ஊராட்சி நிர்வாகம்* ...! *கேள்விகளும்* *பதில்களும்* ...!

  *ஊராட்சி நிர்வாகம்* ...! 


 *கேள்விகளும்* *பதில்களும்* ...! 




 *வசூலிக்கப்படும் வரிகளின் விவரங்கள்* ...!




1. வீட்டு வரி


2. குடிநீர் வரி


3. தொழில் வரி 


4. விளம்பர வரி




 *ஊராட்சியில் பராமரிக்கப்படும் பதிவேடுகள் என்னென்ன* ?




சுமார் முப்பதிற்கும் மேற்பட்ட பதிவேடுகள் பராமரிக்கப்படுகின்றன. குறிப்பாக, வரிகள், வரவு - செலவு கணக்கு, சொத்து பதிவேடு, ரொக்க புத்தகம், மானிய பதிவேடுகள், நலத்திட்டப் பதிவேடுகள், ஊராட்சி வளர்ச்சி திட்டம், மாதாந்திர வரவு - செலவு விவரம், பணிகள் பதிவேடு 


[தெரு விளக்கு, குடிநீர் போன்ற பணிகள்]




 *ஊராட்சி நிர்வாகம் முறையாக இயங்காதபோது அதனைச் சரி செய்ய நாம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் என்னென்ன* ?




தொடர் கண்காணிப்பு மூலமும், ஊராட்சி நிர்வாகத்தில் நாம் பல வழிகளில் பங்கெடுப்பதன் மூலமும் முறையாக இயங்காத ஊராட்சி நிர்வாகத்தை படிப்படியாக இயங்க வைக்க முடியும்.




 *ஒரு ஊராட்சியைப் புதிதாக அமைக்க வேண்டுமென்றால், அதற்குக் குறைந்தபட்சம் இருக்கவேண்டிய மக்கள் தொகை எவ்வளவு* ?




3000 பேர் இருந்தால் புதிதாக ஒரு ஊராட்சியை அமைக்கலாம்.




 *கிராமத்தில் உள்ள கிராம நிர்வாக அலுவலர்[வி.ஏ.ஓ] ஊராட்சிக்கு ஆற்றவேண்டிய பணிகள் மற்றும் கடமைகள் என்னென்ன உள்ளது* ?




1. ஊராட்சியில் உள்ள புறம்போக்கு நிலங்களை முறையாக வகைப்படுத்திக் கொடுப்பார்.




2. ஆக்கிரமிப்பில் உள்ள பொது நிலங்களை ஊராட்சி கையகப்படுத்த உதவுவார்.




3. ஊராட்சி மூலம் குடிமராமத்து பணி மேற்கொண்டால் அதற்கான வரி வசூல் செய்ய உதவலாம்.




4. ஊராட்சி கேட்டுக்கொண்டதன் பேரில் அவரிடம் உள்ள ஆவணங்களை ஊராட்சியிடம் பகிர்ந்துகொள்வார்.




 *கிராம வறுமை ஒழிப்பு சங்கம் என்றால் என்ன* ?




உலக வங்கியின் நிதி உதவியுடன் செயல்பட்டது புது வாழ்வு திட்டம். அதன் அங்கமே கிராம வறுமை ஒழிப்பு சங்கம். எந்தெந்த மாவட்டங்களில் அல்லது பகுதிகளில் புதுவாழ்வு திட்டம் செயல்பட்டதோ அந்தந்த பகுதி கிராமங்களில் இச்சங்கம் இயங்கியது. இச்சங்கத்தின் மூலம்,




• இளைஞர்களின் திறன் மேம்பாட்டிற்குப் பயிற்சிகள் வழங்குதல்,




• மகளிர் சுய உதவிக் குழுக்கள் அமைத்தல் 


போன்ற பணிகளை மேற்கொண்ட புதுவாழ்வு திட்டம், கடந்த 2017 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தோடு நிறைவடைந்தது.




