தன் வழியில் செயல்பட ஆயிரமாயிரம் கரங்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் தேசிகன்!

தன் வழியில் செயல்பட ஆயிரமாயிரம் கரங்களை உருவாக்கிவிட்டுச் சென்றிருக்கிறார் தேசிகன்!
அது 1985. சென்னை நுங்கம்பாக்கத்தில் உள்ள ஒரு வாகன விற்பனை நிலையத்துக்குத் தன் மனைவியுடன் செல்கிறார் தேசிகன். காலையிலிருந்தே இருவரின் மனதிலுமே உற்சாகம் கொப்பளித்துக்கொண்டிருந்தது. எல்லாம்ஆம்பிவாங்கப்போகும் உற்சாகம். வாகன நிறுவனப் பிரதிநிதி ஆங்கிலப் படப் பாணியில், ஒரு கனவானிடம் கார் கதவைத் திறக்கச் சொல்லி, சைகை காட்டுவதுபோல தேசிகனிடம் கதவைத் திறக்கச் சொல்லிப் பணிவாகப் பாவனை செய்கிறார். ஆர்வத்துடன் காரின் கதவைத் திறக்கும் தேசிகன் அடுத்த நொடிஅம்மாஎன்று அலறுகிறார். அவருடைய கை விரல்களிலிருந்து கொட்டுகிறது ரத்தம்.
புதிய காரை இப்படி அரை குறையாகக் கொடுக்கிறீர்களே இது நியாயமா?” என்று விற்பனைப் பிரதிநிதியிடம் கோபமாகக் கேட்கிறார் தேசிகன். விற்பனைப் பிரதிநிதி அலட்டிக்கொள்ளவில்லை. “இவ்வளவு சீக்கிரம் நீங்கள் கேட்டபடி கார் கிடைத்ததே பெரிய விஷயம்; சின்ன விஷயங்களைப் பொருட்படுத்தாதீர்கள்என்று ரத்தத்தைத் துடைக்க ஒரு பழைய துணியை தேசிகனிடம் நீட்டுகிறார். இந்த அலட்சியம்தான் தேசிகன் எனும் சாமானியன் ஒரு நுகர்வோர் போராளியாக உருமாறிய தருணத்தின் ஆணிவேர்.
புதியஆம்பியுடன் வீட்டுக்கு வந்த தேசிகன், அடுத்த நாள் முதல் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டங்களைப் பற்றிய தகவல்களைச் சேகரிக்க ஆரம்பித்தார். இன்றுபோல இணைய வசதி இல்லாத காலம் அது. ஆகையால், தனக்குத் தெரிந்த அரசு அதிகாரிகள், வழக்கறிஞர்களிடம் விவரங்களைக் கேட்டறிந்தார். சட்ட நூல்களை வாசித்தார். 1986-ல் மத்திய அரசு கொண்டுவந்த நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் நுகர்வோரைப் பாதுகாக்கும் சில அம்சங்கள் இருப்பது அவரை ஆறுதல்படுத்தியது. சட்டத்தைக் கையில் எடுத்தார் தேசிகன்.
ஸ்ரீரங்கத்தில் 1933-ல் பிறந்த தேசிகன், சென்னை கிறிஸ்தவக் கல்லூரியில் படித்தவர். ஆரம்பத்தில் சென்னையில் சில ஆங்கிலப் பத்திரிகைகளில் பணியாற்றியவர். 1966-ல் மும்பையில்ரீடர்ஸ் டைஜஸ்ட்பத்திரிகையில் சேர்ந்தார். நிர்மலாவை அவர் சந்தித்தது அங்குதான். பிரிய சகாவான நிர்மலாவே பின்னர் வாழ்க்கைத் துணையுமானார்.
