பள்ளிக்கல்வி பற்றி இப்போது நம் சிந்தனையைக் கவ்விக் கொண்டிருப்பவை இரண்டு! ஒன்று, நம் குழந்தைகள் கைகளில் இருக்கும் முதலாம், ஆறாம் வகுப்புச் சமச்சீர் கல்விப் பாடநூல்களும், அவர்களுக்கு வரும் கல்வியாண்டில் கிடைக்கவுள்ள 10ம் வகுப்பு வரையிலான மற்ற பாடநூல்களும். இரண்டு, தனியார் பள்ளிகளுக்கென்று ஒரு குழுவின் துணையுடனும், கோர்ட்டின் அனுமதியுடனும் அரசு அனுமதித்திருக்கும் கல்விக் கட்டணங்கள்.
இதுவரை இருந்து வந்த நான்கு வகை (அரசு, மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன், ஓரியன்டல்) பாடமுறைகளின் கூட்டுச் சாரமாக முகிழ்த்தது தான், சமச்சீர் கல்விப் பாடத்திட்டம் - பாடநூல்கள். "எந்த அளவுக்கு நான்கு பங்குகளும் கலந்திருக்கின்றன?' என்பது தான் முக்கியம். முதல் மற்றும் ஆறாம் வகுப்பு பாடநூல்கள் எளிமையானவை. ஆண்டு முழுவதும் கற்பிக்க அவற்றில் பாடங்கள் குறைவு. ஆறாம் வகுப்பில் அறிவியில், சமூகவியல் பாடங்கள் இன்னும் அழுத்தமாகவும், தொடர்பானவையாகவும் இருக்கலாம். நம்மை மிகவும் யோசிக்க வைப்பது, பல தனியார் பதிப்பகங்களும் பாடநூல்களைத் தயாரிக்கலாம் என்பதுதான்.வரையறுக்கப்பட்ட பாடத்திட்டப்படி பாட நூல்களைப் பலரும் தயாரிக்கும்போது, புது உத்திகளும், புதுச் செய்திகளும், தொடரோட்டமும் கிடைக்கலாம். இதனால், எளிமையோடு கற்பிக்கப்படும் எந்த ஓர் உண்மைக்கும், ஒரு பன்முகப் பார்வையும் கிடைக்கும் என்பதோடு, பாடநூல்களைப் பெரிய எண்ணிக்கையில் தயாரித்து, உரிய நேரத்தில் கிடைக்கச் செய்வதும் எளிது.
இப்படிக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கும் நன்மைகள் நம்மை ஏமாற்றி விடுவதோடு, எதிர்பாராத ஒரு முடிவுக்கும் கொண்டுபோய் விட்டுவிடும் நிலையும் உள்ளது. இதுவரை, இப்படித்தான் தத்தம் முறைகளில் வரையறுக்கப்பட்ட பாடத்திட்டங்களின்படி, பல பதிப்பாளர்கள் தயாரித்த பாடநூல்களைத் தான் மெட்ரிக், ஆங்கிலோ இந்தியன் பள்ளிகள் தேர்ந்தெடுத்து வந்திருக்கின்றன. இந்த முறைக்கே நாம் மீண்டும் வந்து, சமச்சீர் கல்வியின் இலக்கு மாற்றமும் பெற்றோரின் பழைய செலவுச் சுமையும் நுழைந்துவிடும். அரசு தேர்ந்தெடுக்கும் பாடநூல்களை எந்தப் பதிப்பகமும் தயாரித்துக் கொடுக்கலாம் என்ற முறையைப் பின்பற்றுவது தான் இதற்கு ஒரே மாற்று வழி.இப்போது தயாரிக்கப்பட்ட பாடநூல்கள், மூன்றாண்டுகளுக்கு மட்டும் தான் என்று அறிவிக்கப்பட வேண்டும். புதிய வல்லுனர் குழுக்கள் இந்த நூல்களை முழுவதுமாக ஆய்ந்து, தம் பார்வைக்கு வரும் குறைகளையும் கருத்தில் கொண்டு செம்மைப்படுத்த வேண்டும் அல்லது முழுவதுமாக ஒதுக்கிவிட்டு, புதிய நூல்களைத் தயாரித்துக் கொடுக்க வேண்டும். இப்பணிக்கு இரண்டாண்டுகள் கொடுக்கப்பட்டு, மூன்றாம் ஆண்டின் மத்தியில் அனைத்து திருத்தப்பட்ட, புதிதாக உருவாக்கப்பட்ட நூல்களும் பள்ளிகளுக்குக் கிடைக்க ஏற்பாடுகள் செய்ய வேண்டும்.
