பரவும் கொலைவெறி காதல் தடம் மாறும் மாணவ பருவம்
காதல்
காதல் காதல்...காதல் போயின், சாதல்...சாதல்...சாதல் & இப்படி சொல்லி விட்டுப் போய் விட்டார் பாரதி. காதலுக்காக உயிரையும் விடுவான் என்ற பொருளில் அந்த கவி சொன்னது...
இன்று வேறு வகையில் இளைஞர்களிடம் பரவி விட்டது. காதல்...கொலை வெறி வரை கொண்டு போய்விட்டுள்ளது.
தன்னுடன் படித்து வந்த சுருதிமேனனை காதலித்து திருமணம் செய்து கொள்ளவேண்டும் என்பது அஜிம் அயூப்பின் விருப்பம். அபிநயா மீதும் வேணுகோபாலுக்கு ஏற்பட்டது காதல் தான்.
ஆனால் சுருதிமேனனும், அபிநயாவும் காதலை ஏற்றுக்கொள்ள மறுத்ததால் கொலை செய்து விட்டு தங்களை மாய்த்துக்கொள்ளும் முடிவை அஜிம் அயூப்பும், வேணுகோபாலும் எடுத்துள்ளனர்.
கொலை சம்பவங்களில் ஈடுபடுவதற்கு முன்பு வரை இவ்விரு இளைஞர்களும் தங்கள் பெற்றோரிடமும், நண்பர்களிடமும் பரம சாதுவாக தான் இருந்தனர். “அஜிம் இப்படி ஒரு காரியத்தில் இறங்குவான் என்று நாங்கள் கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. வகுப்பறையில் இருந்தால் எங்களுடன் எப்போதும் அரட்டை கச்சேரிக்கு பஞ்சமிருக்காது. ஆனால் கடைசி வரையில் இப்படி ஒரு கொடூரமான முடிவை எடுக்கக்கூடும் என்று நாங்கள் எதிர்பார்க்கவேயில்லை என்கின்றனர் நான்கு ஆண்டுக்கு மேலாக அவருடன் படித்து வந்த நண்பர்கள்.
இதே நிலை தான் வேணுகோபாலுக்கும். தனது பெற்றோரின் குடும்ப சுமையை குறைப்பதற்காக 16 வயதிலேயே வேலைக்கு சென்றார். சமீபத்தில் தான் எஸ்எஸ்எல்சி தேர்வு எழுதவேண்டும் என்ற எண்ணமே வந்து அதற்காக தயாராகி வந்தது தெரியவந்துள்ளது.
இரு சம்பவங்களும் அடுத்தடுத்து ஒரே நகரில் நடந்ததால் தற்போது பூதாகரமாகியுள்ளது. ஆனால் இதுபோல் குறைந்தபட்சம் வாரத்திற்கு ஒரு சம்பவமாவது நாட்டின் ஏதாவது ஒரு இடத்தில் நடந்து வருகிறது.
கொலைகள் குறைவே:
தமிழகத்தில் கடந்த 2011ல் நடந்த வன்குற்றங்களில்(வயலன்ட் கிரைம்) 1877 பேர் கொலை செய்யப்பட்டவர்களில் காதல் விவகாரத்தினால் மட்டும் 15.8 சதவீத கொலைகள் நடந்துள்ளன. அதாவது 297 பேர் காதல் பிரச்னையால் கொல்லப்பட்ட பெண்கள். இதில் 220 பேர் 20 வயதுக்குட்பட்டவர்கள் என்பது தான் திகைப்பூட்டுவதாக உள்ளது.
அதேபோல் காதல் தோல்வியால் தற்கொலை செய்பவர் எண்ணிக்கையும் மிக அதிகம். தமிழகத்தில் கடந்த ஆண்டு நடந்த தற்கொலையில் 32 சதவீதம் காதல் தோல்வியால் நடந்துள்ளது. இதில் பெரும்பாலானோர் 25 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலருமே அடங்குவர்.
