தண்ணீர்...! உலக இயக்கத்தின் ஜீவநாடி. தண்ணீர் இல்லையேல், உயிர்கள் இல்லை. உயிர்கள் இல்லையேல் உலகம் இல்லை. அதனால் தான், "நீரின்றி அமையாது உலகு' என்பர்.ஆனால், தண்ணீர் பற்றிய தகவல்கள், நம் எதிர்காலம் பற்றிய அச்சத்தையும், அவநம்பிக்கையையும் ஏற்படுத்துவாக உள்ளன.
உலக சுகாதார அமைப்பின் புள்ளி விவரப்படி, 1.10 கோடி பேர், அதாவது, உலக மக்கள் தொகையில், 18 சதவீதம் பேருக்கு பாதுகாப்பான குடிநீர் கிடைக்கவில்லை.
வளரும் நாடுகளில், 80 சதவீத உடல் உபாதைகளும், மரணங்களும் தண்ணீர் தொடர்பான நோய்களால் நிகழ்கின்றன.2025ல் உலக மக்கள் தொகையில், மூன்றில் இரண்டு பேருக்கு பாதுகாப்பான, சுத்தமான குடிநீர் கிடைக்காது.
தமிழகம் முழுவதும், 39 ஆயிரம் கோவில் குளங்கள் உள்ளன. இந்த குளங்கள், 500 மீட்டர் சுற்றளவில் உள்ள கிணறுகளில், நீர்வளத்தைப் பெருக்கும் தன்மை கொண்டவை. ஆனால், பல குளங்கள் தண்ணீர் இருந்தும், பராமரிக்கப்படாமலும், வறண்டும் காணப்படுகின்றன.
இந்தியாவில் விவசாயம் செய்யப் பயன்படும் பகுதிகளில், 60 சதவீத நிலங்களுக்கு, நீர்பாசன வசதி இல்லாததால், இந்திய விவசாயம் தொடர்ந்து, மழையை நம்பியதாகவே உள்ளது.
மிக மோசமான, அசுத்த நீர் அதிகம் கொண்ட ஒரு சில நாடுகளில், இந்தியாவும் இடம் பெற்றுள்ளது.
21ம் நூற்றாண்டின் சரிபகுதி கால அளவில், 60 நாடுகளில் உள்ள, 700 கோடி மக்கள், தண்ணீர் பற்றாக்குறையால் பாதிக்கப்படும் அபாயம் உள்ளது.
தமிழகத்தில், 32 மாவட்டங்களில் கடந்த நான்காண்டில் சராசரியாக, 62 ஆயிரத்து, 886 பேர் தண்ணீரால் பரவும் நோய்களான, வாந்தி, பேதி, வயிற்றுப் போக்கு, காலரா போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஆசிய வளர்ச்சி வங்கியின் கணிப்புப்படி, இனி வருங்காலங்களில், ஒவ்வொரு தனிமனிதனும், தன்னுடைய வருமானத்தில், 10 சதவீதம் வரை, தண்ணீருக்காகச் செலவிடும் நிலை ஏற்படக் கூடும்.
அதிகமாக செலவு செய்பவர்களைப் பார்க்கும் போது, தண்ணீர் போல் செலவு செய்கின்றனர் என, கூறுவதுண்டு. அப்படி தாராளத்துக்கு உதாரணமாகக் காட்டப்பட்ட தண்ணீர், இன்று, பற்றாக்குறைக்கு உதாரணமாகக் காட்டப்படுகிறது. தண்ணீர் பற்றாக்குறைக்கு, வறட்சி போன்ற இயற்கைக் காரணங்களை மட்டும், பெரிதாகச் சொல்ல முடியாது. நிலத்தடி நீர் அளவுக்கதிக மாக உறிஞ்சப்படுவது, முறையற்ற நீர்வள நிர்வாகம், குடிநீர் பிரச்னை தொடர்பான விதிகள், சட்டங்களை கண்டிப்பாக அமல்படுத்தாதது, நீர்நிலைகள் பராமரிப்பில் அலட்சியம் போன்றவையும் முக்கிய காரணங்கள்.
இந்தியாவில் கிடைக்கும் தண்ணீரின் அளவு, முன் எந்த அளவில் இருந்ததோ, அதே அளவில் தான் இப்போதும் உள்ளது. ஆனால், நம் மக்கள் தொகையின் அளவும், பொருளாதார வளர்ச்சியின் அளவும் அதிகரித்திருப்பதால், அதற்கேற்றாற்போன்று தண்ணீரின் தேவையும் அதிகரித்துள்ளது.நாட்டின் பொருளாதார வளர்ச்சி என்பது, தண்ணீர் பயன்பாட்டைச் சார்ந்ததாகவே உள்ளதால், இனிவரும் காலங்களில் குடிநீர் நிலைமை மோசமடையக்கூடும். நாட்டின் பல பகுதிகளில், அளவுக்கு அதிகமாக நிலத்தடி நீர் எடுக்கப்பட்டு வருவதால், நீர் மட்டம் குறைதல், நீர் உப்புத் தன்மை கொண்டதாக மாறுதல் போன்ற, பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
இத்தகைய தண்ணீரை வேளாண்மைக்கு பயன்படுத்த முடியாததுடன், மனித உயிர்களுக்கு சுகாதாரக் கேடுகளை ஏற்படுத்தும்.தண்ணீர் என்பது, மாநில அரசு பட்டியலில் வருவதால், தண்ணீர் நிலையை நிர்வகிப்பதிலும், நீராதாரங்களை பாதுகாப்பதிலும், எந்த அளவுக்கு வெற்றி கிடைக்கும் என்பது, மாநில அரசுகளின் செயல்பாடுகளைச் சார்ந்ததாகவே இருக்கும். ஆனால், நடப்பது என்ன? நீராதாரங்களை உருவாக்குவது, புனரமைப்பது, நீர்வள மேலாண்மை போன்றவற்றில், இன்னும் அலட்சியப் போக்கே நிலவுகிறது.அதனால், தண்ணீருக்காக குழாயடியில் துவங்கி, அண்டை மாநிலங்கள் வரை, சண்டைகளும், சச்சரவுகளும் பெருகி வருகின்றன.
இத்தகைய அவலங்களுக்கு தீர்வு தான் என்ன? இதற்கு, அரசு என்ன செய்ய வேண்டும்? இதில், மக்களின் பங்களிப்பு என்ன? இந்நிலை தொடர்ந்தால், வருங்காலச் சந்ததியினர் வாழ்வது எப்படி? என்பது போன்ற கேள்விகள் நம்முன் எழவே செய்கின்றன.இவற்றுக்கெல்லாம் நீராதாரங்களை புனரமைப்பது, தண்ணீர் தொடர்பான விதிகள், சட்டங்களை கடுமையாகப் பின்பற்றுவது, தண்ணீர் மேலாண்மை குறித்து, மக்களிடையே விழிப்புணர்வு ஏற்படுத்துவது உள்ளிட்ட நடவடிக்கைகள், தீர்வாக அமையக்கூடும். ஆனால், தண்ணீர் தொடர்பான பிரச்னை தீவிரமடையும் வேளையில், அரசும், சர்வதேச அமைப்புகளும் அதில் கவனம் செலுத்தாதது ஏனோ?
தமிழகத்தைப் பொறுத்தமட்டில், பொதுப்பணித் துறையின் பராமரிப்பில், 11 ஆயிரத்து 008 ஏரிகள் உள்ளன. இவையனைத்தும், 40 ஹெக்டேருக்கும் அதிகமான பரப்பளவு கொண்டவை. இந்த ஏரிகள் மூலம், 8.17 லட்சம் ஹெக்டேர் பாசன வசதி பெறுகிறது. உள்ளாட்சி அமைப்புகளின் கீழ், 29 ஆயிரத்து 311 ஏரிகள் உள்ளன. இந்த ஏரிகள் மூலம், 1.94 லட்சம் ஹெக்டேர் பாசன வசதியைப் பெறுகிறது என, புள்ளிவிவரங்கள் கூறுகின்றன.
ஆனால், உண்மையில் பார்க்கும்போது, நீர்நிலைகளை புனரமைப்பு செய்தால், பாசன வசதி பெறும் சாகுபடி பரப்பை அதிகரிக்கச் செய்ய முடியும். அதற்கான நடவடிக்கைகள், தொய்வடைந்த நிலையிலேயே இருப்பதால், விவசாயம் செய்யப்படும் பகுதிகளில், அதிகப்படியான பகுதிகளில் மழையை நம்பியதாகவே உள்ளன. ஏரிகள் மூலம் பாசன வசதி பெற்ற நிலங்களில், பாதியளவு மட்டுமே இன்று ஏரிப்பாசனம் மூலம், சாகுபடி செய்யப்படுகின்றன.
