புகைப்படம் வீடியோ சரியில்லை 2 லட்சம் அபராதம்

*திருமண புகைப்படங்கள், வீடியோ சரியில்லை என வழக்கு; புகைப்பட நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம்: நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவு*

Published :  10 Feb 2019

திருமண வரவேற்பு நிகழ்ச்சியின் போது புகைப்படங்கள், வீடியோவை சரியாக எடுக்கவில்லை என தொடரப்பட்ட வழக்கில் தனியார் புகைப்பட நிறுவனத்துக்கு ரூ.2 லட்சம் அபராதம் விதித்து நுகர்வோர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுதொடர்பாக கோவை ராம்நகரைச் சேர்ந்த என்.அசோகன்,மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன் றத்தில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:

எனது மகளின் திருமணம் கடந்த 2017 மார்ச் 2-ம் தேதி நாகப்பட்டினம் மாவட்டம் சீர்காழியில் நடைபெற்றது.

திருமண வரவேற்பு நிகழ்ச்சி மார்ச் 3-ம் தேதி சீர்காழியிலும், 5-ம் தேதி கோவையிலும் நடைபெற்றது. திருமணம், வரவேற்பு நிகழ்ச்சியை புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக மட்டும் ரூ.1.31 லட்சம் செலவு செய்தேன்.

 இதற்காக, சென்னையைச் சேர்ந்த தனியார் புகைப்பட நிறுவனத்தில் முன்பதிவு செய்திருந்தேன். அவர்களும், சிறப்பாக புகைப்படங்களை எடுத்து தருவதாக தெரிவித்தனர்.

ஆனால், வாக்குறுதி அளித்தபடி கோவையில் நடைபெற்ற வரவேற்பு நிகழ்ச்சிக்கு கேன்டிட் புகைப்படக்கலைஞரை அவர்கள் அனுப்பவில்லை.

 ஃபோகஸ் விளக்குகளும் சரிவர இல்லை. சீர்காழியில் நடைபெற்ற நிகழ்ச்சியில், மணமகளும், மணமகனும் மண்டபத்துக்குள் நுழையும்போது அங்கு புகைப்படக்கலைஞர் இல்லை.

பல முக்கிய விருந்தினர்களின் புகைப்படங்களையும் அவர்கள் எடுக்கவில்லை. திருமண புகைப்பட ஆல்பத்தில், நாங்கள் தேர்வு செய்த பல படங்கள் இடம்பெறவில்லை.

 சில படங்கள் இரண்டு முறை இடம்பெற்றிருந்தன. புகைப் படங்களும் தரமாக இல்லை.
நிகழ்ச்சி முடிந்த பிறகு, எடிட் செய்யபட்ட வீடியோவும் நிகழ்வு களின் வரிசைப்படி இல்லை. வீடியோவில் திருமண தேதி கூட தவறாக இருந்தது.

இதையடுத்து, சேவை குறைபாட்டை காரணம்காட்டி புகைப்பட நிறுவனத்துக்கு நோட்டீஸ் அனுப்பினேன். அதற்கு அவர்கள், உரிய பதில் அளிக்கவில்லை.

எனவே, புகைப்படம், வீடியோ எடுப்பதற்காக நான் செலுத்திய ரூ.1.31 லட்சத்தை திருப்பி அளிக்கவும்,சேவை குறைபாட்டுக்கு உரிய இழப்பீடு வழங்கவும் உத்தரவிட வேண்டும். இவ்வாறு மனுவில் கோரியிருந்தார்.

மனுவை விசாரித்த மாவட்ட நுகர்வோர் குறைதீர்மன்றத்தின் தலைவர் ஏ.பி.பாலசந்திரன், உறுப்பினர் ஆர்.டி.பிரபாகர் ஆகியோர் பிறப்பித்த உத்தரவு:
புகைப்பட நிறுவனத்தின் சேவையில் குறைபாடு இருந்துள்ளது ஆதாரங்கள் மூலம் நிரூபிக்கப்பட்டுள்ளது. எனவே, மனுதாரருக்கு ஏற்பட்ட மன உளைச்சலுக்கு இழப்பீடாக ரூ.2 லட்சத்தை 9 சதவீத வட்டியுடன் வழங்க வேண்டும். அதோடு, வழக்குச் செலவாக ரூ.2,500 வழங்க வேண்டும். இவ்வாறு அவர்கள் உத்தரவிட்டனர்.

https://tamil.thehindu.com/tamilnadu/article26227317.ece

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...