பட்டா தொடர்பான தகவல்கள்..!
பட்டா வேண்டி பொதுமக்கள் மாதக்கணக்கில் தாசில்தார் அலுவலகங்களுக்கு அலைந்து திரிகின்றனர் உட்பிரிவு செய்து தர வேண்டிய இனங்களில் 30 நாட்களிலும் உட் பிரிவு செய்ய தேவைப்படாத இனங்களில் 15 நாட்களிலும் பட்டா மாற்றம் செய்யப்பட வேண்டும் என தமிழக அரசு 8.7.2011 ம் தேதியிட்ட அரசாணை எண். 210, வருவாய் (நி. அ. 1(1))துறை - ல் கூறியுள்ளது.
அதேபோல் UDR பட்டாவில் ஏற்படும் தவறுகளை சரி செய்வதற்காக தமிழக அரசு 17.8.2004 ம் தேதியில் அரசாணை எண். 385, வருவாய் (பொது - 3) துறை என்ற அரசாணையை பிறப்பித்துள்ளது.
பட்டா மாற்றம்.
பட்டா மாறுதல்கள் வருவாய் நிலை ஆணை எண் 31 ன்படி மூன்று வகையாக செய்யப்படுகிறது.
1. நிலச் சொந்தக்காரர்கள் தாமே மேற்கொள்ளும் நடவடிக்கை (உரிமையை தாமே மாற்றுவது)
2. நீதிமன்ற தீர்ப்பின் அடிப்படையிலோ அல்லது வருவாய்த்துறையினர் மேற்கொள்ளும் விற்பனையின் மூலமான நடவடிக்கை கட்டாய உரிமை மாற்றம்.
3. ஒருவருக்கு பின் ஒருவர் என்ற வாரிசுரிமை மூலமான அடிப்படையில் வாரிசுரிமை மாற்றம்.
தமிழ்நாட்டில் பொதுமக்கள் பட்டா பெறுவதற்கும் பட்டா மாற்றம் செய்வதற்கும் தமிழக அரசு சட்டங்களையும் விதிமுறைகளையும் உருவாக்கியுள்ளது அதில் சில முக்கியமான பகுதிகளை நாம் அறிந்து கொண்டால் பட்டா பெறுவதும் பட்டா மாற்றம் செய்வதும் எளிதாகிவிடும்.
1983ஆம் ஆண்டு தமிழ்நாடு
பட்டாப்பதிவு புத்தக சட்டம்.
பிரிவு 3(1) - தாசில்தார் ஒவ்வொரு நில உடமையாளருக்கும் அவர் சொந்தமாக வைத்திருக்கும் நிலத்தை பொருத்து அவர் விண்ணப்பத்தின் பேரில் பட்டா பதிவு புத்தகம் ஒன்றை வழங்க வேண்டும்
பிரிவு 3(7) - தாசில்தார் பட்டா மாற்றம் செய்வதற்கு முன் நிலத்தில் அக்கறை கொண்டுள்ளவர்களுக்கு நியாயமானதொரு வாய்ப்பினை கொடுக்க வேண்டும்
பிரிவு 3(9) - பட்டா பதிவு புத்தகத்தில் அடங்கியுள்ள பதிவுகள் விவரங்கள் ஆகியவற்றுக்காக ஒவ்வொரு தாசில்தார் அலுவலகத்திலும் பட்டா பதிவு புத்தக பதிவேடு பராமரிக்கப்பட்டு வர வேண்டும்
பிரிவு 3(10) - உரிய கட்டணங்கள் செலுத்தப்படுவதன் பேரில் நில உடமையாளருக்கு பட்டா பதிவு புத்தகம் வழங்கப்பட வேண்டும்.
பிரிவு 10 - பட்டாவில் மாற்றம் ஏதாவது செய்ய வேண்டும் என்றால் முதலில் மனுவை தாசில்தாரிடம் தான் கொடுக்க வேண்டும் தாசில்தாரே முதன்மை அதிகாரி ஆவார்.
