கலப்படங்களைக் கண்டறிய எளிய வழிகள்!

பால் முதல் தேன்வரை கலப்படங்களைக் கண்டறிய எளிய வழிகள்!

அ ஞ்சறைப் பெட்டி பொருள்கள் தொடங்கி இருந்து நாம் அன்றாடம் பயன்படுத்தும் எல்லாப் பொருட்களிலுமே வியாப்பித்துவிட்டது கலப்படம். கலப்படத்தில் இரண்டு வகை உண்டு. 

பொருளாதார லாபத்துக்காகத் தெரிந்தே செய்வது... தற்செயலாக நடைபெறுவது. தற்செயலாக நடைபெறுவது பெரும்பாலும் வீட்டில் தான். 
அம்மாவோ, மனைவியோ அஞ்சறைப் பெட்டியில் வைத்திருக்கும் கடுகுடன், சீரகம் கலந்துவிடுவதைப் போன்று. அதில் ஆபத்து இல்லை. 

ஆனால் லாப நோக்குக்காக அத்தியாவசியப் பொருள்களிலும், அன்றாடம் பயன்படுத்தும் உணவுப் பொருள்களிலும் கலப்படம் செய்வதால் உடல்நலம் நிச்சயம் பாதிக்கப்படும்.


கலப்படம் செய்யப்பட்ட உணவுப் பொருள்களை சாப்பிடுவதால் உடலில் நச்சு சேர்கிறது.

நச்சின் அளவு அதிகரிக்கும்போது இதய செயலிழப்பு, கல்லீரல், சிறுநீரகம் போன்றவை பாதிக்கப்பட்டு உயிருக்கே ஆபத்தாக முடியும். தரமான உணவைச் சாப்பிடும்போது கிடைக்க வேண்டிய ஊட்டச்சத்துகள், கலப்படம் செய்யப்பட்ட உணவுப்பொருள்களைச் சாப்பிடுவதால் கிடைக்காமல் போய்விடும். 

இதனால் ஊட்டச்சத்து குறைபாடு ஏற்படும். கலப்படமில்லாத தரமான உணவுப் பொருள்களை வாங்கிப் பயன்படுவதில் நுகர்வோரான நமக்கும் பெரும் பொறுப்பு உள்ளது.

பரபரப்பான வேலைச் சூழலில் எந்த ஆய்வகத்தைத் தேடிச் சென்று உணவுப் பொருளில் கலப்படம் இருப்பதைக் கண்டுபிடிக்கமுடியும்...? எளிய வழி இருந்தால் சொல்லுங்கள் என்கிறீர்களா?

வீட்டிலேயே கலப்படத்தைக கண்டறியும் வழிமுறைகளைத் தொகுத்து வெளியிட்டுள்ளது தில்லியைச் சேர்ந்த வாய்ஸ் என்ற அமைப்பு. 

நுகர்வோர் நலனுக்காக 35 ஆண்டுகளாக செயல்பட்டு வரும் இந்த அமைப்பு மத்திய அரசுடன் இணைந்து உணவுப் பொருள்களில் உள்ள கலப்படத்தைக் கண்டறியும் முயற்சியிலும் ஈடுபட்டு வருகிறது.

நம் அன்றாட பயன்பாட்டில் தவிர்க்க முடியாத உணவுப் பொருள்கள் சிலவற்றில் இருக்கும் கலப்படத்தை வீட்டிலேயே கண்டறியும் எளிய வழிமுறைகள் இங்கு தொகுக்கப்பட்டுள்ளன.


பொதுவாக, கனம் அதிகமுள்ள பொருள்கள் நீரில் மூழ்கும். இலகுவான பொருள்கள் நீரில் மிதக்கும். இயற்கை நிறம் கொண்ட உணவுப் பொருள்களைத் தண்ணீரில் போட்டால் நிறம் மாறாது. 

செயற்கை நிறமூட்டப்பட்டிருந்தால் அதன் சாயம் நீரில் இறங்கும். இந்த இரண்டு அடிப்படை அறிவியல் டெக்னிக்கையும் பயன்படுத்தி பெரும்பாலான கலப்படங்களைக் கண்டறியலாம்.

