உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டத்தின் கீழ், டாஸ்மாக் உள்ளிட்ட அனைத்து அரசு விற்பனை நிலையங்கள் கட்டாயம் பதிவு செய்ய வேண்டும் என்று ஆலோசனை கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
உணவு பாதுகாப்பு தர நிர்ணய சட்டம்
இந்தியாவில் ஏற்கனவே நடைமுறையில் இருந்த உணவு கலப்பட தடை சட்டம் கடந்த 4.8.2011-ந்தேதியன்று ரத்து செய்யப்பட்டு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்டம் அமல்படுத்தப்பட்டது. தமிழகத்திலும் இந்த சட்டம் அமலில் உள்ளது. உணவுப்பொருள் பரிவர்த்தனைக்கு பல்வேறு துறைகளின் அனுமதி பெறுவது, தற்சமயம் ஒரே துறையின் கீழ் கொண்டு வரப்பட்டிருப்பது இந்த சட்டத்தின் சிறப்பு அம்சமாக கருதப்படுகிறது.
உணவு பொருள் பரிவர்த்தனை செய்யும் அரசு மற்றும் பொதுத்துறை, தனியார் நிறுவனங்கள் அனைத்துக்கும் இந்த சட்டம் பொருந்தும். அதன்படி திண்டுக்கல் மாவட்ட கலெக்டரின் நேரடி கட்டுப்பாட்டில் இயங்கும் அரசு உணவு பொருட்கள் கையாளும் துறைகளுக்கு பதிவு மற்றும் உரிமம் பெறுவதற்கு துறைத்தலைவர்களுக் கான ஆலோசனை கூட்டம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடந்தது.
மதுபான கடைகள்
கூட்டத்துக்கு மாவட்ட வருவாய் அலுவலர் மனோகரன் தலைமை தாங்கினார். தமிழ்நாடு உணவு பாதுகாப்பு மற்றும் மருந்து நிர்வாகத்துறை மாவட்ட நியமன அலுவலர் குணசேகரன் முன்னிலை வகித்தார். அரசு உத்தரவுப்படி அரசுத்துறைகளான மதுபான கடைகள், கூட்டுறவுத்துறை மற்றும் மாவட்ட வழங்கல் துறையின் கீழ் செயல்படும் ரேஷன்கடைகள், கூட்டுறவு அங்காடிகள், கூட்டுறவு மருந்தகம், பொதுத்துறை மற்றும் அறநிலையத்துறையின் கீழ் இயங்கும் உணவு பொருட்கள் பரிவர்த்தனை செய்யும் கடைகள், அரசு கல்லூரிகளில் இயங்கும் கடைகள் ஆகியவற்றை பதிவு செய்ய வேண்டும் என்று கூட்டத்தில் வலியுறுத்தப்பட்டது.
இதேபோல் அனைத்து சத்துணவு கூடங்கள், அனைத்து அங்கன்வாடி மையங்கள், கோவில்களில் வழங்கப்படும் அன்னதானம், மகளிர் சுய உதவிக்குழுக்களால் நடத்தப்படும் உணவு விடுதிகள் ஆகியவை பதிவு கட்டணம் செலுத்தி பதிவு செய்ய வேண்டும். இவைகளுக்கான பதிவு கட்டணமாக ரூ.100 செலுத்த வேண்டும்.
மாணவர்களின் விடுதிகள்
கூட்டுறவுத்துறையின் கீழ் இயங்கும் அங்காடிகள், தமிழ்நாடு வாணிப கழகத்தின் கீழ் இயங்கும் அனைத்து இந்தியாவில் தயாரிக்கப்பட்ட அயல்நாட்டு மதுபான விற்பனை மையங்கள் மற்றும் மது அருந்தும் இடங்கள், கோவில்களில் இயங்கி வரும் பிரசாதம், பஞ்சாமிர்தம் போன்ற உணவு பொருட்கள் விற்பனை மையங்கள், அரசு பொறியியல் கல்லூரி, கலை மற்றும் அறிவியல் கல்லூரிகள், தொழில்நுட்ப கல்லூரிகள், பிற்படுத்தப்பட்ட, மிகவும் பிற்படுத்தப்பட்ட மாணவர்களுக்கான விடுதிகள், ஆதிதிராவிடர் நலத்துறை மாணவர்களுக்கான விடுதிகளில் உள்ள உணவு கூடங்கள் ஆகியவற்றுக்கு ரூ.2 ஆயிரம் செலுத்தி உரிமம் பெற்றுக் கொள்ள வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டது.
மேலும் பதிவு புதுப்பித்தல் 30 நாட்களுக்கு முன்னதாகவும், உரிமம் 60 நாட்களுக்கு முன்னதாகவும் விண்ணப்பிக்க வேண்டும். பதிவு செய்யாமலும், உரிமம் பெறாமலும் உணவு பொருட்கள் விற்பனை செய்யும் இடங்களில் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு சம்பந்தப்பட்டவர்கள் மீது அபராதம் மற்றும் தண்டனை வழங்கப்படும். எனவே அனைத்து சம்பந்தப்பட்ட அதிகாரிகளும் உடனடியாக பதிவு செய்ய வேண்டும் என்றும், உரிமம் பெற வேண்டும் எனவும் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment