நில அளவை – நிலவரித்திட்டம் – தீர்வை விதிப்பு: ================================================ நில அளவை: ------------------------------------------------------------------------------------------------------------------------------------- ஒரு நில அளவை புலத்தின் ஒரு பாகமோ அல்லது பாகங்களோ அதிக பரப்புடையதாக இருந்தால் நில ஒப்படை, நில எடுப்பு, நில மாற்றம் மற்றும் இதர காரணங்களுக்கு நிலம் தேவைப்படும் போது அந்த நிலத்தை தனியே பதிய வேண்டியுள்ளது. மேற்கண்ட நேர்வில், ஒரு புலம் 20 ஹெக்டர் அல்லது அதற்கு மேற்பட்டோ இருந்தாலும் சம்பந்தப்பட்ட நில அளவை புலத்தினை(Sub-division) உட்பிரிவு செய்வதற்குப் பதிலாக அவைகளுக்கு தனி எல்லைகள் குறிப்பிட்டு வரைபடம் தயாரித்து அவைகளை புதிய அளவை survey எண்ணாகப் பதிய வேண்டும். புதிதாக உருவாக்கப்பட உள்ள புலங்களுக்கு அந்தக் கிராமத்தில் கடைசியாக பதிவாகியுள்ள புல எண்ணில் இருந்து தொடர்ச்சியாக எண்கள் கொடுக்க வேண்டும். பிரிவினை செய்த நில அளவை புலத்தின் மீதிப் பாகத்திற்கு அதன் அசல் எண்ணையே இடவேண்டும். கீழ்க்கண்டவை தமிழ்நாடு 1923 வருடம் 8-ஆவது சட்டத்தின்படி நடவடிக்கைக்குட்பட்டவையாகும். தற்போதுள்ள நில அளவை புலங்களிருந்து ஏற்படுத்தப்படும் புதிய நில அளவை புலங்கள் சம்மந்தமாகவும் தற்போதுள்ள நில அளவை புலங்களின் எல்லைகளில் செய்யப்படும் மாறுதல்கள் சம்மந்தமாகவும் புறம்போக்கு எல்லைகளைப் பாதிக்கும் உட்பிரிவுகள் சம்பந்தமாகவும் தீர்வை விதிக்கப்பட்ட வகையிலிருந்து புறம்போக்காக மாற்றுவதனால் ஏற்படும் எல்லை வரையறுப்புகள் சம்பந்தமாகவும்(நில எடுப்பு) 1. கிராம வரைப்படம்: ------------------------------------------------------------------------------------------------------------------------------------ ஒரு வருவாய்க் கிராமத்தின் அமைப்பைக் குறிப்பிடும் வரைபடமாகும். இதில் சர்வே எண்கள், அந்த புலன்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகள், மயானம், மசூதி பாதை,ரோடு, கல்வெட்டுகள், வாய்க்கால், ஏரி, ஆறுகள், இரயில்வே பாதைகள், பெரிய மின்சார கம்பி தடங்கள் மற்றும் புராதனச் சின்னங்கள் ஆகிய சர்வே அடையாள விவரங்கள்(Survey Details) அச்சிடப்பட்டிருக்கும். இந்த வரைபடத்தை வைத்துக் கொண்டு ஒரு நில அளவு புலம் எங்கே அமைந்துள்ளது என்பதனை எளிதில் அறிந்து கொள்ளலாம். 2. ‘டி’ ஸ்கெட்ச் ------------------------------------------------------------------------------------------------------------------------------------ ஒரு கிராம வரைபடத்தை பல பகுதிகளாக பிரித்து பல புலன்கள் அடங்கிய, ஒரு பகுதிக்கு ஒரு வரைபடமாக தயாரித்து ஒரு கிராமத்திற்கு பல சுவடுகளில் புத்தக வடிவில் பராமரிக்கப்படுகிறது. இதில் நில அளவைக் கற்கள் அமைந்துள்ள இடங்கள், புறம்போக்கு நிலங்கள் அமைந்துள்ள இடங்களும் குறிக்கப்பட்டிருக்கும். இந்த வரைப்படத்தினைப் பயன்படுத்தி பயிராய்வின் போது சர்வே கற்கள் உள்ள இடம் மற்றும் புறம்போக்கு நிலங்கள் உள்ள இடங்களை எளிதில் அடையாளம் கண்டு கொள்ளலாம். 3. புல வரைபடம்: --------------------------- ஒரு வருவாய் கிராமமானது பல நில அளவை புலன்கள் கொண்டதாகும். ஒவ்வொரு புலத்திற்கும் ஒவ்வொரு வரைபடம் தயார் செய்யப்பட்டு கிராமத்திற்கு மொத்தமாக புத்தகவடிவில் பராமரிக்கப்படுகிறது. ஒவ்வொரு புலப்படத்திலும் அந்த புலத்தில் உள்ள உட்பிரிவுகள், நில அளவுகள் மற்றும் ‘லேடர்’ அட்டவணை ஆகிய விவரங்கள் வரையப்பட்டிருக்கும். நில எடுப்பு, நில மாற்றம், உட்பிரிவுகள் முதலிய நிலையான மாற்றங்கள் நேரிடும் போது அதற்குண்டான ஆணைக்கு ஏற்ப, நில அளவர் புலப்படத்தில் மாறுதல் செய்வார்(Plotted in the sketches). கிராம நிர்வாக அலுவலர் எந்த மாறுதல்களையும் இதில் செய்யக் கூடாது. புலத்தணிக்கை செய்யும்போது இந்த புல வரைப்படத்தின் மூலம் ஒரு குறிப்பிட்ட புலம் அல்லது உட்பிரிவு எங்கே அமைந்துள்ளது என்பதனை தெரிந்துக் கொள்ளலாம். 4.சர்வே கற்கள் பதிவேடு: --------------------------------------- இது இரண்டு வகைப்படும். ‘A’ கற்கள் பதிவேடு ‘B’ கற்கள் பதிவேடு ஒவ்வொரு மாதத்திலும் கிராம நிர்வாக அலுவலர் புலன் ஆய்வு செய்யும் போது ‘D’ ஸ்கெட்சை வைத்துக் கொண்டு, அதில் குறிப்பிட்டுள்ள நில அளவைக் கற்கள் உள்ளனவா அல்லது இல்லையா என்று தெரிந்துக் கொண்டு மாதந்தோறும் வட்டத் தலைமை நில அளவருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும். மேலும் காணாமல் போன கற்களை புதுப்பிப்பதற்கு ஏற்பாடு செய்ய வேண்டும், காணாமல் போன கற்களை புதுப்பிப்பதற்கு ஆகும் செலவினை கணக்கிட்டு நிலவரி பாக்கிபோல் வசூல் செய்ய வேண்டும். நிலங்களை பூமியில் உள்ளவாறு பிரிவு மற்றும் உட்பிரிவு செய்து கிராம புலப்படம் தயார் செய்து கிராம நிர்வாக அலுவலர்கள் அவற்றைப் பாதுகாத்து வருகின்றனர். டிப்போ பதிவேடு: ------------------------------------------------------------------------------------------------------------------------------------ சில வருவாய் கிராமங்களில் நில அளவை பராமரிப்பு பணிகளுக்காக ‘A’ & ‘B’ கற்கள் இருப்பு வைக்கப்பட்டுள்ளது. அதற்கான இருப்புப் பதிவேடு சம்பந்தப்பட்ட கிராம நிர்வாக அலுவலரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. சர்வே டிப்போவிலிருந்து கற்களை பராமரிப்பு வேலைகளுக்கு எடுக்கும் போது இந்தப் பதிவேட்டில் பதிவு செய்து சம்பந்தப் பட்டவர்களிடம் ஒப்படைக்க வேண்டும். கணக்கில் ஏற்படும் குறைபாடுகளுக்கு கிராம நிர்வாக அலுவலர் பொறுப்பாவார். 19. Art 51A(G)வில் VAO-வின் பங்கு: ------------------------------------------------------ இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கடமைகளின் கூறு 51A(G)–இல் கூறப்பட்டுள்ளது. இயற்கைச் சூழலை மேம்படுத்த காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள் மற்றும் இயற்கை ஆதாரங்களைப் பாதுகாத்தல். நிர்வாகத்துறைக்கு சொந்தமான காடுகள், ஏரிகள், ஆறுகள் மற்றும் வனவிலங்குகள், இயற்கை ஆதாரங்களைப் பாதுகாப்பதில் கிராமநிர்வாக அலுவலர் முக்கியப் பங்கு வகிக்கிறார். காடுகள் சில கிராமங்களில் நிர்வாகத்துறைக்கு சொந்தமான சமூகக் காடுகள், அரசுக்கு சொந்தமான காடுகள் இருக்கும் அவற்றைப் பாதுகாக்க கிராம நிர்வாக அலுவலர் கடமைப்பட்டுள்ளார். காடுகளைப் பாதுகாப்பதில் VAO-வின் பங்கு காடுகளில் உள்ள முக்கியப் பரப்பளவை வரைபடம் மூலமும், அவற்றில் உள்ள Areaவை ஆக்கிரமிப்பு செய்யும் பகுதிகளை உடனே வட்டாட்சியர் துணையைக் கொண்டு அகற்ற வேண்டும். மலைவாழ் மக்களின் வாழ்வாதாரம் எப்படி பட்டது என்பதனை தனி ஆய்வு செய்து புதிதாக வேறு நபர்கள் காட்டுப் பகுதிகளில் குடியேற அனுமதிக்கக் கூடாது. அரியவகை மரங்கள் மற்றும் அரியவகை மூலிகைகளை போன்றவையை பாதுகாக்கவும் அவற்றை வெட்டுவோருக்கு பலமடங்கு அபராதம் விதித்து தொகையை வசூல் செய்ய வேண்டும். ஏரிகளைப் பாதுகாப்பதில் VAOவின் பங்கு: ஏரிகள், கண்மாய்கள் போன்றவை கிராமத்தின் முக்கிய நீர் ஆதாரம் ஆகும். இவற்றின் மொத்த பரப்பளவு கூடுதலாக இருக்கும் அவற்றை புலப்படம் மூலம் தெரிந்து கொள்ள வேண்டும். ஏரி உள்ள மொத்த பரப்பளவில் ஏரிக்கரை ஓரத்தில் குடிசை அமைத்து ஆக்கிரமிப்பு செய்யும் நபர்களை உடனடியாக அகற்ற வேண்டும். ”ஏரி”, “கண்மாய்”, “குளம்” போன்ற நீர்நிலை பகுதிகளில் உள்ள மணல் பகுதிகளையும், செம்மண் போன்ற கனிம வளங்களைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். கனிமவளம் திருட்டு நடக்கும் போது அவற்றை கிராம உதவியாளர் மூலமும், மற்றவர் துணைகொண்டும் தடுக்க வேண்டும். உடனடியாக வட்டாட்சியருக்குத் தகவல் அளிக்க வேண்டும். ஆறுகள் மற்றும் இதர ஆதாரங்களைப் பாதுகாப்பது ஆக்ரமணம் ஏற்படாதபடி பாதுகாப்பது. மணல் திருட்டு நடைபெறா வண்ணம் தடுப்பது ஆறுகளில் துர்வாரும் பணி நடைபெறும் போது கவனிப்பது பொதுப்பணித் துறையின் உதவியுடன் ஆறு பாதுகாப்பு நடவடிக்கைகளை மேற்கொள்வது போன்றவை. வன விலங்குகளைப் பாதுகாப்பது: காடுகள் அதிகம் உள்ள பகுதிகளில் வனவிலங்குகள் கிராமத்தில் புகுந்து நாசம் ஏற்படாதபடி வனத்துறைக்கு தகவல் அளிப்பது வனப்பகுதியில் வாழும் மான், யானை, போன்ற விலங்குகளை வேட்டையாடாமல் தடுக்க வனத்துறை அலுவலருக்கு தகவல் அளிப்பது கிராமத்தில் ‘வனப் பாதுகாப்பு’ பற்றியும் அரிய விலங்கினம் பாதுகாப்பது பற்றியும் விழிப்புணர்வு கருத்தரங்கம் நடத்துவது. குளக்கரையில் மரங்கள் வைத்து சமூகக் காடுகள் உருவாக்குவது, இருக்கும் காடுகளின் பரப்பளவை மேம்படுத்துவது, வனத்துறையின் மரங்களை வெட்டுதல் மற்றும் அரிய வகை விலங்குகளை வேட்டையாடாமல் பாதுகாப்பது முக்கியக் கடமையாகும். இந்திய அரசியலமைப்புச் சட்டம் 51-A-யின் படியாக அரசுக்குச் சொந்தமான ஏரி, ஆறு, கால்வாய், அனைத்தையும் பாதுகாப்பது VAOவின் முக்கியக் கடமையாகும். நிலவரித் திட்டம்: ---------------------------- நிலவரித் திட்ட அலுவலர், நிலவரித் திட்டம் செயலாக்கும் பகுதியைச் சுற்றிப்பார்த்து அப்பகுதியின் விவரங்களை சேகரித்து விரிவான சுற்றாய்வு அறிக்கையை அரசுக்கு அனுப்பி வைப்பார். விவரங்கள் : மக்கள்தொகை, மக்கள் வாழ்க்கைத் தரம், வசதி, வருவாய், மழையளவு, மண் வகைகள், பாசன ஆதாரங்கள், பயிர் வகைகள், போக்குவரத்து வசதி, மார்க்கெட் நிலவரம். இந்த சுற்றாய்வு அறிக்கையினை அரசு அங்கீகாரம் செய்த பின்பு, அந்தப் பகுதிக்குண்டான நிலவரித் திட்ட அறிக்கை(Notification) தயார் செய்யப்படுகிறது. தீர்வை விதிப்பு நிலத்தின் பயன்பாடுக்கு ஏற்ப நிலவர் திட்டத்தின் அடிப்படையில் வகைப்படுத்தப்படுகிறது அவை: நன்செய் புன்செய் மானாவாரி நன்செய் : நன் + செய் என பிரித்து நன் + நீர் என்றும் செய் – நிலம் எனவும் பொருள் கொண்டு – நீர்ப்பாய்ச்சலான நிலம் என்று அமைந்துள்ளது. நன்செய் வகைப்பாடு ஒரு போக நன்செய்(Single crop wet) இரு போக நன்செய்(Double crop wet) இணக்கம் செய்யப்பட்ட இரு போக நன்செய்(Compounded double Crop wet land) என மூன்று வகைகளாக பிரிக்கப்பட்டுள்ளன. அரசாங்க நீர்ப்பாசன ஆதாரங்கள் மூலம் பாசன வசதி பெறக்கூடிய நிலங்கள் நன்செய் நிலங்கள் எனப்படும். புன்செய் நிலங்கள் தனியார் கிணறுகளில் நீர்ப்பாசன வசதி பெற்றவையாகும். நன்செய் நிலங்கள் நீர் ஆதாரம் / பாசன வசதியைக் கொண்டு வகைப்படுத்தப்படுகிறது. நீர்ப்பாசன ஆதாரங்கள் 5 வகையாகப் பிரிக்கப்பட்டுள்ளன. 1-ஆம் வகை : காவிரி ஆறு போன்று ஆண்டு முழுவதும் நீர் கிடைக்கக் கூடியவை. 2-ஆம் வகை : 8 மாதம் முதல் 10 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியவை. 3-ஆம் வகை : 5 மாதம் முதல் 8 மாதங்கள் வரை நீர் கிடைக்கக் கூடியவை. 4-ஆம் வகை : மூன்று மாதம் முதல் 5 மதங்கள் வரை நீர் கிடைக்கக்கூடியவை. 