குறைபாடுகளுடன் நுகர்வோர் குறைதீர் மன்றங்கள்


தமிழகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் பல இடங்களில் தலைவர், உறுப்பினர் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால் வழக்குகள் தீர்க்கப்படாமல் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
 நேர்மையற்ற வணிகத்தால் நுகர்வோர் வாங்கிய பொருள்களில் உள்ள பாதிப்புகளையும், பெற்ற சேவைகளில் உள்ள பிரச்னைகளையும் விசாரித்து, நுகர்வோருக்கு உரிய தீர்வை வழங்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
 இந்த சட்டத்தின்படி தமிழகத்தில் மாநில அளவில் குறைதீர் ஆணையமும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைதீர் மன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தலைவர் (ஓய்வு பெற்ற நீதிபதி), 2 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் குறையுள்ள பொருளை சரிசெய்து வழங்கவோ அல்லது பணத்தை திரும்ப வழங்கவோ கோரும் உரிமை, சேவையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கோரும் உரிமை, பாதிப்பால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு பரிகாரம் கேட்கும் உரிமை, வழக்குச் செலவை வழங்கக் கோரும் உரிமை என பல்வேறு உரிமைகள் நுகர்வோருக்கு உள்ளன.
 நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 90 நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.
 நுகர்வோர் ஆணையத்துக்கும், மாவட்ட குறைதீர் மன்றங்களுக்கும் நுகர்வோரைப் பாதுகாக்க ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. ஆனால், இவற்றை செயல்படுத்த தலைவருடன் ஒரு உறுப்பினராவது இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள 30 மாவட்ட குறைதீர் மன்றங்களில் 21 மாவட்டங்களில் 2 உறுப்பினர் பதவியிடங்களும், 7 மாவட்டங்களில் ஒரு உறுப்பினர் பதவியிடமும் பல ஆண்டுகள், மாதங்களாகக் காலியாக உள்ளன. தேனி, திருவள்ளூர், நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் தலைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, சென்னையில் உள்ள மாநில குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட குறைதீர் மன்றங்களில் அலுவலகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணியிடங்களில் ஏறத்தாழ 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் பல மாதங்களாக உறுப்பினர் பணியிடங்களுக்கு நேர்காணல் வைத்தும் நியமனம் செய்யப்படவில்லை. விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இதுவரை நிரந்தர குறைதீர் மன்றங்கள் அமைக்கப்படாமல், பகுதி நேரமாகவே செயல்படுகின்றன.
 குறைதீர் மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி நுகர்வோர் பயன்பெற இயலாத நிலையே நீடிக்கிறது.
 சில வழக்குகளில் குறைதீர் மன்றம் தீர்ப்பு வழங்கியும், அதை நிறைவேற்றக் கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், குறைதீர் மன்றத்துக்கு நுகர்வோர் வருகையும் குறைந்து வருகிறது.
 மேலும், உறுப்பினர்கள் நியமனத்துக்கென பல மாவட்டங்களில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவானவர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். இதைவிடுத்து, அரசியல் சார்பற்று, நுகர்வோர் நலனில் உண்மையில் அக்கறையுள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்றார் அவர். நுகர்வோர் நலன் காக்க அமைக்கப்பட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் குறையில்லாத மன்றங்களாக செயலாற்ற வேண்டும் என்பதுதான் நுகர்வோரின் எதிர்பார்ப்பு.
 2 உறுப்பினர்களும் காலியாக உள்ள மாவட்டங்கள்:
 சென்னை (வடக்கு), கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, ஸ்ரீவில்லிப்புத்தூர், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தர்மபுரி, திருச்சி.
 ஒரு உறுப்பினரே உள்ள மாவட்டங்கள்: செங்கல்பட்டு, சென்னை (தெற்கு), கோவை, தர்மபுரி, நாகர்கோவில், நாமக்கல், தூத்துக்குடி.
 மாநில ஆணையம் மற்றும் மாவட்ட குறைதீர் மன்றங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் விவரம்: நீதிமன்ற அலுவலர் 1, தலைமை எழுத்தர் 2, நீதிமன்ற மேலாளர் (மாஸ்டர்) 4, தட்டச்சர் 16, உதவியாளர்கள் 11, இளநிலை உதவியாளர் 4, அலுவலக உதவியாளர் 3 என ஏறத்தாழ 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.

விளம்பரங்களில் நடிப்பவர்கள் மீதும் வழக்கு தேவை


விளம்பரங்களில் நடிக்கும் நடிகர், நடிகை உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் மீது அவர்கள் விளம்பரப்படுத்தும் பொருட்கள் மற்றும் நிறுவன சேவைகளில் குறைபாடுகள் இருந்தால் வழக்கு தொடுக்கலாம் என்று தமிழ்நாடு நுகர்வோர் குறைதீர்ப்பு ஆணையத்தின் தலைவர் நீதிபதி ஆர் ரகுபதி ஒரு யோசனையை முன்வைத்திருக்கிறார்.
விளம்பரங்களில் நடிப்பவர்கள் மீது இன்றைய நிலையில் நுகர்வோர் சட்டத்தின் கீழ் இப்படியான வழக்கு தொடுப்பதற்கு சாத்தியமில்லை என்கிறார் தமிழ்நாடு நுகர்வோர் குறை தீர்ப்பு ஆணைய உறுப்பினர் வாசுகி ரமணன். அதேசமயம், இவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டிய தேவை ஏற்பட்டிருக்கிறது என்கிறார் அவர்.
வர்த்தக விளம்பரங்களில் நடிப்பவர்கள் தங்களின் பெயரை, புகழை, பிரபல்யத்தை பயன்படுத்தி, தாங்கள் தோன்றும் விளம்பரங்கள் மூலம், குறிப்பிட்ட நிறுவனத்தையோ அல்லது பொருட்களையோ வாங்கும்படி நுகர்வோரை தூண்டுகிறார்கள் என்று கூறும் வாசுகி, இவர்கள் அந்த குறிப்பிட்ட நிறுவனம் அல்லது பொருட்களின் முகவர்களாகவே செயற்படுகிறார்கள் என்கிறார்.
அப்படி முகவராக தோன்றி நுகர்வோரை தூண்டும் இவர்களுக்கு தாங்கள் ஊக்குவிக்கும் நிறுவனம் அல்லது பொருட்களின் தரம் பற்றி தெரிந்துகொள்ள வேண்டியது அவசியம் என்றும், தராதரம் தெரியாமல் நிறுவனங்களுக்கோ அல்லது பொருட்களுக்கோ முகவராக செயற்படக்கூடாது என்கிற பொறுப்புணர்வு இந்த நடிக, நடிகை மற்றும் பிரபலங்களுக்கு உருவாக வேண்டும் என்றும் கூறுகிறார்.
விளம்பரங்களில் நடிப்பவர்கள் தங்களின் வருமானத்தில் செலுத்தும் அக்கறையை, தாங்கள் ஊக்குவிக்கும் பொருள் அல்லது நிறுவனத்தின் தராதரம் பற்றி தெரிந்துகொள்வதிலும் செலுத்தவேண்டும் என்பதே நுகர்வோர் பாதுகாப்புக்காக குரல்கொடுக்கும் தன்னைப்போன்றவர்களின் கோரிக்கை என்கிறார் வாசுகி.

"கல்வியில் கவனம் செலுத்த,


 "கல்வியில் கவனம் செலுத்த, மாணவர்களுக்கு வழிகாட்டினால் தீயபழக்கங்களிலிருந்து விடுபடுவர்,' என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மக்கள் மையம்; பந்தலூர் ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் இணைந்து, கல்லிச்சால் ஜி.டி.ஆர். பள்ளி வளாகத்தில் புகையிலை ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சியை நடத்தின.நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்து பேசுகையில்,""பள்ளிகளில் கல்வி நிலையை உயர்த்திடும் வகையில், பி.டி.ஏ., நிர்வாகம் மட்டுமின்றி, பள்ளி மேலாண்மை குழுவும் செயல்படுகிறது. இதில், 25 சதவீதம் பெண்கள் இடம்பெற்றிருப்பதால், பெண் குழந்தைகள் கல்வியில் சிறந்து விளங்க நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
தனியார் பள்ளிகளின் மீது மட்டும் நாட்டம் செலுத்தாமல், அரசு பள்ளிகளுக்கு தங்கள் குழந்தைகளை அனுப்பினால் எதிர்காலத்தில் திறமை மிக்கவர்களாக மாறுவார்கள் என்பதில் சந்தேகமில்லை. 
கல்வியில் சிறந்தவர்களாக, மாணவர்களுக்கு வழிகாட்டினால், தீய பழக்கங்களிலிருந்து விடுபடுவர்,''என்றார்.
சேரன் அறக்கட்டளை இயக்குனர் தங்கராஜ், புகையிலையால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து விளக்கினார். நுகர்வோர் மைய நிர்வாகி தனிஸ்லாஷ், நேரத்தின் அவசியம் குறித்து பேசினார்.
நிகழ்ச்சியில் டிரஸ்ட் நிர்வாகி சுப்ரமணி,மகளிர் குழு நிர்வாகிகள் சீதா, லீலா, ஷீலா, ஓமணா, நாராயணி, சதீ, வனஜா, ÷ஷாபா உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். தாமரை மகளிர் குழு பிரதிநிதி சாரதா நன்றி கூறினார்.

நீரின்றி அமையாது உலகு





          திர்கால உலகில் எந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றொரு வினா எழுமாயின் அதற்கு பெட்ரோலியப் பொருட்கள் என்ற விடை தவறானதாக கூட போகலாம். ஏனென்றால் அதனைவிட பூதாகர மான தட்டுப்பாடு உயிர் திரவமாகிய தண்ணீருக்கு ஏற்படப்போகிறது. இந்த அபாயத்தினை வெகு வேகமாக உலகம் சந்திக்க விருக்கிறது. தற்போதே அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நீரை எதிர்கால தேவைக்கு சேமிக்க தயாராகிவிட்டன. சமீபத்தில் ஹிலாரிக் கிளிண்டனின் வார்த்தைகளில் இது தெளிவாக வெளிப்பட்டது.

