கரிக்கையூர் பாறை ஓவியங்கள்.

கோத்தகிரி நகரிலிருந்து 40 கிமீ தொலைவில் உள்ள கரிக்கையூர் பாறை ஓவியங்கள்.

(கரிக்கையூர் பாறை ஓவியங்கள்,கோத்தகிரி,நீலகிரி மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா)

இப்பாறை ஒவியங்கள் கி.மு.2000ஆண்டு முதல் கி.மு.1500ஆண்டு காலம் என ஆராய்ச்சியாளர்கள் கூறுகிறார்கள்.

இது தென்னிந்தியாவின் மிகப் பழமையான பாறை ஒவியமாகும். சுமார் 500 ஒவியங்கள் ஒருங்கிணைந்த தொடர் ஓவியங்களாக உள்ளது.

இவ்வோவியங்கள் 2004 ஆம் ஆண்டு தொல் ஓவிய ஆராய்ச்சியாளர் கே.டி.காந்திரஜன், மதுரை காமராஜர் பல்கலைக் கழகம், பேராசிரியர் ஜி. சந்திராசேகரன் முதல்வர் அரசு ஓவிய கல்லூரி சென்னை, குழுவினரால் கண்டெடுக்கப்பட்டது,

இவ்வோவியதில் நன்கு வளர்ந்த திடகாத்திரமான எருதினை வீரர்கள் துரத்தி பிடிப்பது போல வெள்ளை, சிகப்பு வண்ணங்களால் வரையப்பட்டுள்ளது.

அவ்வாறே மதுரையிலிருந்து 35 கிலோ மீட்டர், தொலைவில் மதுரை, திண்டுக்கல் வழியில் கல்லூத்து மேட்டுப்பட்டியில் குகை ஓவியங்கள் சமீபத்தில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

இவ்வோவியங்களிலும் எருது தழுவுதல் வரையப் பட்டுள்ளது.

இவ்வோவியங்கள் காலமும் கி.மு.2000 முதல் கி.மு. 1500 காலமாக உள்ளது4. எருது தழுவுதல் என்பது 4000 வருடம் பழமையான தமிழர் நாகரீகத்துடன் இரண்டரக் கலந்த ஒரு பண்பாடு, கலாச்சாரம் ,வீர விளையாட்டு என்பது சரித்திர, சமூக, மனித இன இயல் ஆராய்ச்சி மூலமாக தெளிவாகிறது.

எருது தழுவுதலின் தொன்மை மட்டுமல்ல அதன் பரவலான பழக்கமும் தமிழர்களின் வாழ்வியலையும் நமக்குத் தெளிவாக உணர்த்துகிறது.

 நமது தமிழர் நாகரிகமும் வாழ்வும் வேளாண்மையை அடிப்படையாக கொண்டது. வேளாண்மைக்கு இன்றியமையாத தோழன் ஆவினங்கள்.

அதுவும்ஆவினங்கள் மிகப் பெரிய அசையும் சொத்துக்களாக இருந்து வந்துள்ளது. ஆதித் தமிழர் காடுகளைத் திருத்தி நாடாக்கினார்கள்.

காட்டு விலங்கினங்களை அடக்கி வீட்டுத் தேவைக்கு உபயோகப்படுத்தினார்கள், யானைகள்,எருதுகள்,ஆடுகள் ஆகியவை முக்கியமானவைகள் ஆகும். இவற்றில் மாடுகள், வேளாணுக்கு மட்டுமல்ல, போருக்கும், பயணத்திற்கும், இன்னும் பல அன்றாட அத்யாவசிய தேவைகளுக்கும் இருந்து வந்துள்ளது.

இன்றும் பல தெற்காசிய நாடுகள் மாடுகளை தங்களது அன்றாட தேவைகளுக்கு பயன்படுத்தி வருகிறார்கள்.

தமிழக, கேரள மாநிலங்களில் யானையையும், மாடுகளையும் பல கோவில்களில் புனிதமாக வளர்த்து வருகிறார்கள்.அது மட்டுமல்ல யானைகளையும், எருதுகளையும் வளர்ப்பது மிகப் பெரிய கௌரவமாக கருதப்படுகிறது.

எருதினை நந்தி தேவராக, பிரதோஷ தினம் அன்று மிகுந்த பக்தியுடனும், விமரிசையுடனும் சிவலாயங்களில் நடைபெறுகிறது.
எருது திருவிழா இந்தியாவில் பல மாநிலங்களில் அறுவடை திருவிழாவினை ஒட்டி நடத்தப்படுகிறது.

எருது ஓட்டுதல், கழனியில் ஏருடன் காளைகளைப் பூட்டி ஓட்டுதல்,என்று மாட்டிற்கும் மனிதனுக்கும் ஒரு பிணைப்பை உருவாக்குவதற்கு ஏற்பட்டு வழிவழியாக கடைப்பிடித்து, அதனை ஒரு பாரம்பரிய விளையாட்டாக கொண்டாடி வருகிறார்கள்.

சங்கத் தமிழர் வரலாறினைப் படிக்கும்போது எருது தழுவுதால்,

ஒரு அரசியல் போர் பயிற்சியாக முக்கியத்துவம் வாய்ந்ததாக இருந்து வந்துள்ளது. ஆநீரை கவர்தல் என்பது போர் முறையின் முதற்கட்டமாக இருந்துள்ளது.

பகைவனின் நாட்டிற்கு படையெடுக்கும் முன் போர் எச்சரிக்கையாக ஆநிரைகளை வெட்சிப் பூ மாலை அணிந்து கவர்வது, கவர்ந்த ஆநீரைகளை மறுபடியும் கரந்தை பூ மாலை அணிந்து மீட்டு வருவது, என்று போர் முறைகளையும் விரிவாக எடுத்துரைக்கிறது ‘புறப் பொருள்’.

5 இதனை தொல்காப்பியமும் வெட்சி மாலை அணிந்து பகைவனின் ஆநிறைகள் கவர்ந்து, பாதுகாப்பாக வைத்து, முதியவர்கள்,பெண்கள், குழந்தைகளை அகற்றி, பகைவனின் ஊர்களை எரிப்பது பற்றி விரிவாக கூறபட்டுள்ளது.

மதுரைக் காஞ்சியில் எருது தழுவுதலைப் பற்றி விரிவாக கூறப்பட்டுள்ளது. கலித்தொகையின் ஒரு பகுதியான முல்லைக்கலியில் ஆயர் குலப்பெண்கள் எருது தழுவுதலில் வெற்றிப்பெறாத ஆண்களை அடுத்த பிறவியிலும் ஏறெடுத்தும் பார்க்கமாட்டார்கள் என்கிறது.

7 சிலப்பதிகாரத்தில் ஏறு தழுவுதலை மக்கள் பெருந்திரளாக பாதைகளின் இருபுறமும் நின்று பார்த்து மகிழ்ந்தார்கள் என்கிறது.8 இன்னும் பற்பல தமிழ் இலக்கியங்கள் எருது தழுவுதலைப் பற்றி பல அறிய தகவல்களை, அதன் முக்கியத்துவம் பற்றியும் விரிவாக கூறுகிறது.

பாரம்பரியமான குடும்பங்களில் பெண் குழந்தைகள் பிறந்தவுடன் எருதுகளையும் வளர்க்க ஆரம்பித்து விடுவார்கள். எருதுகளை அடுக்குபவனுக்கே பெண் மணம் முடித்து தரப்படுவாள்.

எருதினை திறமையுடன் அடக்குபவன், பெண்ணையும் சொத்தையும் திறமையுடன் பாதுகாப்பான் என்பதே இதன் அடிப்படை.
தமிழகத்தில் பேரரசுகள் மறைந்து போனபிறகும் எருது தழுவுதல் தொடர்ந்து ஒரு புதிய பரிமாணத்தில் நடைப்பெற்றது.

விஜயநகர நாயக்கர் ஆட்சியில் பாளயங்கள் பலம் வாய்ந்த குறுநிலங்களாக தனிப்பட்ட அரசுரிமையுடன் ஆட்சி செய்தன. தங்கள் பாளயங்களை விரிவுப்படுத்தவும், அவர்களுக்கு திறம் வாய்ந்த வீரர்கள் தேவைப்பட்டார்கள், இதனால் எருது தழுவுதல் பரவலாக தென் மண்டலம் முழுவதும் நடைமுறைப் படுத்தப்பட்டது.

திருமலை நாயக்கர் காலம் முதலே எருதின் கொம்புகளில் சல்லிக்காசுகள் துணி முடிப்பில் கட்டப்பட்டு, சல்லிக்கட்டு – ஜல்லிக்கட்டாக திரிந்தது.
திருமலை நாயக்கர் தனது இறுதிக் கால ஆட்சியில்,கிருஷ்ண தேவராயர் மறைவுக்குப் பிறகு,

மதுரை நாயக்கர்களை விஜயநகர நாயக்கர் அரசிடமிருந்து சுதந்திர நாயக்கர்களாக அறிவித்த பிறகு, மதுரை 10 நாட்டு கள்ளர்களுடனும், இராமநாதபுரம்,சிவகங்கை சேதுபதிகளுடனும் நட்புறவை பாராட்ட, எருது தழுவுதலுக்கு ஆதரவு தந்தார்.

இன்றும் மதுரையைச் சுற்றியே ஜல்லிகட்டு என்று அழைக்கப்படுகிறது, ஏனைய பிற இடங்களில் மஞ்சு விரட்டு, எருது கட்டு என்று அழைக்கப் படுகிறது.

-- சங்க இலக்கிய ஆராய்ச்சி நடுவம்
பெரம்பலூர்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...