 *புது வீடு வரைபட ஒப்புதல் வழங்க ஊராட்சி கடைப்பிடிக்கக்கூடிய வழிமுறைகள் என்னென்ன* ?




• 5000 சதுர அடிக்குக் குறைவான வீட்டு மனை பிரிவுகளுக்கு ஊராட்சி நிர்வாகம் அனுமதி வழங்கலாம்.




• ஒரு சதுர அடிக்குக் குறைந்தபட்ச கட்டணமாக ரூ0.50 வசூலிக்கலாம்.




• அதிகபட்சம் கட்டணம் ஒவ்வொரு ஊராட்சிக்கும் மாறுபடும். அது சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்ற தீர்மானத்தின் மூலம் உயர்த்தி நிர்ணயிக்கப்படும்.




• சென்னைக்கு அருகாமையில் உள்ள சில மாவட்டங்களில் உள்ள ஊராட்சிகள் சி.எம்.டி.ஏ வரையறைக்குள் வருகிறது. அந்த ஊராட்சிகளில் கட்டிட அனுமதி வழங்கும் பொறுப்பு சி.எம்.டி.ஏ வைச் சாரும்.




 *ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. அதற்காக ஊராட்சி நிர்வாகம் கடைப்பிடிக்க வேண்டிய சட்டப்படியான வழிமுறைகள் என்னென்ன* ?




ஒப்பந்தப்பணிகள் மேற்கொள்ளும்போது பல நிர்வாக நடவடிக்கைகளைக் கடைப்பிடிக்க வேண்டும். அவற்றில் முக்கியமாகக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு சிலவற்றை இங்கே பட்டியலிடுகிறோம்.




• ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும் ஒப்பந்ததாரர்களின் தகவல்களைக் கொண்ட பதிவேடு ஒன்று பராமரிக்கப்படவேண்டும்.




• ஒப்பந்தப்பணி ரூபாய் 4999/- க்கு மேல் இருந்தால் கட்டாயம் ஒப்பந்தப்புள்ளிகள் வரவழைக்கப்பட வேண்டும்




• ஒப்பந்த அறிவிப்பில்; ஒப்பந்தப் புள்ளிகளை அழைக்கும் அலுவலர்களின் பெயர் மற்றும் முகவரி, திட்டத்தின் பெயர், வைப்புத் தொகை போன்ற விவரங்களைக் குறிப்பிட வேண்டும்.




• ஒப்பந்தப்படிவம் சம்மந்தப்பட்ட தொழில்நுட்ப அலுவலரின் ஒப்புதல் பெற வேண்டும்.




• தொழில்நுட்ப அனுமதியும் நிர்வாக அங்கீகாரமும் இன்றி எந்தப்பணிக்கும் ஒப்பந்தப்புள்ளிகள் கோரப்பட்ட கூடாது.




• பெறப்பட்ட ஒப்பந்தப்புள்ளிகளை கொண்டு ஒப்புநோக்குப் பட்டியல் (Comparitive Statement) தயார் செய்ய வேண்டும்.




• குறைந்த விலைப்புள்ளி கொடுத்துள்ள ஒப்பந்ததாரர்களுக்கு ஊராட்சி மன்ற அனுமதி பெறப்பட வேண்டும். 


அதன் பின்னர் வேலை உத்தரவு வழங்கப்பட வேண்டும்.




 *வறுமைக்கோட்டிற்குக் கீழ் உள்ளவர்கள்’ என்று கிராம மக்கள் எந்த அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்*_?




மக்கள் தொகை கணக்கெடுப்பின் போது சேகரிக்கப்படும் தகவல்களைக் கொண்டு, குடும்பத்தின் ஆண்டு வருமானத்தின் அடிப்படையிலும் மத்திய அரசு குறிப்பிடும் சில வரையறைகளான, சொந்த வாகனம், தொலைக்காட்சிப் பெட்டி ஆகியவை வைத்திருப்போர் நீங்கலாக 'வறுமைக் கோட்டிற்கு கீழ் உள்ளவர்கள்' பட்டியல் தயாரிக்கப்படுகிறது.




 *ஊராட்சி மூலம் வழக்குத் தொடுக்க முடியுமா* ?




முடியும். ஊராட்சியின் நலனைக் கருத்தில் கொண்டு, அதன் தலைவரின் பெயரில் வழக்குகள் தொடரலாம். ஒரு ஊராட்சி, மத்திய மற்றும் மாநில அரசுகளுக்கு எதிராகக் கூட வழக்குத் தொடரலாம். அதற்குப் பல முன்னுதாரணங்கள் உண்டு.




 *கிராம பகுதியில் உள்ள கிராம நிர்வாக அலுவலர் அலுவலகம் (வி.ஏ.ஓ) ரேஷன் கடை, ஊராட்சி ஒன்றிய பள்ளி, அங்கன்வாடி மையம், துணை சுகாதார நிலையம், ஆரம்ப சுகாதார நிலையம் போன்ற அரசு அமைப்புகள் ஊராட்சிக்குக் கட்டுப்பட்டவையா* ? *அதனைக் கிராம முன்னேற்றத்திற்கு முழுமையாக இயங்க வைக்க ஊராட்சியின் பங்கு என்ன* ?




இந்த அமைப்புகள் ஊராட்சி நிர்வாகத்திற்கு நேரடியாகக் கட்டுப்பட்டவை அல்ல. ஆனால் இந்த அமைப்புகளை மேற்பார்வையிடும் அதிகாரம் ஊராட்சி நிர்வாகத்திற்கு உண்டு.


 


 *ஊராட்சி நிர்வாகத்தில் ஒன்றிய கவுன்சிலர் மற்றும் மாவட்ட கவுன்சிலரின் பங்கு என்ன?* 




குறிப்பிடும்படி எதுவும் இல்லை. ஒன்றிய மற்றும் மாவட்ட அளவில் ஒதுக்கப்படும் சில திட்டங்களைக் கிராம ஊராட்சியில் நடைமுறைப்படுத்த அவர்கள் அதிகாரம் படைத்தவர்கள். மற்றபடி அவர்களின் பொறுப்புகளை பயன்படுத்தி ஊராட்சி நிர்வாகத்தில் சட்டப்படியாக தலையிட முடியாது.




 *ஊராட்சியின் பொது தகவல் அலுவலர் யார்* ?




சம்மந்தப்பட்ட வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் (ஒன்றிய அலுவலகம்) உள்ள விரிவாக்க அலுவலரே கிராம ஊராட்சியின் பொது தகவல் அலுவலர் ஆவார். அவருக்கே நாம் தகவல் பெறும் உரிமைச் சட்டத்தில் விண்ணப்பங்களை அனுப்ப வேண்டும்.




 *நாம் எப்போதெல்லாம், எந்தெந்த தேவைகளுக்காக ஊராட்சியின் உதவியை நாடலாம்?* 




நம் ஊராட்சிக்கு உட்பட்ட எந்த ஒரு பொது விசயத்திற்கும் ஊராட்சியின் உதவியை நாடலாம். நமது நீர் நிலைகள் பாதுகாப்பாக இருக்கட்டும், நமது 


ஊரில் உள்ள அரசுப் பள்ளியின் செயல்பாடாகட்டும், ரேஷன் கடை தேவைகளாகட்டும் நாம் ஊராட்சியின் உதவியை நாடலாம். மேலும், ஊராட்சி நிர்வாகம் பணி செய்யக் கடமைப்பட்ட விசயங்கள் சமந்தமான தேவைகளுக்கு ஊராட்சியை நாடலாம்.




 *ஊராட்சி நிர்வாகத்தில் மக்களாகிய நாம் எப்படிப் பங்கெடுக்கலாம்* ?




மிக முக்கியமான கேள்வி இது. காரணம், ஊராட்சி நிர்வாகம் என்பது ஒரு பஞ்சாயத்து தலைவரோடு முடிந்துவிடுவதில்லை. மக்கள் பங்கெடுக்கும்போதுதான் முழுமையான நிர்வாகம் சாத்தியமாகும்.


மக்களாகிய நாம், பலவிதங்களில் நம் ஊராட்சி நிர்வாகத்தில் பங்கெடுக்கலாம்.




1. கிராமசபையில் பங்கெடுப்பது. கிராமசபை முறையாக நடைபெற, அது பற்றி மக்களுக்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் விழிப்புணர்வு ஏற்படுத்துவது




2. கிராமசபையில் பங்கெடுப்பதோடு மட்டும் நின்றுவிடாமல், வாய்ப்பிருக்கும் போதெல்லாம் ஊராட்சி அலுவலகத்திற்குச் சென்று நிர்வாகிகளுடன் கலந்துரையாடுவது....




3. ஊராட்சியில் செயல்படும் நிலைக் குழுக்களில் உறுப்பினராக நம்மை இணைத்துக்கொண்டு ஊராட்சியின் வளர்ச்சிக்கு உதவி செய்வது.




4. கிராம வளர்ச்சி திட்டம் தயாரிக்க உதவுவது, அத்திட்டம் முழுமை பெற அதில் நம் பங்களிப்பு அவசியம்.




5. நமது கிராமத்தின் பொது தேவைகளுக்கு உதவி செய்வது, அதில் பங்கெடுப்பது போன்ற தன்னார்வத்துடன் கூடிய பங்களிப்பின் அதனை மேம்படுத்தத் தொடர்ந்து உதவலாம்.




 *யாருக்குக் கட்டுப்பட்டது ஊராட்சி நிர்வாகம்* ?




அரசியல் அமைப்பு சட்டத்திற்கு கட்டுப்பட்டது ஊராட்சி நிர்வாகம். மக்களால் நேரடியாகத் தேர்ந்தெடுக்கப்படுவதால் பஞ்சாயத்துத் தலைவரோ, மற்ற உறுப்பினர்களோ எந்த ஒரு அரசு அலுவருக்கும் அல்லது எம்.எல்.ஏ , எம்பி க்கும் கீழ் வேலை செய்பவர்கள் அல்ல. 


நமது தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம்; ஊராட்சிகளின் ஆய்வாளர் என்ற முறையில் மாவட்ட ஆட்சியருக்கு ஊராட்சி நிர்வாகத்தைக் கட்டுப்படுத்துவதில் குறிப்பிடத்தக்க அதிகாரங்களைக் கொடுத்துள்ளது. இருப்பினும் ஊராட்சி நிர்வாகம் அவர் சொல்வதையெல்லாம் அப்படியே கேட்டு நடக்க வேண்டும் என்ற கட்டாயம் ஏதுமில்லை. நேர்மையாக, சட்டத்தை மதித்துச் செயல்படும் ஒரு ஊராட்சி நிர்வாகம், மிக முக்கியமாக, மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நிர்வாகம் இப்போது இருக்கின்ற அதிகாரங்களை வைத்துக்கொண்டே ஊராட்சிக்குப் பல முன்னேற்றங்களைக் கொண்டு வர முடியும்.




 *ஊராட்சியில் உள்ள ஆவணங்களை பொது மக்கள் பார்வையிட முடியுமா* ?




முடியும். கிராமசபை கூட்டத்தின் போது வரவு - செலவு கணக்கு விவரங்கள், வளர்ச்சி திட்டங்கள் மற்றும் ஊராட்சிக்குச் சம்மந்தப்பட்ட அனைத்து ஆவணங்களையும் பார்வையிடலாம். மேலும், தகவல் பெறும் உரிமைச் சட்டம் மூலமாகவும், நமது வார்டு உறுப்பினர்கள் மூலமாகவும் ஊராட்சியில் உள்ள ஆவணங்களை - அதன் நகல்களை நாம் பெறலாம்.