புவியின் மேற்பரப்பில் 1400 ஷ் 106 கன கிலோமீட்டர் அளவுக்கு நீர் இருப்பினும் அவற்றுள் 3 சதவீத நீர் மட்டுமே நன்னீர் ஆகும். அதிலும் 5 சதவீதம் (மொத்த நீர் அளவில் 0. 15 சதவீதம்) மட்டுமே நேரடியாக குடிநீராக உபயோகிக்க வல்லது.  பாக்கி 95 சதவீத நீரை உபயோகிக்க இயலாது. கடல்நீரில் உப்பு அதிக அளவில் கலந்துள்ளது. மேலும் கால்சியம், மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்களும் அதிக அளவில் கலந்திருப்பதனால் குடிநீராக மாற்றுவதற்கு நவீன தொழில்நுட்ப முறைகளை (தஞ) கையாள வேண்டியிருக்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகள் செலவு மிகுந்தவை.

நம்முடைய நாடு சுமார் 1850 கன கிலோமீட்டர் அளவுக்கு தண்ணீரைக் கொண்ட நாடு. மேலும் உலக நன்னீர் இருப்பில் 4 சதவீத நன்னீரினைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தென்பாகங்களை விட வட பாகங்கள் மிகப்பெரிய ஆறுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் நடுத்தர (ஙங்க்ண்ன்ம்) ஆறு காவிரி மட்டுமே. மற்ற ஆறுகள் அனைத்தும் சிற்றாறுகள் இனத்தில் பட்டவை.

தமிழகத்தின் தண்ணீர் தேவை ஆறு, ஏரி, கிணறு ஆகியவற்றின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆற்று நீர் ஆறு உற்பத்தியாகும் உயர்ந்த மலைப் பகுதிகளில் மழை பெய்வதனாலும், அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவதனாலும் கிடைப்பது. நிலப்பகுதிகளில் மழை பொழிவதனால் சிற்றோடை களில் வழிந்தோடும் நீர் ஏரிகளில் சேமித்து வைக்கப் படுகிறது. கிணற்றுநீர் மழை நீர் மண்ணின் பல அடுக்குகளை கடந்து நிலத்தடிநீராக சேமித்து வைக்கப்படுவது, ஆக எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்குவது மழைநீரே. மழைநீர் தூய்மையான நீரும்கூட.

இருவேறு பருவ காலங்களில் தமிழகம் மழைப் பொழிவினை பெறுகின்றது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான, தென்மேற்கு பருவக் காற்றால் கிடைக்கும் மழை. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான வடகிழக்கு பருவக்காற்றால் கிடைக்கும் மழை. தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் உட்பகுதி களில் அவ்வளவாக பெய்வதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையினையொட்டிய பகுதிகளிலேயே பொழிகிறது. இதன் முக்கிய காரணம் இப்பருவ காலத்தில் வீசும் தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலை களினால் தடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மேற்கு தொடர்ச்சியின் மேற்கு பகுதியிலுள்ள கேரள மாநிலத்திற்கு மழைப்பொழிவு கிடைக்கிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இயற்கையினால் ஆக்கப் பட்டது. இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலையின் வால்பகுதியில் தென்மேற்கு பருவக்காற்றால் அதிகமழை பெறுகிறது. தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகம் ஆண்டிற்கு 322 மி.மீ. மழை (சராசரியாக) பெறுகிறது. ஆனால் இந்த அளவு எல்லா ஆண்டு களிலும் சரியாக கிடைப்பதில்லை. பல ஆண்டுகளில் குறைவாகவே கிடைத்து வருகிறது.

வடகிழக்கு பருவக்காற்றால் தமிழகம் சாதாரணமாக 470 மி.மீ. மழைப்பொழிவினைப் பெறுகிறது. இப்பருவ மழையால் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் அதிக மழையினைப் பெறுகின்றன. தமிழகம் இவ்விரண்டு பருவங்களிலும் பெறும் மொத்த மழையளவு தேசிய சராசரி மழையளவான 1250 மி.மீ.க்கும் குறைவானதே.


அதேபோல் தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள நீர் இருப்பு 800 கனமீட்டர் அளவானது தேசிய நீர் இருப்பு (ஒரு குடிமகனுக்கு) அளவான 2300 கன மீட்டருக்கும் குறைவானதே. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு கிடைத்த மழையளவு தற்போது இல்லை. குறைந்து கொண்டே வருகின்றது. அதேசமயம் தமிழகத்தின் வெப்பநிலை அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் முக்கிய காரணம் கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட மரங்களின் அழிவேயாகும். தமிழகத்தின் இயற்கை போர்வை வெட்டி யெறியப்பட்டது. சாலையோர மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வேளாண்மை நிலங்களின் ஓரங்களில் வளர்க்கப்பட்ட மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் சமூகக்காடுகளின் பயன் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு வளர்க்கப்படும் மரங்களை அரசியல்வாதிகளும், ஆக்கிரமிப்பு செய்வோரும் விட்டுவைப்பதில்லை.

தமிழகத்தின் தண்ணீர் தேவையை சமன் செய்வதில் முக்கிய பங்காற்றும் நீர் ஆதாரங்களாக விளங்குவது நில மேற்பரப்பு நீர் (நன்ழ்ச்ஹஸ்ரீங் ஜ்ஹற்ங்ழ்) மற்றும் நிலத்தடிநீர் ஆகும். நில மேற்பரப்பு நீர் ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை ஆகிய நீர் ஆதாரங்கள் மூலம் கிடைப்பது. இவ்வினத்தில் தமிழகம் சுமார் 24864 மில்லியன் கன மீட்டர் நீர் அளவினைக் கொண்டுள்ளது.

தமிழகத்தின் 34 நதிகள், 89 நீர்த்தேக்கங்கள், 41948 சிறு நீர் தேக்கங்கள் (பஹய்ந்ள்) பாசனத்திற்கும், குடிநீருக்கும் தேவையான நீரை வழங்கி வருகின்றன. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலம் இதனால் பயன்பெற்று வருகிறது.

தமிழகத்தின் வறண்ட உட்பகுதிகளில் கிணறுகள் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட்டு வருகின்றன. ஆங்காங்கே பூமிக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு வருகின்றது. கிணறுகளிலிருந்தும், ஆழ்துளை குழாய்கள் மூலமும் பூமியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் மழைநீராலேயே மீண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன. நிலத்தடிநீர் பூமியிலிருந்து உறிஞ்சப்படும் அளவிற்கு மழைநீர் கிடைக்காததால் நிலத்தடிநீர் மட்டம் தாழ்ந்துகொண்டே செல்கிறது. பருவமழையினால் வருடம் ஒன்றிற்கு 4. 91 பில்லியன் கன மீட்டர் நிலத்தடிநீர் கிடைக்கின்றது. இதர நீர் நிலைகளின் மூலம் (ஏரி, குளம், ஆறு) போன்றவற்றின் மூலம் கிடைக்கும் நிலத்தடிநீர் 11. 96 பில்லியன் மீட்டர் கனமீட்டர். அதே சமயம் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் நிலத்தடிநீர் அளவு 4. 53 பில்லியன் கனமீட்டர் ஆகும். இத்துடன் இதர நீர் வளத்தையும் சேர்த்து மொத்தம் 23. 07 பில்லியன் கன மீட்டர் நீர் நிலத்தடி நீர் இனத்தில் தமிழகத்திற்கு கிடைக்கிறது. இந்த நீர் அளவிலிருந்து ஆறு மற்றும் கழிவு நீர் பாதைகளின் வழியாக கடலுக்கு சென்று சேரும் 2. 31 பில்லியன் கன மீட்டர் நீர் போக தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த நிலத்தடிநீர் அளவு 20. 76 பில்லியன் கன மீட்டர் ஆகும். இதில் வேளாண்மைக்கும் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலத்தடிநீரின் அளவு 17. 65 பில்லியன் கன மீட்டர். ஆனால் இந்த நீர் சமநிலை எப்போதும் மிகச்சரியாக தமிழகத்தில் நிலவுவதில்லை. எல்லா வருடமும் சரியான அளவு பருவ மழை கிடைக்காத காரணத்தால் மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் நீரில் 85 சதவீத அளவே மண்ணிற்கு திரும்ப சென்றடைகிறது. எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. தமிழகம் மொத்தம் 385 நிலத்தடிநீர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நீர் அளவினை ஆராய்ந்ததில் 145 மண்டலங்கள் பாதுகாப்பானவை எனவும், 57 மண்டலங்கள் மோசமான அளவில் உறிஞ்சப்படுபவை எனவும், 33 மண்டலங்கள் மிக மோசமான அளவில் உறிஞ்சப்படுபவை எனவும், 142 மண்டலங்கள் அதி மோசமாக உறிஞ்சப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. நிலத்தடிநீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதன் மூலம் நிலத்தடிநீர் மட்ட அளவு குறைந்துபோய் கடந்த 20 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான கிணறுகள் வற்றி வறண்டு போயின. கோவை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு பாசனக்கிணறுகள் வறண்டுபோனதன் பின்னணி இதுவே. தொழிற்சாலைகள், சாயப்பட்டறை கழிவுநீர் நிலத்தடிநீரை எட்டும்போது நிலத்தடிநீர் மாசுபட்டு பயனற்றதாகி விடுகிறது. எனவே நீரை மாசுபடுத்தும் பணி தமிழகத்தில் கண்மூடித்தனமாக நடந்தேறி வருகிறது.


தமிழகத்தின் மொத்த தண்ணீர் தேவை 1921 டி.எம்.சி. ஆனால் நமக்கு கிடைத்து வரும் நீரின் அளவு 1643 டி.எம்.சி. இது 2001- ஆம் ஆண்டின் புள்ளி விவரம். 2050-ஆம் ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகளுக்கும் வேளாண்மை உற்பத்திக்கும் அதிகமாக நீர் தேவைப்படும். தமிழகத்தில் உயர்ந்துவரும் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் மூலம் சுமார் 4 முதல் 6 சதவீதம் வரை குடிநீர் தேவை உயர வாய்ப்புள்ளது.

தமிழகத்தின் 34 நதிகளில் 17 பெரிய நதிகளும் 17 துணை நதிகளும் அடங்கும். நதிகள் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் நில மேற்பரப்பு நீர் சுமார் 853 டி.எம்.சி. இதில் 261 டி.எம்.சி. தண்ணீர் நமது அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. அதுவும் நீதிமன்றங்கள் சென்று போராடி பெறவேண்டிய நிலை. காவிரி நதிநீர் பிரச்சினை, பானாசுரசாகர் பாசனத்திட்டம், முல்லைப் பெரியார் நதிநீர் பிரச்சினை (கேரளா), பாலாறு நதி பிரச்சினை (ஆந்திரா), நெய்யாறு பாசனத்திட்டம் (கேரளா), செண்பகவள்ளி  அணைக்கட்டு (கேரளா), பரம்பிக்குளம்- ஆளியாறு திட்டம்- ஒப்பந்தம் (கேரளா), பம்பை- அச்சன் கோவில்- வைப்பாறு இணைப்பு ஆகிய நதிநீர் பிரச்சினைகளை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. இவ்வனைத்து நதிநீர் பிரச்சினைகளிலும் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். என்றாலும் தமிழகத்தின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதென்பது கேள்விக்குறியே. நதிநீர் இணைப்பு திட்டங்கள் எதிர்காலத்தில் பயன்தரலாம். ஆனால் அந்தந்த மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி நடைமுறைக்கு வர விசால சிந்தனை கொண்ட, உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பல நதிநீர் இணைப்பு திட்டங்கள் இன்னும் திட்டமிடப்பட்ட நிலை யிலேயே உள்ளது. எனவே எதிர்கால நீர் தேவையை மனதில் கொண்டு நாமே முன்னோடியாக இருந்து நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வெள்ளப்பெருக்கின்போது வீணாக கடலில் கலக்கும் நீரை பயன்படத்தக்க வகையில் செய்யமுடியும். மேலும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது விளைநிலங்கள் நீரினுள் மூழ்கி பயிர்சேதம் ஏற்படுகின்றது. அதனை தடுக்க கால்வாய்கள் அமைத்து வீணாகும் நீரை சேமித்து பயன் பெறலாம்.

தமிழகத்திற்கு தேவையான மழைநீர் பெற வீணாக கிடக்கும் தரிசு நிலங்கள், சிறு மற்றும் பெரிய மலைத்தொடர்கள் போன்ற புவி பரப்புகளில் திட்டமிடப்பட்ட சமூகக் காடுகளை வளர்ப்பதில் இன்னும் அதிக செயல்திறன் தேவைப்படுகிறது. பெயரளவில் இருக்கும் திட்டங்களை தூக்கி தூர எறிந்துவிட்டு செயல்திறன் கொண்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மரம் வளர்ப்பதினால் விழையும் மழையினைப் பற்றி விழிப்புணர்வு குறிப்பாக தமிழக மக்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. என்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தேவையினை ஓரளவேணும் பூர்த்தி செய்ய இயலும்.

தேவையில்லை இலவசங்கள்!


தேவையில்லை இலவசங்கள்! 

சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. 

ஞாயிறு தோறும் வெளிவரும்.தமிழக அரசியல் கட்சிகள், தேர்தலை முன்னிட்டு, தலையே கிறுகிறுக்கும் அளவிற்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை திக்குமுக்காட வைக்கின்றன. இவை மக்களுக்குத் தேவை தானா என்பதை விட, நடுத்தர மக்களின் கவலைகளைத் தீர்க்கும் அம்சங்கள், இவர்களது தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை.

உலக பொருளாதார மயத்திற்குள், என்று இந்தியா நுழைந்ததோ, அன்றே அன்னிய பொருளாதாரம் நம்மை ஆக்கிரமித்துவிட்டது. தகவல் தொழில்நுட்பம் நுழைய, நுழைய, அதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் மக்களின் வாழ்க்கை வசதிகள் மாறின. இவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில், வெறும் 3 சதவீதமே. ஆனால், இவர்களால், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே புரட்டி போடப்பட்டது; பாதிக்கப்பட்டது 97 சதவீத மக்கள்.

இந்த 97 சதவீத மக்களைக் குறி வைத்து, அரசியல்வாதிகள் செய்யும், "அலம்பல்களை' நம்மால் தாங்க முடியவில்லை. 

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை

களைப் படித்தால், தலை, "கிறுகிறு'க்கிறது.

"இன்று, வயிறு நிறைந்தால் போதுமா, நாளைக்கு...?' என்ற கேள்வியை எழுப்புபவனுக்கு, அரசிடமிருந்து பதில் இல்லை.

"அதான் அரிசி கொடுக்கிறோமே... இலவச வேட்டி, சேலை கொடுக்கிறோமே... பொழுது போக, கலர் "டிவி' கொடுக்கிறோமே... சோறு சாப்பிட்டு, "ஹாயாக' வீட்டில்,"டிவி' பார்க்க வேண்டியது தானே...' என்ற ரீதியில், அரசியல்வாதிகள் செயல்படும்போது, "வேலை தேவை, வேலைக்கு அடிப்படையான கல்வி தேவை, படிக்க மின்சாரம் தேவை, நான்கு சுவர் அமைந்த வீடு தேவை' என்று நாம் சொல்வதெல்லாம் அவர்கள் காதில் விழுமா?

மேலே சொன்னவற்றில், பின்னிருந்து ஒவ்வொன்றாக செல்வோம். முதலில், ரியல் எஸ்டேட். இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர மக்கள் தான். குடும்ப வருமானம் உயர்ந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறினாலும், குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலையில், பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

சமுதாயத்தில் ஒரு தட்டு மக்களின் சம்பள உயர்வால், ரியல் எஸ்டேட் விலை, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தது. புல் முளைக்காத, பூச்சிகள் கூட நடமாடாத இடங்களின் விலை இன்று வானத்தை தொட்டு விட்டது.

நகரங்களில் இன்று, நடுத்தர மக்கள் வீடு வாங்குவது கனவாகவே உள்ளது. இருவர் வேலைக்கு சென்று, வாடகை கொடுத்து, குழந்தைகளை படிக்க வைத்து, "ஷாக்' அடிக்கும் அளவிற்கு, நம்மை சுடும் மின்கட்டணங்களை கட்டி, இப்படியே செலவினங்கள் உயர்ந்து மூச்சு திணற வைக்கிறது.

சொந்த வீடு கனவு பலிக்காதவர்கள் வாடகை வீட்டில். வாடகையும் ஒவ்வொரு 11 மாதத்திற்கும், உயர்த்தப்படுகிறது. வாடகை குறைப்பு பற்றியோ, ரியல் எஸ்டேட் விலையை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியோ, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை.

அடுத்து மின்சாரம். சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதிக சிரமம் தெரியாது. கிராமத்திற்கு வந்து பாருங்கள்... விவசாயிகளும், தொழிற்சாலைகளும், தேர்வு நேரங்களில் மாணவர்கள் படும் வேதனைகளை சொல்லி மாளாது. தேர்தலின்போது, சம்பந்தப்பட்ட அமைச்சரை கண்ணிலேயே காட்டாமல் விட்டால், பிரச்னை, "அமுங்கி'ப் போகும் என்று, ஒரு கட்சி கணக்குப் போடுகிறது. கணக்கு, சரியா, தவறா? மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


அடுத்து, விண்ணைத் தொடும் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கான கட்டணங்கள். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன், ஐ.சி.எஸ்.இ., என்று பல்வேறு கல்வி முறைகள். தமிழகத்தைத் தவிர வேறு எங்கு சென்றாலும், மக்களிடம் பேச பொதுவான மொழி ஒன்று தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகி விட்டது. அந்த வகையில், பரம ஏழையாக இருந்தாலும், ஆங்கில வழிக் கல்வி அவசியமாகிறது.

தமிழகத்தில் கல்வி கட்டணத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறேன் பேர்வழி என, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி எல்.கே.ஜி.,யில் இருந்து, 12ம் வகுப்பு வரை வசூலிக்க வேண்டிய கட்டணம் நிர்ணயம் செய்தது. நகரம், கிராமம் என, 3,500 ரூபாயிலிருந்து, 11 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தது.

"இக்கமிட்டி, கல்வி துறை அதிகாரிகளிடம், குறிப்பிட்ட நிர்வாக செலவு விவரங்களை மட்டுமே பெற்றுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சம்பளம் வழங்க முடியாது' என்று பள்ளி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.விவகாரம், கோர்ட் வழக்காக மாறியது.

பிரச்னை தீர்ந்ததா? குழம்பிய குட்டையில், கல் எறிந்த கதை ஆகி விட்டது. கல்வி நிறுவனங்களையும், பெற்றோரையும் சம நோக்கோடு கையாண்டிருந்தால், பிரச்னை, சுப்ரீம் கோர்ட் வரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல மெட்ரிக் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்காது.

கல்லூரிப் படிப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசு, சுயநிதி, தனியார் என, ஏகப்பட்ட கல்லூரிகள் இருந்தும், "டப்பு வை... சீட் இந்தா...' கதை தான். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையிலான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கத் தெரியவில்லை.

அடுத்தது, வேலை. வெளிநாட்டு நிறுவனங்களை, சென்னையில் மட்டும் வரிசையாக நிறுவி, மற்ற மாவட்ட மக்களின் வயிற்றில் அடித்த கொடுமையை என்னவென்று சொல்ல!

அடுத்து, விவசாயம். நாட்டின் முதுகெலும்பு. விவசாயத்திற்கு அடிப்படை தேவை நீர் வளம். அந்த வளம் தமிழகத்தில் பெருக்கப்பட்டதா? இல்லை. பக்கத்து மாநிலங்கள் போட்டி போட்டு கொண்டு, நீர்வள ஆதாரத்தை பெருக்க, அணைகள் கட்டி வருகின்றன. 

ஆனால், தமிழகத்தில் அதற்கான சிந்தனை கூட இல்லை. விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம் என்கின்றனரே... இந்த இலவசம் எங்கிருந்து வந்தது? மக்களின் வரிப்பணம் தானே! இலவசம் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, விவசாய உற்பத்தியை பெருக்க, தேவையான அடிப்படை ஆதாரம் பற்றி யோசிக்க வேண்டும்.

விவசாயத்திற்கு, சொட்டு நீர் பாசனம் மிகவும் முக்கியம். இதை அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. இதை தனியாருடன் இணைந்து அரசு சரியாக செய்தால், விவசாய உற்பத்தியை பெருக்கலாம். கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, தனியாரை விவசாயத்தில் ஈடுபடுத்தி, மேலை நாடுகளை பின்பற்றி, விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்.

நடப்பு ஆட்சியில், இலவச விவசாய நிலம் வழங்கப்பட்டது. விவசாயமே செய்ய முடியாத நிலம் எதற்கு? மலைப்பிரதேசங்களில், பழங்குடியினருக்கு என்று இலவசமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. அதில், அவர்கள் விவசாயம் செய்தனரா? இல்லை. கிடைத்த விலைக்கு விற்று விட்டனர். வரிப்பணத்தில் இலவசம் என்ற பெயரில் கொடுப்பதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த அடிப்படைத் தேவை போக, இன்னொரு பிரச்னையும் உண்டு. பெண்களின் ஓட்டை கவருவதற்காக மிக்சி, கிரைண்டர், தையல் மெஷின், மின்விசிறி இலவசமாக கொடுக்கப்படும் என்று ஆசை காட்டி வலை வீசும் அரசியல் கட்சிகள் உண்மையிலேயே கொடுக்க வேண்டிய அரசியல் அங்கீகாரத்தை நடப்பு தேர்தலில் கொடுக்கவில்லை. தமிழகத்தில் மொத்த கட்சிகளும், 33 பெண் வேட்பாளர்களை மட்டுமே களத்தில் நிறுத்தியுள்ளன.

நாட்டில் பெண்கள் ஓட்டு சக்தி வாய்ந்தது. இவர்களை கவர்ச்சி செய்தால் நிச்சயம் வெற்றி கனியை பறிக்கலாம் என்பது அரசியல்வாதிகளின் கணக்கு. 

ஆனால், உரிய அரசியல் அங்கீகாரம் இவர்களுக்கு கொடுக்கின்றனரா? 33 சதவீதம் பற்றி பார்லிமென்டில் பேசும் அரசியல்வாதிகள் வெளியே வந்தால் மறந்து விடுகின்றனர். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, அவ்வப்போது இப்பிரச்னையை கிளப்புவர்; பின் மறந்து விடுவர்.எதிர்பார்க்காத இலவசங்களை கொடுத்து அடிமைகளாக்குவதை பெண்களே விரும்பவில்லை. இதற்கு பதிலாக பெண்களுக்கு வாழ்வாதாரங்களை பெருக்கி கொடுக்க அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். பெண்கள் உரிய அரசியல் அங்கீகாரம் பெற்றால் தான், வீட்டில் இருந்து, சமுதாயம் வரை அடிப்படை பிரச்னைகள் என்ன என்பது தெரிய வரும்; களைய முடியும்.சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணங்களாக இருக்கக் கூடாது. செய்வரா நம் அரசியல்வாதிகள்...?

நேரான கல்விக்கு சீரான பார்வை


பள்ளிக்கல்வி பற்றி இப்போது நம் சிந்தனையைக் கவ்விக் கொண்டிருப்பவை இரண்டு! ஒன்று, நம் குழந்தைகள் கைகளில் இருக்கும் முதலாம், ஆறாம் வகுப்புச் சமச்சீர் கல்விப் பாடநூல்களும், அவர்களுக்கு வரும் கல்வியாண்டில் கிடைக்கவுள்ள 10ம் வகுப்பு வரையிலான மற்ற பாடநூல்களும். இரண்டு, தனியார் பள்ளிகளுக்கென்று ஒரு குழுவின் துணையுடனும், கோர்ட்டின் அனுமதியுடனும் அரசு அனுமதித்திருக்கும் கல்விக் கட்டணங்கள்.

இதுவரை இருந்து வந்த நான்கு வகை (அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல்) பாடமுறைகளின் கூட்டுச் சாரமாக முகிழ்த்தது தான், சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் - பாடநூல்கள். "எந்த அளவுக்கு நான்கு பங்குகளும் கலந்திருக்கின்றன?' என்பது தான் முக்கியம். முதல் மற்றும் ஆறாம் வகுப்பு பாடநூல்கள் எளிமையானவை. ஆண்டு முழுவதும் கற்பிக்க அவற்றில் பாடங்கள் குறைவு. ஆறாம் வகுப்பில் அறிவியில், சமூகவியல் பாடங்கள் இன்னும் அழுத்தமாகவும், தொடர்பானவையாகவும் இருக்கலாம். நம்மை மிகவும் யோசிக்க வைப்பது, பல தனியார் பதிப்பகங்களும் பாடநூல்களைத் தயாரிக்கலாம் என்பதுதான்.வரையறுக்கப்பட்ட பாடத்திட்டப்படி பாட நூல்களைப் பலரும் தயாரிக்கும்போது, புது உத்திகளும், புதுச் செய்திகளும், தொடரோட்டமும் கிடைக்கலாம். இதனால், எளிமையோடு கற்பிக்கப்படும் எந்த ஓர் உண்மைக்கும், ஒரு பன்முகப் பார்வையும் கிடைக்கும் என்பதோடு, பாடநூல்களைப் பெரிய எண்ணிக்கையில் தயாரித்து, உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதும் எளிது.

இப்படிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் நன்மைகள் நம்மை ஏமாற்றி விடுவதோடு, எதிர்பாராத ஒரு முடிவுக்கும் கொண்டுபோய் விட்டுவிடும் நிலையும் உள்ளது. இதுவரை, இப்படித்தான் தத்தம் முறைகளில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படி, பல பதிப்பாளர்கள் தயாரித்த பாடநூல்களைத் தான் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றன. இந்த முறைக்கே நாம் மீண்டும் வந்து, சமச்சீர் கல்வியின் இலக்கு மாற்றமும் பெற்றோரின் பழைய செலவுச் சுமையும் நுழைந்துவிடும். அரசு தேர்ந்தெடுக்கும் பாடநூல்களை எந்தப் பதிப்பகமும் தயாரித்துக் கொடுக்கலாம் என்ற முறையைப் பின்பற்றுவது தான் இதற்கு ஒரே மாற்று வழி.இப்போது தயாரிக்கப்பட்ட பாடநூல்கள், மூன்றாண்டுகளுக்கு மட்டும் தான் என்று அறிவிக்கப்பட வேண்டும். புதிய வல்லுனர் குழுக்கள் இந்த நூல்களை முழுவதுமாக ஆய்ந்து, தம் பார்வைக்கு வரும் குறைகளையும் கருத்தில் கொண்டு செம்மைப்படுத்த வேண்டும் அல்லது முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, புதிய நூல்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். இப்பணிக்கு இரண்டாண்டுகள் கொடுக்கப்பட்டு, மூன்றாம் ஆண்டின் மத்தியில் அனைத்து திருத்தப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட நூல்களும் பள்ளிகளுக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.

இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் தமிழ் தவிர்த்த பாட நூல்கள் அனைத்தும், அகில இந்திய அளவிலான வல்லுனர் குழுக்களின் மறுமதிப்பீடு இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருக்கக் கூடாது.கல்வி வரலாற்றில், இதுவரை என்றும் கண்டிராத ஒரு சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகள் அரசு அறிவித்துள்ள கட்டணத்தை நடப்பு ஆண்டுக்கும் வசூலிக்க வேண்டிய நிலை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. நாடி அலைக்கழிந்து, தம் குழந்தைகளை எந்தப் பள்ளிகளில் பெற்றோர் சேர்த்தனரோ, இன்று அதே பள்ளி வாயில்களில் போராட்டக் குரல் எழுப்பி நிற்கின்றனர். இனி, தம் புதிய முயற்சிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்க முடியாதே என்ற கவலையில் பள்ளி நிர்வாகிகள் இருக்கின்றனர். போராட்டத்தில் பெற்றோரும், பொருமலில் பள்ளிகளும் இருப்பது குழந்தைகளின் கல்விக்கு உகந்ததில்லை. கட்டணம் பற்றிய முடிவுகள் முன்கூட்டியே வராததும், மறு பரிசீலனை பற்றிய முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளும் முடிவுகளும், எப்படியும் ஒரு நெகிழ்வுக்கு வழியுண்டே என்ற பள்ளிகளின் நம்பிக்கையும் தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம்.

ஒரு சிறிய குழு, 6,400 பள்ளிகளின் நிர்வாகிகளை நான்கு மாதங்களுக்குள் (ஒரு மாதம் ஓடிவிட்டது) நேரில் சந்தித்து, விவரம் பெற்று முடிவுகள் சொல்வதென்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஒருவரிடம் நான்கைந்து நிமிடங்களுக்குள் தான் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றால், அந்த நேரத்தில் என்ன நடைபெறும்?நமக்கு இப்போது எழும் கேள்வி இதுதான்... பத்தில் ஒரு பங்கு (பெரிய பள்ளியோடு ஒப்பிடும்போது) கட்டணமாகப் பெற்று, மூன்றில் ஒரு பங்கு சம்பளமாகக் கொடுத்து, நூறில் ஒரு பங்கு மட்டும் வளர்ச்சிக்காகப் பெற்று இயங்கும் ஒரு பள்ளியால், கல்வித் தரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? பெரிய பள்ளிகளே, "கட்டணம் கட்டுபடியாகவில்லை' என்று போராடும் போது, இத்தகைய சிறிய பள்ளிகளால் என்ன செய்ய முடியும்? பாடநூல்கள் சமச்சீரானவையாகத்தான் இருக்கப் போகின்றன. இத்தனை மாறுபட்ட வகுப்பறைச் சூழல்களைக் கொடுக்கும் கல்வி சமச்சீராக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?

மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்காத நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஏன் அமைதியாக இருந்தன என்பதன் உண்மைக் காரணம் நமக்குத் தெரியவில்லை. ஒன்று விளங்குகிறது... கட்டண நிர்ணயக் குழுவுக்கு, கல்வித்தரம் குறிக்கோள் இல்லை; வரவு - செலவைப் பார்த்து, கொஞ்சம் கூட்டிக் கழித்து கட்டணங்களை நிர்ணயித்ததுதான் அதன் பணி. முத்துக்குமரன் குழு சுட்டிய முன்னேற்பாடுகளில், வசதிகளில் ஒருசிலவற்றையாவது கருத்தில் கொண்டு கட்டணங்கள் சீரமைக்கப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால், வளர வேண்டிய பள்ளிகளுக்கு வாய்ப்பும், உதவியும் கிடைத்திருக்கும்.தரமான கல்வி கொடுக்க, ஒரு வகுப்பின், பள்ளியின் அடிப்படைத் தேவைகள் என்ன, தேவையான செலவுகள் என்ன? கிராமப்புறமாயிருந்தால் என்ன, நகர்புறமாயிருந்தால் என்ன? அந்த அடிப்படைச் செலவுகளுக்கு வழி இருக்க வேண்டும். வகுப்பறை உள்வசதிகளில் கூடுதல், குறைவு இருந்தாலும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் தரம், சமமாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு ஒப்பாகவும், ஏன், உயர்வாகவும் கூட இருக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர்களின் தரம் கண்காணிக்கப்பட வேண்டும். ஏராளமான ஆசிரியர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருந்தாலும், தனியார் பள்ளிகளில், அதுவும், பொருளாதாரம் குறைந்த அளவிலான சிறிய பள்ளிகளில் பணிபுரிய அவர்கள் முன்வருவதில்லை.பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த இரண்டு யோசனைகள்: இருப்பிடத்திற்கு அருகில் அமைந்திருக்கும் எந்தப் பள்ளியிலும், தம் குழந்தைகளை, பெற்றோர் தயக்கமில்லாமல் சேர்க்கும் அளவுக்கு, அனைத்துப் பள்ளிகளின் தரமும் உயர்வதற்கான செயல்முறைகளில் இறங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் முதல் தேவையாக, திறமை மிக்க ஆசிரியர்களைத் தேர்வு செய்து, தகுந்த ஊதியத்தில் நியமிக்கும் அளவுக்கு, அவற்றின் வரவு - செலவு இருக்க வேண்டும். இதற்கு உதவியாக, மாணவர்களின் கட்டணம் (இப்போது கல்லூரிகளில் இருப்பது போல) ஒரே சீராக இருக்கச் செய்ய வேண்டும்.மாணவர்களை இடைநிறுத்தம் செய்யக்கூடாதென்ற கொள்கையை அவர்களுக்குப் பயனுள்ளதாக ஆக்க, உள்தேர்வுகளையும், மதிப்பீடுகளையும் கண்காணிக்கும் உள்ளமைப்பு, வெளியமைப்பு ஒன்று, ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கட்டண நிர்ணயக் குழுவிடம் இன்னொரு பணியையும் அரசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை மாதிரியாகக் கொண்டு, அதற்கு ஒப்ப ஆசிரியர் தகுதி, ஊதியம், கட்டமைப்பு என்ற முக்கியத் தேவைகள் தனியார் பள்ளிகளில் இருக்கின்றனவா என்று கணித்து, குறைகளைப் பள்ளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.ஆயிரம் மாணவர்களுக்கு மேலாகயிருக்கும் பள்ளிகளுக்கு, முன் அவை வசூலித்த கட்டணத்தையும், ஆண்டுக்கு 10 சதவீதம் கூடுதலும், முன்கூட்டியே தெரிவிக்கப்படும் புதிய கல்வி - முயற்சிகளுக்கு 5 சதவீதம் கூடுதலும் அரசு அனுமதிக்கலாம். அந்த வகையில், அனுமதி பெறுவதற்குத் தனியார் பள்ளிகளிடமிருந்து ஒரு புதுமையான செயல்திட்டம் வர வேண்டும். சிறந்த கட்டமைப்புகளையும், தகுதி மிக்க ஆசிரியர்களையும், மற்ற அனைத்துத் தேவைகளையும் கொண்டுள்ள அந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றும், இன்னொரு இணைப்பள்ளியைத் தொடங்க வேண்டும்.


அந்த இணைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை முறையும், கட்டணக் குழு தெரிவிக்கும் பொதுக்கட்டண முறையும் கடைபிடிக்கப்பட வேண்டும். தம் பகுதிகளில் தேர்வு ஓட்டங்களில், பந்தயத்துக்காக ஓடாமல், வாழ்க்கைக்காக ஓடத் துடிக்கும், கற்றலில் பின்தங்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த வசதி படைத்த பள்ளிகள் உயர்த்த வேண்டும். இந்த பின்புலத்தில் இயங்கும் இணைப் பள்ளிகள் தான் உண்மையான கோவில்கள்.

2020-ல் இந்தியாவில் 59,000 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி


2020-ல் இந்தியாவில் 59,000 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி


வரும் 2020-ம் ஆண்டு இந்தியா 59 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனை பெற்றிருக்கும் எனவும், அதன் மூலம் 98 ஆயிரம் பேர் அத்துறையில் வேலைவாய்ப்பை பெற்றிருப்பார்கள் எனவும் "சர்வதேச காற்றாலை மின்சக்தி கண்ணோட்டம் 2012 (ஜி.டபிள்யு.இ.ஒ)' புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் "இந்திய காற்றாலை மின்சக்தி- 2012' கருத்தரங்கில் இந்திய காற்றாலை மின்சக்தி கண்ணோட்டம் - 2012 என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா இதை வெளியிட்டார்.
இதில், இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் அந்தந்த நாட்டு அரசின் கொள்கைகள், முதலீடு திட்டங்கள், வளர்ச்சி விகிதம் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன.
உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக கரியமிலவாயு வெளியாவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பசுமை எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவும் இதுபோல் பசுமை எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா இப்போது 2.1 லட்சம் மெகாவாட் மின்உற்பத்தி நிறுவு திறனைக் கொண்டுள்ளது.
இதில் பசுமை எரிசக்தியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிறுவு திறன் மட்டும் 25 ஆயிரம் மெகா வாட் ஆகும். இதில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் மட்டும் 17,500 மெகா வாட் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கை காட்டிலும் கூடுதல் நிறுவு திறன்: இந்திய காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் வரலாற்றைப் பொருத்தவரை, இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதல் நிறுவு திறனையே இந்தியா நிறுவி வந்துள்ளது.
2002 - 2007 வரையிலான 10-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் 1500 மெகா வாட் அளவுக்கு செய்திருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 5,427 மெகா வாட் மின் உற்பத்தி அளவுக்கான நிறுவு திறன் செய்யப்பட்டது.
இதுபோல் 11-வது ஐந்தாண்டு (2007 - 2012) திட்ட காலத்தில் 9,000 மெகா வாட் மின் உற்பத்தி அளவுக்கு நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 10,260 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் அளவு நிறுவு திறனைப் பெற்றது.
இப்போது 12-வது (ஏப்ரல் 2012 - மார்ச் 2017) ஐந்தாண்டு திட்ட காலத்தில் மொத்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் இலக்கு 25 ஆயிரம் மெகா வாட் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020-ல் 59 ஆயிரம் மெகா வாட் நிறுவு திறன்: காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனில் உலகிலேயே 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், வருகிற 2020-ல் 59 ஆயிரம் மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனை இந்தியா பெற்றிருக்கும் என "சர்வதேச காற்றாலை மின்சக்தி கண்ணோட்டம் - 2012' (ஜி.டபிள்யு.இ.ஒ)- புள்ளிவிவரம் (மாடரேட்) தெரிவிக்கிறது.
மேலும் இதன் மூலம் 5 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும் எனவும், அத்துறையில் 98 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2030-ல் 1.24 லட்சம் மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனை இந்தியா பெற்றிருக்கும் எனவும், அதன் மூலம் 1.26 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றிருப்பர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

காதலைக் குற்றமென்று சொன்னால்,

ஒரு சமூகம், காதலைக் குற்றமென்று சொன்னால், நாம் அதை விவாதிக்கலாம்; அதற்கு எதிராகப் போராடலாம். ஆனால், காதலே குற்றங்களின் களமாக மாறிவிட்ட ஒரு காலத்தில், அன்பு என்பது இன்று, நஞ்சு தடவிய ஒரு வாள் போல, நம் முன் பளபளத்துக் கொண்டிருக்கிறது.

அந்த வாள், எந்த நேரம் நம்மை பலிகொள்ளும் என்று தீர்மானிக்க முடியாத அளவுக்கு, நாளுக்கு நாள் ஆண், பெண் உறவுகள் வன்முறையின், குற்றத்தின் நிழல் படிந்ததாக மாறி வருகிறது.சில தினங்களுக்கு முன், சென்னை பிராட்வே பஸ் நிலையத்தில், பொதுமக்கள் முன்னிலையில், ஒரு இளை ஞர், தான் காதலித்த பெண்ணின் கழுத்தை அறுத்துக் கொன்று, தானும் தற்கொலை செய்து கொண்டார். இந்த சம்பவம், கடந்த சில ஆண்டுகளாகத் தமிழகத்தில் தொடர்ச்சியாக நடந்து வரும் காதல் குற்றங்களை மறுபடியும் நினைவூட்டி விட்டது.கடந்த, 2011ல் மட்டும், சென்னையில், 168 ஆண் - பெண் உறவுகள் தொடர்பான கொலைகளும், 332 கொலை முயற்சிகளும் நடந்துள்ளன. தமிழகம் முழுக்க, இது தான் நிலை. அதேபோல, தமிழகத்தில், அதிகரித்து வரும் இளைஞர்களின் தற்கொலையில், ஆண் - பெண் உறவுகள் தொடர்பான விவகாரங்களே, முக்கிய பங்கு வகிக்கின்றன.

