மானியங்களுக்கு வே ட் டு


மானியங்கள்...இது தான் இப்போது ஹாட்டான சப்ஜெக்ட். இதை படிப்படியாக குறைத்து வந்தாலே நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கு வழி காண முடியும் என்ற நம்பிய மத்திய அரசு இப்போது இந்த ஆயுதத்தை கையில் எடுத்துள்ளது.
டீசல் விலையை லிட்டருக்கு ரூ.5 உயர்த்தி மத்திய அரசு சமீபத்தில் உத்தரவிட்டது; சமையல் எரிவாயு சிலிண்டருக்கு கட்டுப்பாடு கொண்டு வந்தது. இதை எதிர்த்து என்ன தான் பந்த் , போராட்டங்களை எதிர்கட்சிகள் நடத்தினாலும், மசியவில்லை ; மடங்கவும் இல்லை அரசு.
நாட்டு மக்களிடம் டிவியில் பேசிய பிரதமர் மன்மோகன், எல்லாவற்றுக்கும் காரணம், மானியங்கள் தான். கெரசின் தவிர, மற்ற எல்லாவற்றுக்கும் தரப்படும் மானியத்தை ஒழிக்காமல் விடாது அரசு என்று சூளுரைத்தார்.
ரேஷன் சர்க்கரையில் முதலில் மத்திய அரசு கைவைக்கப்போகிறது என்ற தகவல் கசிந்துள்ளது. போகப்போக ரேஷன் பொருட்கள் எல்லாமே கசக்கும் என்று தெரிகிறது.
தமிழக நிலைமை:
தமிழகத்தில் பொது விநியோகத்திட்டத்தின் கீழ் ரேஷன் கடைகள் வழியாக குறைந்த விலைக்கு பொருட்கள் விற்பனை செய்யப்படுகின்றன. கார்டு தாரர்களுக்கு இலவசமாக 20 கிலோ அரிசி வழங்கப்படுகிறது. அந்தியோதயா திட்ட கார்டுதாரர்களுக்கு 35 கிலோ அரிசி வழங்கப்படுகிறது சர்க்கரை ரூ.13.50 க்கும், கோதுமை ரூ.7.50 க்கும், மண்ணெண்ணெய் ரூ.13.75 க்கும், துவரம்பருப்பு ரூ.30க்கும் உளுத்தம்பருப்பு ரூ.30 க்குமு பாமாயில் லிட்டர் ரூ.25 க்கும் வழங்கப்படுகிறது.
இவ்வாறு குறைந்த விலைக்கு பொருட்கள் வழங்குவதில் மத்திய அரசின் மானியமும் உள்ளது. உதாரணத்துக்கு ரேசன் கடைகளில் சர்க்கரை ரூ.13.50 க்கு விற்கப்படுகிறது. இந்த சர்க்கரை, ஆலைகளில் ரூ.19.50 க்கு பெறப்பட்டு ரூ.13.50க்கு விற்கப்படுகிறது. இடைப்பட்ட தொகையை மானியமாக மத்திய அரசு வழங்கி வருகிறது. அதே போல அரிசிக்கும், அரிசி அரைப்பதற்காக அரவைக்கும், நெல்கொள்முதலுக்கும் மத்திய அரசு மானியம் வழங்கி வருகிறது. அதே போல வெளிச்சந்தை கொள்முதல் ரேசன் பொருள் விநியோகத்துக்கு மாநில அரசும் தன் பங்குக்கு மானியம் வழங்கி வருகிறது.
தற்போது மானியங்கள் வழங்குவதால் நிதிச்சுமை அதிகரித்துள்ளது. அத்தியாவசிய பொருட்களின் விலையை ஏற்றினால் மானிய சுமையிலிருந்து மத்திய அரசு தப்பிக்கும். எனவே அத்தியாவசிய பொருட்கள் விலையை உயர்த்தலாம்.
உதாரணத்துக்கு சர்க்கரை விலையை ரூ.13.50 லிருந்து ரூ.25.50 ஆக உயர்த்தினால் மானியமே வழங்க வேண்டியதில்லை. இதே போலவே ஒவ்வொரு பொருளின் விலையையும் உயர்த்தும் பட்சத்தில் மத்திய அரசுக்கு மானிய சுமை இருக்காது என்று மத்திய அரசின் பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சகம், மத்திய அரசுக்கு ஆலோசனை வழங்கியது.
தொடர்ந்து ரேசன் பொருட்களின் விலையை உயர்த்தலாம் என்ற முடிவுக்கு வந்த மத்திய அரசு, 25 ம் தேதியன்று பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சக ஆலோசனைக்கூட்டத்தை நடத்தி, முடிவு செய்யலாம் என்ற நிலையில் இருந்தது.
பண்டிகை காலம் என்பதால், டிசம்பர் வரை ரேஷன் பொருட்களின் விலையை மாற்றுவதில்லை என்ற நிலைப்பாட்டை அரசு மேற்கொண்டுள்ளது. என்றாலும் மானியங்கள் மீது கை வைக்கும் எண்ணத்திலிருந்து அரசு பின்வாங்கவில்லை.
அரிசி வருவது எங்கே:
