அடிப்படை சட்ட விழிப்புணர்வு.....
GRAMA SABAI. கிராம சபை :
1994ஆம் ஆண்டு தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் பிரிவு 3ன்படி ஒவ்வொரு கிராம ஊராட்சியிலும், அக்கிராம ஊராட்சிப் பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்த அனைத்து நபர்களையும் உறுப்பினர்களாகக் கொண்டு கிராம சபை செயல்படும்.
கிராம சபை, ஜனநாயக அமைப்பின் அடித்தளமாகும். பொது மக்கள் நேரடியாக ஊராட்சி நிர்வாகத்தில் பங்கேற்பதால் அடித்தள ஜனநாயகத்திற்கு வலுவூட்டப்படுகிறது. ஊரக உள்ளாட்சி அமைப்புகள் திட்டமிடுவதிலும், வளர்ச்சிப் பணிகளை செயல்படுத்துவதிலும், பொதுமக்களின் ஒட்டுமொத்தத் திறமை மற்றும் அனுபவம் உதவி செய்கிறது.
கிராம ஊராட்சி நிர்வாகத்தின் செயல்பாடுகள் மற்றும் வளர்ச்சிப் பணிகளின் முன்னேற்றத்தை கிராம சபைக் கூட்டத்தில் சமூகத் தணிக்கைக்கு உட்படுத்துவதன் மூலம் வெளிப்படையான நிர்வாகம் உறுதி செய்யப்படுகிறது.
•கிராம ஊராட்சிகள், ஒரு ஆண்டில் பின்வரும் நாட்களில், குறிப்பாக ஜனவரி 26, மே 1, ஆகஸ்ட் 15, மற்றும் அக்டோபர் 2 ஆகிய நாட்களில் கிராம சபைக் கூட்டத்தினை நடத்த வேண்டும்.
தேவையின் அடிப்படையில், சிறப்பு கிராம சபைக் கூட்டங்களை ஊராட்சிகளின் ஆய்வாளர்(மாவட்ட ஆட்சித் தலைவர்) அனுமதி பெற்று நடத்தலாம்.
•தகுதி வாய்ந்த அனைத்து வாக்காளர்களும் கிராம சபையின் உறுப்பினர்களாவர்.
•விவாதிக்கப்பட வேண்டிய கூட்டப் பொருள்கள், கிராம ஊராட்சிகளால் முடிவு செய்யப்படும்.
•கிராம சபைக் கூட்டம் குறித்தான அறிவிப்பு குறைந்த பட்சம் ஒருவாரத்திற்கு முன்பாக வெளியிட வேண்டும்.
•கிராம சபைக் கூட்டம் நடத்துவதற்கு மக்கள் தொகை அடிப்படையில் கீழ்க்கண்டவாறு குறைவெண் வரம்பு இருக்க வேண்டும்.
ஊராட்சி மக்கள் தொகை
கலந்துகொள்ள வேண்டிய
குறைந்தபட்ச மக்கள்
500 வரை
50
501 முதல் 3000 வரை
100
3001 முதல் 10000 வரை
200
10001க்கு மேல்
300
மேற்கண்ட குறைவெண் வரம்பில் மகளிர் 3ல் ஒரு பங்கு இருக்க வேண்டும். அந்த கிராம ஊராட்சியின் மொத்த மக்கள் தொகையில் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் விகிதாச்சாரம் எதுவோ, அதே விகிதாச்சாரத்தில் ஆதிதிராவிடர் / பழங்குடியினருக்கு குறைவெண் வரம்பு இருக்க வேண்டும்.
•கிராம ஊராட்சித் தலைவர், கிராம சபைக் கூட்டத்திற்குத் தலைமை வகிப்பார்.
கிராம சபையின் கடமைகள் :
•கிராம ஊராட்சியின் ஆண்டு வளர்ச்சித் திட்டத்திற்கு ஒப்புதல் அளித்தல்.
•தனி நபர் பயன்பெறும் திட்டங்களுக்கான பயனாளிகள் பட்டியலுக்கு அங்கீகாரம் அளித்தல் மற்றும் சமுதாய சொத்துக்களை ஏற்படுத்துவதற்காக தேர்ந்தெடுக்கப்பட்ட இடங்களுக்கு அங்கீகாரம் அளித்தல்.