கொலைகள், தற்கொலைகள் மட்டுமல்ல, தனக்கு நெருக்கமாக இருந்து, பிரிந்து விட்டவர் மீது ஆசிட் வீசுவது, அவர்களின் புகைப்படங்களை, ஆபாசமாக மார்பிங் செய்து இணையத்தில் வெளியிடுவது, அந்தரங்கமான காட்சிகளை வீடியோ எடுத்து மிரட்டுவது என, இளைஞர்களிடையே விதவிதமான காதல் குற்றங்கள் கோலோச்சுகின்றன.பெரும்பாலான குற்றங்கள், திட்டமிட்டு செய்யப்படுபவை அல்ல. மாறாக, இந்த இளைஞர்கள், வாழ்க்கையைப் பற்றிய தவறான புரிதலுடன், கண நேர உணர்ச்சிக்கு ஆட்பட்டு, மற்றவர்களின் வாழ்க்கையை அழிப்பது மட்டுமல்ல, தன்னைத் தானே அழித்துக்கொள்ளவும் செய்கின்றனர்.

நவீன வாழ்க்கை முறையில் வந்த மாற்றங்கள், ஆண்களும், பெண்களும் பழகவும், பகிர்ந்துகொள்ளவும் ஏராளமான கதவுகளைத் திறந்துவிட்டுள்ளன. ஒருபுறம் இறுக்கமான குடும்பம் சார்ந்த பண்பாடு; இன்னொருபுறம், எல்லையற்ற சுதந்திரம்... இந்த இரண்டுக்கும் இடையே, இன்றைய இளைஞர்கள் சிக்கித் தவிக்கின்றனர்.ஆண், பெண் உறவுகள் என்பது, இயல்பான மனித உறவுகள் என்பதை தாண்டி, அது இன்று மிகையான கற்பனைகளின் ஊற்றாக மாறிவிட்டது.திரைப்படங்கள், காதல் தான் மனிதனின் வாழ்க்கையில் ஒரே லட்சியம், ஒரே அர்த்தம் என்று திரும்பத் திரும்ப நம்ப வைக்கின்றன. காதலுக்காக இந்த உலகத்தில், எதை வேண்டுமானாலும் பணயம் வைக்கலாம் என்று போதிக்கின்றன. காதல் முறியும் போது, அந்தப் பெண்ணை எப்படியெல்லாம் பழிவாங்கலாம் என்றும், தன்னைத் தானே எப்படியெல்லாம் அழித்துக் கொள்ளலாம் என்றும், வழி காட்டுகின்றன.

காதல் என்பதை, நடைமுறை வாழ்க்கையின் பல்வேறு பொறுப்புகளுடன் சம்பந்தப்பட்ட ஒரு விஷயம் என்பதற்குப் பதிலாக, அதை ஒரு உன்னதமான கனவாகக் காட்டும்போது, அது ஒரு மன நோயாக மாறுகிறது. ஒரு ஆழமான, அழகான உணர்ச்சியை, ஒரு மனநோய் என்று அழைப்பதற்கு, உண்மையில் வருத்தமாகவே இருக்கிறது. ஆனால், மிகைப்படுத்தப்பட்ட எல்லா உணர்ச்சிகளும், எப்படி மனநோயோ, அதேபோலதான் காதலும் மாறிவிட்டது.இன்று, இன்னொருவரை நேசிப்பதற்கு எந்தப் பெரிய காரணமும் தேவைப்படுவதில்லை. ஒருவரின், பின்புலம் பற்றி ஆராயவேண்டிய எந்த அவசியமும் ஏற்படுவதில்லை. காதலிப்பதும், காதலிக்கப்படுவதும் ஒரு அடையாளமாக, கவுரவமாக, ஒரு விளையாட்டாக மாறிவிட்டது.

ஒரு காதலில், இருவருமே ஆழமான பிணைப்புடன் இருந்தால், அதில் எந்தப் பிரச்னையும் இல்லை. இருவருமே மேம்போக்காக இருந்தால், அதிலும் எந்தப் பிரச்னையும் இல்லை. ஆனால், ஒருவர் ஆழமான பிணைப்புடனும், இன்னொருவர் மேலோட்டமாகவும் இருக்கும் சந்தர்ப்பத்தில், அது மனமுறிவிலும், கொலையிலும், தற்கொலையிலும் முடிகிறது.ஒரு புறம் காதலைப் பற்றிய அதீதமான கற்பனைகள்; இன்னொருபுறம், ஒரு காதலுக்குத் தேவையான எந்த உறுதிப்பாடும் இல்லாத மேலோட்டமான மனநிலை. அதனால், நெருக்கமான ஒருவர், திடீரென தன்னை விட்டு விலகுவதை இன்னொரு வரால், புரிந்துகொள்ள முடிவதில்லை. அதிர்ச்சியும், வன்மமும், பழிவாங்கும் உணர்ச்சியும் மேலோங்குகிறது.

இன்று, எல்லார் முன்பும், பல்வேறு வாய்ப்புகள் இருக்கின்றன. ஒரு பையனை விழுந்து விழுந்து காதலிக்கும் பெண், தன் வீட்டில் வசதி வாய்ப்புகளுடன், கூடுதல் அந்தஸ்துடன் வேறு ஒரு பையனைத் திருமணத்திற்கு நிச்சயித்தால், நடைமுறை வாழ்க்கைக்கு எது சிறந்தது என்று, "பிராக்டிகலாக' யோசிக்கிறாள்.அதே போல, ஒரு பெண்ணை, ஒரு ஆண் எவ்வளவு நேசித்தாலும், திருமணம் என்று வரும்போது, யாரைத் திருமணம் செய்து கொண்டால், தனக்கு சமூக ரீதியாக கூடுதலான பலன்கள் இருக்கின்றன என்று யோசிக்கிறான்.

எல்லாருக்கும், சவுகர்யங்களும், பணமும் ஏராளமாகத் தேவைப்படும் காலம் இது. காதல் என்ற சுவாரசியமான விளையாட்டிற்கு, விலையாக யாரும் எதிர்காலத்தைக் கொடுக்க, அவ்வளவு சுலபமாகத் தயாராவது இல்லை.இதில் குறிப்பிட வேண்டிய இன்னொரு முக்கியமான பிரச்னை, இன்று ஆண்களும், பெண்களும் என்ன தான் படித்தாலும், சுயமாக சம்பாதித்தாலும், அவர்கள் மேல், குடும்பத்தினுடைய செல்வாக்கு கடுமையாக இருக்கிறது. பல இளைஞர்களும், இளம் பெண்களும், குடும்பத்தின் இந்த அதிகாரத்தை எதிர்க்கும் வலுவின்றி, தங்கள் காதலைத் துறக்க தயாராகின்றனர்.ஜாதி, மத வெறியும், சமூக பொருளாதார ஏற்றத் தாழ்வுகளும், கடுமையாக நிலவும் ஒரு சமூகத்தில், காதலுக்காகச் செய்யப்படும் கவுரவக் கொலைகளைப் பற்றி, நாம் அன்றாடம் படிக்கிறோம்.

திருமணமானவர்கள் புதிய உறவுகளுக்கு ஆட்படுவதால், ஏற்படும் குற்றங்கள் இன்னொருபுறம் அதிகரித்து வருகின்றன. கணவன், மனைவியை சொத்தாகவும், மனைவி, கணவனை ஒரு சொத்தாகவும் கருதும் ஒரு சமூகத்தில், திருமணத்திற்கு அப்பாற்பட்ட உறவுகள் கொலையிலோ, தற்கொலையிலோ முடிவது, சகஜமாகிவிட்டது.நாம், ஒருவரை நேசிக்கிறோம் என்பது, அவரை எந்த நிலையிலும், புரிந்துகொள்வது என்பது தான். வெறுப்பும், பழிவாங்கும் உணர்ச் சியும், ஒரு அன்பின் அடையாளம் அல்ல. அது, மனநோயின் அடையாளம்.வாழ்க்கை என்பது, எண்ணற்ற மலர்கள் பூக்கும் ஒரு தோட்டம். அதில், ஒரே ஒரு மலரைப் பறித்து, அதை ஒரு ரத்த ரோஜாவாக மாற்றுபவர்கள் மூடர்கள். எந்த ஒரு காதலின் முடிவுக்கு அப்பாலும், இன்னொரு காதல் இருக்கிறது; இன்னொரு வாழ்க்கை இருக்கிறது.

தண்ணீர்...! உலக இயக்கத்தின் ஜீவநாடி


தண்ணீர்...! உலக இயக்கத்தின் ஜீவநாடி. தண்ணீர் இல்லையேல், உயிர்கள் இல்லை. உயிர்கள் இல்லையேல் உலகம் இல்லை. அதனால் தான், "நீரின்றி அமையாது உலகு' என்பர்.ஆனால், தண்ணீர் பற்றிய தகவல்கள், நம் எதிர்காலம் பற்றிய அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவாக உள்ளன.

உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, 1.10 கோடி பேர், அதாவது, உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.
வளரும் நாடுகளில், 80 சதவீத உடல் உபாதைகளும், மரணங்களும் தண்ணீர் தொடர்பான நோய்களால் நிகழ்கின்றன.2025ல் உலக மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பேருக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைக்காது.
தமிழகம் முழுவதும், 39 ஆயிரம் கோவில் குளங்கள் உள்ளன. இந்த குளங்கள், 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகளில், நீர்வளத்தைப் பெருக்கும் தன்மை கொண்டவை. ஆனால், பல குளங்கள் தண்ணீர் இருந்தும், பராமரிக்கப்படாமலும், வறண்டும் காணப்படுகின்றன.
இந்தியாவில் விவசாயம் செய்யப் பயன்படும் பகுதிகளில், 60 சதவீத நிலங்களுக்கு, நீர்பாசன வசதி இல்லாததால், இந்திய விவசாயம் தொடர்ந்து, மழையை நம்பியதாகவே உள்ளது.
மிக மோசமான, அசுத்த நீர் அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
21ம் நூற்றாண்டின் சரிபகுதி கால அளவில், 60 நாடுகளில் உள்ள, 700 கோடி மக்கள், தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில், 32 மாவட்டங்களில் கடந்த நான்காண்டில் சராசரியாக, 62 ஆயிரத்து, 886 பேர் தண்ணீரால் பரவும் நோய்களான, வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் கணிப்புப்படி, இனி வருங்காலங்களில், ஒவ்வொரு தனிமனிதனும், தன்னுடைய வருமானத்தில், 10 சதவீதம் வரை, தண்ணீருக்காகச் செலவிடும் நிலை ஏற்படக் கூடும்.

அதிகமாக செலவு செய்பவர்களைப் பார்க்கும் போது, தண்ணீர் போல் செலவு செய்கின்றனர் என, கூறுவதுண்டு. அப்படி தாராளத்துக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட தண்ணீர், இன்று, பற்றாக்குறைக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு, வறட்சி போன்ற இயற்கைக் காரணங்களை மட்டும், பெரிதாகச் சொல்ல முடியாது. நிலத்தடி நீர் அளவுக்கதிக மாக உறிஞ்சப்படுவது, முறையற்ற நீர்வள நிர்வாகம், குடிநீர் பிரச்னை தொடர்பான விதிகள், சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்தாதது, நீர்நிலைகள் பராமரிப்பில் அலட்சியம் போன்றவையும் முக்கிய காரணங்கள்.

இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரின் அளவு, முன் எந்த அளவில் இருந்ததோ, அதே அளவில் தான் இப்போதும் உள்ளது. ஆனால், நம் மக்கள் தொகையின் அளவும், பொருளாதார வளர்ச்சியின் அளவும் அதிகரித்திருப்பதால், அதற்கேற்றாற்போன்று தண்ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, தண்ணீர் பயன்பாட்டைச் சார்ந்ததாகவே உள்ளதால், இனிவரும் காலங்களில் குடிநீர் நிலைமை மோசமடையக்கூடும். நாட்டின் பல பகுதிகளில், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதால், நீர் மட்டம் குறைதல், நீர் உப்புத் தன்மை கொண்டதாக மாறுதல் போன்ற, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன. 

இத்தகைய தண்ணீரை வேளாண்மைக்கு பயன்படுத்த முடியாததுடன், மனித உயிர்களுக்கு சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும்.தண்ணீர் என்பது, மாநில அரசு பட்டியலில் வருவதால், தண்ணீர் நிலையை நிர்வகிப்பதிலும், நீராதாரங்களை பாதுகாப்பதிலும், எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது, மாநில அரசுகளின் செயல்பாடுகளைச் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால், நடப்பது என்ன? நீராதாரங்களை உருவாக்குவது, புனரமைப்பது, நீர்வள மேலாண்மை போன்றவற்றில், இன்னும் அலட்சியப் போக்கே நிலவுகிறது.அதனால், தண்ணீருக்காக குழாயடியில் துவங்கி, அண்டை மாநிலங்கள் வரை, சண்டைகளும், சச்சரவுகளும் பெருகி வருகின்றன.

இத்தகைய அவலங்களுக்கு தீர்வு தான் என்ன? இதற்கு, அரசு என்ன செய்ய வேண்டும்? இதில், மக்களின் பங்களிப்பு என்ன? இந்நிலை தொடர்ந்தால், வருங்காலச் சந்ததியினர் வாழ்வது எப்படி? என்பது போன்ற கேள்விகள் நம்முன் எழவே செய்கின்றன.இவற்றுக்கெல்லாம் நீராதாரங்களை புனரமைப்பது, தண்ணீர் தொடர்பான விதிகள், சட்டங்களை கடுமையாகப் பின்பற்றுவது, தண்ணீர் மேலாண்மை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள், தீர்வாக அமையக்கூடும். ஆனால், தண்ணீர் தொடர்பான பிரச்னை தீவிரமடையும் வேளையில், அரசும், சர்வதேச அமைப்புகளும் அதில் கவனம் செலுத்தாதது ஏனோ?

தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பொதுப்பணித் துறையின் பராமரிப்பில், 11 ஆயிரத்து 008 ஏரிகள் உள்ளன. இவையனைத்தும், 40 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டவை. இந்த ஏரிகள் மூலம், 8.17 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், 29 ஆயிரத்து 311 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம், 1.94 லட்சம் ஹெக்டேர் பாசன வசதியைப் பெறுகிறது என, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.

ஆனால், உண்மையில் பார்க்கும்போது, நீர்நிலைகளை புனரமைப்பு செய்தால், பாசன வசதி பெறும் சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கான நடவடிக்கைகள், தொய்வடைந்த நிலையிலேயே இருப்பதால், விவசாயம் செய்யப்படும் பகுதிகளில், அதிகப்படியான பகுதிகளில் மழையை நம்பியதாகவே உள்ளன. ஏரிகள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களில், பாதியளவு மட்டுமே இன்று ஏரிப்பாசனம் மூலம், சாகுபடி செய்யப்படுகின்றன.

இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என ,காலங்காலமாக கூறிவருகிறோம். ஆனால், நீர்நிலைகளின் மீது காட்டிய அலட்சியத்தால், ஏற்பட்ட தண்ணீர் தட்டுபாடு, அதனால் ஏற்படும் வறட்சி, இவைகளைச் சமாளிக்க விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும் கடன் சுமை போன்றவற்றால், விவசாயிகளின் சமூக பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.தொடரும் இந்த நிலையால், விவசாயத் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல குறைந்துவருகிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கிராமங்களில், 10 சதவீத மக்கள் தொகை குறைந்துள்ளது. இந்நிலையைக் கண்டு, கிராமவாசிகள், நகரவாசிகளாகி வருகின்றனர் என, பெருமை கொள்ளவா முடிகிறது?

நம் முன்னோர்கள் நீர்நிலைகளின் மீது, எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருந்தனர் என்பதற்கு, பல்வேறு உதாரணங்களைக் கூறலாம். கிராமங்களில் கோவில்கள் கட்டியதுடன், அதன் அருகிலேயே கோவில் குளம் என்ற பெயரில் குளங்களையும் வெட்டினர். அந்த குளங்களின் வாயிலாக, கிராம மக்கள் பயன்பெற்றதுடன், நீர் தேங்கி நிற்கும்போது அதைச் சுற்றியுள்ள கிணறுகள் அனைத்தும் நீர்வளம் பெற்றன. ஆனால், காலப்போக்கில் கோவில் குளங்களும், பராமரிப்பின்றி வறண்டு காணப்படுகின்றன.

நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், சரியான பராமரிப்பு இல்லாதது மற்றொருபுறம் என, கிராமத்து ஏரிகள் அனைத்தும் அவல நிலையிலேயே உள்ளன. பராமரிப்பு என்பதே இல்லாமற்போனதால், ஏரிகளின் தன்மையும் மாறுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில், 30 சதவீத குளங்கள், நீரைத் தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீர்நிலைகளை பராமரிப்பதில் அலட்சியம், தண்ணீர் மேலாண்மையில் விழிப்புணர்வு இல்லாமை போன்றவை தொடரும்பட்சத்தில், வரும்காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள, நாம் தயாராக வேண்டும். அதனால், நீர்நிலைகள் மற்றும் வரத்துக்கான வழிகளை புனரமைப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், தண்ணீர் மேலாண்மை குறித்து, மக்கள் விழிப்புணர்வு பெறச்செய்வதும், காலத்தின் கட்டாயம்.

பாசனத்திற்கு, கண்மாய்கள்; பொதுப்பயன்பாட்டுக்கு, குளங்கள்; குடிநீர் தேவைக்கு, ஊருணிகள் என்று, இனம்பிரித்து வளமாக வாழ்ந்தனர் அன்றைய தமிழர்கள். "வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்' என்பது, அவர்களின் சீரிய வாழ்க்கை நெறி கண்ட உண்மையாக இருந்தது. இயற்கையோடு இயைந்த அந்த மரபுச் சங்கிலி அறுந்ததால் ஏற்பட்ட விளைவுகளைத் தான், நாம் இன்று அனுபவித்து வருகிறோம். அதனால் இருக்கும் நீர் வளங்களைக் காப்பதும், இழந்த வளங்களை மீட்பதும், அவசியமானது; காலத்தின் கட்டாயமும் கூட.

