மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்.

வெள்ளிக்கிழமை 21 டிசம்பர் 2018

மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றம்.

பொருள்கள், சேவைகள் தொடர்பாக நுகர்வோர் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பதற்கான நடைமுறையை ஏற்படுத்தும் வகையில் உருவாக்கப்பட்டுள்ள நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, மக்களவையில் வியாழக்கிழமை நிறைவேற்றப்பட்டது. 

இதையடுத்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பப்படுகிறது.

நாட்டில் நுகர்வோரின் நலனை பாதுகாப்பதற்கு கடந்த 1986ஆம் ஆண்டு சட்டம் கொண்டு வரப்பட்டது. 

இந்த சட்டத்தில், அனைத்துப் பொருள்கள், சேவைகள் தொடர்பான நுகர்வோரின் புகார்களை விசாரிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

அதேநேரத்தில், இலவச மற்றும் தனிப்பட்ட சேவைகள் தொடர்பான புகார்கள் குறித்து இந்த சட்டத்தில் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

அதேபோல், இணைய வர்த்தகம், மோசடி வியாபாரங்கள், உற்பத்திப் பொருள் மீதான பொறுப்புடைமை, ஒழுங்காற்று அமைப்பு குறித்தும் எதுவும் தெரிவிக்கப்படவில்லை. 

பிரச்னைகளுக்கு மத்தியஸ்தம் உள்ளிட்ட மாற்று வழி மூலம் தீர்வு காண்பது உள்ளிட்டவை குறித்தும் எதுவும் குறிப்பிடப்படவில்லை. 

இதனால் மேற்கண்ட பிரச்னைகளுக்கு நுகர்வோரால் தீர்வு காண முடியாத நிலை இருந்து வந்தது.

இதனிடையே, மாநிலங்களவையில் கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் நடைபெற்ற விவாதத்தில், 

அந்த அவையின் தலைவர் வெங்கய்ய நாயுடு பேசியபோது, உடல் எடை குறைப்பு மருந்து தொடர்பான விளம்பரத்தை நம்பி பணம் செலுத்தியது குறித்தும், 

பிறகு மருந்து அனுப்பப்படாமல் தாம் ஏமாற்றப்பட்டது குறித்தும் தெரியப்படுத்தினார். 

இதையடுத்து மத்திய நுகர்வோர் விவகாரத்துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பேசுகையில், நுகர்வோர் பாதுகாப்பு தொடர்பான புதிய மசோதாவை மத்திய அரசு விரைவில் கொண்டு வரும் என்று உறுதியளித்தார்.

இதன்படி, மக்களவையில் நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவை கடந்த ஜனவரி மாதம் மத்திய அரசு அறிமுகப்படுத்தியது. 

இதையடுத்து, மக்களவையில் அந்த மசோதாவை ராம்விலாஸ் பாஸ்வான் கடந்த புதன்கிழமை தாக்கல் செய்தார். எதிர்க்கட்சிகளின் எம்.பி.க்கள் புதன்கிழமை அமளியில் ஈடுபட்டதால், அதன்மீது விவாதம் நடத்தப்படவில்லை.

இந்நிலையில், மக்களவையில் அந்த மசோதா மீது வியாழக்கிழமை விவாதம் நடத்தப்பட்டது. 

விவாதத்தில் பிஜு ஜனதா தளம் கட்சியின் எம்.பி. ததாகத சத்பதி பேசுகையில், இந்த மசோதாவில் அதிகாரிகளுக்கு ஏராளமான அதிகாரங்கள் அளிக்கப்பட்டுள்ளன; 

கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராகப் பல்வேறு அம்சங்கள் மசோதாவில் இருக்கின்றன என்றார்.

தேசியவாத காங்கிரஸ், திரிணமூல் காங்கிரஸ், ஐக்கிய ஜனதா தளம் கட்சிகளைச் சேர்ந்த எம்.பி.க்களும் விவாதத்தில் கலந்து கொண்டு பேசினர். 

பின்னர் விவாதத்துக்கு பதிலளித்து மத்திய நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சர் ராம்விலாஸ் பாஸ்வான் பேசினார். 

அப்போது அவர் கூறுகையில், 1986ஆம் ஆண்டு இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் கடந்த 30 ஆண்டுகளாக திருத்தப்படாமல் உள்ளது; 

ஆதலால் நுகர்வோரின் உரிமைகளை வலுப்படுத்தும் வகையில், அதில் மாற்றங்கள் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. 

இந்த மசோதாவில் கூட்டாட்சித் தத்துவத்துக்கு எதிராக எந்த விதிகளும் இல்லை. அதற்குப் பதிலாக, இந்த மசோதாவில் இருக்கும் விதிகள், கூட்டாட்சித் தத்துவத்தை வலுப்படுத்தவே செய்யும் என்றார்.

மசோதா மீது விவாதம் நடைபெற்று கொண்டிருக்கும்போது, காவிரி விவகாரத்தை எழுப்பி தமிழக எம்.பி.க்களும், ரஃபேல் விவகாரத்தை எழுப்பி காங்கிரஸ் எம்.பி.க்களும் கோஷமிட்டபடி இருந்தனர். 

இதனால் மக்களவையில் அமளி நிலவியது. இந்த அமளிக்கு மத்தியில், நுகர்வோர் பாதுகாப்பு மசோதா நிறைவேற்றப்பட்டது. 

இதைத் தொடர்ந்து, மாநிலங்களவையின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பப்படுகிறது.

2018ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு மசோதா குறித்து,
 நாடாளுமன்றத்துக்கு வெளியே ராம்விலாஸ் பாஸ்வான் செய்தியாளர்களிடம் கூறுகையில், 

இணையவழி வியாபாரம், பொய் விளம்பரங்கள், நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் ஆகியவை தொடர்பான பிரச்னைகளுக்கு மசோதாவில் தீர்வு ஏற்படுத்தப்பட்டுள்ளது; 

அடுத்த 10 முதல் 20 ஆண்டுகள் வரையிலான நுகர்வோரின் தேவைகளை கருத்தில் கொண்டு, மசோதா உருவாக்கப்பட்டுள்ளது என்றார்.

2018ஆம் ஆண்டு நுகர்வோர் பாதுகாப்பு மசோதாவில், நுகர்வோரின் உரிமைகளை வலுப்படுத்தவும், பொருள்கள் மற்றும் சேவைகளில் இருக்கும் குறைபாடுகள் குறித்து அவர்கள் அளிக்கும் புகார்களுக்குத் தீர்வு காண்பது தொடர்பான நடைமுறையை ஏற்படுத்தும் வகையிலும் விதிகள் சேர்க்கப்பட்டுள்ளன. 

மாநிலங்களவையில் மசோதா நிறைவேற்றப்பட்டு, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். குடியரசுத் தலைவர் தனது ஒப்புதலை அளித்ததும், அது சட்டமாகும். 

நேரடி விற்பனை, இ - காமர்ஸ், டெலி மார்க்கெட்டிங் உள்ளிட்ட பல்வேறு வியாபார முறைகளை  வரைமுறைப்படுத்தவும், போலி விளம்பரங்களை தடுக்கும் வகையில் இந்த புதிய மசோதா உருவாக்கப்பட்டுள்ளது. 

போலி விளம்பரங்கள் மூலம் நுகர்வோரை ஏமாற்ற முயற்சிக்கும் நிறுவனங்களுக்கு, ரூ. 50 லட்சம் வரை அபராதம் முதல் ஐந்து ஆண்டு சிறை தண்டனை வரை விதிக்கும் வகையில், இந்த மசோதாவில் பல முக்கிய திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளதாகவும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 


இதைத் தொடர்ந்து, குடியரசுத் தலைவரின் ஒப்புதலுக்கு அந்த மசோதா அனுப்பி வைக்கப்படுகிறது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...