மலையைப் பாதுகாப்போமா; பறிகொடுப்போமா?

கடந்த நவம்பர் மாதம் 13-ம் தேதி மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், கஸ்தூரிரங்கன் தலைமையிலான, மேற்குத்தொடர்ச்சி மலைகள் தொடர்பான உயர்நிலைக் குழுவின் பரிந்துரைகளைக் கொள்கையளவில் ஏற்றுக்கொள்வதாக அறிவித்தவுடன், கேரளத்தின் எதிர்க் கட்சியான மார்க்சிஸ்ட் கட்சி முழு அடைப்புக்கு அழைப்பு விடுத்தது. இடுக்கி, கோழிக்கோடு, கண்ணூர் மாவட்டங்களில் மலைப்பகுதியை ஒட்டிய மக்களிடம் தாங்கள் வலுக்கட்டாயமாக வெளியேற்றப்படலாம் என்ற அச்சம் உருவாக்கப்பட்டிருக்கிறது.
இதன் விளைவாக கேரள அரசு மூன்று நிபுணர்களை நியமித்து, அவர்கள் நவம்பர் 26 முதல் டிசம்பர் 5 வரை கேரளத்தின் மேற்குத்தொடர்ச்சி மலை சார்ந்த மாவட்டங்களுக்குச் சென்று கருத்துக் கேட்டு, அரசுக்கு அறிக்கை தாக்கல்செய்வார்கள் என்றும் அதன் அடிப்படையில் கேரள அரசு, மத்திய அரசிடம் தனது நிலையைத் தெரிவிக்கும் என்றும் அறிவித்திருக்கிறது.
குஜராத்தின் தென் பகுதியில் தப்தி நதிக்கரையில் துவங்கி மகாராஷ்டிரம், கோவா, கர்நாடகம், கேரளம் மற்றும் தமிழகத்தின் குமரி மாவட்டம் வரை நீளும் 1,29,037 சதுர கிலோ மீட்டர் பரப்பு கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதி, யுனெஸ்கோவால் உலகில், உயிரிப்பல்வகைமை (பயோ-டைவர்சிட்டி) கொண்ட, பாரம்பரிய மிக்க 34 இடங்களில் ஒன்றாக அறிவிக்கப்பட்டது. தனக்கே உரிய சுமார் 4,000-க்கும் மேற்பட்ட தாவர இனங்கள், 500-க்கும் மேற்பட்ட பறவை இனங்கள், 120 வகைப் பாலூட்டிகள், ஏராளமான அரிய உயிரினங்கள் வாழும் இந்த மலைத்தொடர்தான் தென்னிந்தியாவின் ஜீவாதாரமாக விளங்கும் கோதாவரி, கிருஷ்ணா, காவிரி, வைகை, குந்தி நதிகளின் பிறப்பிடம்.
தமிழகத்தில் இந்தப் பிரச்சினை பொதுத்தளத்தில் விவாதப் பொருளாக மாறாத நிலையில், தமிழகத்தின் கோவை, நீலகிரி, தேனி, நெல்லை, திண்டுக்கல் மற்றும் குமரி மாவட்டங்களின் மேற்குத்தொடர்ச்சி மலைப்பகுதிகள் இந்த அறிக்கையின் கீழ் கட்டுப்படுத்தப்படும் நிலையிலும், தமிழக அரசு வெளிப்படையாக இந்த கஸ்தூரி ரங்கன் தலைமையிலான நிபுணர் குழுகுறித்து ஆதரவாகவோ எதிராகவோ எந்த நிலைப் பாட்டையும் இதுவரை எடுக்கவில்லை.
மாதவ் காட்கில் குழு சொன்னது என்ன?
மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்க, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகம் அறிவியல் அறிஞர் மாதவ் காட்கில் தலைமையில் 13 நபர் கொண்ட நிபுணர் குழுவை அமைத்தது. இந்தக் குழு 2011-ல் தனது அறிக்கையினை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வன அமைச்சகத்திடம் சமர்ப்பித்தது. ஆனால், மத்திய அமைச்சரகம் அந்த அறிக்கையை வெளியிடவில்லை. இதன் தொடர்ச்சியாக டெல்லி உயர் நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சகத்தின் இணையதளத்தில் அறிக்கை வெளியானது.