5-ஆம் வகை : மூன்று மாதத்திற்குக் குறைவாக நீர் கிடைக்கக் கூடியவை. 1. மானாவாரி: நிலத்தில் தேக்கப்பட்ட மழைநீரைக் கொண்டு அல்லது சதுப்பு நிலங்கள், சிறிய குட்டை போன்ற நீர்நிலைகளைக் கொண்டு நன்செய் பயிர்களை விளைவிக்கக் கூடிய நிலங்கள் மானாவாரி எனப்படும். மானாவாரி நிலங்கள் புன்செய் நிலங்களை விட சிறிது மேம்பட்டிருக்கும். மானாவாரி நிலங்கள் ஏரி உள் பகுதியில் அமைந்துள்ளதால் இந்நிலங்கள் ஈரத்தன்மை கொண்டதாக இருப்பதால் நன்செய் பயிர்கள் சாகுபடி செய்ய ஏதுவாக அமையும். 2. தீர்வை ஏற்பட்ட தரிசு: சில நிலங்கள் தீர்வை விதிக்கப்பட்டிருந்தும் நிலவரி திட்டத்தின் போது உரிமைக் கொண்டாடாத நிலையில் அதனை தீர்வை ஏற்பட்ட தரிசுகளாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. இந்நிலங்கள் பல்வேறு மாவட்டங்களில் “அனாதீனம்” என்றும் வகைப்பாடு செய்யப்பட்டுள்ளது. 3. புறம்போக்கு நிலங்கள்: --------------------------------------- அரசின் கட்டுப்பாட்டில் உள்ள நிலங்கள் மற்றும் சமுதாய பயனபாட்டிற்காக உள்ள நிலங்கள் புறம்போக்கு நிலங்களாக வகைப்பாடு செய்யப்பட்டுள்ளன. புறம்போக்கு நிலங்களில் கல்லாங்குத்து மற்றும் மேடு என்ற நிலங்களை தீர்வை ஏற்படாத தரிசு நிலங்களாகவும் மற்ற அரசு சொந்த நிலங்களை புறம்போக்கு நிலமாகவும் வகைப்பாடு செய்வர். நிலங்களுக்கு எவ்வாறு தீர்வை நிர்ணயிக்கப்படுகிறது நிலவரி திட்டத்தின் போது மண்ணின் கூட்டு சேர்க்கை அமைப்பை அனுசரித்தும் நிலங்களின் மண் வகைப்பாடுகளின் தன்மையை அனுசரித்தும் நிலங்களைப் பாகுபாடு செய்கின்றனர். மண்ணின் தரத்தை, முக்கிய விளைப்பொருளின் உண்மையான விளைச்சல் ஆகியவற்றை பலவிதமாக பரிசோதனை செய்து 20 ஆண்டுகளின் சராசரி தானிய விலையை மாவட்ட முழுவதற்கும் அடிப்படையாகக் கொண்டு தானியத்தை விற்பனை செய்வதற்கு ஆகும் போக்குவரத்து மற்றும் விவசாய செலவுகளை கழித்துக் கொண்டு எஞ்சியுள்ள தானிய மதிப்பு பணமாக மாற்றப்பட்டு(Conversion) மதிப்பிடப்படுகின்றன. இந்த மதிப்பின் பாதித் தொகை நிலத்திற்காக அரசுக்கு செலுத்த வேண்டிய உச்ச நிலத் தீர்வையாக கருதப்படுகிறது. இதன் பின்னர் ஒத்த தானிய மதிப்புள்ள மண்ணின் தரம் எத்தன்மையாக இருப்பினும் அவை தரங்களின் வரிசை முறையில் ஒன்று சேர்க்கப்படுகின்றன. நன்செய் தரத்தீர்வை நிர்ணயம்: இவை நிலம் இருக்கும் இடத்திலிருந்து நீர்ப் பாசன ஆதாரங்களின் தன்மையை அனுசரித்து நன்செய் தரத்தீர்வை நிர்ணயம் செய்யப்படுகிறது. புன்செய் தரத்தீர்வை நிர்ணயம்: புன்செய் நிலமாக இருந்தால் அவை சாலைகளுக்கும், சந்தைகளுக்கும் அண்மையில் உள்ளதை அனுசரித்தும் தரத்தீர்வை நிர்ணயிக்கப்படுகிறது. தரத்தீர்வை அடுத்த நிலவரித் திட்டம் அமலாக்கும் வரை