இனி கலப்படத்தைக் கண்டறியும் எளிய முறைகளைப் பார்ப்போம்.

பால்

* பாலில் தண்ணீர் கலப்பைக் கண்டறிய, ஒரு சொட்டுப் பாலை வழவழப்பான, சாய்வான தளத்தில் விட வேண்டும். கலப்படமில்லாத பால் என்றால் அது அப்படியே நிற்கும் அல்லது மெதுவாக வழியத் தொடங்கும். பால் வழிந்து வந்த பாதையில் வெள்ளை நிறத் தடம் இருக்கும். தண்ணீர் சேர்க்கப்பட்ட பால் என்றால் தளத்தில் விட்ட உடனேயே வழிந்து விடும். வந்த இடத்தில் தடம் எதுவும் இருக்காது.


* பாலில் டிடர்ஜென்ட் கலப்படத்தைக் கண்டறிய, 5 - 10 மி.லி. பாலுடன், அதே அதே அளவு தண்ணீர் சேர்த்து ஒரு டப்பாவில் ஊற்றி, டப்பாவை மூடி நன்றாகக் குலுக்க வேண்டும். டப்பாவைத் திறந்து பார்க்கும்போது அடர்த்தியான நுரை படர்ந்திருந்தால் அதில் டிடர்ஜென்ட் கலந்திருக்கிறது. மெல்லிய நுரை இருந்தால் கலப்படம் இல்லை.

* பால் பொருள்களான பன்னீர், கோவா போன்றவற்றில் ஸ்டார்ச் கலந்திருப்பதைக் கண்டறிய, அவற்றில் 3 மில்லி அளவுக்கு எடுத்து அதனுடன் 5 மில்லி தண்ணீர் சேர்த்து வேகவைக்கவேண்டும். வேக வைத்து ஆறிய பின் அதன் மேல் 2, 3 துளி டிஞ்சர் ஐயோடின் கரைசலைத் தெளித்தால் நீல நிறமாக மாறிவிடும். 

பாலிலும் ஸ்டார்ச் கலந்திருப்பதைக் கண்டறிய அதன்மீது நேரடியாக இதே கரைசலைச் சேர்க்கலாம். நீற நிறமாக மாறினால் கலப்படம் இருப்பது கன்ஃபார்ம். நிறம் மாறாவிட்டால் கலப்படம் இல்லை.

டீத்தூள்

* ஒரு கரண்டி டீத்தூளை கண்ணாடி டம்ளரில் போட்டு அதில் சூடான தண்ணீரை ஊற்றுங்கள். நல்ல டீத்தூள் என்றால் தண்ணீரின் நிறம் மாற 3 நிமிடங்கள் எடுக்கும். அதுவே கலப்பட டீத்தூள் என்றால் 30 விநாடியில் நிறம் மாறிவிடும்.

* டீத்தூளின் மணத்தை வைத்தே அதன் தன்மையைக் கண்டறிய முடியும். ஓர் ஏர் டைட் டப்பாவில் டீத்தூளைக் கொட்டி இறுக மூடி வையுங்கள்.

 24 மணி நேரம் கழித்து டப்பாவைத் திறக்கும்போது காற்றோற்றமில்லாத கெட்ட மணம் வீசினால் அது, கலப்படத்தூளேதான். டப்பாவைத் திறக்கும்போது டீத்தூளின் உண்மையான சுண்டி இழுக்கும் மணம் வந்தால், 'then its time for a cup of tea'.


தேங்காய் எண்ணெய்

* தேங்காய் எண்ணெய் உறையும் தன்மை உடையது. அதனுடன் பிற எண்ணெய் கலந்திருப்பதைக் கண்டுபிடிக்க ஒரு கண்ணாடி டம்ளரில் தேங்காய் எண்ணெய்யை ஊற்றி ஃபிரிட்ஜில் சில மணி நேரம் வைத்து (ஃபிரிட்ஜில் உள்ள ஃபிரீஸரில் வைக்கக் கூடாது) எடுங்கள். 