“மேற்குத்தொடர்ச்சி மலைகளை, சூழல் முக்கியத்துவம் வாய்ந்த மூன்று பகுதிகளாகப் பிரிப்பது; இப்பகுதியில் சிறப்புப் பொருளாதார மண்டலங்கள் அல்லது மலை வசிப்பிடங்கள் எதையும் புதிதாக உருவாக்கக் கூடாது; மலைக்கிராம மக்களின் குடியிருப்புகளுக்கு நிலம் வழங்குவது தவிர, புதிதாக விவசாயம் சாராத செயல்பாடுகளுக்காக நிலங்களைப் பயன்படுத்துவதைத் தடுப்பது; மலைப்பகுதியில் பாரம்பரியமான இயற்கை விவசாயத்தை நிறுவுவது. பூச்சிக்கொல்லி அல்லது மரபணு மாற்றுப் பயிர்களுக்கும், மலைப்பகுதிக்குத் தொடர்பற்ற குரோட்டன்ஸ் வகை செடிகளுக்கும் தடை விதிப்பது;
யூக்கலிப்டஸ் மரங்களைத் தடுப்பது; வன உரிமைச் சட்டம்-2006-ஐ முழுமையாக நடைமுறைப்படுத்தி, அதன் மூலம் மக்களுக்கு நில உரிமை வழங்குவது; தற்போது நடைமுறையில் உள்ள வனக்கூட்டு நிர்வாக முறைக்குப் பதிலாக, வன உரிமைச்சட்டப்படி வளங்களை நிர்வகிப்பது; முக்கியமாக, சுரங்கப் பணிகளைக் கண்காணிப்புக்குள்ளும் கட்டுப்பாட்டுக்குள்ளும் கொண்டுவருவது; வளர்ச்சித் திட்டங்கள் என்ற பெயரிலான அணைத் திட்டங்கள், ரயில் பாதைப் பணிகள் போன்றவற்றையும் கட்டுக்குள் கொண்டுவருவது” என்ற பரிந்துரைகளை மாதவ் காட்கில் குழு கூறியது.
எதிர்ப்பு அரசியல்
இந்த அறிக்கையை கேரளத்தில் உள்ள எஸ்டேட் உரிமையாளர்களும், நில வியாபாரிகளும் அவர்கள் சார்ந்த அரசியல் வட்டாரங்களும் முதலில் எதிர்க்கத் துவங்கினார்கள். இந்த எதிர்ப்பு வலுத்து, மாதவ் காட்கில் அறிக்கையை முற்றிலும் கைவிட வேண்டும் என்ற நிர்பந்தம் மத்திய அரசுக்கு ஏற்படுத்தப்பட்டது. அதன் பின்னர், மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம், அறிவியலாளர் கஸ்தூரிரங்கன் தலைமையிலான குழுவை அமைத்து, மாதவ் காட்கில் குழுவின் அறிக்கையை மறுஆய்வு செய்தது.
கஸ்தூரிரங்கன் குழு சொன்னது என்ன?