இதழியல் முன்னோடி
திருமணத்துக்குப் பிறகு சென்னை திரும்பியவர், இதழியலில் புதிய முயற்சிகளை மேற்கொள்ளும் முடிவெடுத்தார். ‘இந்தியன் குக்கரி’, ‘இந்தியன் ஹவுஸ் ஒய்ஃப்என்ற ஆங்கில இதழ்களைத் தொடங்கினார். 1972-ல்சவுத் மெட்ராஸ்என்ற உள்ளூர் பத்திரிகையைத் தொடங்கினார். சுமார் 10 ஆயிரம் பிரதிகள் வாரந்தோறும் வீடுவீடாக இலவசமாக விநியோகிக்கப்பட்டது. சென்னையில் பின்னாளில் புற்றீசல்கள்போலப் பெருகியஅடையாறு டைம்ஸ்’, ‘பெரம்பூர் டாக்போன்ற உள்ளூர் இதழ்களுக்கெல்லாம் தேசிகனே முன்னோடி.
அதேபோல, பத்திரிகை உலகில் வேகமான மாற்றத்தை முன்கூட்டியே யூகித்தவர் என்றும் தேசிகனைக் குறிப்பிடலாம். பத்திரிகைகள் மிக விரைவில் ஒவ்வொரு பிரிவினருக்குமானதாக விரிவடையும் என்பதை யூகித்தவர் 1974-ல்மங்கையர் மலர்பெண்கள் இதழை மனைவி நிர்மலாவுடன் இணைந்து தொடங்கினார். அடுத்த 8 ஆண்டுகளில் 45 ஆயிரம் பிரதிகள் எனும் எண்ணிக்கையை நோக்கி வளர்ந்த அந்தப் பத்திரிகையை 1982-ல் கல்கி குழுமம் வாங்கியது. இன்றும்கூடப் பெண்கள் பத்திரிகைகளில் விற்பனையில் முன்னணியில் இருக்கும் பத்திரிகை அது.
ஆங்கிலம், தமிழ் மட்டுமல்ல; இந்தியிலும் அவரது இதழியல் பணி தொடர்ந்தது. 1974-ல் அவர் ஆரம்பித்தகிரஹஸ்திபெண்கள் பத்திரிகை சென்னையில் 8 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது.
இயல்பாகவே நுகர்வோர் உரிமைகளில் விழிப்புணர்வும் ஆர்வமும் காட்டுபவர் தேசிகன். உள்ளூர் விளம்பரங்களை மட்டுமே நம்பி பத்திரிகை நடத்தினாலும் உணவுக் கலப்படம், பெட்ரோல் கலப்படம் பற்றிய செய்திகளை ஆதாரங்களோடு அம்பலப்படுத்துவார். ‘ஆம்பிஅனுபவம் அவருக்குள் இருந்த நுகர்வோர் போராளியை வெளிக்கொண்டுவந்த பின் நுகர்வோர் பிரச்சினைகளில் பெரும் ஆர்வம் காட்டுபவர் ஆனார். ‘எஸ்.எம்.என். நுகர்வோர் பாதுகாப்பு கவுன்சில்என்ற அமைப்பைத் தொடங்கியவர், தொடர்ந்து நுகர்வோரை ஏமாற்றும் நிறுவனங்களைக் குறிவைத்து இயங்க ஆரம்பித்தார்.
ஒருநாள் டீ குடித்தபோது திடீரெனச் சந்தேகம் வந்தது தேசிகனுக்கு. அது என்ன டீத்தூள் என்று கேட்டார். அது தமிழகத்திலேயே அதிகமாக விற்றுக்கொண்டிருந்த ஒரு பிரபல நிறுவனத்தின் டீத்தூள். தேசிகன் அசரவில்லை. ஆய்வகத்துக்கு அந்த டீத்தூளைக் கொண்டுபோய் சோதிக்கக் கொடுத்தார். அபாயகரமான சில ரசாயனங்கள் தூளில் கலந்திருப்பதைச் சோதனை முடிவுகள் கூறின. ஆதாரங்களுடன் வெளியிட்டார் தேசிகன். நீதிமன்றத்துக்கு விவகாரத்தைக் கொண்டுசென்றபோது, அந்நிறுவனத்துக்கு ரூ. 25 லட்சம் அபராதம் விதித்தது நீதிமன்றம்.
தமிழக வரலாற்றில் கலப்படத்துக்காகத் தனிப்பட்ட நிறுவனத்துக்கு இவ்வளவு பெரிய தொகை அபராதம் விதிக்கப்பட்டது அதுவே முதல் முறை. அதேபோல, பிரபல குடிநீர் நிறுவனம் ஒன்று, தனது குடிநீரில் மூலிகைச் சத்துகள் இருப்பதாக விளம்பரம் செய்து அதிக விலைக்கு விற்றுவந்தது. அந்தக் குடிநீரை ஆய்வுசெய்து அதில் மூலிகைகளின் சேர்க்கை எதுவும் இல்லை என்பதை நிரூபித்தார் தேசிகன்.