•இந்திரா நினைவு குடியிருப்புத் திட்டம், மகாத்மா காந்தி தேசிய ஊரக வேலை உறுதித் திட்டம் போன்ற திட்டங்களின் முன்னேற்றம், செயல்பாடுகளை ஆய்வு செய்தல்.
•கிராம ஊராட்சிகளால் நிறைவேற்றப்படும் பணிகளின் தரத்தை சமூக மற்றும் தொழில் நுட்ப தணிக்கை மூலம் கண்காணித்தல் மற்றும் கணிப்பாய்வு செய்தல்.
•கிராம ஊராட்சிக்கான ஆண்டுத் தணிக்கை அறிக்கை மற்றும் கணக்குகளை பரிசீலித்தல்.
•சமுதாய ஒருங்கிணைப்பு மற்றும் மத நல்லிணக்கத்தை ஊக்குவித்தல்.
•கிராம சபை, கிராம ஊராட்சிகளின் நிர்வாகம், திட்டச் செயல்பாடுகள் மற்றும் வரவு செலவு அறிக்கைகளைத் தணிக்கை செய்திடும் சமூகத் தணிக்கை அமைப்பாகவும் செயல்படும்.
பொது மக்கள் பங்களிப்பு :
•கிராம ஊராட்சிப் பகுதியில் வசிக்கும் மக்கள்கிராம சபையில் கலந்து கொண்டு ஊராட்சி தொடர்பாக தங்களின் கருத்துகளை எடுத்துரைக்கலாம்.
•கிராம ஊராட்சியின் நடவடிக்கைகளை ஆய்வு செய்து அதற்கு ஒப்புதல் அளித்தல் அல்லது குறைகளைத் தெரிவிக்கலாம்.
•பயனாளிகள் தொடர்பான திட்டங்கள் மற்றும் அடிப்படைக் கட்டமைப்புத் திட்டங்களை மேற்கொள்ள உரிய அறிவுரைகளை வழங்கலாம்.
•கிராம ஊராட்சியின் வளர்ச்சித் திட்டங்கள் மீது தங்களின் கருத்துக்களைத் தெரிவிப்பதுடன் கிராம ஊராட்சியின் வளர்ச்சிக்காக தங்களது முழு ஒத்துழைப்பையும் அளிக்கலாம்.
தொகுப்பறிக்கை :
கிராம சபையில் எடுக்கப்பட்ட முடிவுகள் தொடர்பான அறிக்கையினை, தீர்மான நகலுடன் கிராம ஊராட்சித் தலைவர், வட்டார வளர்ச்சி அலுவலர் (கிராம ஊராட்சிகள்) மூலமாக மாவட்ட ஆட்சித் தலைவர் / ஊராட்சிகளின் ஆய்வாளருக்கு மூன்று நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்.
ஊரகப் பகுதிகளில் வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்புகள் வழங்குதல் :
1.கிராமப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு குடிநீர் விநியோகம் செய்தல், கிராம ஊராட்சியின் முக்கியக் கடமைகளில் ஒன்றாகும்.
2.கிராமப் பகுதிகளில் கைப்பம்புகள், பொதுக் குடிநீர்க் குழாய்கள் மற்றும் வீட்டு இணைப்புகள் மூலம் குடிநீர் வழங்கப்படுகிறது.
3.கிராம ஊராட்சியில் உள்ள குடிநீர் ஆதாரங்களின் அடிப்படையில் வீடுகளுக்கான குடிநீர்க் குழாய் இணைப்பு வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
4.கிராம ஊராட்சி, குடிநீர் ஆதாரம் மற்றும் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் அறிக்கையின் அடிப்படையில் வீடுகளுக்கு குடிநீர் குழாய் இணைப்பு வழங்க நடவடிக்கை எடுக்கலாம். இதற்கு கிராம ஊராட்சியின் ஒப்புதல் பெறவேண்டும்.
5.கிராமப் பகுதியில் வசிப்போர், வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு தேவைப்படின் கிராம ஊராட்சியிடம் எழுத்து மூலம் விண்ணப்பத்திட வேண்டும்.
6.வீட்டுக்கான குடிநீர் குழாய் இணைப்பிற்காக குறைந்தபட்சம் ரூ.1,000/- முன் வைப்புத் தொகையினை வீட்டின் உரிமையாளர் கிராம ஊராட்சியிடம் செலுத்திடவேண்டும்.
