தமிழகத்தில் 33 சதவீதம் பாலில் கலப்படம் இருப்பது ஆய்வில் தெரியவந்துள்ளது என்ற அதிர்ச்சித் தகவலை தமிழக பொது சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநர் எஸ்.இளங்கோ தெரிவித்தார். யூரியா, சீன பவுடர், மைதா மாவு போன்றவற்றை பாலில் கலப்பதால், குழந்தைகள் உயிருக்கே ஆபத்தாக முடிகிறது என்றும் அவர் கூறினார்.
இந்தியாவில் மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம், ஒடிசா ஆகிய மாநிலங்களில் பாலில் கலப்படம் அதிகரித்து வருகிறது. இதையடுத்து, உச்ச நீதிமன்றத்தில் பொது நல மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அதற்கேற்றபடி சட்டத்தில் திருத்தங்களை மாநில அரசுகள் கொண்டுவர வேண்டும் என உத்தரவிட்டது.
இதுதொடர்பாக இந்திய பொது சுகாதார சங்கத்தின் தமிழகக் கிளை தலைவரும் சுகாதாரத்துறை முன்னாள் இயக்குநருமான எஸ்.இளங்கோ கூறியதாவது:
உணவுப் பாதுகாப்பு தரநிர்ணயச் சட்டம்-2006-ல், உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு 6 மாதம் சிறை தண்டனை அல்லது ரூ.1,500 அபராதம் என்று மட்டுமே உள்ளது. இதனால், குற்றவாளிகள் அபராதத் தொகையை கட்டிவிட்டு எளிதாக வெளியே வந்துவிடுகின்றனர்.
அதன்பின், மீண்டும் உணவில் கலப்படம் செய்யும் வேலையைத் தொடர்கின்றனர். இந்நிலையில், உணவில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க வேண்டும். அதற்காக மாநில அரசுகள் சட்டத்தில் திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் என்று உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. முதல்கட்டமாக பாலில் கலப்படம் செய்பவர்களுக்கு ஆயுள் தண்டனை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளது. இது வரவேற்கத்தக்கது.
உணவிலேயே மிகவும் முக்கியமானது பால். குழந்தைகள், சிறுவர்கள், முதியவர்கள் மற்றும் நோயாளிகளுக்கு பால் கட்டாயம் தேவைப்படுகிறது.
எங்கள் சங்கம் நடத்திய ஆய்வில், நாட்டில் 65 சதவீத மக்கள் பாலை ஏதாவது ஒரு வகையில் உணவாக பயன்படுத்துகின்றனர். மேற்கு வங்கம், உத்தரப்பிரதேசம் மற்றும் ஒடிசாவில் 57 சதவீதம் பாலில் கலப்படம் உள்ளது. தமிழகத்தில் தனியார் நிறுவனங்களின் பாலை ஆய்வு செய்தபோது, அதில் 33 சதவீதம் கலப்படம் இருந்தது தெரியவந்தது.
கலப்பட வகைகள்
பாலில் தண்ணீர் ஊற்றி கலப்படம் செய்கின்றனர். மேலும் பாலில் உள்ள கொழுப்புச் சத்துக்களை மட்டும் அகற்றிவிடுகின்றனர். இதனால், பாலின் கெட்டித் தன்மை போய்விடுகிறது. கெட்டித் தன்மைக்காக பாலில் கிழங்கு மாவு, மைதா மாவு மற்றும் அரிசி மாவை கலக்கின்றனர். இது தவிர, சீனாவில் இருந்து இறக்குமதி செய்யப்படும் வெள்ளை மாவை பாலில் கலக்கின்றனர். சீன வெள்ளை மாவு கலந்த பால், சென்னைப் புறநகர் பகுதிகளில் பரவலாக விற்பனை செய்யப்படுகிறது. இதைவிடக் கொடுமையானது பாலின் கெட்டித் தன்மைக்காக யூரியாவை கலப்பது. 10 லிட்டர் பாலுக்கு 5 கிராம் யூரியா கலக்கப்படுகிறது.
தயிரின் தரம்
தண்ணீர் கலந்த பாலை தயிராக்கும்போது, பால் தனியாகவும் தயிர் தனியாகவும் இருக்கும். மாவு கலந்த பாலை தயிராக்கினால் தயிர் தனியாகவும் அதில் கலக்கப்பட்ட மாவு கட்டிக் கட்டியாக தனியாக இருக்கும். மேலும் புளிப்பும் அதிகமாக இருக்கும். யூரியா கலந்த பாலை தயிராக்கும்போது, அந்தத் தயிரில் எண்ணெய் அதிகமாக இருக்கும்.
கலப்பட பாலை உட்கொள்வதால் குழந்தைகள் அதிகம் பாதிக்கப்படுகின்றனர். இதன்மூலம் டைபாய்டு, வயிற்றுப் போக்கு, மஞ்சள் காமாலை, ஊட்டச்சத்து குறைபாடு, உடல் வளர்ச்சி தடைபடுதல், நிமோனியா காய்ச்சல் போன்ற பாதிப்புகள் ஏற்படும். யூரியா கலந்த பாலினால் சிறுநீரகம், கல்லீரல் பாதிக்கப்படும். ஒரு சில நேரங்களில் குழந்தைகள் இறப்பதற்கும் வாய்ப்புள்ளது. இவ்வாறு அவர் தெரிவித்தார்.