ஏற்ப எந்தவொரு நீதிமன்றத்தால் வழங்கப்பட்ட உத்தரவாகவும் அது கருதப்படும்.

ஆகையால் லோக் அதாலத்தால் வழங்கப்பட்ட ஒரு தீர்வளிப்பின் மீது நிறைவேற்றுதல் நடவடிக்கையை உரிமையியல் நீதிமன்றத்திலோ அல்லது குற்றவியல் நீதிமன்றத்திலோ எடுக்கலாம்.

உச்சநீதிமன்றம் " கோவிந்தன் குட்டி மேனன் Vs C. D. ஷாஜி (2012-2-SCC-51)" என்ற வழக்கில், சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தின் படி, காசோலை மோசடி வழக்கு ஒன்று லோக் அதாலத்தில் சமரசமாக முடிக்கப்பட்டுத் தீர்வளிப்பு வழங்கப்பட்டது. அந்த சமரசத்தின் படி எதிரி நடந்து கொள்ளாததால் புகார்தாரர் எர்ணாகுளம் உரிமையியல் நடுவர் நீதிமன்றத்தில் அந்த தீர்வளிப்பை நிறைவேற்றுவதற்காக மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

குற்றவியல் நடுவர் நீதிமன்றத்திலிருந்து சமரசமாக முடிப்பதற்காக லோக் அதாலத்திற்கு அனுப்பப்பட்ட ஒரு வழக்கில், லோக் அதாலத்தால் வழங்கப்பட்ட சமரச தீர்வளிப்பினை ஒரு உரிமையியல் தீர்ப்பாணையாக கருத முடியாது. எனவே அந்த தீர்வளிப்பினை நிறைவேற்றுவதற்காக உரிமையியல் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்ய முடியாது என்று குறிப்பிட்டு அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.

அந்த உத்தரவை எதிர்த்து புகார்தாரர் கேரளா உயர்நீதிமன்றத்தில் ஒரு நீதிப்பேராணை மனுவை தாக்கல் செய்தார். அந்த ரிட் மனுவும் தள்ளுபடி செய்யப்பட்டது.

அதன்பிறகு புகார்தாரர் உச்சநீதிமன்றத்தில் சிறப்பு அனுமதி பெற்று ஒரு மேல்முறையீட்டை தாக்கல் செய்தார்.

அந்த மேல்முறையீட்டை விசாரித்த உச்சநீதிமன்றம் சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 21 குறித்து பல்வேறு உயர்நீதிமன்றங்களால் வழங்கப்பட்ட தீர்ப்புகளையும் ஆராய்ந்து கீழ்க்கண்டவாறு தீர்ப்பு கூறியது.

23.  அந்த சட்டம் உருவாக்கப்பட்டதின் காரணம், நோக்கங்களை பார்க்கும் பொழுது நீதிமன்றத்தின் வேலைப்பளுவை குறைப்பதோடு, தேங்கியுள்ள வழக்குகளின் எண்ணிக்கையை குறைப்பதும், ஏழை மக்களுக்கு நீதியை அவர்களுடைய வீட்டு வாசலுக்கு கொண்டு செல்வதும், குறைந்த செலவில் விரைவாக நீதி வழங்குவதும் அச்சட்டத்தின் நோக்கமாகும்.

உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து லோக் அதாலத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் வழங்கப்படும் சமரச தீர்வை மட்டுமே தீர்ப்பாணையாக கருத முடியும் என்றும், ஒரு குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து லோக் அதாலத்திற்கு அனுப்பப்பட்ட வழக்கில் ஏற்பட்ட சமரச தீர்வினை ஒரு உத்தரவாகத்தான் கருத முடியும் என்கிற தவறான முடிவிற்கு கீழமை நீதிமன்றங்கள் வருகின்றன.

உரிமையியல் நீதிமன்றத்திலிருந்து ஒரு வழக்கு லோக் அதாலத்திற்கு அனுப்பப்படுவதற்கும், குற்றவியல் நீதிமன்றத்திலிருந்து அனுப்பப்படுவதற்கும் இடையே வித்தியாசம் உள்ளது என சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டத்தில் கூறப்படவில்லை.

எனவே காசோலை மோசடி வழக்கை, குற்றவியல் நீதிமன்றம் லோக் அதாலத்திற்கு சமரசத்திற்காக அனுப்பப்பட்டு அங்கு ஒரு தீர்வளிப்பும் வழங்கப்பட்டு விட்டால் அதனை ஒரு தீர்ப்பாணையாகவே கருத வேண்டும். அந்த சமரச தீர்ப்பை நிறைவேற்ற உரிமையியல் நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்ய முடியும்.

அதேபோல் உச்சநீதிமன்றம் " பஞ்சாப் மாநில அரசு Vs ஜலூர் சிங் (2008-1-SCC-CRL-524)" என்ற வழக்கில், வழக்கு தரப்பினர்களுக்கிடையே ஏற்பட்ட ஒரு உடன்படிக்கையை, அதில் குறிப்பிடப்பட்டுள்ள எழுத்துப்பூர்வமாக ஒரு உத்தரவாக அளிப்பது லோக் அதாலத்தின் நிர்வாக செயல்பாடுகளில் ஒன்றாகும்.

இருப்பினும் லோக் அதாலத்தின் கையொப்பம் மற்றும் முத்திரையுடன் வழங்கப்பட்ட அந்த உத்தரவு நிறைவேற்றப்படக்கூடிய ஒரு உத்தரவாகவே கருதப்பட வேண்டும் என்று தீர்ப்பு கூறியுள்ளது.

எனவே சட்டப் பணிகள் ஆணைக்குழு சட்டம் பிரிவு 21 ன்படி ஒரு லோக் அதாலத்தின் மூலம் வழங்கப்பட்ட தீர்வளிப்பை உரிமையியல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுவதற்கு எப்படி ஒருவருக்கு உரிமை உள்ளதோ

அதேபோல் குற்றவியல் நீதிமன்றத்தில் நிறைவேற்றுதல் மனுவை தாக்கல் செய்வதற்கும் லோக் அதாலத்தில் தீர்வளிப்பை பெற்றவருக்கு உரிமை உள்ளது என சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு கூறியுள்ளது.

CRL. RC. NO - 509/2014, DT - 2.3.2015

Valli Vs Muniya Samy

2015-1-TLNJ-CRL-257

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...