கலப்படமில்லாத தேங்காய் எண்ணெய் உறைந்திருக்கும். கலப்படம் இருந்தால் அதில் இருக்கும் தேங்காய் எண்ணெய் உறைந்தும், கலக்கப்பட்ட வேறு எண்ணெய் உறையாலும் இருக்கும்.

தேன்

* சுத்தமான தேன் தண்ணீரில் கரையாது. தண்ணீருடன் கூடிய கண்ணாடி டம்ளரில் ஒரு ஸ்பூன் தேன் விட்டு கலக்குங்கள். கரையாமல் தேங்கினால் அது சுத்தமான தேன். நீரில் கரைந்தால் அதனுடன் சர்க்கரை கலந்திருக்கிறது என்று புரிந்து கொள்ளுங்கள்.


* ஒரு குச்சியைத் தேனில் முக்கி அதை தீக்குச்சியால் பற்ற வையுங்கள். 'சுர்' என்ற சத்தத்துடன் தீப்பற்றி எரிந்தால் அது சுத்தமான தேன். சர்க்கரை கலந்திருந்தால் தீப்பிடிக்காது.

சர்க்கரை


* சர்க்கரையில் சாக்பீஸ் பவுடர் கலந்திருப்பதைக் கண்டறிய, ஒரு ஸ்பூன் சர்க்கரையை ஒரு டம்ளர் தண்ணீரில் போடுங்கள். சிறிது நேரத்தில் உண்மையான சர்க்கரை கரைந்துவிடும். சாக்பீஸ் பவுடர் டம்ளரின் அடியில் படியும்.

மஞ்சள்தூள்

* மஞ்சள்தூளைத் தண்ணீரில் போட்டால், இளம் மஞ்சள் நிறமாக மாறி, டம்ளரின் அடியில் படிய வேண்டும். அடர் மஞ்சள் நிறத்தில் மிதந்தால் அது கலப்படத்தூள்.

தானியங்கள்

* கேழ்வரகு, கோதுமை, சோளம் போன்ற தானியங்களைத் தண்ணீரில் போடும்போது அதில் செயற்கை நிறம் கலந்திருந்தால் தண்ணீரின் நிறம் மாறிவிடும்.

மிளகாய்த்தூள்

* மிளகாய்த்தூளை ஒரு டம்ளர் தண்ணீரில் போடுங்கள். சுத்தமான மிளகாய்த்தூள் நீரில் மிதக்கும்.

மிளகு

* மிளகுடன் பப்பாளி விதைகள் கலப்பதையும் கண்டறிய இதே தண்ணீர் டெக்னிக்தான். பப்பாளி விதையைக் காட்டிலும் எடை அதிகம் என்பதால் மிளகு, தண்ணீரின் அடியில் தங்கும். பப்பாளி விதை நீரின் மேல் மிதக்கும்.

புகார் அளியுங்கள்!

உணவுப் பொருள்களில் கலப்படம் கண்டறியப்பட்டால், உடனே அதனை இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையத்தில் (FSSAI) புகார் தெரிவிக்கலாம். நுகர்வோரிடம் இருந்து அதிக புகார்களை எதிர்நோக்கிக் கொண்டிருக்கிறது ஆணையம். 

அதே போன்று நாம் வாங்கும் உணவுப்பொருளில் கலப்படம் இருப்பதை ஆய்வகத்தின் மூலம் உறுதிப்படுத்திக் கொள்ள நினைத்தால், FSSAI-ன் ஆய்வகங்கள் இந்தியா முழுவதும் 72 இடங்களில் உள்ளன. 

தமிழகத்தில் சென்னையில் இரண்டு ஆய்வகம் உள்பட, கோவை, மதுரை, சேலம், தஞ்சாவூர், திருநெல்வேலி என ஏழு இடங்களில் உள்ளன. 

ஒருவேளை நீங்கள் எடுத்துச் செல்லும் உணவுப்பொருளில் கலப்படம் இருப்பது ஆய்வக சோதனையில் உறுதி செய்யப்பட்டால், ஆய்வுக்காக நீங்கள் செலுத்திய கட்டணம் உங்களுக்கே திருப்பி அளிக்கப்படும்.


No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...