கேன் குடிநீர் உற்பத்தி மையங்களில் ஆய்வு நடத்த அதிகாரம் இல்லை
கேன் குடிநீர் உற்பத்தி மையங்களின் தரத்தை தொடர்ந்து உறுதி செய்வதற்கான ஆய்வை நடத்த தங்களுக்கு அதிகாரம் இல்லை என இந்திய தரக் கட்டுப்பாட்டு நிறுவனம் (பிஐஎஸ்) பசுமைத் தீர்ப்பாயத்தில் தெரிவித்துள்ளது.
கேன் குடிநீரின் தரம் குறைவு தொடர்பான வழக்கு தேசிய பசுமைத் தீர்ப்பாயத்தின் சென்னைக் கிளையில் நீதித்துறை உறுப்பினர் பி.ஜோதிமணி, துறை சார் நிபுணர் ஆர். நாகேந்திரன் ஆகியோர் அடங்கிய அமர்வு முன் செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு வந்தது.
அப்போது, “தற்போதுள்ள சட்டப்படி, நிறுவனங்கள் தரச் சான்றுக்காக விண்ணப்பிக்கும்போது, நாங்கள் அங்கு ஆய்வு செய்து தரச்சான்று தருவது மட்டுமே எங்கள் நிறுவனத்தின் பணி. குடிநீர் கேன் நிறுவனங்களின் தரத்தை தொடர்ந்து உறுதி செய்ய ஆய்வு நடத்தும் அதிகாரம் எங்களுக்கு இல்லை’ என பிஐஎஸ் நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் 38 கேன் குடிநீர் நிறுவனங்களின் குடிநீர் மாதிரியைப் பரிசோதித்து ஆய்வறிக்கையை சமர்ப்பித்தது.
இதில், 22 நிறுவனங்கள் போதிய தரத்துடன் குடிநீர் வழங்குவது உறுதி செய்யப்பட்டது. 7 நிறுவனங்களின் குடிநீர், தரக் குறியீடுகளை நிறைவு செய்வதாக இல்லாதபோதும், குடிநீர் பருகத் தகுந்தது என ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையடுத்து 29 நிறுவனங்கள் செயல்பட பசுமைத் தீர்ப்பாயம் அனுமதியளித்து. அதேசமயம் 7 நிறுவனங்கள் தங்களின் தரத்தை, மாசுக் கட்டுப்பாட்டு வாரிய நிபுணர்களின் வழிகாட்டுதலுடன் மேம்படுத்த வேண்டும் என உத்தரவிட்டது.
குடிக்கத் தகுந்தது அல்ல எனச் சான்றளிக்கப்பட்ட 9 நிறுவனங்கள் தொடர்ந்து செயல்பட தீர்ப்பாயம் தடை விதித்துள்ளது. அந்த நிறுவனங்கள் தரத்தை மேம்படுத்த மாசுக்கட்டுப்பாடு வாரியத்தை அணுக வேண்டும். அந்த நடவடிக்கைகளை மாசுக்கட்டுப்பாட்டு வாரியம் 10 நாள்களுக்குள் ஆய்வு செய்து அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் எனவும் உத்தரவிடப்பட்டது.
சென்னை தவிர தமிழகத்தின். பிற பகுதிகளில் உள்ள 855 கேன் குடிநீர் உற்பத்தி நிறுவனங்களில் 753 நிறுவனங்களுக்கு நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளது என மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்தது.
நோட்டீஸ் அனுப்பப்பட்டாலும், அனுப்பப்படாவிட்டாலும், அனைத்து கேன் குடிநீர் நிறுவனங்களிலும் மாதிரிகளைப் பரிசோதித்து வரும் ஆகஸ்ட் 26-ஆம் தேதிக்குள் அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
இதனிடையே, கேன் குடிநீர் உற்பத்தியாளர்கள் தரப்பில், “சுவையூட்டப்பட்ட குடிநீர் என்பது உணவுச் சட்டத்தின் கீழ் வருகிறது. பிஐஎஸ் நிறுவனத்தின் கீழ் வருவதில்லை என மனு தாக்கல் செய்யப்பட்டது.
No comments:
Post a Comment