பழமைகள் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல, பாதுகாக்கப்பட வேண்டியவை!

அண்மையில் நண்பர் ஒருவரது வீட்டுக்கு சென்றிருந்தேன். அவருடைய ஆறு மாத குழந்தை நீண்ட நேரமாக அழுது கொண்டிருப்பதாக கூறி, அவசரமாக மருத்துவமனைக்கு கிளம்பிச் சென்றார். சில மணி நேரத்துக்குப் பிறகு அவரிடம் குழந்தையின் நலம் குறித்து விசாரித்தபோது, குழந்தையைப் பார்க்க வந்திருந்த உறவினர்கள் தூக்கியபோது நரம்பு பிசகியதால் அழுததாகவும், தற்போது சரியாகி விட்டதாகவும் கூறினார்.
ஆனால், அவர் அடுத்து கூறியதுதான் அதிர்ச்சியை உண்டாக்கியது. மருத்துவமனையில் இதற்கென குழந்தைக்கு பல்வேறு பரிசோதனைகள் செய்யப்பட்டதாகவும், அதற்கு சிகிச்சை, மருந்து என சில நூறு ரூபாய்கள் செலவு ஆனதாகவும் கூறினார்.
குழந்தைக்கு சிறு வலி என்றாலும் தனது அழுகையின் மூலமே வெளிப்படுத்தும். இரவு நேரம் என்றால் பெற்றோரின் தூக்கம் பறிபோகும்.
அதேநேரம் வயதானவர்கள் குழந்தையின் நிலை அறிந்து குடல் தட்டுதல் எனப்படும் கை வைத்தியம் செய்வார்கள். அத்துடன் மேலும் கீழும் வேகமாக உலுக்குவார்கள். துணியில் குழந்தையை படுக்க வைத்து இருபக்கமும் ஆட்டுவார்கள்.
இதைப் பார்க்கின்றவர்களுக்கு உள்ளம் பதைபதைக்கும். ஆனால், சில நிமிடங்களில் குழந்தையின் அழுகுரல் மெல்லக் குறைந்து நிம்மதியாக உறங்கும். பாட்டி வைத்திய முறைகளில் இதுவும் ஒன்று.
ஆனால், தற்போது பாட்டி வைத்தியங்கள் மெல்ல மறைந்து வருகின்றன. சிறு தலைவலி என்றாலும் கஷாயத்தின் மூலம் குணமான காலங்கள் மறைந்து போய்விட்டன. கிராமங்களில் எளிதில் கிடைக்கும் கீழாநெல்லி, தும்பை, தூதுவளை, கரிசலாங்கண்ணி உள்ளிட்ட செடிகள் மருத்துவ குணம் நிறைந்தவை.
உடல்நிலை சரியில்லை என்றால், அந்தப் பகுதிகளில் எளிதாக கிடைக்கும் இந்த செடிகளில் நோய்க்கு தக்கவாறு கஷாயமாக தயாரித்து சாப்பிடக் கொடுத்து ஓய்வு எடுக்கச் சொல்வார்கள்.
மஞ்சள் காமாலை, சுளுக்கு போன்றவற்றுக்கு மருத்துவரிடம் செல்லும்போது, நாட்டு வைத்தியத்தை பரிந்துரைக்கும் சில மருத்துவர்களும் இருக்கிறார்கள். தற்போதைய காலகட்டத்தில் கிராமங்களில் இருந்து நகரப்பகுதிகளில் இடம் பெயர்ந்த குடும்பங்கள், தங்களது பெற்றோரை கிராமங்களிலேயே விட்டுவிடுகின்றனர்.
இதுபோன்ற அவசர காலங்களில் தங்களது அலைபேசி வாயிலாக முதலுதவி முறைகளைக் கேட்டு அவற்றைப் பயன்படுத்துகின்றனர். அது கைகளால் செய்யப்படும் முதலுதவி போல ஆகாது. ஏனெனில், கிராமங்களில் கிடைக்கும் மூலிகைச் செடிகள் நகரங்களில் கிடைக்காது.
அத்துடன் குழந்தையைப் பாசத்துடன் பார்த்துக் கொள்ள பெற்றோருக்கு நேரமும் இருப்பதில்லை. இதனால், உடல் உபாதைகளுக்கு ஆங்கில மருந்துகளைத் தேடி ஓட வேண்டியுள்ளது.
தற்போது அறிவியல் உலகத்தில் அவசர கதியில் மருந்துக் கடைகளில் நமது உடல் உபாதையை கூறி மாத்திரை வாங்கி சாப்பிடுகிறோம். அது தீங்கானது என்று பலமுறை மருத்துவர்களால் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நமது நோய்க்கு தகுந்த மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்றி சாப்பிடுவதால் உடனடியாக பாதிப்பு ஏற்படாது என்றாலும், நம்முடைய வாழ்நாள் எண்ணிக்கையை குறைப்பதில் அது பெரும்பங்கு வகிக்கிறது என மருத்துவ வல்லுநர்கள் கூறியுள்ளனர். ஆனால், நம்மில் பலருடைய காதுகளில் இன்னமும் விழுந்தபாடில்லை.
இயற்கையிலிருந்து நாம் கொஞ்சம் கொஞ்சமாக விலகிக் கொண்டிருக்கிறோம். இயற்கை வைத்தியம், இயற்கை விவசாயம், இயற்கை உணவு முறை இவையெல்லாம் மறைந்து வருகிறது.
சுமார் 30 ஆண்டுகளுக்கு முன்பு வரை மருத்துவச்சியால் கிராமங்களில் பிரசவங்கள் நடைபெற்று வந்திருக்கின்றன. தற்போது அவை காலாவதி ஆகிவிட்டன. மருத்துவச்சிகள் மறைந்து வருகின்றனர்.
அவர்களின் மருத்துவ முறைகளை அடுத்த தலைமுறைக்கு முன்னெடுத்து செல்ல யாரும் முன்வராததாலும், உணவு முறைகளில் ஏற்பட்ட மாற்றங்களால் பெரும்பாலும் அறுவை சிகிச்சை மூலமே பிரசவம் நடப்பதாலும் ஆங்கில மருத்துவ முறைகளை நாட வேண்டியுள்ளது.
ஆக இணையத்தில் மட்டுமே காணக்கூடிய நிலையில் இனி பாட்டி வைத்தியமும், வீட்டு வைத்தியமும் இருக்கும்.
அனுமன் கொண்டு சென்ற சஞ்சீவினி மூலிகைகள் அண்மையில் கண்டறியப்பட்டுள்ளதாகத் தகவல்கள் வந்து கொண்டிருக்கின்றன. அது போல கண்டறியப்படும் நிலை கிராமத்து மூலிகை செடிகளுக்கும், பாட்டி வைத்திய முறைகளுக்கும் வரக்கூடாது.
பழைமைகள் ஒதுக்கப்பட வேண்டியவை அல்ல, பாதுகாக்கப்பட வேண்டியவை!

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...