 *ஊராட்சிக்கு ஒதுக்கப்பட்டுள்ள பொறுப்புகள் என்னென்ன* ? *எவ்வித பணிகளை ஒரு ஊராட்சி மேற்கொள்ளலாம்* ?




ஊராட்சி நிர்வாகம், தனது எல்லைக்கு உட்பட்ட பகுதிகளின் பாதுகாப்பினையும், பொது மக்களின் நலனையும் கருத்தில் கொண்டு எந்த ஒரு செயலையும் சட்டத்திற்கு உட்பட்டுச் செய்யலாம். மக்களின் அடிப்படைத் தேவைகளான பொதுச் சுகாதாரம், சாலை வசதிகள், பாதுகாக்கப்பட்ட குடிநீர், நீர் நிலைகள் உருவாக்குதல் - பாதுகாத்தல், இடுகாடுகள் & சுடுகாடுகள் பராமரிப்பு, தெரு விளக்குகள் பராமரிப்பு பொது சொத்துக்களை பாதுகாத்தல் & பராமரித்தல் ஆகியவை ஊராட்சியின் கட்டாய கடைமைகளாகும். அடிப்படை வசதிகளைத் தாண்டி, ஊராட்சியை முன்மாதிரி ஊராட்சியாக மாற்றத் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் ஒரு ஊராட்சி எடுக்கலாம்.




 *வி.ஏ.ஓ விற்கும் ஊராட்சி நிர்வாகத்திற்கும் உள்ள வேறுபாடுகள் என்னென்ன* ?




ஒவ்வொரு ஊராட்சியிலும், வி.ஏ.ஓ அலுவலகமும் இருக்கும். ஊராட்சி மன்ற அலுவலகமும் இருக்கும். இவ்விரண்டு அலுவலகங்களும் வெவ்வேறான நிர்வாக அமைப்புகளாகும். "வி.ஏ.ஓ" என அழைக்கப்படும் கிராம நிர்வாக அலுவலர், வருவாய்த் துறையின் ஊழியர் ஆவார். அத்துறை சார்ந்த பணிகளை மேற்கொள்பவர். வி.ஏ.ஓ அலுவலகம் கிராமத்தில் இருக்கும் வருவாய்த் துறையின் கடை நிலை அலுவலகம். ஆனால் ஊராட்சி நிர்வாகம் என்பது மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட உறுப்பினர்களைக் கொண்ட, அந்த ஊராட்சி எல்லைக்கு உட்பட்டு மக்களுக்காகச் செயல்படும் அரசாங்கமாகும். அது ஒரு குறிப்பிட்ட துறைக்காக மட்டும் உள்ள அமைப்பு அல்ல. ஊராட்சி கேட்டுக்கொண்டால் தேவையான தரவுகளை கொடுக்கக் கடமைப்பட்டுள்ளது வி.ஏ.ஓ அலுவலகம்.




 *ஊராட்சிக்கும் பஞ்சாயத்துக்கும் என்ன வித்தியாசம்* ?




இரண்டும் ஒன்றுதான். அவை இரண்டும் ஒரே விசயத்தைத்தான் குறிக்கின்றன. பஞ்சாயத்து என்பது பழங்காலத்தில் இருந்த சொல். அது இன்றும் பேச்சு வழக்கில் இருக்கிறது. ஊராட்சி என்பதே சரியான சொல்லாக இருக்கும்.




 *ஊராட்சி மன்ற அலுவலகம் செயல்படும் நேரம் என்ன? அரசு அலுவலகம் போல் அலுவல் நேரம் ஏதும் உண்டா* ?




ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு, அரசு அலுவலகம் போல் இந்த நேரத்தில்தான் இயங்கவேண்டும் என வரையறுக்கப்பட்ட அலுவல் நேரம் எதுவும் கிடையாது. எந்த நேரத்திலும் மன்ற அலுவலகத்தைத் திறந்து வைத்து மக்களுக்காகப் பணியாற்றலாம். காரணம், அது ஒரு அரசுத் துறையின் அலுவலகம் அல்ல. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட நிர்வாகம் இயங்கும் அலுவலகம். தேவைப்படும்பட்சத்தில் மக்களின் வசதிக்கேற்ப அலுவல் நேரத்தை ஊராட்சியே நிர்ணயித்துக்கொள்ளலாம்




 *காலங்காலமாக நம் சமூகத்தில் பஞ்சாயத்துகள் இருக்கின்றன ! அதிலிருந்து தற்போதைய ஊராட்சி நிர்வாகம் எந்த விதத்தில் வேறுபடுகிறது* ?




பலவிதங்களில் வேறுபடுகிறது. அதில் மிக முக்கியமாக, சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டிய ஒரு அமைப்பாக இருக்கிறது தற்போதைய ஊராட்சி நிர்வாகம். தனி நபரின் கட்டுப்பாட்டிலோ, ஆதிக்கம் செலுத்தும் சில குழுவின் கட்டுப்பாட்டிலோ இல்லாமல் சட்ட வரையறைகளுக்கு உட்பட்டு இயங்க வேண்டிய அமைப்பு. மேலும், கிராமசபை, கிராமசபை, நிலைக்குழுக்கள், வளர்ச்சி திட்டம் தயாரித்தல் போன்ற நடவடிக்கைகள் மூலம் மக்கள் நேரடியாகப் பங்கெடுக்க அதிக வாய்ப்புள்ள அமைப்பு இந்த புதிய ஊராட்சி நிர்வாகம்.




 *இணைப்புப் பட்டியல் 11 என்பது என்ன? அது எதற்காகக் கொடுக்கப்பட்டது* ?




மத்திய மற்றும் மாநில அரசுகள் எந்தெந்த துறைகளுக்குப் பொறுப்புடையவை அல்லது எந்தெந்த துறைகளில் பணிகள் செய்யலாம் என்ற வரையறையைப் பட்டியல் 7 [அரசியல் அமைப்புச் சட்டம்] தெளிவாகப் பட்டியலிடுகிறது .




அதே போல, மூன்றாவது அரசாங்கமாக இயங்கும் பஞ்சாயத்து அமைப்புகளும் எந்தெந்த துறைகளின் கீழ் பணியாற்றலாம் என்ற வரையறையை அரசியல் அமைப்புச் சட்டத்தின் பட்டியல் 11 வழங்குகிறது. 


வேளாண்மை முதல் சமூகச் சொத்துக்களை பராமரிப்பது வரை 29 துறைகளில் ஒவ்வொரு ஊராட்சியும் பணியாற்றலாம் என வழிகாட்டுகிறது இப்பட்டியல்.




குறிப்பு: மேற்குறிப்பிட்ட 29 துறைகளின் பொறுப்புகளை ஊராட்சிகளிடம் வழங்க வேண்டியக் கடமை மாநில அரசைச் சார்ந்தது.




இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் பிரிவு 9 என்ன சொல்கிறது? அது ஏன் நமக்கு முக்கியம்?




இச்சட்டப் பிரிவின் மூலமாகத்தான், மத்திய மாநில அரசுகளைப் போல பஞ்சாயத்தும் நிலையான ஒரு அமைப்பாகக் காலூன்ற வழிவகை செய்யப்பட்டது. மத்திய அரசு மற்றும் மாநில அரசுகளுக்கு இந்திய அரசியல் அமைப்புச் சட்டத்தின் மூலம் கொடுக்கப்பட்டுள்ள அதிகாரங்களைப் போல, அரசியல் சட்ட பிரிவு 9 ஊராட்சிகளுக்கு அதிகாரம் வழங்குகிறது. இப்பிரிவு, பஞ்சாயத்து அமைப்புகள் சுயாட்சி அரசுகளாகச் செயல்பட வழிவகுக்கிறது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...