நுகர்வோர் வழக்கு

நுகர்வோர் வழக்கு - K.வினோத் அவர்களின் இ-மெயிலுக்கான பதில்.

எனது வலைப்பக்க வாசகர் K. வினோத், ஆன்லைன் மூலம் நுகர்வோர் பொருட்களை விற்பனை செய்யும்  "TIMTARA" http://www.timtara.com/ என்ற நிறுவனத்தில் ஒரு பொருளை ஆர்டர் செய்ததாகவும், 15-20 நாட்களில் பொருள் டெலிவரி செய்யப்பட்டுவிடும் என கூறியிருந்தும் மூன்று மாத காலமாகியும் பொருள் டெலிவரி செய்யப்படாததுடன், எவ்வித தகவலையும் அவர்களிடமிருந்து பெற இயலவில்லை. எனவே அந்த நிறுவனத்தின் மீது, நுகர்வோர் வழக்கு தொடர என்னிடம் ஆலோசனை கேட்டிருந்தார். அது தொடர்பாக பதில் அளிக்கும் வகையில் இந்த பதிவு.

நுகர்வோருக்கு (வாடிக்கையாளருக்கு) ஒரு பொருளை விற்பனை செய்ததிலோ அல்லது சேவையை (சர்வீஸ்) வழங்கியதிலோ குறைபாடு ஏற்படுமானால்,  அதை சரி செய்யக்கோரியும், அதனால் ஏற்பட்ட நஷ்டத்தை ஈடு செய்ய கோரியும் விற்பனையாளர் அல்லது சேவையை வழங்கிய நிறுவனத்தின் மீது  நுகர்வோர் பாதுகாப்பு சட்டப்படி வழக்கு தொடரமுடியும்.

பாதிக்கப்பட்ட நுகர்வோர்  முதலில் சம்பந்தப்பட்ட நிறுவனத்திற்கு, குறைபாடு மற்றும் அதனால் ஏற்பட்ட கஷ்ட நஷ்டங்களை  குறிப்பிட்டு அதை சரி செய்ய வேண்டும் நஷ்ட ஈடு வழங்க வேண்டும் அவ்விதம் செய்யாவிட்டால் வழக்கு தொடரப்படும் என்ற விபரத்தை எழுத்து மூலம் (பதிவுதபால், ஃபேக்ஸ், இ- மெயில்) 15 நாள் அவகாசத்துடன் நோட்டீஸ் வடிவத்தில் அனுப்பவேண்டும்.  

15 நாட்களில் திருப்திகரமான பதில் கிடைக்காவிட்டால் அல்லது பதிலே கிடைக்காவிட்டால், அவருக்கு வழக்கு தொடருவதில் ஆட்சேபணை இல்லை என முடிவு செய்து முறைப்படி நாம் வசிக்கும் இடத்திற்கு உட்பட்ட மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றத்தில் வழக்கு தொடரலாம்.

இவருடைய விஷயத்தில் நோட்டீஸ் அனுப்புவதிலேயே பிரச்சனை உள்ளது. கம்பெனி வெப்சைட்டில் முகவரி இல்லை. அதனால் அந்த நிறுவனத்திற்கு லீகல் நோட்டீஸ் அனுப்பமுடியாது. மேலும் வழக்கு தொடரும்பொழுது எதிர் மனுதாரரை முகவரியுடன் குறிப்பிட்டே மனு தாக்கல் செய்ய முடியும். நம் மனுவின் நகல் எதிர்மனுதாரருக்கு பதிவுத்தபாலில் நீதிமன்றம் அனுப்பும்.

எனவே கம்பெனியின் நிரந்தர முகவரியை முதலில் கண்டுபிடிக்க வேண்டும். அந்த வேலையை தனிப்பட்ட முறையில் செய்யமுடியாது.  நாம் ஆன்லைன் மூலம் வங்கி கணக்கிலிருந்து கம்பெனியின் கணக்கு பணம் மாற்றம் செய்திருப்போம். அல்லது விசா கார்டு, கிரெடிட் கார்டு மூலம் பணமாற்றம் செய்திருப்போம். எனவே நாம் செய்த பணமாற்றம் எந்த கணக்கில் போய் சேர்ந்ததோ அந்த வங்கி கணக்குக்கு சொந்தக்காரரின் முகவரியை கண்டுபிடிக்க வேண்டும். எனவே இதை பண மோசடி வழக்காக காவல் துறையில் புகார் அளிக்க வேண்டும்.  காவல்துறை வங்கியின் உதவியுடன் பணம் பெற்ற நிறுவனம்/நபரின் பெயர் முகவரியை கண்டுபிடித்து நீதிமன்றத்தில் கிரிமினல் வழக்கு தொடருவார்கள்.

இவர் என்ன பொருள் ஆர்டர் செய்தார்? எவ்வளவு பணம் செலுத்தினார் என்ற விபரத்தை குறிப்பிடவில்லை.

சுண்டைக்காய் கால் பணம் சுமை கூலி முக்கால் பணம் என்ற நிலைதான் ஏற்படும்.

செலுத்திய தொகை சொற்பம் என்றால் கெட்ட கனவாக நினைத்து மறந்து விடுவது உசிதம். காரணம் காவல் துறையில் புகார் செய்து கிரிமினல் வழக்கு தொடர்ந்தால் வழக்கு முடிய பல ஆண்டுகள் ஆகும். அதோடு ஆகும் செலவும் காலவிரயமும் கணக்கிட முடியாது.

நுகர்வோர் வழக்கை வக்கீல் மூலமாக நடத்தினால் வக்கீல் பீஸ் ஆக குறைந்த பட்சம் ரூ.3000-5000 வரை கொடுக்க வேண்டும். வழக்கு விசாரணைக்கு வரும் நாட்களில் நம் வக்கீல் ஆஜராகிரா என்பதை பார்க்க நாமும் நீதிமன்றம் செல்ல வேண்டும். குறைந்த பட்சம் மாவட்ட நுகர்வோர் நீதிமன்றத்தில் தீர்ப்பு கிடைக்க மூன்று ஆண்டுகள் ஆகும். தீர்ப்பு நமக்கு சாதகமாக இருந்தால் எதிராளி மாநில ஆணையத்தில் மேல் முறையீடு செய்வார். நமக்கு பாதகமாக இருந்தால் நாம் மேல் முறையீடு செய்ய வேண்டும். அங்கும் மூன்றாண்டுகள் ஆகும் தீர்ப்பு கிடைக்க. இங்கும் வாதாட வக்கீலுக்கு பீஸ் கொடுக்க வேண்டும். வழக்கறிஞர் இன்றி நாமே நடத்தினால் பணச்செலவு கிடையாது. ஆனால் கிட்டத்தட்ட 5வருடம் அலைய வேண்டும். கிடைக்கும் நஷ்ட ஈடும், வழக்கு செலவுக்காக தரும் தொகையும் சேர்த்து பார்த்தாலும் வக்கீல் பீசுக்கு சரியா வராது.

எதிராளிக்கு ஒரு பாடம் கற்பிக்க வேண்டும் என்ற வெறி இருந்தால் சொற்ப தொகையாக இருந்தாலும் வழக்கு தொடரலாம். அல்லது பெரும் தொகையாக இருந்தால் வழக்கு தொடருவதை தவிர்க்க முடியாது.

இதை அவரே முடிவு செய்ய வேண்டும்.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...