இப்போது தயாரிக்கப்பட்டிருக்கும் தமிழ் தவிர்த்த பாட நூல்கள் அனைத்தும், அகில இந்திய அளவிலான வல்லுனர் குழுக்களின் மறுமதிப்பீடு இல்லாமல், மூன்றாண்டுகளுக்கு மேல் நடைமுறையில் இருக்கக் கூடாது.கல்வி வரலாற்றில், இதுவரை என்றும் கண்டிராத ஒரு சூழ்நிலை இப்போது உருவாகியுள்ளது. தனியார் பள்ளிகள் அரசு அறிவித்துள்ள கட்டணத்தை நடப்பு ஆண்டுக்கும் வசூலிக்க வேண்டிய நிலை உறுதிப்படுத்தப் பட்டிருக்கிறது. நாடி அலைக்கழிந்து, தம் குழந்தைகளை எந்தப் பள்ளிகளில் பெற்றோர் சேர்த்தனரோ, இன்று அதே பள்ளி வாயில்களில் போராட்டக் குரல் எழுப்பி நிற்கின்றனர். இனி, தம் புதிய முயற்சிகளுக்கு எந்த கட்டணமும் வசூலிக்க முடியாதே என்ற கவலையில் பள்ளி நிர்வாகிகள் இருக்கின்றனர். போராட்டத்தில் பெற்றோரும், பொருமலில் பள்ளிகளும் இருப்பது குழந்தைகளின் கல்விக்கு உகந்ததில்லை. கட்டணம் பற்றிய முடிவுகள் முன்கூட்டியே வராததும், மறு பரிசீலனை பற்றிய முன்னுக்குப் பின் முரணான அறிக்கைகளும் முடிவுகளும், எப்படியும் ஒரு நெகிழ்வுக்கு வழியுண்டே என்ற பள்ளிகளின் நம்பிக்கையும் தான் இந்தக் குழப்பங்களுக்குக் காரணம்.
ஒரு சிறிய குழு, 6,400 பள்ளிகளின் நிர்வாகிகளை நான்கு மாதங்களுக்குள் (ஒரு மாதம் ஓடிவிட்டது) நேரில் சந்தித்து, விவரம் பெற்று முடிவுகள் சொல்வதென்பதை எண்ணிப் பார்க்க முடியவில்லை. ஒருவரிடம் நான்கைந்து நிமிடங்களுக்குள் தான் கருத்துப் பரிமாற்றம் செய்ய முடியும் என்றால், அந்த நேரத்தில் என்ன நடைபெறும்?நமக்கு இப்போது எழும் கேள்வி இதுதான்... பத்தில் ஒரு பங்கு (பெரிய பள்ளியோடு ஒப்பிடும்போது) கட்டணமாகப் பெற்று, மூன்றில் ஒரு பங்கு சம்பளமாகக் கொடுத்து, நூறில் ஒரு பங்கு மட்டும் வளர்ச்சிக்காகப் பெற்று இயங்கும் ஒரு பள்ளியால், கல்வித் தரத்தைக் காப்பாற்றிக் கொள்ள முடியுமா? பெரிய பள்ளிகளே, "கட்டணம் கட்டுபடியாகவில்லை' என்று போராடும் போது, இத்தகைய சிறிய பள்ளிகளால் என்ன செய்ய முடியும்? பாடநூல்கள் சமச்சீரானவையாகத்தான் இருக்கப் போகின்றன. இத்தனை மாறுபட்ட வகுப்பறைச் சூழல்களைக் கொடுக்கும் கல்வி சமச்சீராக இருக்கும் என்று எதிர்பார்க்க முடியுமா?
மறுபரிசீலனைக்கு விண்ணப்பிக்காத நான்காயிரத்துக்கும் மேற்பட்ட பள்ளிகள், ஏன் அமைதியாக இருந்தன என்பதன் உண்மைக் காரணம் நமக்குத் தெரியவில்லை. ஒன்று விளங்குகிறது... கட்டண நிர்ணயக் குழுவுக்கு, கல்வித்தரம் குறிக்கோள் இல்லை; வரவு - செலவைப் பார்த்து, கொஞ்சம் கூட்டிக் கழித்து கட்டணங்களை நிர்ணயித்ததுதான் அதன் பணி. முத்துக்குமரன் குழு சுட்டிய முன்னேற்பாடுகளில், வசதிகளில் ஒருசிலவற்றையாவது கருத்தில் கொண்டு கட்டணங்கள் சீரமைக்கப்படவில்லை. அப்படிச் செய்திருந்தால், வளர வேண்டிய பள்ளிகளுக்கு வாய்ப்பும், உதவியும் கிடைத்திருக்கும்.தரமான கல்வி கொடுக்க, ஒரு வகுப்பின், பள்ளியின் அடிப்படைத் தேவைகள் என்ன, தேவையான செலவுகள் என்ன? கிராமப்புறமாயிருந்தால் என்ன, நகர்புறமாயிருந்தால் என்ன? அந்த அடிப்படைச் செலவுகளுக்கு வழி இருக்க வேண்டும். வகுப்பறை உள்வசதிகளில் கூடுதல், குறைவு இருந்தாலும், சொல்லிக் கொடுக்கும் ஆசிரியர்களின் தரம், சமமாக இருக்க வேண்டும். அரசுப் பள்ளிகளுக்கு ஒப்பாகவும், ஏன், உயர்வாகவும் கூட இருக்க வேண்டும்.