தற்போதைய பொருளாதார சூழலில், நடுத்தர வர்க்கத்தை சேர்ந்த ஒவ்வொரு குடும்பத்திலும் கணவனுடன் மனைவியும் சேர்ந்து உழைத்தால் மட்டுமே குடும்பத்தை ஓரளவேனும் கவுரவமாக நடத்தமுடியும் என்பது எதார்த்த நிலை. ஆனால் இதுபோன்ற கொடூர சம்பவங்கள் பெண் பிள்ளைகளை வளர்க்கும் பெற்றோருக்கு ஒவ்வொரு நாளும் தவிப்பு தான். பள்ளிக்கும், கல்லூரிக்கும் செல்லும் தன் குழந்தை பாதுகாப்பாக வீடு வந்து சேரும் வரை கவலை நீடிக்கவே செய்கிறது.
இதற்கு பிரதான காரணங்கள் கலாச்சார மாற்றமும், பெருகி வரும் நவீன தொழில்நுட்பங்களும் தான் என்று சமூக ஆர்வலர்கள் கருதுகின்றனர்.
என்ன செய்யலாம்:
வீட்டுக்கு வெளியே குழந்தைகள் நடவடிக்கையை பெற்றோர் கண்காணிக்கவேண்டும். பள்ளி அல்லது கல்லூரிக்கு சென்று திரும்பும் தனது குழந்தை காலதாமதமாக வந்தாலோ அல்லது மனரீதியாக பாதிக்கப்பட்டிருந்தாலோ அதற்கான காரணங்களை பெற்றோர் அறிந்து கொள்ள முன்வரவேண்டும். இளம் பருவத்து பிள்ளைகளிடம் கண்டிப்பு காட்டும் பெற்றோராக இருப்பதை காட்டிலும் நண்பர்களாக இருந்து நல்வழிப்படுத்துவது தான் சிறந்த வழி. பெரும்பா லும் கல்லூரி பருவத்து மாணவ, மாணவிகளிடம் ஏற்படும் பெரிய பாதிப்புகள் காதல் விவகாரம் அல்லது தீய பழக்க வழக்கங்களுக்கு ஆளாகுதல் மட்டுமே.
மாறி விட்டது போக்கு:
பள்ளி, கல்லூரிகளில் முன்பு ஆசிரியர்&மாணவரிடையே தூய்மையான உறவு இருந்தது. கண்டிக்கவேண்டிய நேரத்தில் கண்டிப்பு காட்டிய ஆசிரியர்கள், பலர் தங்கள் மாணவர்களின் எதிர்காலத்திலும் கவனம் செலுத்தினர். ஆனால் இப்போது ஆசிரியர்&மாணவரிடையே இடைவெளி ஏற்பட்டுள்ளது.
இது கல்வி வணிகமயமாகிப்போனதன் விளைவு. தவறு செய்யும் மாணவனை கண்டிக்க முனையும்போது பெற்றோரிடமிருந்து வரும் எதிர்மறையான விளைவு ஏற்படுகிறது. இதனால் சமூக அக்கறை கொண்ட ஆசிரியர்கள் கூட ஒதுங்கி செல்கின்றனர் என்கிறார் ஆசிரியர் சந்திரசேகர்.
அதேபோல் வணிக நோக்கத்துடன் நடத்தப்படும் சில கல்வி நிறுவனங்களில், பணம் கறக்கும் பசுவாக தான் மாணவர்கள் பார்க்கப்படுகின்றனர். அவர்களது நடவடிக்கை தவறாக தெரிந்தால் கூட கண்டித்து திருத்துவதை காட்டிலும், அதன் மூலம் காசு பார்ப்பதில் தான் குறியாக உள்ளனர். ஒரு வகுப்பறையில் மாணவ& மாணவியரி டையே தோழமை இருப்பது தவறில்லை. ஆனால் வரம்பு மீறும் நடவடிக்கைகள் கல்லூரிக்கு வெளியில் நடந்தால் கூட அதை கண்டிக்கும் மனப்பக்குவம் கல்லூரி நிர்வாகங்களுக்கும் ஏற்படவேண்டும்.இதுபோன்ற பிரச்னைகளை களைந்தாலே கொலைவெறி சம்பவங்களுக்கு முடிவு கட்டமுடியும்.
