ஸ்கேன் மருத்துவர்கள் இல்லாத கூடலூர், பந்தலூர் தாலுகா அரசு மருத்துவமனைகள்:தனியார் மருத்துவமனையை நாடும் பொதுமக்கள்
By
உதகை
First Published : 14 July 2016 04:16 AM IST
கூடலூர், பந்தலூ தாலுகா அரசு
மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்கப் பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால்
தனியார் மருத்துவமனையை நாடும் நிலைமைக்குப் பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
நீலகிரி மாவட்டத்தில் கூடலூர், பந்தலூர் வட்டங்களில்
பெரும்பான்மையாக தோட்டத் தொழிலாளர்கள், சிறு, குறு விவசாயிகள், ஆதிவாசிகள்
என சுமார் 3 லட்சத்துக்கும் மேற்பட்டோர் வசித்து வருகின்றனர்.
இப்பகுதி மக்கள் மருத்துவ உதவி பெற கூடலூர் பந்தலூர்
பகுதிகளிலுள்ள அரசு மருத்துவமனைகள், நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம்,
அம்பலமூலா, அய்யன்கொல்லி, கொளப்பள்ளி, கப்பாலா, ஓவேலி, ஸ்ரீமதுரை,
உப்பட்டி, மசினகுடி ஆகிய பகுதிகளிலுள்ள ஆரம்ப சுகாதார நிலையங்களுக்கு
செல்வது வழக்கம்.
இந்நிலையில், கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு அரசு ஆரம்ப
சுகாதார நிலையங்கள், நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையம், கூடலூர்,
பந்தலூர் அரசு மருத்துவமனைகளில் கர்ப்பிணிப் பெண்களின் பரிசோதனைக்காக
ஸ்கேன் வசதி செய்து கொடுக்கப்பட்டது.
ஆனால், தற்போது ஸ்கேன் எடுக்கும் பயிற்சிப் பெற்ற
மருத்துவர்கள் பணியிடமாற்றம் செய்யப்பட்டு விட்டனர். இதனால், பந்தலூர் அரசு
மருத்துவமனை, நெலாக்கோட்டை வட்டார சுகாதார நிலையத்தில் ஸ்கேன் எடுக்கப்
பயிற்சி பெற்ற மருத்துவர்கள் இல்லாததால் அங்கு ஸ்கேன் எடுப்பதில்லை.
இதனால், அப்பகுதியிலுள்ள கர்ப்பிணிப் பெண்கள் கூடலூரில் செயல்படும் தனியார்
மருத்துவமனைகளில் ரூ.500 முதல் ரூ.750 செலுத்தி ஸ்கேன் எடுக்கும்
நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளனர். எனவே, ஏழை மக்களின் நிலையைக் கருத்தில்
கொண்டு இந்த மருத்துவமனைகளில் ஸ்கேன் எடுக்கப் பயிற்சி பெற்ற மருத்துவர்களை
உடனடியாக நியமிக்க வேண்டுமென கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment