டாஸ்மாக் மூலமான மது விற்பனையை கைவிட அரசு முடிவெடுத்து

டாஸ்மாக் மூலமான மது விற்பனையை கைவிட அரசு முடிவெடுத்து உள்ளதாக, தகவல்கள் பரவி வருகின்றன. ஆனால், மது விற்பனை, தனியார்மயம் ஆக்கப்படுமா அல்லது பூரண மதுவிலக்கு அமல்படுத்தப்படுமா என்பது, இன்னும் தெளிவாகவில்லை. தற்போதைய நிலவரப்படி, மது விற்பனை தனியார் மயமாக்கப்படும் என்ற தகவலே, வலுத்து வருகிறது.

தமிழகத்தில், தேர்தல் காற்று வீசத் துவங்கியுள்ள நிலையில், மதுவை மையப்படுத்தும் அரசியல் சத்தம் அதிகரித்து உள்ளது. தி.மு.., - பா..., உள்ளிட்ட கட்சிகள் மதுவிலக்கு வாத்தியம் வாசிப்பதால், பெண்களின் ஓட்டுகளை கருதி, .தி.மு..,வும் இது தொடர்பான ஒரு முடிவுக்கு வர வேண்டிய கட்டாயத்திற்கு தள்ளப்பட்டு உள்ளது.

15 சதவீதம்:   டாஸ்மாக் தொடர்பான சமூக எதிர்ப்பு ஓங்கி வருவதால், கடைகள் திறந்து வைக்கப்படும் நேரத்தை, பிற்பகல் 2:00 மணி முதல், இரவு 10:00 மணி வரை என, குறைத்து அறிவிக்க அரசு திட்டமிட்டு இருந்தது. சமீபத்தில் நடந்தஅமைச்சரவை கூட்டத்தில், இது தொடர்பாக முடிவெடுக்கப் பட்டது.ஆனால், முதல்வர் ஜெயலலிதா அந்த முடிவை அறிவிக்கும் முன், தி.மு.., தலைவர் கருணாநிதி, 'தி.மு.., ஆட்சிக்கு வந்தால் மதுவிலக்கை அமல்படுத்த முயற்சிப்போம்' என, அறிக்கை வெளியிட்டு விட்டார்.இந்த சூழலில், அரசு அதிரடியான முடிவெடுக்காவிட்டால், .தி.மு.., அரசியல் ரீதியாக பலவீனமடையும் நிலை ஏற்பட்டு உள்ளது. ஆனால், தமிழக அரசின் தற்போதைய ஆண்டு வருவாயில், 15 சதவீதம், மது விற்பனை மூலம் வருவதால், டாஸ்மாக் குறித்து, உடனடியாக முடிவெடுக்க முடியாத நிலையில் அரசு உள்ளது. அதனால், கடந்த ஓரிரு நாட்களில் அரசு உயரதிகாரிகள், தமிழகத்தின் முக்கிய கட்சிகளின் முக்கியஸ்தர்களுடனும், மது தயாரிப்பாளர்களிடமும் ரகசிய பேச்சில் ஈடுபட்டுள்ளதாகக் கூறப்படுகிறது.மது விற்பனையை எவ்வாறு தனியாரிடம் மாற்றலாம், தனியாருக்கு அனுமதி கொடுப்பதற்கு என்ன நடைமுறைகளை கையாளலாம் உள்ளிட்ட விஷயங்கள் விவாதிக்கப்பட்டதாக தெரிகிறது.

வருமானம் குறையாமல்...:  அதாவது, தற்போது, டாஸ்மாக் மூலம் சம்பாதிப்பவர்களின் வருமானம் குறையாமல் இருக்க கையாள வேண்டிய உத்திகள் குறித்ததாக விவாதம் அமைந்தது. இது குறித்து ஒரு முடிவு எட்டப்பட்டு விட்டதால், தற்போது, 'அரசுக்கு டாஸ்மாக் வருமானம் குறைந்தால், வேறு எந்த வகைகளில் வருமானத்தை ஈடுகட்டலாம்' என்பது குறித்து, பல்துறை வல்லுனர்களிடமிருந்து அதிகாரி கள் கருத்து கேட்டுள்ளனர்.வல்லுனர்களின் பரிந்துரைகள் கிடைத்தவுடன், புதிய மது விற்பனை கொள்கை அறிவிக்கப்படும் என, கூறப்படுகிறது. அதே நேரத்தில், தி.மு.., - பா..., உள்ளிட்ட கட்சிகளின் பிரசாரத்தை நீர்க்க வைக்க, .தி.மு..,வும் பூரண மதுவிலக்கு கொள்கையை பின்பற்ற வாய்ப்பு உள்ளது என்ற தகவல்களும் வந்த வண்ணம் இருந்தன.அவற்றின் படி, 'டாஸ்மாக் கடைகளில் இன்னும் ஒரு மாதத்திற்கான சரக்கு இருப்பில் உள்ளது. அது விற்று தீர்ந்தவுடன், மதுவிலக்கு கொள்கை அறிவிக்கப்படும்' என கூறப்பட்டது. முடிவு எதுவாக இருந்தாலும், தமிழகத்தில், அரசின் மது கொள்கை மாறப் போகிறது என்பதும், தமிழக அண்மைக்கால கலாசாரத்தில் கோலோச்சிய டாஸ்மாக்கிற்கு, மூடுவிழா வரப்போகிறது என்பதும் உறுதி.

வருமானத்தை ஈடுகட்ட இதெல்லாம் செய்யலாம்1. இறக்குமதியாகும் மற்றும் வெளிமாநில தயாரிப்பு மதுபானங்களை பெரும்பாலான நகரவாசிகள் விரும்புகின்றனர். அவற்றை விற்க அனுமதித்தால், உயர் ரக மது விற்பனை அளவு அதிகரிக்கும். அதன் மூலம் அரசுக்கு வரி வருவாய் அதிகரிக்கும். அதாவது, 10 ரூபாய்க்கு, 10 பொருட்கள் விற்றாலும், 100 ரூபாய்க்கு ஒரு பொருள் விற்றாலும் வருமானம் ஒன்று தான்.தற்போது, இந்த வகை மதுபானங்களில் இருந்து சட்டத்திற்கு புறம்பாக மது விற்பவர்கள் மட்டும் தான் லாபமடைகின்றனர். ஆனால், இதை, அரசியல் பின்புலம் உள்ள தற்போதைய தமிழக மது தயாரிப்பாளர்கள் அனுமதிப்பரா என்பது, சந்தேகம் தான்.
2.
தங்கும் விடுதிகள் அதாவது ஓட்டல்கள், தற்போது, ஒரு சிண்டிகேட் அமைத்து, அரசுக்கு அழுத்தம் கொடுத்து, ஒரு வினோத விதியை அமலில் வைத்துள்ளனர். அந்த விதியின்படி, குறைந்தபட்சம், 21 அறைகள் உள்ள தங்கும் விடுதிகளால் மட்டும் தான், தங்கள் குடிமையங்களிலும், உணவகங்களிலும் மது பரிமாற முடியும். இத்தகைய விதி, நம் நாட்டில் வேறு எந்த மாநிலத்திலும் கிடையாது. இதை நியாயப்படுத்த எந்த விதமான ஆதாரமும் கிடையாது. இதனால், கடும் விலை கொடுத்து ஓட்டல்களில் குடிக்க முடியாமல், டாஸ்மாக்குடிமையங்களின் அழுக்கையும் சகிக்க முடியாமல், நடுத்தர மக்களில் பெரும்பாலானோர், தங்கள் வீட்டிலும், பொது இடங்களிலும் குடிக்கின்றனர். இவர்கள் குடிக்க ஏதுவாக உணவகங்களும் மது பரிமாற வழி செய்தால், அங்கு மதுவின் மீது கூடுதல் வரி போட்டு வருமானத்தை ஈட்டலாம்மேலும், இதை அனுமதிப்பதன் மூலம், உணவோடு உட்கொள்ளப்படும் ஒயின் மற்றும் பீர் வகைகளின் விற்பனை அதிகரிக்கும். உடலுக்கு கேடான வகைகளின் விற்பனை குறையும்.
ஆனால், இது சாத்தியப்பட, அனுமதி வழங்கும் முறை மிக சுலபமாக இருக்க வேண்டும். உணவகத்தில் கூடுதல் வசதி ஏற்படுத்துவது உள்ளிட்ட நிபந்தனைகள் தளர்த்தப்பட வேண்டும்; அரசிடம் அனுமதி பெற வேண்டும் என்ற விதி நீக்கப்பட வேண்டும். குடும்பங்கள், குழந்தைகள் இதனால் பாதிக்கப்படும் என்ற போலி வாதங்களுக்கும், அரசு அதிகாரிகள் இறங்கக் கூடாது. உணவக உரிமையாளர்களே, தங்கள் தொழிலுக்கு எது நல்லது என்று முடிவு செய்து கொள்வர்
3. மது உற்பத்திக்கான அனுமதிகளை தாராளமாகக் கொடுக்கலாம். தற்போது தரமான மது வகைகள் விற்பனை, கர்நாடகா, கோவா, இமாச்சல் உள்ளிட்ட சில மாநிலங்களில் நடக்கிறது. அங்கிருந்து மற்ற மாநிலங்களுக்கு அனுப்பப்படுகிறது. இதனால், தொழில் வளம், வேலைவாய்ப்பு மற்றும் உற்பத்தி மீதான வருவாய் அரசிற்கு கிடைக்கிறது. வெளிநாட்டு நிறுவனங்கள் மூலம் தரமான மது வகைகள் தமிழகத்தில் உற்பத்தியானால், தமிழக மது தயாரிப்போரிடமிருந்து மட்டும் அல்லாமல், மொத்த நாட்டின் மது தயாரிப்போரிடமிருந்தும் தமிழக அரசிற்கு வருமானம் வரும்.

4. கள் இறக்குவதை அனுமதித்து, அதை சாராயமாக மாற்றுவதற்கான விதிகளை நிர்ணயித்து, உற்பத்திக்கு அனுமதி கொடுக்கலாம். இலங்கையில் தயாரிக்கப்பட்டு, உலகெங்கும், 'அராக்' மது வகை விற்பனையாகிறது. இதன் மூலம் அந்த நாட்டிற்கு, நல்ல அன்னிய செலாவணி வருவாய் கிடைக்கிறது. அதை போல் தமிழக விவசாயிகளும், அரசும், கூட்டாக லாபமடையலாம்.

5. சுற்றுலா பயணிகள் வருகையில், நாட்டிலேயே முதல் இடத்தில் தமிழகம் உள்ளது. ஆனால், 'இங்கு தரமான மது வகைகள் கிடைப்பதில்லை, குடிப்பதற்கு நாகரிகமான இடங்கள் இல்லை' என்பதே, கணிசமான பகுதி சுற்றுலா பயணிகளின் புகாராக உள்ளது. இதனாலேயே, அதிக பணம் செலவு செய்யக்கூடிய உயர்தர சுற்றுலா பயணிகள் இங்கு வருவதில்லை. இதுவே அவர்களுக்கான சொகுசு விடுதிகள் அமைவதற்கும் தடையாக உள்ளது. சொகுசு விடுதிகள் மற்றும் சுற்றுலா பயணிகள் பெரும் வேலைவாய்ப்பை ஏற்படுத்தும். தாய்லாந்து போன்ற நாடுகளில் பல கோடி பேர், சுற்றுலா தொழிலை மட்டுமே நம்பி உள்ளனர். தற்போது, கேரளாவில் மதுவிலக்கு அமல்படுத்தப்பட்டு உள்ளதால், அங்கு சுற்றுலா பயணிகளின் வருகை வெகுவாகக் குறைந்துவிட்டது. அங்கு செல்வதற்கு பதில், தற்போது, இலங்கைக்கு செல்கின்றனர். தமிழகம் மது விஷயத்தில் முன்னேறினால், இவர்களையும் ஈர்க்கலாம்.

பூரண மதுவிலக்கே நல்லது! மதுவிலக்கு ஏற்படுத்தினால், அடுத்த தேர்தலிலும் என் ஓட்டு அம்மாவிற்கு தான். தற்போது, எங்கள் பகுதியில், 12 வயது சிறுவர்கள் சிலர் கூட, குடித்துவிட்டு ரகளையில் ஈடுபடுகின்றனர். தனியாரிடம் அளித்தால், மதுவின் விலை அதிகரிக்கும், பின், குடும்பத்திற்கு தற்போது கொடுக்கும் பணத்தையும், தனியார் மதுக்கடைகளில் அளிப்பர். அதனால், பூரண மது விலக்கு அமல்படுத்துவதே நல்லது
சிவகாமிஆயிரம் விளக்கு, சென்னை


எண்ணிக்கை குறையும்! மது வியாபாரத்தை அரசு நிறுத்தினால், மீண்டும் தமிழகத்தில் கள்ளச் சாராயம் அதிகரித்து, உயிர் பலிகள் ஏற்பட வாய்ப்புள்ளது. தனியார் வசம் ஒப்படைத்தால், மதுவின் விலை அதிகரிக்கும். அதனால், குடிப்பவர்கள் எண்ணிக்கை குறையும் வாய்ப்புள்ளது.
திவ்யா, பெசன்ட் நகர், சென்னை

குடும்பங்கள் சீரழியும்!
அரசு, மதுவிலக்கு அமல்படுத்தினால், அது வரவேற்கத்தக்கது. தனியாரிடம், எந்த துறையை ஒப்படைத்தாலும், நன்றாகத் தான் செய்வர். 'டாஸ்மாக்' கடையும் அவர்களிடம் ஒப்படைத்தால், வியாபார நோக்கத்துடன், கடைகளை அதிகப்படுத்தி வருமானத்தை அள்ளுவர். இந்த சூழ்நிலைஏற்பட்டால், குடும்பங்கள் அனைத்தும் சீரழிந்து போகும்.
திருமகள்சிந்தாதிரிப்பேட்டை,சென்னை


பண முதலைகளிடம் சிக்கும்!
பூரண மதுவிலக்கு நல்ல விஷயம். அதனால், குற்ற செயல்கள் குறையும். போதையின் காரணமாக, என்ன செய்கிறோம் என, தெரியாமல், குழந்தைகளுக்கு பாலியல் தொல்லை அளிப்பது போன்ற கொடூர குற்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். 'டாஸ்மாக்' தனியார் வசம் சென்றால், வியாபார நோக்கம் கொண்ட பண முதலைகளிடம் சிக்கி நாடு சீரழியும்.
பாண்டிமதிஆதம்பாக்கம்,சென்னை


மக்கள் நலனே முக்கியம்!
பல குற்ற செயல்களுக்கு, மது தான் அடிப்படையாக உள்ளது. அந்த மது விற்பனையை அரசு கைவிட்டால் நல்லது. தனியாரிடம் ஒப்படைக்கும் பட்சத்தில், நிலைமை இன்னும் படுமோசமாகும். தனியாரிடம் ஒப்படைப்பதை விட, பூரண மதுவிலக்கை அமல்படுத்துவது நல்லது. வருமானத்தை விட, மக்கள் நலனில், அரசு கவனம் செலுத்த வேண்டும்.
சசிகலாஅயனாவரம்,சென்னை


தட்டிக்கழிக்கும் அரசு:
அரசு மதுக்கடைகளை நடத்தும் போதே, குடிப்போரின் எண்ணிக்கையும், அதனால் ஏற்படும் பாதிப்பும் கடுமையாக இருக்கிறது. இந்நிலையில், தனியாருக்கு கடைகளை அளித்தால், நிலைமை இன்னும் மோசமாகும். மக்கள் மத்தியிலும், எதிர்க்கட்சிகள் மத்தியிலும் ஏற்பட்டுள்ள எதிர்ப்பை சமாளிக்கவும், அரசுக்கான பொறுப்பை தட்டிக் கழிக்கவுமோ, தனியாரிடம் மதுக்கடைகள் அளிக்கப்படலாம்.
வகிதா நிஜாம் வீட்டு வேலை தொழிலாளர் சங்கம்


பேரம் அதிகரிக்கும்!
மதுக்கடையால் அரசுக்கு ஏற்பட்டுள்ள பழிச்சொல்லை, கைமாற்றி விடும் வேலையாக, தனியாரிடம் மதுக்கடைகளை ஒப்படைக்கும் முடிவை எடுக்க லாம்; இதனால், விற்பனை குறையாது. அரசியல் மற்றும் மதுஉற்பத்தியாளர்களின் கூட்டு பேரம் மேலும் அதிகரிக்கும். ஒழுங்குமுறை விதிகளை அமல் செய்து, கட்டுப்பாட்டை ஏற்படுத்தாமல், தனியாரிடம் அளிப்பதால் எவ்வித பலனும் இல்லை.
பானுகோம்ஸ் சமூக ஆர்வலர்

காப்பாற்றும் செயலா இது?
கள்ளச்சாராயத்தை தடுக்க, மதுக்கடையை திறப்பதாக, அரசு கூறியது. தற்போது, கள்ளச்சாராயம் முற்றிலும் தடுக்கப்பட்டு விட்டது. இந்நிலையில், பூரண மதுவிலக்கை நோக்கி செல்ல வேண்டும். ஆனால், தனியாரிடம் கடைகளை அளிக்க நினைப்பது தவறானது. தேர்தல் வருவதால், ஒவ்வொரு கட்சியும் ஒவ்வொரு அறிவிப்பை வெளியிடலாம்; இது, மக்களை காப்பாற்றும் செயல் அல்லவாசுகி ஜனநாயக மாதர் சங்கம்

-
நமது நிருபர் - தினமலர் 


No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...