வன்முறை அதிகரிக்கும் பின்னணி
கோவையில்
பிரபல தனியார் கல்லூரியில் முதுகலை வணிகம் படித்து வந்த 20 வயது நிரம்பிய மாணவி சுருதிமேனன். கடந்த 22ம் தேதி மாலை கோவை வடவள்ளியில் வீட்டில் இருந்தபோது அங்கு வந்த சக வகுப்பு தோழர் அஜிம் அயூப் கத்தியால் கொடூரமாக குத்தி கொலை செய்யப்பட்டார்.
கண் எதிரில் மகள் கொல்லப்படுவதை தடுக்க முயன்ற சுருதிமேனன் தாய் லதாவையும் ஆத்திரம் தீர கத்தியால் குத்தினான் அஜிம் அயூப். அதன் பின்னர் கையில் கொண்டு வந்திருந்த அமிலத்தையும், மண்ணெண்ணெய்யையும் தலையில் ஊற்றி தீ வைத்துக்கொண்டு சுருதிமேனன் மீது விழுந்து இறந்து தற்கொலை செய்து கொண்டான்.
இந்த சம்பவம் நடப்பதற்கு சரியாக 24 மணி நேரத்திற்கு முன்பு கோவையில் 14 வயதே நிரம்பிய அபிநயாவும் கொடூரமாக கழுத்தறுத்து கொலை செய்யப்பட்டார். இதை செய்தது, அபிநயா வீட்டுக்கு எதிரில் வசித்து வந்த 21 வயது நிரம்பிய வேணுகோபால். அபிநயாவை கொலை செய்த கையோடு தானும் கழுத்தை அறுத்துக்கொண்டு இரண்டு நாள் போராட்டத்திற்கு பின் உயிரிழந்தான்.
பெண் குழந்தைகளை வைத்துள்ள பெரும்பாலான பெற்றோரை பதற வைத்த இவ்விரு சம்பவத்திற்கும் பின்னணி காரணம் காதல் மட்டுமே.
இந்த பயங்கர சம்பவங்களின் வடு இன்னும் மறையவில்லை; கோவை மக்களிடம் பீதி இன்னும் விலகவில்லை.
“ பெரும்பாலான பெற்றோர் தங்கள் குழந்தைகள் காதலில் விழுந்தால் அதை ஒரு பெருங்குற்றமாகவே பார்க்கின்றனர். காதல் மீது தங்களுக்குள்ள தவறான மனோபாவத்தை கை விட்டு, காதலின் உண்மையை அவர்களுக்கு உணர்த்தவேண்டும்.
பெற்றோர் தங்கள் பிள்ளைகளுக்காக நேரத்தை ஒதுக்க வேண்டும். பெற்றோர் & பிள்ளைகளிடையே ஒருங்கிணைப்பு இருந்தாலே 95 சதவீத பிரச்னைகள் தீர்ந்து விடும். மாணவ, மாணவிகள் தங்கள் மனதில் ஏற்படும் பிரச்னைகளை உடனடியாக தங்களது பெற்றோரிடம் தெரிவித்தால் உடனடி தீர்வு ஏற்படும்.
இதை மாணவர்கள் உணர வேண்டும். பயிற்றுநர்கள், பெற்றோர்கள் மாணவர்களிடம் நெருங்கி பழகுவதன் மூலம் மாணவர்களின் தவறான எண்ணங்களை கண்டறிந்து உடனடியாக தீர்க்கலாம் என்கிறார் கோவையை சேர்ந்த மனநல நிபுணர் மோனி.