அந்தியோதயா அன்னயோஜனா திட்டத்துக்கான மத்திய தொகுப்பிலிருந்து மாதம் ஒன்றுக்கு 65 ஆயிரத்த 262 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இந்த அரிசிக்கு இந்திய உணவுக்கழகம் விற்பனை விலையாக ரூ.3 நிர்ணயித்துள்ளது. ஆனால் தமிழகத்தில் இலவசமாக வழங்கப்படுகிறது. வறுமைக்கோட்டுக்கு கீழ் உள்ளவர்களுக்கான திட்டத்தின் கீழ் மொத்தம் ஒரு லட்சத்து 4 ஆயிரத்து 936 மெட்ரிக் டன் அரிசி ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் விலை கிலோ ரூ.5.65. 
இலவசமாக வழங்கப்படுகிறது.
வறுமைக்கோட்டுக்கு மேல் உள்ளவர்களுக்காக ஒரு லட்சத்து 26 ஆயிரத்து 255 மெட்ரிக் டன் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. இதன் விலை கிலோ ரூ.8.30 இவ்வாறு கூடுதல் விலைக்கு கொள்முதல் செய்யப்படும் அரிசி, இலவசமாக வழங்கப்படுகிறது. இதற்கான இடைப்பட்ட தொகையை மத்திய மாநில அரசுகள் தருகின்றன. தமிழகத்தின் பொது விநியோகத்திட்டத்துக்கு மாதம் 3.82 லட்சம் மெட்ரிக் டன் அரிசி தேவையாகும். தற்போதைய மாதாந்திர நுகர்வு 3.14 லட்சம் மெட்ரிக் டன். மத்திய அரசின் மாதாந்திர ஒதுக்கீடு 2.96 லட்சம் டன்.
சர்க்கரை கசக்கும்:
மத்திய அரசின் மாதாந்திர லெவி சர்க்கரை ஒதுக்கீடு 10,833.5 மெட்ரிக் டன்னாகும். ஆனால் இந்த ஒதுக்கீடு போதுமானதாக இல்லை. எனவே தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகம் லெவி அல்லாத சர்க்கரையை வெளிச்சந்தையில் கொள்முதல் செய்கிறது.
வெளிச்சந்தையில் கொள்முதல் செய்யப்படும் சர்க்கரை விலைக்கும் ரேசன் கடையில் விற்பனை விலைக்கும் இடையே உள்ள வித்தியாச தொகையை மாநில அரசின் உணவு மானியத்தில் சரி செய்யப்படுகிறது. இவ்வாறு லெவி அல்லாத சர்க்கரை வாங்கிய வகையில் தமிழக அரசு ரூ.538 கோடியை மானியமாக வழங்கியுள்ளது மத்திய அரசு முடிவால், மாநில அரசுகளுக்கு மானிய சுமை அதிகரிக்கும். வேறு வழியில்லாமல் மாநில அரசுகளும் பொது விநியோகத்திட்ட பொருட்களை விலையேற்ற வேண்டிய நிலைக்கு தள்ளப்படும். இதனால் பல்வேறு எதிர்விளைவுகள் ஏற்படும் என்பதும் பொதுமக்களின் ஒட்டுமொத்த கோபத்துக்கு மத்திய மாநில அரசுகள் ஆளாக நேரிடும் என்பதும் குறிப்பிடத்தக்கது.
தமிழக ரேஷன் கடைகள்  ஒரு கண்ணோட்டம்
தமிழகத்தில் மொத்தம் 33,222 ரேஷன்கடைகள் உள்ளன. இவற்றில் 31,232 கடைகள் கூட்டுறவு சங்கங்களால் நடத்தப்படுகின்றன. 1394 கடைகள் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக்கழகத்தால் நடத்தப்படுகிறது. 596 கடைகள் மகளிர் சுய உதவிக்குழுக்கள் நடத்துகின்றன. மொத்தம் உள்ள கடைகளில் 25,049 கடைகள் முழு நேர கடைகள். 8,173 கடைகள் பகுதி நேர கடைகள். 14 கடைகள் நடமாடும் கடைகள்.
மானியம் எவ்வளவு?
மண்ணெண்ணெய்: தமிழகத்தில் மாதாந்திர தேவை 65 ஆயிரத்து 140 கிலோ லிட்டர். தற்போது 39 ஆயிரத்து 429 கிலோ லிட்டரை மட்டுமே மத்திய அரசு ஒதுக்கீடு செய்து வருகிறது.
உணவு மானியம், ஆண்டு ஒன்றுக்கு அரிசிக்கு ரூ,3266.78 கோடியும், சர்க்கரைக்கு ரூ.538 கோடியும், மண்ணெண்ணெய்க்கு ரூ.42 கோடியும், சிறப்பு பொது விநியோகத்திட்டத்துக்கு ரூ.1053.22 கோடியும் ஆக மொத்தம் ரூ.4 ஆயிரத்து 900 கோடியை மானியமாக அரசு தருகிறது.
 சிறப்பு பொது விநியோகத்திட்டத்தின் கீழ் உளுத்தம்பருப்புக்கு மானில அரசின் மானியமாக ரூ. 251.81 கோடி வழங்கப்படுகிறது. பாமாயிலுக்காக ரூ.449.20 கோடி மாநில அரசின்  மானியமாக வழங்கப்படுகிறது. துவரம்பருப்பு கிலோ ரூ.30க்கு விற்கப்படுகிறது. இதற்காக ஆண்டு ஒன்றுக்கு மாநில அரசின் மானியமாக ரூ.314 கோடி வழங்கப்படுகிறது.



நன்றி தினகரன் கோவை   30.09.2012

அன்புடன்
சு. சிவசுப்பிரமணியம் தலைவர் 
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சுழல் பாதுகாப்பு மையம் 
மக்கள் மையம்
பந்தலூர் 

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...