இது எதுவுமே சாதாரணம் அல்ல. ஏனென்றால், தொழில் நிறுவனங்கள் இப்படியான பிரச்சினைகளைச் சாதாரணமாக எடுத்துக்கொள்வது இல்லை. தேசிகன் கொலை மிரட்டல் உட்பட எவ்வளவோ அச்சுறுத்தல்களை வாழ்நாள் முழுவதும் எதிர்கொண்டார். ஆனால், சற்றும் சளைக்காதவராகவே இருந்தார். விரைவில் தன்னுடைய போராட்டத்தின் எல்லைகளை விஸ்தரித்தார். ‘இந்திய நுகர்வோர் சங்கம் (சிஏஐ)’ என்ற புதிய அமைப்பைத் தொடங்கினார்.
இதற்குப் பின் அவருக்குக் கலப்படம் தொடர்பாகவும், நிறுவனங்களின் ஏமாற்று வேலைகள் தொடர்பாகவும் ஆயிரக் கணக்கான புகார்கள் வரத் தொடங்கின. பெட்ரோல், டீசல் கலப்படம்குறித்த புகார்கள் அதிகமாக வரவே, 1987-ல் பாலவாக்கத்தில் பெட்ரோலியப் பொருட்களில் கலப்படத்தைக் கண்டறியும் ஓர் ஆய்வகத்தை நிறுவினார். அமெரிக்க நிறுவன நிதியுடன் அமைக்கப்பட்ட அதி நவீன ஆய்வகம் இது.
இதன் மூலம் சென்னையில் விற்கப்படும் பெட்ரோல், டீசலில் எங்கெல்லாம், என்னவெல்லாம் கலப்படம் நடக்கிறது என்பதை அம்பலப்படுத்தினார். தொடர்ந்து கிராமங்களை நோக்கியும் நகர்ந்தது அவருடைய அமைப்பு. சென்னை போன்ற நகரங்களில் நடந்த கருத்தரங்குகள், பயிற்சி வகுப்புகள், நேரடி செய்முறை விளக்கங்கள் கிராமங்களில் நடந்தன. மக்கள் அன்றாடம் பயன்படுத்தும் மிளகாய், மஞ்சள், பருப்பு வகைகள், எண்ணெய், நெய் என 32 வகையான
உணவுப் பொருட்களில் கலப்படத்தை எப்படிக் கண்டறிவது என்று கிராம மக்களுக்கும் சொல்லிக்கொடுத்தார் தேசிகன்.
உற்ற துணைவி
தேசிகனின் எல்லாப் பணிகளிலும் அவருக்கு உற்ற துணையாக வீட்டிலும் வெளியிலும் துணை நின்றவர் நிர்மலா. கடந்த 15 ஆண்டுகளில் 1,500-க் கும் அதிகமான நுகர்வோர் செயல்பாட்டாளர்களை உருவாக்கியதும், சுமார் 62 ஆயிரம் பெண்களுக்குப் பயிற்சி அளித்ததும் தேசிகனின் மகத்தான சாதனை என்றால், அதில் முக்கியமான பங்கு நிர்மலாவுக்கு உண்டு. தனது 83-வது வயதில் கடந்த ஜூன் 29-ம் தேதி தேசிகன் காலமானார். தேசிகன், தனது கடைசிக் காலத்தில் மருத்துவமனைகள், உடல் பரிசோதனை மையங்களில் நடைபெறும் மோசடி வேலைகளைக் கையில் எடுத்திருக்கிறார். அவர் விட்டுச்சென்ற / நாம் செய்ய வேண்டிய காரியங்கள் நிறைய இருக்கின்றன என்கிறார் நிர்மலா. அதற்கான ஆயிரமாயிரம் கரங்களை தேசிகன் உருவாக்கிவிட்டுத்தான் சென்றிருக்கிறார்!
- எம். சரவணன், 



No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...