நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019

 https://www.dailythanthi.com/News/Sirappukatturaigal/2019/08/31154307/New-Consumer-Commission-Regulating-Counterfeit-Goods.vpf


போலிகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் புதிய நுகர்வோர் ஆணையம் : ஆன்லைனில் புகார் செய்யலாம் ; நியாயமற்ற வணிகமுறை தடுக்கப்படும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம்

போலிகளுக்கு கிடுக்கிப்பிடி போடும் புதிய நுகர்வோர் ஆணையம் : ஆன்லைனில் புகார் செய்யலாம் ; நியாயமற்ற வணிகமுறை தடுக்கப்படும்; குற்றம் நிரூபிக்கப்பட்டால் அபராதம்
நுகர்வோர்களின் உரிமைகளை பாதுகாக்க ஒரு புதிய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் அமைக்கப்பட உள்ளது. சமீபத்தில் நிறைவேற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டம் ஒரு மத்திய ஆணையத்தை ஏற்படுத்த வகை செய்கிறது. இந்த ஆணையத்திற்கு, தரக்குறைவான பண்டங்களை தயாரிக்கும் நிறுவனங்கள், விற்பனையாளர்கள் மற்றும் அவற்றை விளம்பரப்படுத்துபவர்களுக்கு தண்டனை அளிக்கும் அதிகாரம் அளிக்கப்படுகிறது.
புதிதாக அமைக்கப்பட உள்ள மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் நுகர்வோர்களுக்கு அதிக பாதுகாப்பு அளிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. நியாயமற்ற வழிமுறைகள் மற்றும் பொய்யான விளம்பரங்களை செய்யும் உற்பத்தியாளர்கள் மற்றும் முகவர்களை தடுக்க வகை செய்கிறது. இதுபோன்ற விளம்பரங்களில் நடிக்கும் பிரபலங்களும் இனி இந்த சட்டத்தின் கீழ் தண்டிக்கப்பட முடியும். நுகர்வோர் பாதுகாப்பு மசோதா, 2019 மாநிலங்களவையில் ஆகஸ்டு 6-ந்தேதி நிறைவேற்றப்பட்டு, ஆகஸ்டு 9-ந்தேதி குடியரசு தலைவரின் ஒப்புதலை பெற்று, சட்டமாக மாறியது. “ஒரு மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையம் (நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019-ன் கீழ் அமைக்கப்படும் ஒழுங்குமுறை ஆணையம்) அமைக்கப்படுவது புரட்சிகரமான விஷயமாகும். அதிகாரம் கொண்ட இந்த ஆணையத்தின் மூலம் நுகர்வோர்களுக்கு தகுந்த இழப்பீடுகளை பெற்றுத்தர முடியும்” என்று நுகர்வோர் நலன், உணவு மற்றும் பொது வினியோகத்துறைகளுக்கான மந்திரி ராம்விலாஸ் பஸ்வான் ஆகஸ்டு 13 அன்று நடைபெற்ற ஒரு ஊடக சந்திப்பில் கூறினார். 130 கோடி இந்தியர்களின் வாழ்க்கை முறையை மேம்படுத்த பிரதமர் மோடி அளித்த வாக்குறுதியின் ஒரு அம்சமாக இதை கருதலாம் என்றார்.

கடந்த முப்பது வருடங்களில் இந்திய சந்தை மிகப்பெரிய மாற்றத்தை அடைந்துள்ளது. அளிக்கப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளில், பல்கிப்பெருகியுள்ள விற்பனை வழிமுறைகளில், அதிகரித்து வரும் நுகர்வோர்கள் இவற்றை வாங்க பல விதமான முறைகளில் பெரும் மாற்றங்கள் நடந்துள்ளன. ஆனால் இவற்றை கட்டுப்படுத்த 1986-ல் இயற்றப்பட்ட நுகர்வோர் பாதுகாப்பு சட்டமே பயன்படுத்தப்பட்டு வந்தது.

2019 சட்டம் நுகர்வோர்கள் உரிமைகளை பாதுகாக்க உறுதியளிக்கிறது. பொருட்கள் மற்றும் சேவைகளின் அளிப்பில் ஏற்படும் குறைபாடுகள் பற்றிய புகார்களை ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் விசாரிக்க ஒரு அமைப்பை ஏற்படுத்தி, இழப்பீடுகளை பெற வகை செய்கிறது. ஒரு ஒழுங்குமுறை ஆணையத்தை உருவாக்கி, நியாயமற்ற ஒப்பந்தங்கள் மீது நடவடிக்கை எடுக்கும் அதிகாரம் அளிக்கப்படும். பொய்யான விளம்பரங்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கவும், அவற்றின் மீது அதிக அளவில் அபராதம் விதிக்கவும், அவற்றில் நடிக்கும் பிரபலங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் அதிகாரம் அளிக்கப்படுகிறது. ஆன்லைன் வணிகமும் இதன் கீழ் கொண்டு வரப்படும். வாங்கப்பட்ட ஒரு பொருள் மீதான புகார் நிரூபிக்கப்பட்டால், அந்நிறுவனம் தயாரித்த (இதே போன்ற) பொருட்கள் அனைத்திற்கும் பொறுப்பேற்க செய்ய வகை செய்யப்படுகிறது.



மாவட்ட நுகர்வோர் ஆணையம் அல்லது மாநில நுகர்வோர் ஆணையத்திடம், வீட்டில் இருந்தே ஆன்லைன் மூலம் புகார் அளிக்க முடியும். இதுவரை பொருள் விற்பனை செய்யப்பட்ட இடத்தில் அல்லது அந்நிறுவனத்தின் பதிவு அலுவலகம் அமைந்துள்ள இடத்தில் மட்டுமே புகார் அளிக்க அனுமதிக்கப்பட்டது. ஆன்லைன் மூலம் புகார்கள் அளிக்கவும், அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் முறைகளில் செலுத்தவும் தேவையான விதிமுறைகளை நுகர்வோர் விவகாரத் துறை அமைச்சரகம் இறுதி செய்து வருகிறது.

இதுவரை பெரும்பாலான நுகர்வோர்கள் இந்த சட்டத்தை பற்றி தெரியாமல் இருந்தனர். ஒரு மோசமான பொருள் அல்லது சேவை பற்றிய அனுபவங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்தனர். நிறுவனங்கள் மீது வழக்கு தொடர முயன்றவர்கள், நீதிமன்றங்களில் புகார்களை நிரூபிக்க பல வருடங்கள் ஆகியதால், சோர்வடைந்தனர்.

நுகர்வோர்கள் தொடர்ந்த வழக்குகள் முடித்து வைக்கப்படும் விகிதம் அதிகமாக (சுமார் 90 சதவீதம்) இருந்தாலும், இவற்றை தீர்க்க, சராசரியாக 12 மாதங்கள் ஆகிறதாக பி.ஆர்.எஸ். சட்டமன்ற ஆய்வு நிறுவனத்தின் அறிக்கை கூறுகிறது.

நுகர்வோர் யார்?

ஒரு பொருளை வாங்குபவரும், ஒரு சேவையை பெற கட்டணம் செலுத்தியவரும் இந்த புதிய சட்டத்தின் மூலம் புகார் அளிக்க முடியும். ஆனால் மறு விற்பனைக்காக பொருட்கள் அல்லது சேவைகளை வாங்குபவர்கள், வணிகத்திற்காக வாங்குபவர்கள் இந்த சட்டத்தை பயன்படுத்த முடியாது. மாறி வரும் சூழல்களை கருத்தில் கொண்டு, ஆன்லைன் மற்றும் ஆப் லைன் விற்பனைகள், தொலைபேசி மூலம் விற்பனை, பல தள சந்தைபடுத்தும் முறைகள், நேரடி விற்பனை ஆகியவை இந்த புதிய சட்டத்தின் கீழ் கொண்டு வரப்படுகிறது.

இந்த சட்டத்தின் கீழ், புகார் அளிப்பவர் என்பவர், ஒரு நுகர்வோர் அல்லது சட்டப்படி பதிவு செய்யப்பட்ட ஒரு நுகர்வோர் சங்கம், மத்திய அரசு, மாநில அரசுகள், மத்திய ஆணையம், ஒரு வழக்கில் பல நுகர்வோர்கள் சம்பந்தப்பட்டிருந்தால், அவர்கள் அனைவரும் புகார்தாரர்கள் என்று வகைப்படுத்தப்படுவார்கள். ஒரு புகார்தாரர் இறந்துவிட்டால், அவரின் வாரிசுகளும், 18 வயதிற்கு கீழ் உள்ள நுகர்வோருக்கு அவரின் பெற்றோர் அல்லது பாதுகாப்பாளர் புகார்தாரராக கருதப்படுவார்கள்.



பொருட்களுக்கு யார் பொறுப்பு?

குறையுள்ள பொருள் அல்லது சேவையை அளித்து, அதனால் நுகர்வோருக்கு பாதிப்பு அல்லது தீங்கு ஏற்பட்டால், அதற்கு அந்த பொருள் அல்லது சேவையை அளித்த நிறுவனமே பொறுப்பு என்று நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 வரையறை செய்கிறது. இழப்பீடு பெற, நுகர்வோர் இந்த சட்டத்தில் சொல்லப்பட்ட விதிமுறைகளின் படி, பொருள் அல்லது சேவையில் உள்ள குறைபாட்டை நிரூபிக்க வேண்டும். ஒரு பொருள் அல்லது சேவையில் இருந்த குறைபாட்டினால் பாதிப்பு அடையும் நுகர்வோர், அந்த நிறுவனத்திடம் இதன் அடிப்படையில் இழப்பீடு கேட்டு வழக்கு பதிவு செய்ய முடியும்.

ஒழுங்குமுறை ஆணையம்

நுகர்வோர்களின் நலன்களை முழுமையாக பாதுகாக்கவும், விரைவாக நீதி வழங்கவும், மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்தில், செயல் இயக்குனர் தலைமையிலான ஒரு புலனாய்வு பிரிவு அமைக்கப்படும். இந்த பிரிவு சட்ட மீறல்கள் சம்பந்தப்பட்ட புகார்களை விசாரணை செய்யும்.

பொய்யான தகவல்களை அளிக்கும் விளம்பரங்கள்

பொய்யான தகவல்களை அளிக்கும் விளம்பரத்தை வெளியிடும் நிறுவனத்திற்கும், அதில் நடிப்பவர்களுக்கும் ரூ.10 லட்சம் வரையிலான அபராதம் மற்றும் இரண்டு ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனை விதிக்கும் அதிகாரத்தை மத்திய நுகர்வோர் பாதுகாப்பு ஆணையத்திற்கு, இந்த புதிய நுகர்வோர் பாதுகாப்பு சட்டம், 2019 அளிக்கிறது. இரண்டாவது முறையாக இதே தவறை செய்பவர்களுக்கு ரூ.50 லட்சம் வரையிலான அபராதமும், ஐந்து ஆண்டுகள் வரையிலான சிறை தண்டனையும் விதிக்கப்படும். மேலும் இது போன்ற விளம்பரங்களில் நடிக்கும் நடிகர்கள் மற்றும் விளையாட்டு வீரர்கள் உள்பட அனைவரையும், ஓராண்டு வரை அந்த நிறுவனத்தின் விளம்பரங்களில் நடிக்க தடை விதிக்க முடியும். அடுத்தடுத்து விதி மீறல்களின் போது இந்த தடையின் கால அளவை மூன்று ஆண்டுகள் வரை நீட்டிக்க முடியும். விளம்பரத்தில் சில சந்தர்ப்பங்களில், இத்தகைய விளம்பரங்களில் நடிப்பவர்கள் தண்டிக்கப்படுவதில் இருந்து விதிவிலக்கு பெற வகை செய்யப்பட்டுள்ளது.

நுகர்வோர் குறை தீர்ப்பு

புகாரில் உள்ள பொருளின் மதிப்பை பொறுத்து, மாவட்ட அளவில், மாநில அளவில், தேசிய அளவில் என்று, மூன்று அடுக்குகள் கொண்ட நுகர்வோர் வழக்குகள் தீர்ப்பாயம் அமைக்கப்படும். ஒரு கோடி ரூபாய் வரையிலான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை மாவட்ட தீர்ப்பாயம் விசாரிக்கும். ஒரு கோடியில் இருந்து பத்து கோடி ரூபாய் வரையிலான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை மாநில அளவிலான தீர்ப்பாயம் விசாரிக்கும். பத்து கோடி ரூபாய்க்கும் அதிகமான மதிப்புடைய பொருட்கள், சேவைகள் பற்றிய புகார்களை தேசிய அளவிலான தீர்ப்பாயம் விசாரிக்கும். புகார்தாரர் எழுத்துப்பூர்வமான புகார்களை தீர்ப்பாயத்தில் அளிக்க வேண்டும்.

மாவட்ட தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை மாநில தீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். மாநில தீர்ப்பாயத்தின் தீர்ப்புகளை தேசியதீர்ப்பாயத்தில் மேல் முறையீடு செய்யலாம். அங்கும் நீதி கிடைக்கவில்லை என்று கருதும் நுகர்வோர், இறுதியாக உச்சநீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்ய முடியும். ஒரு புகார் மீது மூன்று மாதத்திற்குள் தீர்ப்பு வழங்கப்பட வேண்டும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது சோதனை கூடங்களில் ஆய்வுக்குட்படுத்தப்பட வேண்டிய பண்டங்கள் பற்றிய புகார்களுக்கு பொருந்தாது. அது போன்ற பொருட்கள் மீதான புகார்கள் ஐந்து மாதங்களில் தீர்க்கப்பட வேண்டும். ஒரு புகார்தாரர் அளிக்கும் புகார் பற்றி 21 நாட்களில் தீர்ப்பாயத்தில் இருந்து பதில் வரவில்லை என்றால், அந்த புகார் ஏற்கப்பட்டதாக கருதப்படும். தீர்ப்பாயத்தின் முன் விசாரணை நடத்தப்படாமல் எந்த புகாரும் நிராகரிக்கப்பட முடியாது. சமரசம் செய்து கொள்ளவும் இந்த சட்டத்தில் இடம் அளிக்கப்பட்டுள்ளது. மாவட்ட, மாநில, தேசிய தீர்ப்பாயங்களில் சமரச மையங்கள் அமைக்கப்படும். இரண்டு தரப்பினரும் சம்மதித்தால், அவர்களின் வழக்குகள் இந்த சமரச மையங்கள் மூலம் தீர்க்கப்படும்.







No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...