அனைத்துப் பள்ளிகளிலும், ஆசிரியர்களின் தரம் கண்காணிக்கப்பட வேண்டும். ஏராளமான ஆசிரியர்கள் அரசுப் பணிக்காகக் காத்திருந்தாலும், தனியார் பள்ளிகளில், அதுவும், பொருளாதாரம் குறைந்த அளவிலான சிறிய பள்ளிகளில் பணிபுரிய அவர்கள் முன்வருவதில்லை.பள்ளிக் கல்வியின் தரத்தை உயர்த்த இரண்டு யோசனைகள்: இருப்பிடத்திற்கு அருகில் அமைந்திருக்கும் எந்தப் பள்ளியிலும், தம் குழந்தைகளை, பெற்றோர் தயக்கமில்லாமல் சேர்க்கும் அளவுக்கு, அனைத்துப் பள்ளிகளின் தரமும் உயர்வதற்கான செயல்முறைகளில் இறங்க வேண்டும். ஒவ்வொரு பள்ளியிலும் முதல் தேவையாக, திறமை மிக்க ஆசிரியர்களைத் தேர்வு செய்து, தகுந்த ஊதியத்தில் நியமிக்கும் அளவுக்கு, அவற்றின் வரவு - செலவு இருக்க வேண்டும். இதற்கு உதவியாக, மாணவர்களின் கட்டணம் (இப்போது கல்லூரிகளில் இருப்பது போல) ஒரே சீராக இருக்கச் செய்ய வேண்டும்.மாணவர்களை இடைநிறுத்தம் செய்யக்கூடாதென்ற கொள்கையை அவர்களுக்குப் பயனுள்ளதாக ஆக்க, உள்தேர்வுகளையும், மதிப்பீடுகளையும் கண்காணிக்கும் உள்ளமைப்பு, வெளியமைப்பு ஒன்று, ஒவ்வொரு பள்ளியிலும் இருக்க ஏற்பாடு செய்ய வேண்டும்.
கட்டண நிர்ணயக் குழுவிடம் இன்னொரு பணியையும் அரசு கொடுக்க வேண்டும். அரசுப் பள்ளிகளை மாதிரியாகக் கொண்டு, அதற்கு ஒப்ப ஆசிரியர் தகுதி, ஊதியம், கட்டமைப்பு என்ற முக்கியத் தேவைகள் தனியார் பள்ளிகளில் இருக்கின்றனவா என்று கணித்து, குறைகளைப் பள்ளிகளுக்குத் தெரிவிக்க வேண்டும்.ஆயிரம் மாணவர்களுக்கு மேலாகயிருக்கும் பள்ளிகளுக்கு, முன் அவை வசூலித்த கட்டணத்தையும், ஆண்டுக்கு 10 சதவீதம் கூடுதலும், முன்கூட்டியே தெரிவிக்கப்படும் புதிய கல்வி - முயற்சிகளுக்கு 5 சதவீதம் கூடுதலும் அரசு அனுமதிக்கலாம். அந்த வகையில், அனுமதி பெறுவதற்குத் தனியார் பள்ளிகளிடமிருந்து ஒரு புதுமையான செயல்திட்டம் வர வேண்டும். சிறந்த கட்டமைப்புகளையும், தகுதி மிக்க ஆசிரியர்களையும், மற்ற அனைத்துத் தேவைகளையும் கொண்டுள்ள அந்தப் பள்ளிகள் ஒவ்வொன்றும், இன்னொரு இணைப்பள்ளியைத் தொடங்க வேண்டும்.
அந்த இணைப் பள்ளியில், அரசுப் பள்ளிகளின் மாணவர் சேர்க்கை முறையும், கட்டணக் குழு தெரிவிக்கும் பொதுக்கட்டண முறையும் கடைபிடிக்கப்பட வேண்டும். தம் பகுதிகளில் தேர்வு ஓட்டங்களில், பந்தயத்துக்காக ஓடாமல், வாழ்க்கைக்காக ஓடத் துடிக்கும், கற்றலில் பின்தங்கும் மாணவர்களுக்கு முன்னுரிமை கொடுத்து, இந்த வசதி படைத்த பள்ளிகள் உயர்த்த வேண்டும். இந்த பின்புலத்தில் இயங்கும் இணைப் பள்ளிகள் தான் உண்மையான கோவில்கள்.
No comments:
Post a Comment