7.அனுமதிக்கப்பட்ட பரிமாணத்தில், குடிநீர்க் குழாயினை வீட்டின் உரிமையாளரே, அவரது சொந்த செலவில்அமைத்துக் கொள்ள வேண்டும்.
8.ஒவ்வொரு வீட்டுக் குழாய் இணைப்பிற்கும் மாதாந்திர குடிநீர் கட்டணமாக ரூ.30/-க்குகுறையாமல் கிராம ஊராட்சிமன்ற தீர்மானத்தின்படி நிர்ணயிக்கப்பட்டு வீட்டின் உரிமையாளர் கிராம ஊராட்சிக்கு செலுத்திட வேண்டும்.
9.வறட்சிக் காலங்களில் குடிநீர் ஆதாரம் குறைவாக இருப்பதாக உணரப்படின், கிராம ஊராட்சி உரிய தீர்மானம் நிறைவேற்றி, வீடுகளுக்கு வழங்கப்பட்ட குடிநீர் குழாய் இணைப்பை தற்காலிகமாக நிறுத்தி வைக்க அதிகாரம் உள்ளது.
10.வீடுகளுக்கான குடிநீர் குழாய் இணைப்பு அனுமதி கோரி விண்ணப்பித்ததன் பேரில் தகுந்த காரணமின்றி குடிநீர் குழாய் இணைப்பினை கிராம ஊராட்சி வழங்கவில்லையென்றாலோ, தாமதம் என அறியப்பட்டாலோ வட்டார வளர்ச்சி அலுவலர்(கி.ஊ) அவர்களை அணுகி மேல்முறையீடு செய்யலாம்.
கிராம ஊராட்சிப் பகுதிகளில் கட்டட வரைபட அனுமதி வழங்குதல் :
•கிராம ஊராட்சியில் வசிக்கும் ஒருவர், புதிதாக கட்டடம் கட்டவோ, ஏற்கனவே உள்ள கட்டடத்தில் மாற்றம் செய்யவோ கருதினால் பணிகள் தொடங்கும் முன் கிராம ஊராட்சித் தலைவரிடம் உரிய படிவத்தில் முழு விவரங்கள் மற்றும் ஆவணங்களை அனுப்பிட வேண்டும்.
•கட்டடத்திற்கான வரைபடம், கட்டுமானம் அமையப்போகும் இடத்தின் தன்மை மற்றும் கட்ட உபயோகிக்கும் பொருட்களின் விவரங்களை மூன்று பிரதிகளில் அளிக்க வேண்டும்.
•கூடுதலாகக் கட்டவோ, மாற்றம் செய்யவோ வேண்டின் அதன் காரணத்தினை அளிக்க வேண்டும்.
•விண்ணப்பம், வரைபடம், இணைப்புகள் மற்றும் தேவையான இதர ஆவணங்கள் ஆகியவற்றில் விண்ணப்பதாரர் கையொப்பமிட்டிருக்க வேண்டும். விண்ணப்பதாரர் நில உரிமையாளராக இல்லையெனில், உரிமையாளரிடமிருந்து ஒப்புதல் கடிதம் பெற்று இணைக்க வேண்டும்.
•வழிபாடு, மதசார்புள்ள கட்டடம் கட்ட வேண்டும் எனில், மாவட்ட ஆட்சித் தலைவரின் முன் அனுமதி பெற வேண்டும்.
•சுடுகாடு, இடுகாடு போன்றவற்றின் எல்லையிலிருந்து 90 மீட்டர் தூரத்திற்குள் குடியிருப்பு / கட்டடத்தினைக் கட்ட வேண்டுமெனில், அந்த சுடுகாடு/இடுகாடு ஐந்து ஆண்டுகளுக்குக் குறையாமல் உபயோகப்படுத்தப்படாமல் இருக்கும் நிலையில் அனுமதி வழங்கப்படும்.
•கட்டடங்களில் அணுகக் கூடிய இடங்களிலிருந்து குறைந்த அழுத்த மின்சக்தி கம்பிக்கும் 1.50மீ இடைவெளி பக்கவாட்டிலும், உயர் அழுத்த மின்சக்தி கம்பிகளுக்கு 1.75மீ இடைவெளி பக்கவாட்டிலும் இருக்க வேண்டும்.
•அணுக முடியாத இடங்களில் குறைந்தது 2.5மீ இடைவெளி மின்கம்பிகளிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும். அணுகக்கூடிய இடங்களில் குறைந்த 4.5மீ இடைவெளி மின்கம்பியிலிருந்து செங்குத்தாக இருக்க வேண்டும்.
•கட்டட விதிகளை மீறி கட்டப்பட்டிருப்பின் அனுமதியை ரத்து செய்யும் அதிகாரம் கிராம ஊராட்சிக்கு உண்டு.
•கிராம ஊராட்சிக்கு மனை ஒப்புதலுடன் கூடிய கட்டட அனுமதி வழங்கும் அதிகாரம் பின்வருமாறு வழங்கப்பட்டுள்ளது:
4 குடியிருப்புகளுக்குள் மற்றும் 4,000 சதுர அடிக்கு மிகாமல் கட்டப்படும் தரை மற்றும் இரண்டு தளங்கள் கொண்ட கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.
2,000 சதுர அடிக்குள் கட்டப்படும் தரை தளம் மற்றும் முதல் தளம் கொண்ட வணிக கட்டடங்களுக்கு அனுமதி வழங்குதல்.
அனுமதியற்ற மனைப்பிரிவில் எவ்வித மனை ஒப்புதலோ, கட்டட அனுமதியோ கிராம ஊராட்சியால் அனுமதிக்கப்படமாட்டாது.
குடியிருப்புகளுக்கு 4,000 சதுர அடிகளுக்கு மேலும், வணிக கட்டடங்களுக்கு 2,000 சதுர அடிகளுக்கு மேலும் கட்டட அனுமதி கோரும் நிகழ்வுகளில் கிராம ஊராட்சியின் வழியாக நகர் ஊரமைப்புத் துறை மண்டல துணை இயக்குனரது ஒப்புதல் பெறப்படவேண்டும்.
ஊராட்சி ஒன்றியம் :
•ஒவ்வொரு ஊராட்சி ஒன்றியமும், 5,000 மக்கள் தொகை கொண்ட ஊராட்சி ஒன்றிய வார்டுகளை உள்ளடக்கிய வளர்ச்சி வட்டாரங்களாகும்.
•தேர்ந்தெடுக்கப்பட்ட ஊராட்சி ஒன்றிய வார்டு உறுப்பினர்களால் மறைமுகத் தேர்தலில் ஊராட்சி ஒன்றியக் குழுத் தலைவர் தேர்வு செய்யப்படுவார்.
•வட்டார வளர்ச்சி அலுவலர் (வட்டார ஊராட்சி), ஊராட்சி ஒன்றியக் குழுவின் ஆணையர் ஆவார்.
•ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரி விதிக்கும் அதிகாரம் ஏதும் இல்லை.
•மூன்றடுக்கு ஊரக உள்ளாட்சி அமைப்புகளில் ஊராட்சி ஒன்றியங்கள் இடைநிலை அமைப்பாக செயல்படுகிறது.
ஊராட்சி ஒன்றியத்தின் கடமைகள்
தமிழ்நாடு ஊராட்சிகள் சட்டம் 1994, பிரிவு 112-ன்படி ஊராட்சி ஒன்றியக் குழு கீழ்க்கண்ட பணிகளை மேற்கொள்ள வேண்டும்.
•மத்திய மற்றும் மாநில அரசுத் திட்டங்களைச் செயல்படுத்துதல்.
•ஊராட்சி ஒன்றிய சாலைகள் என்று வகைப்படுத்தப்பட்ட சாலைகள், அச்சாலைகளில் உள்ள பாலங்கள், சிறுபாலங்கள், தரைப்பாலங்கள் ஆகியவற்றைக் கட்டுதல், பழுது பார்த்தல் மற்றும் பராமரித்தல்.
•ஊராட்சி ஒன்றிய ஆரம்ப மற்றும் நடுநிலைப் பள்ளிகளை கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
•குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் ஆதாரங்கள் அமைத்தல்.
•தொற்று நோய் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் எடுத்தல்.
•ஊராட்சி ஒன்றியத்தால் வரையறுக்கப்பட்ட கண்காட்சி மற்றும் விழாக்களை நடத்துதல்.
•ஊராட்சி ஒன்றிய சந்தைகளை ஏற்படுத்துதல் மற்றும் பராமரித்தல், கடைகள், விற்பனை மையங்கள், தரை மேடை கட்டுதல் மற்றும் பராமரித்தல்.
இதர கடமைகள் :
•இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகளின் உபயோகத்திற்காக பொதுவான இடுகாடு, சுடுகாட்டை அமைத்துப் பராமரிக்கலாம்.
•இரண்டு அல்லது அதற்கு மேற்பட்ட கிராம ஊராட்சிகளில் வாழும் மக்களின் தேவைக்காக குடிநீர் மற்றும் குளிப்பதற்கான நீர் ஆதாரங்களை அமைத்தல்.
•ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் பொதுவான இடங்களில் கிராம ஊராட்சிகள் விளக்கு வசதி அமைக்கப்படவில்லையெனில், பொது மக்களின் நலம் மற்றும் பாதுகாப்பிற்காக விளக்கு வசதி அமைத்துத் தரலாம்.
•இரண்டு அல்லது அதற்கும் மேற்பட்ட ஊராட்சி ஒன்றியங்கள் சேர்ந்து பொது மருந்தகங்கள் அமைத்துப் பராமரிக்கலாம்.
•ஊராட்சி ஒன்றியத்திற்குச் சொந்தமான அசையாச் சொத்துக்களை ஊராட்சி ஒன்றியத்தில் அமைந்துள்ள எந்த ஒரு கிராம ஊராட்சியிடமும் ஒப்படைக்க அறிவிக்கை செய்யலாம்.
அதிகாரங்கள் :
•ஊராட்சி ஒன்றியப் பொது நிதியிலிருந்து மேற்கொள்ளப்படும் செலவினங்கள் அனைத்தும் ஊராட்சி ஒன்றிய குழுவின் ஒப்புதலுடனேயே செய்யப்பட வேண்டும்.
•ஊராட்சி ஒன்றிய வரவு செலவுத் திட்டத்திற்கு ஊராட்சி ஒன்றியத்தின் அனுமதி பெற்ற பின்னரே திட்டங்கள் செயல்படுத்தப்பட வேண்டும்.
•ஊராட்சி ஒன்றியப் பகுதிகளில் நீர்ப்பாசன ஆதாரத்தில் குடிமராமத்து வேலைகளை மேற்கொண்டு பொதுமக்களிடமிருந்து குடிமராமத்து கட்டணத்தை நிர்ணயித்து வசூலிக்கலாம்.
•ஊராட்சி ஒன்றிய நீர்ப்பாசன ஆதாரங்களில் மீன் பிடிப்பதற்கான உரிமம் வழங்கலாம்.
(ஆதாரம் : தமிழ்நாடு மகளிர் மேம்பாட்டு நிறுவனம்)
கிராம சபை கேள்வி பதில் :
1. எந்தெந்த தேதிகளில் கிராம சபை கூட்டம் நடைபெறும் ?
1. ஜனவரி 26 (குடியரசு தினம்)
2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்)
4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)
2. தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில் கிராம சபை கூட்டம் நடைபெறுமா?
ஆம். தமிழகத்தில் உள்ள அனைத்துக் கிராம பஞ்சாயத்துகளிலும் ஒரே நாளில்தான் கிராம சபை கூட்டம் நடைபெறும்.
3. கிராம சபை கூட்டம் எந்த இடத்தில் நடக்கும்?
உங்கள் கிராம பஞ்சாயத்திற்கு உட்படப் பகுதிகளில் ஏதாவது ஒரு இடத்தில் கிராம சபை கூட்டம் நடைபெறும். பஞ்சாயத்து அலுவலகத்திலோ, சமுதாய கூடத்திலோ, வேறு ஒரு பொது இடத்திலோ கிராம சபை கூட்டம் நடைபெறும்.
4. கிராம சபையில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம்?
கிராமத்தில் உள்ள வாக்காளர்கள் அனைவரும் கிராம சபையில் கலந்துகொள்ளலாம். ஆண்கள், பெண்கள், முதியவர்கள், பட்டியல் பிரிவினர் என அனைவரும் கலந்து கொள்ளலாம்.
5. கிராம சபையின் தலைவர் யார்?