அந்தக் குழு தனது ஆய்வின் முடிவில், “மேற்குத்தொடர்ச்சி மலைகளின் பரப்பளவில் 41% பகுதி உடனடியாகக் கவனிக்கப்பட வேண்டிய பகுதி; அதில் 37% பகுதி சூழல் முக்கியத்துவம் கொண்ட பகுதி (ஈகோ சென்சிடிவ் ஏரியா); இதை மத்திய அரசு அங்கீகரிக்க வேண்டும்; இப்பகுதியில் வளர்ச்சிப் பணிகள் தீவிரக் கண்காணிப்புக்குப் பின் அனுமதிக்கப்பட வேண்டும்; இப்பகுதியில் சுரங்கம், குவாரிகள் ஐந்தாண்டுக்குள்ளோ அல்லது உரிமம் முடிந்ததுமோ தடைசெய்யப்பட வேண்டும்; 30% நீரோட்டத்தைப் பாதிக்காத வகையில் நீர் மின்சார உற்பத்தியை அனுமதிக்கலாம்; நதியிலிருந்து மூன்று கிலோமீட்டர் தொலைவுக்கு அப்பால் அல்லது 50% நதிப்படுகையைப் பாதிக்காத வகையில் திட்டப்பணிகள் அனுமதிக்கப்படலாம்;
இந்தப் பகுதியிலிருந்து 10 கிலோ மீட்டருக்குள் துவங்கும் எல்லாத் திட்டப் பணிகளுக்கும் சூழல் பாதிப்பு ஆய்வு அவசியம்; சூழல் பகுதியில் துவங்கப்படும் எல்லாத் திட்டங்களுக்கும் வன உரிமைச் சட்டத்தின்படி, கிராம சபையின் ஒப்புதல் அவசியம்; இந்தப் பகுதியில் வனவிலங்கு வலசைப் பாதைகள் தொடர்பான திட்டங்கள், அந்தப் பகுதி மக்களின் ஆலோசனையுடன் நடைபெற வேண்டும்.
கேரளத்தின் சாலக்குடி மற்றும் கர்நாடகத்தின் குண்டியா நீர்மின் திட்டங்களைத் தீவிரமான சுற்றுச்சூழல் ஆய்வுக்குப் பின் அனுமதிக்கலாம். இப் பகுதியில் 20,000 சதுர மீட்டருக்கு அதிகமான கட்டுமானப் பணிகள் அனுமதிக்கப்படக் கூடாது” என்று சொன்னது. இந்தப் பரிந்துரைகளை மத்திய சுற்றுச்சூழல் மற்றும் வனத் துறை அமைச்சகம் கடந்த 13 நவம்பர் 2013-ல் கொள்கையளவில் ஏற்றுக்கொண்டது.
இதற்கும் எதிர்ப்பு
மாதவ் காட்கில் குழு அறிக்கையோடு ஒப்பிடும்போது, கஸ்தூரிரங்கன் குழு அறிக்கை கடுமை குறைந்ததாகவும் பல்வேறு தரப்பினரையும் திருப்திப்படுத்த வேண்டும் என்ற அடிப்படையில் வடிவமைத்த வடிவமாகவும் உள்ளது. கிராம சபைகளின் ஆதரவோடும், மலைப்பகுதிகளில் குடியிருக்கும் மக்களின் ஆதரவோடும் மேற்குத்தொடர்ச்சி மலைகளைப் பாதுகாக்கும் கொள்கை கொண்டதாகவும் உள்ளது. ஆனால், இந்த அறிக்கைக்குக்கூட எதிர்ப்பு வரத் துவங்கிவிட்டது.
மலைவாழ் மக்களின் பங்களிப்பு
அறிஞர் குழுக்கள் திரும்பத் திரும்ப வன உரிமைச் சட்டம், மலைப்பகுதி மக்கள் ஆகியோரின் பங்களிப்புபற்றிக் குறிப்பிட்டுள்ளது. ஆனால், நடைமுறையிலோ வனத் துறை தனது அதிகாரத்தின் பிடியில் மலையையும் காட்டையும் வைத்துக்கொள்ளவே விரும்புகிறது.
வனவிலங்கும் மக்களும் இணைந்து வாழும் நிலைப்பாடே வனவிலங்கு சரணாலயங்கள். ஆனால், வனவிலங்குகள் பாதுகாப்புக்காக மக்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்று அதிகாரவர்க்கம் கூறும் நடைமுறையை எதிர்கொண்ட மக்கள், மேற்குத்தொடர்ச்சி மலைகள் பாதுகாப்பு நடவடிக்கையிலும் தாங்கள் வெளியேற்றக்கூடும் என அஞ்சுகிறார்கள்.
மலைகளையும் காடுகளையும் பாதுகாக்க அரசு தீவிர நடவடிக்கைகளை எடுக்க வேண்டும். அது மலைவாழ் மக்களின் அச்சத்தைப் போக்கி, அவர்களுடைய பங்கேற்புடன் நடக்க வேண்டும். அதுதான் நிரந்தர இயற்கைப் பாதுகாப்புக்கு வழிவகுக்கும்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...