பந்தலூர் : "அரசு பள்ளி மாணவர்களுக்கு, மாநில அரசால் வழங்கப்படும் 4 செட் இலவச சீருடைகள் வீணாகி வருகிறது,' என குற்றம் சாட்டப்பட்டுள்ளது. அரசு பள்ளிகளில் 8ம் வகுப்பு வரை படிக்கும் மாணவர்களின் பயனுக்காக,மாநில அரசு மூலம் நடப்பு கல்வியாண்டு முதல் 4 செட் சீருடைகள் வழங்கப்படுகிறது; ஆனால், சில பள்ளி நிர்வாகங்கள் - பி.டி.ஏ. இணைந்து தனியார் பள்ளிகளை போல மாற்று சீருடைகளை அறிமுகப்படுத்தி வருகின்றன. அரசின் சீருடைகளை வீட்டுக்கு எடுத்து செல்லும் மாணவ, மாணவியர் அதனை பயன்படுத்துவதும் இல்லை. இதனால், பல கோடி ரூபாய் மதிப்பில் வழங்கும் சீருடைகள் பயனின்றி வீணாகி வருகிறது. "கலர்' மாற்றம்: இது ஒருபுறமிருக்க, தனியார் பள்ளிகளுக்கு இணையாக, "கலர்' சீருடைகளை அறிமுகப்படுத்தும், சில அரசு பள்ளி நிர்வாகங்கள், ஒரு சில குறிப்பிட்ட கடைகளில் மட்டுமே அந்த சீருடைகள் கிடைக்க செய்கின்றன. அந்த கடைகளில் நிர்ணயக்கப்பட்ட கட்டணத்தை பெற்றோர் கட்டாயமாக கொடுக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்படுகிறது. இதில்," சில குறிப்பிட்ட நபர்களுக்கு பெரிய தொகை செல்கிறது,' என குற்றம் சாட்டப்படுகிறது. இத்தயை மாற்றங்களால், சீருடைகளை வாங்க வேண்டிய, ஏழை பெற்றோர்கள் ஒரு பெரிய தொகையை ஒதுக்க வேண்டிய கட்டாயமும், பணம் இல்லாதவர்கள் வட்டிக்கு கடன் வாங்க வேண்டிய சூழ்நிலையும் உருவாகிறது.நோக்கம் வீண் "அரசு பள்ளிகளில் இலவசமாக கல்வி போதிக்கப்பட வேண்டும்,' என்ற நோக்கத்தில் அரசு சார்பில் நிறைவேற்றப்படும் பல திட்டங்கள் இத்தகைய நடைமுறைகளால் மழுங்கடிக்கப்படுகின்றன. இந்த பிரச்னைகள் குறித்து கடந்த ஆண்டு முதலே மாவட்ட நிர்வாகம் கல்வி துறைக்கு புகார்கள் அளித்தும் எவ்வித பயனும் ஏற்படவில்லை.
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையத்தலைவர் சிவசுப்ரமணியம் கூறுகையில் ""இலவச கல்வியை அளிக்கும் கல்வித்துறை, அரசால் வழங்கி வரும் இலவச சீருடைகளை அணிவிக்க மறுப்பது கல்வி உரிமையை மறுப்பதாகும். மேலும், சீருடைகளை குறிப்பிட்ட கடைகளில் மட்டும் வாங்க செய்வதன் மூலம், லாப நோக்க அடிப்படையில் தான் பள்ளி நிர்வாகங்கள் ஈடுவது தெளிவாகிறது. அரசு வழங்கும் சீருடையை கண்டிப்பாக அணிவிக்க செய்யவும், வாரத்திற்கு ஒரு நாள் மட்டும் கலர் சீருடைகளை அணிவிக்கவும் நடவடிக்கை எடுக்க கல்வித்துறை முன்வரவேண்டும்.இது தொடர்பாக எங்கள் அமைப்பின் மூலம் மாநில முதல்வர்; கல்வி துறைக்கு மனு அனுப்பி உள்ளோம்,'' என்றார்.
No comments:
Post a Comment