இந்திய நாட்டின் முதுகெலும்பு விவசாயம் என ,காலங்காலமாக கூறிவருகிறோம். ஆனால், நீர்நிலைகளின் மீது காட்டிய அலட்சியத்தால், ஏற்பட்ட தண்ணீர் தட்டுபாடு, அதனால் ஏற்படும் வறட்சி, இவைகளைச் சமாளிக்க விவசாயிகள் ஏற்றுக்கொள்ளும் கடன் சுமை போன்றவற்றால், விவசாயிகளின் சமூக பொருளாதார நிலை பாதிக்கப்பட்டுள்ளது.தொடரும் இந்த நிலையால், விவசாயத் தொழிலில் ஈடுபடுவோர் எண்ணிக்கையும் மெல்ல மெல்ல குறைந்துவருகிறது. 2011 மக்கள் தொகைக் கணக்கெடுப்பின்படி, கிராமங்களில், 10 சதவீத மக்கள் தொகை குறைந்துள்ளது. இந்நிலையைக் கண்டு, கிராமவாசிகள், நகரவாசிகளாகி வருகின்றனர் என, பெருமை கொள்ளவா முடிகிறது?
நம் முன்னோர்கள் நீர்நிலைகளின் மீது, எந்த அளவிற்கு அக்கறை கொண்டிருந்தனர் என்பதற்கு, பல்வேறு உதாரணங்களைக் கூறலாம். கிராமங்களில் கோவில்கள் கட்டியதுடன், அதன் அருகிலேயே கோவில் குளம் என்ற பெயரில் குளங்களையும் வெட்டினர். அந்த குளங்களின் வாயிலாக, கிராம மக்கள் பயன்பெற்றதுடன், நீர் தேங்கி நிற்கும்போது அதைச் சுற்றியுள்ள கிணறுகள் அனைத்தும் நீர்வளம் பெற்றன. ஆனால், காலப்போக்கில் கோவில் குளங்களும், பராமரிப்பின்றி வறண்டு காணப்படுகின்றன.
நீர்நிலைகளின் ஆக்கிரமிப்புகள் ஒருபுறம், சரியான பராமரிப்பு இல்லாதது மற்றொருபுறம் என, கிராமத்து ஏரிகள் அனைத்தும் அவல நிலையிலேயே உள்ளன. பராமரிப்பு என்பதே இல்லாமற்போனதால், ஏரிகளின் தன்மையும் மாறுபட்டுள்ளது. சுற்றுச்சூழல் கழகம் நடத்திய ஆய்வில், தமிழகத்தில், 30 சதவீத குளங்கள், நீரைத் தாங்கி நிற்கும் தன்மையை இழந்துவிட்டதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
நீர்நிலைகளை பராமரிப்பதில் அலட்சியம், தண்ணீர் மேலாண்மையில் விழிப்புணர்வு இல்லாமை போன்றவை தொடரும்பட்சத்தில், வரும்காலங்களில் மிகப்பெரிய சவால்களை எதிர்கொள்ள, நாம் தயாராக வேண்டும். அதனால், நீர்நிலைகள் மற்றும் வரத்துக்கான வழிகளை புனரமைப்பதுடன், ஆக்கிரமிப்புகளை அகற்றுவதும், தண்ணீர் மேலாண்மை குறித்து, மக்கள் விழிப்புணர்வு பெறச்செய்வதும், காலத்தின் கட்டாயம்.
பாசனத்திற்கு, கண்மாய்கள்; பொதுப்பயன்பாட்டுக்கு, குளங்கள்; குடிநீர் தேவைக்கு, ஊருணிகள் என்று, இனம்பிரித்து வளமாக வாழ்ந்தனர் அன்றைய தமிழர்கள். "வரப்பு உயர நீர் உயரும்; நீர் உயர நெல் உயரும்' என்பது, அவர்களின் சீரிய வாழ்க்கை நெறி கண்ட உண்மையாக இருந்தது. இயற்கையோடு இயைந்த அந்த மரபுச் சங்கிலி அறுந்ததால் ஏற்பட்ட விளைவுகளைத் தான், நாம் இன்று அனுபவித்து வருகிறோம். அதனால் இருக்கும் நீர் வளங்களைக் காப்பதும், இழந்த வளங்களை மீட்பதும், அவசியமானது; காலத்தின் கட்டாயமும் கூட.
No comments:
Post a Comment