கிராம பஞ்சாயத்து தலைவரே கிராம சபையின் தலைவர். தலைவர் இல்லாதபோது துணை தலைவர் கிராம சபையின் தலைவராக இருப்பார். துணைத் தலைவரும் இல்லாதபோது வார்டு உறுப்பினர்களில் யாரேனும் ஒருவர் கிராம சபையின் தலைவராக செயல்படலாம். இவர்கள் யாரும் இல்லாத போது கிராம மக்கள் தேர்ந்தெடுக்கும் நபர் கிராம சபையின் தலைவராக இருப்பார்.
6. கிராம சபையில் குறைந்தபட்சம் எத்தனைப் பேர் கலந்துகொள்ள வேண்டும்?
உங்கள் கிராம பஞ்சாயத்தின் மக்கள் தொகை 500 பேர் என்றால், குறைந்தபட்சம் 50 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும். அப்போதுதான் கிராம சபை ஏற்றுக்கொட்டப்படும். அதேபோல, உங்கள் கிராமத்தின் மக்கள் தொகை 501 முதல் 3000 வரை என்றால் 100 பேர் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும்.
3001 முதல் 10,000 பேர் கொண்ட கிராமத்தில் 200 பேரும் , 10,000 க்கு மேல் மக்கள் தொகை இருப்பின் 300 பேரும் கிராம சபையில் கலந்து கொள்ள வேண்டும் என்கிறது அரசாணை. [அரசாணை நிலை எண் 130 ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை நாள் 25.09.2006 ]
7. தேவையான குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபையின் நிலை என்ன?
அரசாணையில் குறிப்பிட்டுள்ள குறைவெண் வரம்பு இல்லாதபோது கிராம சபை கூட்டம் வேறொரு தேதிக்கு ஒத்திவைக்கப்படும்.
8. கிராம சபை தீர்மானம் எங்கெல்லாம் செல்லுபடி ஆகும்?
சட்ட மன்ற நாடாளுமன்ற தீர்மானத்திற்கு இணையான அதிகாரம் கிராம சபை தீர்மானத்திற்கு உண்டு. இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்ட தீர்மானங்களை கொண்ட எந்த ஒரு கிராம சபை தீர்மானமும் எந்த ஒரு நீதிமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்படும். அரசு அலுவலகங்களிலும் உரிய அங்கீகாரம் கிடைக்கும்.
9. எந்தெந்த விசயங்களுக்காகக் கிராம சபையில் விவாதித்து தீர்மானம் நிறைவேற்றலாம்?
உங்கள் கிராமத்திற்கு சம்மந்தப்பட்ட எந்த ஒரு விசயத்திற்கும், தேவைக்கும் கிராம சபை தீர்மானம் நிறைவேற்றலாம். பக்கத்துக்குக் கிராமத்தின் பிரச்சனையைத் தீர்க்கவோ அல்லது மாநில அளவில் சில கொள்கை முடிவுகளை எடுக்க வேண்டும் என்றோ உங்கள் கிராம சபையில் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது.
உதாரணமாக, உங்கள் கிராமத்தில் இருக்கும் மதுக்கடையை மூடத் தீர்மானம் கொண்டுவரலாம். ஆனால், தமிழகத்தில் மதுவிலக்கு வேண்டும் எனத் தீர்மானம் நிறைவேற்றுவது பயனளிக்காது. மேலும், இந்திய அரசியல் அமைப்பு சட்டத்திற்கு உட்பட்டதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்க வேண்டும். அதாவது மதச்சார்பின்மை, சமூக நல்லிணக்கம், தனி நபர் உரிமை போன்ற விசயங்களை மீறுவதாக உங்கள் கிராம சபை தீர்மானம் இருக்கக் கூடாது.
10. தீர்மானம் இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என வரைவு ஏதும் உள்ளதா?
இல்லை. இயல்பான வாக்கியங்களைக் கொண்டே கிராமசபையில் தீர்மானம் நிறைவேற்றலாம். இந்த வடிவில்தான் இருக்கவேண்டும் என எந்த நிபந்தனையும் இல்லை.
11. மக்கள் முன்மொழியும் தீர்மானத்தை பஞ்சாயத்துத் தலைவரோ அதிகாரிகளோ நிராகரிக்க முடியுமா?
முடியாது. கிராம சபை மக்களுக்கான சபை. பஞ்சாயத்துத் தலைவரோ, அதிகாரிகளோ மக்களின் கோரிக்கையை நிராகரிக்க முடியாது. கிராம சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை சரி அல்லது தவறு என முடிவெடுக்கும் அதிகாரம் நீதிமன்றத்திற்கு மட்டுமே உள்ளது.
12. கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் பெறமுடியுமா? அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த வேண்டுமா?
கிராம சபை தீர்மானத்தின் நகலைக் கிராம மக்கள் நிச்சயம் பெறமுடியும். அதற்குக் கட்டணம் எதுவும் செலுத்த தேவையில்லை.
13. கிராம சபையில் எத்தனைத் தீர்மானங்கள் நிறைவேற்றலாம்?
இத்தனை தீர்மானங்கள்தான் நிறைவேற்ற வேண்டும் என்ற வரையறை ஏதும் இல்லை. எண்ணிக்கை வரம்பு இல்லை என்ற காரணத்தால் எண்ணற்ற தீர்மானங்கள் நிறைவேற்றுவதில் பயனில்லை. முக்கியமான மற்றும் குறிப்பிட்ட தீர்மானங்களை நிறைவேற்றி அதை நடைமுறைப்படுத்தி பயன்பெற வேண்டும்.
14. கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்பு யாருடையது?
பஞ்சாயத்துத் தலைவர், துணைத்தலைவர் , வார்டு உறுப்பினர்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊரக வளர்ச்சி மற்றும் பஞ்சாயத்து ராஜ் துறை அதிகாரிகளே கிராம சபை தீர்மானத்தை நடைமுறைப் படுத்த வேண்டிய பொறுப்புடையவர்கள்.
கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பி கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.
15. கிராம சபை தீர்மானம் எத்தனை நாட்களுக்குச் செல்லுபடி ஆகும் ?
கிராம சபை தீர்மானம் காலாவதியே ஆகாது. ஒருமுறை சபையில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தை, சூழலின் தன்மை கருதி விவாதித்து [மறுபரிசீலனை செய்தோ, மாற்றம் செய்தோ அல்லது மறுத்தோ] வேறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டால் முந்தைய தீர்மானம் செயல் இழக்கக் கூடும்
16. சிறப்பு கிராம சபை என்றால் என்ன?
தமிழகத்தில் நான்கு நாட்கள் கிராம சபை கூட்டம் கட்டாயம் நடைபெறும்.
[1. ஜனவரி 26 (குடியரசு தினம்) 2. மே 1 (உழைப்பாளர் தினம்)
3. ஆகஸ்டு 15 (சுதந்திர தினம்) 4. அக்டோபர் 02 (காந்தி ஜெயந்தி)] இந்தக் கிராம சபைகளையும் தாண்டி கூடுதலாகக் கிராம சபை கூட்டம் நடத்த வேண்டும் என மக்கள் நினைத்தால் கிராம சபை கூட்டத்தை நடத்தலாம். அவ்வாறு கூட்டப்படும் கிராம சபை, சிறப்பு கிராம சபை என்று அழைக்கப்படும்.
17. சிறப்பு கிராம சபையைக் கூட்ட பஞ்சாயத்துத் தலைவர் முன்வராவிட்டால் என்ன செய்வது?
சிறப்பு கிராம சபை கூட்டத்தை கூட்டப் பஞ்சாயத்து தலைவர் மறுத்தால், மக்கள் தங்களுக்குள் ஒரு தலைவரை நியமித்துக் கொண்டு [சிறப்பு கிராம சபைக்கு மட்டும் அவர் தலைவராக இருப்பர்] சிறப்பு கிராம சபையைக் கூட்ட மாவட்ட ஆட்சியரிடம் கோரிக்கை வைக்கலாம்.
18. கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்த என்ன செய்ய வேண்டும்?
கிராம இளைஞர்கள் , தன்னார்வலர்கள் முயற்சி எடுத்து, அரசு அதிகாரிகளுக்கு மற்றும் தலைவர் உட்படப் பஞ்சாயத்து பிரதிநிதிகளுக்கு நினைவூட்டல் அனுப்பித் தொடர்ந்து கண்காணிப்பதன் மூலம் கிராம சபை தீர்மானத்தை விரைவாக நடைமுறைப்படுத்தலாம்.
19. முன்னுதாரண கிராம சபையில் காணப்படும் முக்கிய விசயங்கள் என்னென்ன?
* மக்கள் சொல்வதை தலைவர் மற்றும் அதிகாரிகள் கவனமாக கேட்பது
* மக்களின் சந்தேகங்களுக்கு முறையாகப் பதில் அளிப்பது
* மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு உரிய அங்கீகாரம் வழங்குதல்
* பஞ்சாயத்தின் வரவு செலவு கணக்கை மக்கள் முன் வாசித்துக் காட்டுதல்
* கிராம வளர்ச்சிக்காக விவாதிப்பது
20. கிராம சபையில் அனைவரும் தரையில்தான் அமரவேண்டுமா? அதிகாரிகள் வந்தால் நாற்காலியில் அமரலாமா?
அனைவரும் தரையில்தான் அமரவேண்டும். முதலமைச்சரே வந்தாலும் கிராம சபையில் தரையில்தான் அமரவேண்டும்.
21. பக்கத்து ஊர் கிராம சபையில் நான் கலந்து கொள்ளலாமா?
கலந்துகொள்ளலாம். ஆனால், உங்களின் வாக்கு எந்தப் பஞ்சாயத்தில் உள்ளதோ அந்தக் கிராம பஞ்சாயத்தின் கிராம சபைக்கு மட்டுமே நீங்கள் உறுப்பினர். மற்றோரு கிராமத்தின் கிராம சபையில் நீங்கள் பார்வையாளராக இருக்கலாம்.
22. இவர் கிராம சபையில் கலந்துகொள்ள கூடாது என யாரையாவது ஒதுக்கி வைக்க முடியுமா?
முடியாது. உங்கள் கிராம பஞ்சாயத்தின் வாக்காளர் அனைவரும் உங்கள் கிராம சபையின் உறுப்பினர் ஆவார்கள். எனவே, அவர்கள் அனைவரும் கிராமசபையில் கலந்துகொள்ள உரிமை படைத்தவர்கள்
உள்ளாட்சி அமைப்புகள்: அடிப்படை கேள்விகள்
1. ஏன் இதை புதிய பஞ்சாயத்து என அழைக்கிறோம்?
1993 ஆம் ஆண்டு கொண்டுவரப்பட்ட பஞ்சாயத்துச் சட்டம், இதற்கு முன்பு இருந்த பஞ்சாயத்து சட்டத்தில் இல்லாத பல புதிய சரத்துக்களை கொண்டிருந்தது. அதில் குறிப்பாக; மாநில நிதி ஆணையம், மாநில தேர்தல் ஆணையம், கிராம சபை, மகளிர் மற்றும் பட்டியல் பிரிவினருக்கு இடஒதுக்கீடு போன்ற முக்கிய சரத்துக்களை இருந்தன.
எனவே இப்புதிய பஞ்சாயத்துச் சட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட பஞ்சாயத்து அமைப்புகள் என்பதால் இவற்றை புதிய பஞ்சாயத்து அமைப்புகள் என அழைக்கிறோம்.
2. பஞ்சாயத்து நிர்வாகம் எத்தனை அடுக்குகளைக் கொண்டது?
மூன்று அடுக்குகளைக் கொண்டது.
1. கிராம பஞ்சாயத்து
2. பஞ்சாயத்து ஒன்றியம்
3. மாவட்ட பஞ்சாயத்து
3. தமிழகத்தில் மொத்தம் எத்தனைக் கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன?
தமிழகத்தில் மொத்தம் 12,618 கிராம பஞ்சாயத்துக்கள் உள்ளன
4. நகர உள்ளாட்சி அமைப்புகள் என்னென்ன?
பேரூராட்சி, நகராட்சி மற்றும் மாநகராட்சி ஆகியவை நகர உள்ளாட்சி அமைப்புகள் ஆகும்
5. ஒரு கிராம பஞ்சாயத்து எத்தனை உட்கிராமங்களை கொண்டிருக்கும்?
இது ஒவ்வொரு கிராம பஞ்சாயத்திற்கும் மாறுபடும். ஒரே ஒரு உட்கிராமம் உள்ள பஞ்சாயத்தும் உள்ளது , பல உட்கிராமங்கள் உள்ள கிராம பஞ்சாயத்தும் தமிழகத்தில் உள்ளது. சராசரியாக ஏழு முதல் எட்டு உட்கிராமங்களை கொண்டிருக்கும் ஒரு கிராம பஞ்சாயத்து.
நன்றி..
No comments:
Post a Comment