உலகச் சுற்றுச்சூழல் தினம்


உலகச் சுற்றுச்சூழல் தினம்   இயற்கை மனிதனுக்கு அளிக்கும் சேவைகள் (அல்லது) மனிதனின் சேவையில் இயற்கை என்ற கருப்பொருளை மையமாகக் கொண்டு ஜூன் 5 கடைப்பிடிக்கப்படுகிறது.
உலக மக்கள் தொகை பெருக்கம்தான் சுற்றுச்சூழல் பாதிப்புக்கு முக்கிய காரணம் என்று 1970-களில் ஒரு ஆய்வறிக்கை எச்சரித்தது. இதைத் தொடர்ந்து ஐக்கிய நாடுகள் அமைப்பு சார்பில் 1974-ம் ஆண்டு ஜூன் 5-ம் தேதி முதல் ஒவ்வொரு ஆண்டும் உலக சுற்றுச் சூழல் தினம் கடைபிடிக்கப்பட்டது.
அப்போது முதல் ஒவ்வொரு ஆண்டும் சுற்றுச்சூழலை பாதிக்கும் முக்கிய காரணிகளை மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் ஒரு கருப்பொருள் பிரதானப்படுத்தப்படுகிறது. மேலும் இது குறித்து அந்தந்த நாட்டு அரசுத் துறைகள் மற்றும் தன்னார்வ தொண்டு நிறுவனங்கள் மூலம் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்படுகிறது.
இயற்கையின் அவசியத்தையும், காடுகளினால் ஏற்படும் நன்மைகள் குறித்தும் மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தவே இயற்கை மனிதனுக்கு அளிக்கும் சேவைகள் (அல்லது) மனிதனின் சேவையில் இயற்கை என்ற கருப்பொருளில் இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினம் கடைப்பிடிக்கப்படுவதாக ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.
ஏற்கெனவே 2011-ம் ஆண்டு "உலக காடுகள் ஆண்டு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது. இதையொட்டியே உலகச் சுற்றுச்சூழல் தினத்துக்கும் மேற்கண்ட மையக்கருத்தை ஐக்கியநாடுகள் சபை அறிவித்துள்ளது.
மேலும் இந்த ஆண்டு உலக சுற்றுச் சூழல் தினத்தை இந்தியாவை தலைமையிடமாகக் கொண்டு கடைப்பிடிக்கவும் ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
1974-ம் ஆண்டு முதல் சுற்றுச் சூழல் தினம் வலியுறுத்தும் கருப்பொருள்கள்:
1974 - ஒரே பூமி
1975 - மனித வாழ்விடம்
1976 - தண்ணீரே வாழ்க்கையின் ஆதாரம்
1977 - ஓசோன் படலம் சீர்கேட்டை காப்போம்
1978 - இழப்பில்லாத வளர்ச்சி
1979 - வருங்கால சந்ததியின் எதிர் காலம்
1980 - அடுத்த 10 ஆண்டுக்கான புதிய சவால்
1981 - மனித உணவு பழக்கத்தில் அதிகரித்து வரும் நச்சு வேதிப் பொருள்கள்
1982 - சுற்றுச் சூழல் முக்கியத்துவத்தை புதுப்பித்தல்
1983 - நச்சுக் கழிவுகளை அகற்றுதல்
1984 - பாலைவன மேலாண்மை
1985 - மக்கள்தொகை மற்றும் சுற்றுச்சூழல்
1986 - அமைதியான வாழ்க்கைக்கு வீட்டுக்கு ஒரு மரம்
1987 - வசிப்பிட சுற்றுச்சூழல் பாதுகாப்பு
1988 - சுற்றுச் சூழலை பாதுகாத்தால் மேம்பாடு தழைக்கும்
1989 - புவி வெப்பமயமாதல் ஒரு எச்சரிக்கை
1990 - குழந்தைகள் வாழ்வுக்கு ஏற்ற சுற்றுச் சூழல்
1991 - வானிலை மாற்றம்
1992 - சுற்றுச்சூழலை பராமரித்தலும் மக்களின் பங்களிப்பும்
1993 - சுற்றுச்சூழலுக்கு சவால் விடும் ஏழ்மை
1994 - சுற்றுச்சூழலை பாதுகாக்க குடும்பத்தின் பங்கு
1995 - உலக சுற்றுச் சூழலுக்கு ஒன்றுபடுவோம்
1996 - வசிப்பிடத்தை சுகாதாரமாக பேணுவோம்
1997 - பூமியில் வாழ்வுக்கேற்ற சூழல்
1998 - கடல்களைப் பாதுகாப்போம்
1999 - நம் எதிர்காலத்தை பாதுகாப்போம்
2000 - சுற்றுச்சூழல் நூற்றாண்டு
2001 - வாழ்க்கையை இணைப்போம்
2002 - பூமிக்கு ஒரு வாய்ப்பு
2003 - நீரின்றி 20 லட்சம் மக்கள் இறப்பு
2004 - கடல்களின் தேவை
2005 - பசுமை நகரங்களை உருவாக்கத் திட்டமிடுவோம்
2006 - பாலைவனமயமாக்கல் - தரிசு நிலம் பராமரிப்பு
2007 - உருகும் பனி
2008 - குறைந்த கார்பன் பொருளாதாரத்தை நோக்கி
2009 - வானிலை சவாலை எதிர்கொள்ள ஒன்றுபடுவோம்
2010 - பல்லுயிர் பெருக்கம்-சூழலியல் மேலாண்மை
2011 - இயற்கை மனிதனுக்கு அளிக்கும் சேவைகள் (அல்லது) மனிதனின் சேவையில் இயற்கை

கூடலூர் வருவாய் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம்

அரசு ஒதுக்கீட்டின் படி ரேஷன் கடைகளுக்கு பொருட்கள் ஒதுக்கீடு


கூடலூர், :  கூடலூர் வருவாய் கோட்ட நுகர்வோர் பாதுகாப்பு கூட்டம் கூடலூர் ஆர்டிஓ ஆதிமூலம் தலைமையில் ஆர்டிஓ அலுவலக வளாகத்தில் நடைபெற்றது. 
வட்ட வழங்கல் அலுவலர்கள் ராஜேந்திரன், ஜான் மனோகரன் ஆகியோர் பங்கேற்றனர். 
நுகர்வோர் பாதுகாப்பு மைய தலைவர் சிவசுப்ரமணியம், செயலாளர் பொன் கணேசன், 
எரிவாயு நிறுவன நிர்வாகிகள் உதயகுமார், மிசாத் அலி, அப்துல் ரசீது உள்ளிட்ட பலர் பங்கேற்றனர். 

நுகர்வோர் சார்பில் நியாய விலை கடைகளில் மாதத்திற்கு 10 லிட்டர் மண்ªண்ணெய் பெற்று வழங்க வேண்டும். உரிய நேரத்தில் கடை திறக்கப்பட வேண்டும்.

இருப்பு பட்டியல் முறையாக பராமரிக்கப்பட வேண்டும். 
காஸ் ஏஜன்சி வாகனங்களுக்கு தனி அடையாளம், ஊழியர்கள் சீருடை அணிந்து அனைத்து பகுதிக்கும் முறைப்படி சிலிண்டர்களை வினியோகம் செய்ய வேண்டும். 
 கூடலூர் கிளையில் இருந்து உரிய காலத்தில் பஸ்கள் இயக்கப்பட வேண்டும்.  அரசு மருத்துவமனையில் உரிய சிகிச்சை அளிக்காமல் தனியார் மருத்துவமனைக்கு பரிந்துரைப்பதை தவிர்க்க வேண்டும்.
 நகராட்சியில் சுகாதார நடவடிக்கையை விரைவு படுத்த வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டது. 
ஆர்டிஓ ஆதிமூலம் கூறியதாவது: 
அரசு ஒதுக்கீட்டிற்கு ஏற்ப ரேஷன் கடைகளுக்கு 100 சதவீதம் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டு வருகிறது. உரிய முறையில் நுகர்வோருக்கு கிடைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு கண்காணிக்கப்பட்டு வருகிறது. 
எரிவாயு ஏஜன்சிகள் குறித்த காலத்தில் நுகர்வோருக்கு சிலிண்டர்களை வழங்க வேண்டும்.
கிராமப்புற பகுதிக்கு நேரடியாக எடுத்து சென்று சிலிண்டர் சப்ளை செய்யும் நாள், நேரம் குறித்து வட்ட வழங்கல் அலுவலர்களுக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். அதன் அடிப்படையில் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு வட்ட வழங்கல் அலுவலர் மூலம் சம்பந்தப்பட்ட ரேஷன் கடைகளுக்கு தகவல் தெரிவித்து முன் பதிவு செய்துள்ளவர்களுக்கு உரிய காலத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட உள்ளது.
பிற துறைகளில் உள்ள குறைபாடுகள் குறித்து சம்பந்தப்பட்ட துறைகளுக்கு தெரிவித்து அதன் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார்.

சூண்டி அரசு ஆரம்ப பள்ளியில் இலவச கண் சிகிச்சை முகாம்

கூடலூர்  அருகே சூண்டி   அரசு ஆரம்ப பள்ளியில்  இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச் சூழல் பாதுகாப்பு மையம்-மக்கள் மையம், நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்கம், பேஷன் க்ரூப்ஸ் கூடலூர், ஷாலோம் சாரிட்டபிள் டிரஸ்ட் ஆகியன சார்பில் சூண்டி   அரசு ஆரம்ப பள்ளியில்   இலவச கண் சிகிச்சை முகாம் நடந்தது


முகாமுக்கு கூடலூர் நுகர்வோர் பாதுகாப்பு மையத் தலைவர் சிவசுப்ரமணியம் தலைமை வகித்தார்.
பேஷன் க்ரூப்ஸ் மேலாளர் ஜபார், ஒவேலி சுகாதார ஆய்வாளர் மோகன் குமார், நுகர்வோர் மைய பொறுப்பாளர்கள் குருஞ்சி வேலுபிள்ளை. தனிஸ்லாஸ் ஆகியோர் முன்னிலை வகித்தனர்  t

நீலகிரி மாவட்ட பார்வை இழப்பு தடுப்பு சங்க திட்ட மேலாளரும் உதகை அரசு மருத்துவமனை மருத்துவருமான  அமராவதி ராஜன், கண் தொழில் நுட்புனர் முத்துராஜ் ஒருங்கிணைப்பாளர் மங்கை ஸ்ரீதர் உள்ளிட்டோர் அடங்கிய மருத்துவ குழுவினர் பங்கேற்று கண் சம்மந்தமான நோய்களுக்கு சிகிச்சை அளித்தனர்.

முகாமில்  பல்வேறு  கிராம பகுதிகளை சேர்ந்த  120 க்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர். கண் புரை அறுவை சிகிச்சைக்காக 20  க்கும் மேற்ப்பட்டோர் பரிந்துரை செய்யப்பட்டனர். விருப்பத்தின் அடிப்படையில் 12 பேர், ஊட்டி அரசு மருத்துவமனைக்கு அழைத்து செல்லப்பட்டனர். 








நிகழ்ச்சிக்கான  எற்பாடுகளை  கூடலூர் நுகர்வோர் மைய நிர்வாகிகள் செய்திருந்தனர்

நுகர்வோர் தின விழிப்புணர்வு

 உலக நுகர்வோர் தினத்தையொட்டி நுகர்வோர் விழிப்புணர்வு வாரம் கொண்டாடபடுகிறது இதனை முன்னிட்டு பந்தலூர் அருகே கரியசோலை அரசு உயர்நிலைப் பள்ளியில்...