பந்தலூர் : "பந்தலூரில் செயல்பட்டு வரும் நுகர்பொருள் வாணிப கிடங்கை மாநில எல்லைப்பகுதிக்கு மாற்றம் செய்வதால், கடத்தலுக்கு வழி ஏற்படும்' என, புகார் எழுந்துள்ளது.
பந்தலூர் மார்க்கெட் பகுதியில் இருந்த தோட்ட கலைத்துறைக்கு சொந்தமான கட்டடத்தில் நுகர்பொருள் வாணிபகிடங்கு செயல்பட்டு வந்தது.மேலும், ஹட்டி பகுதியில் தியேட்டராக செயல்பட்டு வந்த கட்டடத்துக்கும் மாற்றம் செய்யப்பட்டு, இரு கட்டடங்களிலும் செயல்பட்டு வந்தது. இந்நிலையில்,"இந்த இரண்டு கட்டடங்களும் போதாது' எனக்கூறி, ஒரு சில அதிகாரிகள், அரசியல்வாதிகளின் தன்னிச்சையான முடிவால்,
தற்போது மாநில எல்லையில் உள்ள அய்யன்கொல்லி பகுதிக்கு, குடோனை மாற்றம் செய்ய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. "இடமாற்றம் செய்தால், ஏற்கனவே அரிசி கடத்தலுக்கு பெயர்போன பந்தலூர் தாலுகாவில், கடத்தல் சம்பவங்கள் மேலும் அதிகரிக்க வாய்ப்பு உண்டாகும்' என, குற்றம் சாட்டப்பட்டுள்ளது.
இது குறித்து, கூடலூர் சுற்றுச்சூழல் பாதுகாப்பு சங்கம்; மகாத்மா காந்தி பொது சேவை மைய நிர்வாகிகள் சிவசுப்ரமணியம்,நவுசாத் ஆகியோர் கூறுகையில்,"
"பந்தலூர் பஜாரை ஒட்டி இடம் இல்லை; அதனால் தான் அய்யன்கொல்லிக்கு மாற்றும் நடவடிக்கை எடுக்கப்படுகிறது என அதிகாரிகள் கூறுகின்றனர். ஆனால், பந்தலூரில் செக்சன்-17க்கு உட்பட்ட 25.28 எக்டர், கிராம மேய்ச்சல் நிலம் 6.39 எக்டர், புறம்போக்கு நிலம் 4.72 எக்டர் என, மொத்தம் 42.76 எக்டர், அரசு நிலம் தனியாரின் கைகளில் உள்ளது. இந்த நிலங்களை அரசு கையகப்படுத்தினால், அனைத்து வகை அரசு கட்டடங்களும் கட்டுவதற்குரிய நிலங்கள் கிடைக்கும். ஆனால்,ஆக்கிரமிப்பாளர்களுக்கு ஆதரவாகவும், கடத்தல்காரர்களுக்கு ஏதுவாகவும் வாணிபக்கிடங்கை இடமாற்றம் செய்வது கண்டனத்துக்கு உரியது. எல்லையில் குடோன் அமைத்தால், கோர்டில் வழக்கு தொடருவோம்,'' என்றனர்.
இது குறித்து புகார் மனு சங்கங்களின் சார்பில், மாவட்ட கலெக்டருக்கும் அனுப்பப்பட்டுள்ளன.
நன்றி