பிரிவு 12 - தாசில்தார் உத்தரவின் மீது வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்யப்பட வேண்டும்
பிரிவு 13 - வருவாய் கோட்டாட்சியரின் உத்தரவை எதிர்த்து மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்ய வேண்டும்
1987ஆம் ஆண்டு தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள்:
விதி 3(1) - தாசில்தார் சொந்தமாக நிலம் வைத்திருப்பவர்களை பொருத்தமட்டில் ஒவ்வொரு உரிமையாளருக்கும் இந்த சட்டத்தின் கீழ் பட்டா விவரக்குறிப்பு புத்தகம் வழங்கப்படவுள்ளது என அறிவிப்பு வெளியிட்டு சம்பந்தப்பட்ட கிராமத்தில் தண்டோரா போட்டு அறிவிக்க வேண்டும்
விதி 7 - பட்டா உரிமை புத்தகங்களுக்கான கட்டணம் ரூ. 20 /- ஆகும்
விதி 13 - இந்த சட்டத்தின் கீழ் பட்டா பதிவு புத்தகத்தில் யாருடைய உரிமைகள் அல்லது பற்றுகள் பதிவு செய்யப்பட வேண்டியுள்ளதோ அல்லது பதிவு செய்யப்பட்டுள்ளதோ அந்த நபர் தாசில்தார் கேட்டுக் கொள்வதன் பேரில் தாசில்தாரின் ஆய்வுக்காக இச்சட்டத்தின் யாதொரு நோக்கத்திற்காக விவரங்களையும் ஆவணங்களையும் 15 நாள் கால அவகாசத்திற்குள் தாசில்தாருக்கு அளிக்க வேண்டும்
விதி 14 - இச்சட்டத்தின் கீழ் தாசில்தார் பிறப்பித்துள்ள உத்தரவுக்கு எதிராக 30 நாட்களுக்குள் வருவாய் கோட்டாட்சியரிடம் முதல் மேல்முறையீடு செய்து கொள்ள வேண்டும்
விதி 15(1) - தாசில்தார் அல்லது வருவாய் கோட்டாட்சியர் பிறப்பித்த உத்தரவை திருத்தியமைக்க வேண்டும் என்று கோரி உத்தரவு பிறப்பிக்கப்பட்ட நாளிலிருந்து 90 நாட்களுக்குள் மாவட்ட வருவாய் அலுவலரிடம் சீராய்வு மனு தாக்கல் செய்து கொள்ள வேண்டும்
விதி 15(2) - மேற்சொன்ன கால அளவிற்குள் அந்த மனுவை மனுதாரர் தாக்கல் செய்ய முடியாமல் போனதற்கு நியாயமான போதுமான காரணம் உள்ளது என்று மாவட்ட வருவாய் அலுவலர் கருதினால் விதி 15(1) ல் கூறப்பட்டுள்ள கால அவகாசம் முடிவடைந்த பின்னரும் உத்தரவை திருத்தியமைக்குமாறு கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை ஏற்றுக்கொள்ளலாம்
ஆட்சேபனைகளை எப்படி தாக்கல் செய்ய வேண்டும்?
1. தாசில்தாரின் பட்டா மாற்றம் இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளுக்கு முரணானது
2. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்புகள் 14 மற்றும் 21 ல் கூறப்பட்டுள்ள அடிப்படை உரிமைகளின் படி பட்டா மாற்றம் செய்வதற்கு முன் ஏற்கனவே கூட்டுப்பட்டாவில் உள்ள எனக்கு நீதிக்குட்பட்டு அறிவிப்பு கொடுக்காமலும் வாய்ப்பு அளிக்காமலும் என் தரப்பு வாதத்தை கேட்காமலும் பட்டா மாற்றம் செய்யப்பட்டுள்ளது சட்டப்படி தவறாகும்
3. இந்திய அரசியலமைப்பு சட்டம் உறுப்பு 375 ன்படி தாசில்தார் இந்திய அரசியலமைப்பு சட்டத்தில் கூறப்பட்டுள்ளவற்றை மதித்து நடக்கவில்லை
4. வருவாய் நிலை ஆணை எண் 31 ஐ பின்பற்றி பட்டா மாற்றம் செய்யப்படவில்லை
5. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 மற்றும் தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் கடைபிடிக்கவில்லை
6. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 3(7) ன்படி நிலத்தில் அக்கறை கொண்டுள்ள எனக்கு முறையீடு செய்ய வாய்ப்பு வழங்கப்படவில்லை. அறிவிப்பு ஏதும் கொடுக்கப்படவில்லை
7. தமிழ்நாடு பட்டா பதிவு புத்தகச் சட்டம் 1983 ன் பிரிவு 7 ல் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை தாசில்தார் பின்பற்றவில்லை
8. தமிழ்நாடு பட்டா விவரக்குறிப்பு புத்தக விதிகள் 1987 ன் விதி 3 ன்படி சம்பந்தப்பட்ட கிராமத்தில் பட்டா மாற்றம் குறித்து அறிவிப்பு செய்யப்பட்டு தண்டோரா போடப்படவில்லை
9. VAO வருவாய் நிலை ஆணை மற்றும் கிராம நிர்வாக நடைமுறை நூல் ஆகியவற்றில் கூறப்பட்டுள்ள நடைமுறைகளை மீறி சட்ட விரோதமாக பட்டா மாற்றம் செய்ய பரிந்துரை செய்துள்ளார்.
10. இயற்கை நீதிக்கு புறம்பாகவும், சட்ட விரோதமாகவும் பட்டா மாற்றம் தாசில்தாரரால் செய்யப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment