இயந்திர கதியில் இயங்கிக் கொண்டிருக்கும் கம்ப்யூட்டர் உலகில்,
நமது உரிமைகளையும், நாட்டில் நடைபெறும் ஒழுங்கீனங்களையும் பற்றி எடுத்துரைக்க நமக்கு நேரம் இல்லை.
நாம் நம், அறியாமை யினால் ஏமாறுவது ஒரு வகையில் ஏற்றுக் கொள்ளக் கூடியதாகும்.
ஆனால் நாம் தெரிந்தே ஏமாற்றப்படுவது பொறுக்க முடியாத குற்றமாக கருதப்படுகிறது.
நுகர்வோராகிய நாம், மிகுந்த விழிப்புடனும்,
எச்சரிக்கையுடனும், மற்றவரால் ஏமாற்றப்படாமலும் இருத்தல் அவசியம்.
இது சம்பந்தமாக நுகர்வோர் உரிமை பற்றி விழிப்புணர்வு,
செயல்வடிவம் பெறும் வண்ணம் அந்தந்த மாவட்டத்தில் கலெக்டரால் அங்கீகரிக்கப்பட்ட நுகர்வோர் அமைப்புகள் செயல்படுகின்றன.
இந்த அமைப்புகள் மக்களை
விழிப்புடன் வைத்திருக்க பல
வழிகளில் மக்களுக்கு சேவை செய்து வருகின்றன.
இந்திய குடியரசு ஆட்சியில் சாதாரண குடிமகன் முதல், ஜனாதிபதி வரை அனைவருமே நுகர்வோர் தான்.
நிறத்தாலோ, இனத்தாலோ நுகர்வோரை பிரிக்க முடியாது.
வாழ்க்கை கலாசாரத்திற்கு நுகர்வு அவசியமாகிறது. நுகர்வின்றி வாழ்வில்லை.
நுகர்வோர் என்பவர் ஒரு பொருளையோ, ஒரு சேவையையோ விலை கொடுத்து வாங்கி பயன்
படுத்துபவர்.
நுகர்வோர், தன் சொந்த
உபயோகத்திற்காக பொருளையோ அல்லது சேவையையோ பெறுபவர்.
ஒரு மனிதனோ, ஒரு நிறுவனமோ தங்கள் தேவைக்கு விலை கொடுத்து தங்களுக்கு தேவையானவற்றை பெற்று அனுபவித்தும், தேவையான சேவையை பெற்று கொள்வதும் 'நுகர்வு' எனப்படும்.
ஒருவர் தனக்கு வேண்டிய பொருளை விலை கொடுத்து வாங்குவதும்,
சேவையை குறுகிய கால கட்டத்தில் அனுபவிப்பதும்,
அதற்கான முழு கட்டணத்தை செலுத்தியோ அல்லது தவணை முறையில் செலுத்துவதாக ஒப்புக் கொண்டாலோ,
அவரே நுகர்வோர் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் 1986 வரையறுக்கிறது.
நுகர்வு செயல்பாடு என்பது நுகர்வோர், விற்பனையாளர் மற்றும் பொருளை சார்ந்திருக்கிறது.
வித்திட்ட ஜான் கென்னடி
அமெரிக்காவில் ரால்ப்நாடர் என்பவர்
முதல் முதலில் நுகர்வோர் இயக்கத்திற்கு வித்திட்டார்.
அவரே நுகர்வோர் இயக்கத்தின் தந்தை. அன்றைய அமெரிக்க அதிபர் ஜான் எப் கென்னடி, அமெரிக்க மக்கள் பயன்பெறும் பொருட்டு,
1962ம் ஆண்டு
மார்ச் 15 ல் நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தை
நிறைவேற்றினார்.
இதுவே உலக நுகர்வோர்
தினமாக அனுசரிக்கப்படுகிறது.
அச்சட்டம் எட்டு
உரிமைகளை நுகர்வோருக்கு பெற்றுத் தருகிறது.
இந்தியாவில் டிசம்பர் 24
தேசிய நுகர்வோர் தினமாக கடைபிடிக்கப்படுகிறது
* பாதுகாப்பு உரிமை
* அறிந்து கொள்ளும் உரிமை
* தேர்ந்தெடுக்கும் உரிமை
* குறைதீர்க்கும் உரிமை
* நுகர்வோர் கல்வி உரிமை
* இழப்பீடு பெறும் உரிமை
* சுற்றுச்சூழல் பாதுகாப்பு உரிமை
* அடிப்படை வசதி பெறும் உரிமை
இந்திய நாட்டில் இதுகுறித்து பல ஆண்டுகளாக பேசப்பட்டு, 1986 டிசம்பர் 24ல் சட்டமாக இயற்றப்பட்டது.
நுகர்வோர் தக்க நிவாரணம் பெற இச்சட்டம் நமக்கு ஒரு வரப்பிரசாதமாக இருக்கிறது.
நுகர்வோருக்கு சட்டப்பாதுகாப்பு
இந்தியருக்கு இச்சட்டம் மூலம் பெறப்பட்ட
உரிமைகள்
* நுகர்வோர் உரிமை பாதுகாப்பு
* நுகர்வோர் அறிந்து கொள்ளும் உரிமை
* குறைகள் கேட்பதற்கான உரிமை
* தேர்ந்தெடுக்கும் உரிமை
* குறைகளை முறையிடுவதற்கான உரிமை
* நுகர்வோர் கல்வி உரிமை
* நுகர்வோர் சட்டம், நுகர்வோருக்கு தன் இழப்பிற்கு நிவாரணம் மற்றும் இழப்பு தொகை பெற பெரிதும் உதவுகிறது.
