வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள், அது நாட்டுக்கு நல்லது''

""வீட்டுக்கு ஒரு மரம் வளருங்கள், அது நாட்டுக்கு நல்லது'' என்ற வாசகங்களை நிறைய இடங்களில் பார்த்திருப்போம் அல்லது வாசித்திருப்போம். "மரம் வளர்த்தால் மழை கிட்டும்'. இதெல்லாம் சரிதான், ஆனால் இவற்றைச் சொன்னபடி யாராவது செய்கிறார்களா?  மக்கள்தான் செய்யவில்லை. ஆளும் அரசுகள் செய்கின்றனவா என்பதே நம் கேள்வி.
 அண்மையில் தில்லி மெட்ரோ ரயில் திட்டத்தின் மூன்றாவது கட்ட விரிவாக்கப் பணிக்காக 14,300 மரங்கள் வெட்டப்படும் என்று தில்லி மெட்ரோ கூறியுள்ளதாக மத்திய வனம் மற்றும் சுற்றுச்சூழல் துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது.
 அப்படி வெட்டப்படும் மரங்களுக்கு இணையாக புதிய  மரக்கன்றுகளை நடுவதற்கு தில்லி மெட்ரோ ரயில் நிறுவனம் இழப்பீட்டுத் தொகை வழங்கும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
 பல கிராமங்களில் மரக்கன்றுகள் நடும் விழா, சுற்றுச்சூழல் விழிப்புணர்வு, கிராமங்களில் பசுமை இயக்கம் இப்படியெல்லாம் நடந்தேறி வருகிறது. இது நல்ல விஷயம்தானே, இதில் என்ன தவறு இருக்கிறது என்று கேள்வி எழுவது இயற்கைதான்.
 பலன்தரும் மரங்களை நடாமல் வெறும் நிழலுக்காகவும் வண்ணவண்ண பூக்களுக்காகவும் மரங்கள் நடப்படுகின்றன; சாலையின் இருபுறமும் நூல் பிடித்தாற்போல காட்சி தரவும், கிளைகள் படர்ந்து வீடுகளைத் தொடாமல் விண் நோக்கி மட்டுமே வளரும் வகையிலும் (அவென்யு ட்ரீஸ்) கன்றுகள் தேர்வு செய்யப்படுகின்றன.
 அப்படியல்லாமல், மக்களுக்குத் தேவைப்படும் மலர்கள், காய்கள், கனிகள் போன்றவை கிடைக்கும் வகையிலான மரங்களை நடவேண்டும். மாமரம், புளியமரம், பலா மரம், புங்கன், பூவரசு, அத்தி, ஆலமரம், வேம்பு, மலைவேம்பு, இலுப்பை என்று விதவிதமாக மரங்களைத் தேர்வு செய்து நடவேண்டும். கொய்யா, சப்போட்டா,பப்பாளி, நெல்லி, இலந்தை போன்ற மரங்களைக்கூட இடத்துக்கேற்ப நட்டு வளர்க்கலாம்.
  வேளாண் துறையிலோ வனத்துறையிலோ கையிருப்பில் இருக்கிறது என்பதற்காகவோ, நர்சரியில் இதுதான் கிடைத்தது என்றோ கடனுக்கு நடுவது யாருக்கும் பயனின்றி வீணாகும். சில மாதங்களிலேயே அந்த மரக்கன்றுகள் பராமரிப்பின்றியும் வாடிவதங்கிவிடும்.
 இன்று பல்வேறு நிறுவனங்கள் மரக்கன்றுகளை நடுவதற்காக போட்டி போட்டுக் கொண்டு விழாக்களை நடத்துவதற்கு பின்னால் பெரிய பின்னணி இருக்கிறது. எந்த ஆலையால் சுற்றுச் சூழல் மாசுபடுகிறதோ அந்த ஆலைகள்தான் மரக்கன்றுகளை நட உதவுகின்றன.
 ஆலைகளின் உள்புறத்தை வெளியிலிருந்து யாரும் காணாதபடிக்கும் மரங்களை வளர்க்கின்றனர். காற்றில் உள்ள ஈரப்பதத்தை உறிஞ்சும் தைல மரங்கள் போன்றவையும் பல தொழிற்சாலை வளாகங்களில் நடப்படுகின்றன.
 மரக் கன்றுகளை நல்லவிதமாக நட்டு பராமரித்தால் 10ஆம் ஆண்டிலிருந்து நல்ல பலன்கள் கிடைக்கத் தொடங்கிவிடும்.
 மரக்கன்று வளர்த்தல், தோட்டம் அமைத்தல் இன்று அத்தியாவசியமானதாகி விட்டது. ஏனென்றால் மழை, சுற்றுச்சூழல் பாதுகாப்புக்கு இது அவசியம். மழைநீர் சேகரிப்புக்கு அரசு கட்டாயச் சட்டம் கொண்டுவந்ததுபோல அனைவரும் மரக்கன்று நட வேண்டும் என்ற சட்டம் கொண்டுவர வேண்டும்.
 தனியார் ஆலைகளைப் பொருத்தவரை அதிகமாக மரங்கள்,  தோட்டங்கள் அமைக்க வேண்டும் என்ற விதியே உள்ளது.
அப்படிச் செய்வதால் ஆலைகளிலிருந்து வெளியாகும் "கார்பன்-டை-ஆக்ûஸடு' போன்றவற்றை மரங்கள் உறிஞ்சுவதும், ஆக்ஸிஜனை வெளியிடுவதும் நடைபெறுகிறது. இதை ஒருவகையில் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்று ஒப்புக்கொள்ளலாம்.
 பாலங்கள், கட்டடங்கள். சாலைகள் புதிதாக அமைக்கப்படும்போது பிரம்மாண்ட மரங்கள் வெட்டப்படுவதைத் தடுக்க வேண்டும். வாய்ப்பிருந்தால் வேறு இடங்களில் வேருடன் நட முயற்சி செய்ய வேண்டும்.
 ஒரே நேரத்தில் ஆயிரக்கணக்கில் தென்னை போன்ற மரங்கள் அழிக்கப்பட்டால் கிராமப் பொருளாதாரமே சீரழியும்.
 வனவளமும் இன்று பெருமளவில் அழிக்கப்பட்டு வருகிறது. இதற்குக் காரணம் விஷமிகள் கடத்தலில் ஈடுபடுவதுதான். இவர்கள் வனத்தில் சட்டவிரோத செயல்களில் இறங்கி, பின்னர் மரங்களை தீவைத்துக் கொளுத்துகின்றனர். இது அன்றாடம் நடைபெறும் நிகழ்வுகளாகிவிட்டன.
 இதுபோன்ற செயல்களைத் தடுக்க கடுமையான தண்டனை விதிக்கப்பட வேண்டும். மரக்கன்றுகளை வளர்ப்பதிலும் வனவளத்தைப் பாதுகாப்பதிலும் அனைவருமே அக்கறை செலுத்த வேண்டும்.

கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் மக்கள் மையம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...