மாற்றப்படுவதில்லை. நிலவரி - அரசு பாக்கிகள் - நிலவரி வசூல் சட்டத்தின் கீழ் வசூல் செய்யும் நடைமுறை நிலவரி: நிலவரியில் தரத் தீர்வை, பசலி ஜாஸ்தி, தீர்வை ஜாஸ்தி அபராதம், புறம்போக்கு நிலவரி அபராதம் உள்ளூர் மேல்வரி(LC) உள்ளூர் மிகு மேல்வரி(LCS) ஆகியவை அடங்கும். நிலையான வஜாக்கள் மற்றும் பருவக்கால வஜாக்கள் ஆகியவை கணக்கிட்டு அவை தரத் தீர்வையிலிருந்து கழிக்கப்படுகின்றன. இவ்வாறாக மொத்தத் தொகை கணக்கிடப்பட்டு புன்செய், நன்செய் தீர்வை கழிவுகள் கழிக்கப்படுகின்றன. இவ்வாறாக கழிக்கப்பட்ட நிகரத் தொகைக்கு நிலவரி என்பார்கள். அத்துடன் நன்செய் நிலங்களுக்கு விதிக்கப்படும் கூடுதல் நன்செய் தீர்வை, கூடுதல் தண்ணீர் தீர்வை ஆகியவையும் சேர்த்து அந்த பட்டாதாரர் செலுத்த வேண்டிய நிலவாரியாக நிர்ணயம் செய்யப்படுகிறது. கிராம நிர்வாக அலுவலர் ஒவ்வொரு பசலியிலும் டிசம்பர் மாதம் ஒரு தோராய கேட்பு பட்டியல்(Provisional Demand) தயார் செய்து வட்டாட்சியரின் ஒப்புதல் பெற்று ஜனவரி மாதத்திலிருந்து நான்கு தவணைகளாக நிலவரியை வசூல் செய்ய வேண்டும். இந்த நிலவரியுடன் கிராம நிர்வாக அலுவலர் நிலவரி பாக்கி மீது வட்டியாக விதிக்கப்பட்ட அபராதத் தொகையையும் வசூல் செய்ய வேண்டும். கிராம நிர்வாக அலுவலர் நிலவரி தவிர கீழ்க்கண்ட இதர பாக்கிகளையும் நிலவரி போல் வசூல் செய்ய வேண்டும். வாரகம் நகர்ப்புற் நிலவரி நிலக் குத்தகை நிலச் சீர்திருத்தச் சட்டத்தின்படி குத்தகை மற்றும் நில மதிப்பு முத்திரைத் தாள் சட்டத்தின் கீழ் விதிக்கப்பட்ட தொகை வறியர் வழக்கு பாக்கி சர்வே சி.எஸ்.எம். (எ) மற்றும் சி.எஸ்.எம். (பி) விவசாய வருமான வரி அபிவிருத்தி வரி பல வகையான வருவாய் பாக்கிகள் கிராம நிர்வாக அலுவலகர்கள் எந்த தொகை வசூல் செய்தாலும் அதற்குண்டான பற்றுச் சீட்டு செலுத்தியவருக்கு வழங்க வேண்டும். இத்தகைய வசூலான பணத்தை கிராமக் கணக்கு 13-இல் கணக்கிட்டு அதனை தாமதமில்லாமல் குறிப்பிட்ட நாளில் அரசுக் கணக்கில் செலுத்திட வேண்டும். எக்காரணத்தைக் கொண்டும் மாத இறுதிக்கு மேல் வசூல் செய்யப்பட்ட எந்தத் தொகையையும் கையிருப்பில் வைத்திருக்கக் கூடாது. அப்படி வைத்திருந்தால் அதனை தற்காலிகமாகக் கையாடல் செய்யப்பட்டதாகவே கருதப்படும். அதற்குண்டான நடவடிக்கைக்கு கிராம நிர்வாக அலுவலர்கள் உட்படுவார்கள். பட்டாதாரர்கள் நிலவரியை Revenue Money Order மூலமும் குறிப்பிட்டத் தொகைக்கு மேலிருந்தால் நேரடியாகவும் வங்கியில் செலுத்தலாம்
நில அளவை – நிலவரித்திட்டம் – தீர்வை விதிப்பு:
Subscribe to:
Post Comments (Atom)
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...
No comments:
Post a Comment