* உணவு பொருளில் கலப்படம் செய்தல், வங்கி மற்றும் தபால் சேவை குறைபாடு, கள்ளச்சந்தை,
திரையரங்குகளில் அதிக விலைக்கு விற்கப்படும் டிக்கெட் மற்றும்
மின் விசிறி, குளிர்சாதன இயக்கத்தில் உள்ள குறைபாடு,
அரசு பஸ்களில் பயணத்தில் ஏற்படும்
குறைபாடுகள்,
டிரைவர் மற்றும் கண்டக்டர்கள் பயணிகள் மேல் உள்ள அலட்சிய போக்கு,
டவுன் பஸ், விரைவு பஸ், சொகுசு பஸ் என அதிக கட்டணம் வசூலிக்கும் போக்குவரத்து நிர்வாக குறைபாடு.
மற்றும் மின் வாரிய சேவை குறைபாடு, பழுந்தடைந்த மீட்டர், அதிகளவு காட்டும் மீட்டர், மின் இணைப்பு தாமதம்,
முன்னறிவிப்பு இன்றி மின் தடை, பழுதான மின் கம்பியால் மரணம், காப்பீட்டு கழகத்தில் உரிய நேரத்தில் இழப்பீடு பெற முடியாமை, ரயில் பயணச் சேவை குறைபாடு,
மருத்துவமனைகளில் நோயாளிக்கு ஏற்படும் சேவை
குறைபாடு, அதிக கட்டணம் வசூலித்தல்,
நகர் மற்றும் கிராம நிர்வாகங்கள் மூலம் வழங்கப்படும் குடிநீர்
குறைபாடு,
பொது விநியோகத்திட்ட குறைபாடு
போன்ற குறைபாடுகளை களைந்து இழப்பீடு பெற
நாம் நுகர்வோர் குறைதீர் நீதிமன்றங்களை அணுகலாம்.
நுகர்வோர் பாதுகாப்பு சட்டங்களை அரசு இயற்றினாலும், நுகர்வோர் தான் விழிப்புடன் இருக்க வேண்டும்.
சட்ட விரோத செயல்களை அனுமதிக்க இடமளிக்கக்கூடாது.
பொருள் வாங்கியதில் இழப்பு, சேவை குறைபாடு போன்றவற்றை தக்க அதிகாரிகள் கவனத்திற்கு கொண்டு செல்ல வேண்டும்.
மக்களின் விழிப்புணர்வு மிகமிக அவசியம். அரசாங்கம், மாணவர்களிடையேயும் விழிப்புணர்வு ஏற்படுத்த,
நுகர்வோர் மன்றங்களை பள்ளிகளிலும், கல்லுாரிகளிலும் ஏற்படுத்த உத்தரவிடப்பட்டுள்ளது.
மூன்றடுக்கு நீதிமன்றங்கள்
1. மாவட்ட குறைதீர் மன்றம்:
இதன் தலைவர் ஓய்வு பெற்ற மாவட்ட நீதிபதி.
வணிகம் மற்றும் கல்வியியலில் தேர்ந்த ஒரு உறுப்பினரும்,
சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறை கேட்பர்.
இழப்பீட்டு தொகை ரூ.20 லட்சம் வரை பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.
2. மாநில குறைதீர் மன்றம்:
இதன் தலைவர் ஓய்வு பெற்ற உயர்நீதிமன்ற நீதிபதி.
ஒரு உறுப்பினர் பொருளாதாரம் போன்ற துறையில் தேர்ந்தவராகவும்,
சமூக சேவையில் தேர்ந்த ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர்.
இழப்பீட்டு தொகை ரூ.ஒரு கோடி வரை பெற, இந்
நீதிமன்றத்தை அணுகலாம்.
3. தேசிய குறைதீர் மன்றம்:
இதன் தலைவர் ஓய்வு பெற்ற உச்சநீதிமன்ற நீதிபதி.
நான்கு உறுப்பினர்கள், அதில் ஒரு பெண் உறுப்பினரும் குறைகேட்பர்.
இழப்பீடு தொகை ரூ.ஒரு கோடிக்கு மேல் பெற, இந்நீதிமன்றத்தை அணுகலாம்.
4. நுகர்வோர் நீதிமன்றங்களில் தீர்ப்புகளை மூன்று முதல் ஆறு மாதங்களுக்குள் வழங்க, இச்சட்டம் வழிவகை செய்கிறது.
2002ம் ஆண்டு வரை நீதிமன்ற கட்டணம் ஏதுமின்றி வழக்கு நடத்தி தீர்ப்பு வழங்கப்பட்டது.
2002 ம் ஆண்டு திருத்த சட்டத்தில் கட்டணம் ரூ.100 முதல் ரூ.500 வரை இழப்பீடு தொகைக்கு ஏற்ப கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
நீதிமன்ற ஆணைகளால் திருப்தி அடையாத நுகர்வோர் 30 நாட்களுக்குள் அடுத்த நீதிமன்றத்தை அணுகலாம்.
நுகர்வோர் விழிப்புடன் இருந்து தாம் ஏமாற்றப்படுவதை தடுத்து கொள்ள வேண்டும் என நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் வலியுறுத்துகிறது.