பந்தலூர்: சிறப்பான சேவை செய்த பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி நுகர்வோர் மன்றம் இரண்டாம் பரிசை பெற்றது.
அரசு உணவுப்பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை, மாவட்ட நிர்வாகம், கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் இணைந்து, பள்ளிகளில் குடிமக்கள் நுகர்வோர் மன்றங்களை செயல்படுத்தி வருகிறது. கடந்த 2012-13ம் ஆண்டில் சிறப்பான சேவை செய்த நுகர்வோர் மன்றம், மாவட்ட வருவாய் அலுவலர் தலைமையில் தேர்வு செய்யப்பட்டது.
அதில், பந்தலூர் அரசு மேல்நிலைப்பள்ளி, புனித சேவியர் பெண்கள் உயர்நிலைப்பள்ளி ஆகியவை 2ம் இடத்தை பிடித்தன. பந்தலூர் வட்ட வழங்கல் அலுவலர் ஜான்மனோகர், இதற்கான பரிசை தலைமையாசிரியர் சாமலேசனிடம் வழங்கினார். மைய தலைவர் சிவசுப்ரமணியம், ஒருங்கிணைப்பாளர் ஆசிரியர் தண்டபாணி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.