எதிர்கால உலகில் எந்த பொருளுக்கு தட்டுப்பாடு ஏற்படும் என்றொரு வினா எழுமாயின் அதற்கு பெட்ரோலியப் பொருட்கள் என்ற விடை தவறானதாக கூட போகலாம். ஏனென்றால் அதனைவிட பூதாகர மான தட்டுப்பாடு உயிர் திரவமாகிய தண்ணீருக்கு ஏற்படப்போகிறது. இந்த அபாயத்தினை வெகு வேகமாக உலகம் சந்திக்க விருக்கிறது. தற்போதே அமெரிக்கா, சீனா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் நீரை எதிர்கால தேவைக்கு சேமிக்க தயாராகிவிட்டன. சமீபத்தில் ஹிலாரிக் கிளிண்டனின் வார்த்தைகளில் இது தெளிவாக வெளிப்பட்டது.
புவியின் மேற்பரப்பில் 1400 ஷ் 106 கன கிலோமீட்டர் அளவுக்கு நீர் இருப்பினும் அவற்றுள் 3 சதவீத நீர் மட்டுமே நன்னீர் ஆகும். அதிலும் 5 சதவீதம் (மொத்த நீர் அளவில் 0. 15 சதவீதம்) மட்டுமே நேரடியாக குடிநீராக உபயோகிக்க வல்லது. பாக்கி 95 சதவீத நீரை உபயோகிக்க இயலாது. கடல்நீரில் உப்பு அதிக அளவில் கலந்துள்ளது. மேலும் கால்சியம், மெக்னீசியம் போன்ற வேதிப்பொருட்களும் அதிக அளவில் கலந்திருப்பதனால் குடிநீராக மாற்றுவதற்கு நவீன தொழில்நுட்ப முறைகளை (தஞ) கையாள வேண்டியிருக்கிறது. புதிய தொழில்நுட்ப முறைகள் செலவு மிகுந்தவை.
நம்முடைய நாடு சுமார் 1850 கன கிலோமீட்டர் அளவுக்கு தண்ணீரைக் கொண்ட நாடு. மேலும் உலக நன்னீர் இருப்பில் 4 சதவீத நன்னீரினைக் கொண்டுள்ளது. இந்தியாவின் தென்பாகங்களை விட வட பாகங்கள் மிகப்பெரிய ஆறுகளைக் கொண்டுள்ளன. குறிப்பாக தமிழகத்தில் நடுத்தர (ஙங்க்ண்ன்ம்) ஆறு காவிரி மட்டுமே. மற்ற ஆறுகள் அனைத்தும் சிற்றாறுகள் இனத்தில் பட்டவை.
தமிழகத்தின் தண்ணீர் தேவை ஆறு, ஏரி, கிணறு ஆகியவற்றின் மூலம் பூர்த்தி செய்யப்படுகிறது. ஆற்று நீர் ஆறு உற்பத்தியாகும் உயர்ந்த மலைப் பகுதிகளில் மழை பெய்வதனாலும், அதன் நீர்பிடிப்பு பகுதிகளில் மழை பொழிவதனாலும் கிடைப்பது. நிலப்பகுதிகளில் மழை பொழிவதனால் சிற்றோடை களில் வழிந்தோடும் நீர் ஏரிகளில் சேமித்து வைக்கப் படுகிறது. கிணற்றுநீர் மழை நீர் மண்ணின் பல அடுக்குகளை கடந்து நிலத்தடிநீராக சேமித்து வைக்கப்படுவது, ஆக எல்லாவற்றிற்கும் மூலமாக விளங்குவது மழைநீரே. மழைநீர் தூய்மையான நீரும்கூட.
இருவேறு பருவ காலங்களில் தமிழகம் மழைப் பொழிவினை பெறுகின்றது. ஜூன் மாதம் முதல் ஆகஸ்ட் மாதம் வரையிலான, தென்மேற்கு பருவக் காற்றால் கிடைக்கும் மழை. செப்டம்பர் முதல் நவம்பர் வரையிலான வடகிழக்கு பருவக்காற்றால் கிடைக்கும் மழை. தென்மேற்கு பருவமழை தமிழகத்தின் உட்பகுதி களில் அவ்வளவாக பெய்வதில்லை. மேற்கு தொடர்ச்சி மலையினையொட்டிய பகுதிகளிலேயே பொழிகிறது. இதன் முக்கிய காரணம் இப்பருவ காலத்தில் வீசும் தென்மேற்கு பருவகாற்று மேற்கு தொடர்ச்சி மலை களினால் தடுக்கப்பட்டு வருகின்றன. இதனால் மேற்கு தொடர்ச்சியின் மேற்கு பகுதியிலுள்ள கேரள மாநிலத்திற்கு மழைப்பொழிவு கிடைக்கிறது. தமிழகம் மழை மறைவு பிரதேசமாக இயற்கையினால் ஆக்கப் பட்டது. இருப்பினும் மேற்கு தொடர்ச்சி மலையின் வால்பகுதியில் தென்மேற்கு பருவக்காற்றால் அதிகமழை பெறுகிறது. தென்மேற்கு பருவக்காற்றால் தமிழகம் ஆண்டிற்கு 322 மி.மீ. மழை (சராசரியாக) பெறுகிறது. ஆனால் இந்த அளவு எல்லா ஆண்டு களிலும் சரியாக கிடைப்பதில்லை. பல ஆண்டுகளில் குறைவாகவே கிடைத்து வருகிறது.
வடகிழக்கு பருவக்காற்றால் தமிழகம் சாதாரணமாக 470 மி.மீ. மழைப்பொழிவினைப் பெறுகிறது. இப்பருவ மழையால் குறிப்பாக தமிழகத்தின் கடற்கரையோரப் பகுதிகள் அதிக மழையினைப் பெறுகின்றன. தமிழகம் இவ்விரண்டு பருவங்களிலும் பெறும் மொத்த மழையளவு தேசிய சராசரி மழையளவான 1250 மி.மீ.க்கும் குறைவானதே.
அதேபோல் தமிழகத்தின் ஒவ்வொரு குடிமகனுக்கும் உள்ள நீர் இருப்பு 800 கனமீட்டர் அளவானது தேசிய நீர் இருப்பு (ஒரு குடிமகனுக்கு) அளவான 2300 கன மீட்டருக்கும் குறைவானதே. சுமார் 20 வருடங்களுக்கு முன்பு தமிழகத்திற்கு கிடைத்த மழையளவு தற்போது இல்லை. குறைந்து கொண்டே வருகின்றது. அதேசமயம் தமிழகத்தின் வெப்பநிலை அளவு உயர்ந்து கொண்டே வருகிறது. இதன் முக்கிய காரணம் கடந்த 25 ஆண்டுகளில் தமிழகத்தில் ஏற்பட்ட மரங்களின் அழிவேயாகும். தமிழகத்தின் இயற்கை போர்வை வெட்டி யெறியப்பட்டது. சாலையோர மரங்கள் வெட்டப்பட்டுவிட்டன. வேளாண்மை நிலங்களின் ஓரங்களில் வளர்க்கப்பட்ட மரங்கள், காடுகள் அழிக்கப்பட்டுவிட்டன. கிராமப்புறங்களில் வளர்க்கப்படும் சமூகக்காடுகளின் பயன் பலருக்கும் தெரிவதில்லை. அவ்வாறு வளர்க்கப்படும் மரங்களை அரசியல்வாதிகளும், ஆக்கிரமிப்பு செய்வோரும் விட்டுவைப்பதில்லை.
தமிழகத்தின் தண்ணீர் தேவையை சமன் செய்வதில் முக்கிய பங்காற்றும் நீர் ஆதாரங்களாக விளங்குவது நில மேற்பரப்பு நீர் (நன்ழ்ச்ஹஸ்ரீங் ஜ்ஹற்ங்ழ்) மற்றும் நிலத்தடிநீர் ஆகும். நில மேற்பரப்பு நீர் ஆறு, ஏரி, குளம் மற்றும் குட்டை ஆகிய நீர் ஆதாரங்கள் மூலம் கிடைப்பது. இவ்வினத்தில் தமிழகம் சுமார் 24864 மில்லியன் கன மீட்டர் நீர் அளவினைக் கொண்டுள்ளது.
தமிழகத்தின் 34 நதிகள், 89 நீர்த்தேக்கங்கள், 41948 சிறு நீர் தேக்கங்கள் (பஹய்ந்ள்) பாசனத்திற்கும், குடிநீருக்கும் தேவையான நீரை வழங்கி வருகின்றன. சுமார் 24 லட்சம் ஹெக்டேர் நிலம் இதனால் பயன்பெற்று வருகிறது.
தமிழகத்தின் வறண்ட உட்பகுதிகளில் கிணறுகள் வேளாண்மைக்கும் குடிநீருக்கும் பயன்பட்டு வருகின்றன. ஆங்காங்கே பூமிக்கடியில் பல மீட்டர் ஆழத்தில் துளையிட்டு நிலத்தடிநீர் உறிஞ்சப்பட்டு வருகின்றது. கிணறுகளிலிருந்தும், ஆழ்துளை குழாய்கள் மூலமும் பூமியிலிருந்து எடுக்கப்படும் தண்ணீர் மழைநீராலேயே மீண்டும் நிரப்பப்பட்டு வருகின்றன. நிலத்தடிநீர் பூமியிலிருந்து உறிஞ்சப்படும் அளவிற்கு மழைநீர் கிடைக்காததால் நிலத்தடிநீர் மட்டம் தாழ்ந்துகொண்டே செல்கிறது. பருவமழையினால் வருடம் ஒன்றிற்கு 4. 91 பில்லியன் கன மீட்டர் நிலத்தடிநீர் கிடைக்கின்றது. இதர நீர் நிலைகளின் மூலம் (ஏரி, குளம், ஆறு) போன்றவற்றின் மூலம் கிடைக்கும் நிலத்தடிநீர் 11. 96 பில்லியன் மீட்டர் கனமீட்டர். அதே சமயம் காற்றழுத்த தாழ்வு நிலை மற்றும் புயல் ஆகியவற்றின் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் நிலத்தடிநீர் அளவு 4. 53 பில்லியன் கனமீட்டர் ஆகும். இத்துடன் இதர நீர் வளத்தையும் சேர்த்து மொத்தம் 23. 07 பில்லியன் கன மீட்டர் நீர் நிலத்தடி நீர் இனத்தில் தமிழகத்திற்கு கிடைக்கிறது. இந்த நீர் அளவிலிருந்து ஆறு மற்றும் கழிவு நீர் பாதைகளின் வழியாக கடலுக்கு சென்று சேரும் 2. 31 பில்லியன் கன மீட்டர் நீர் போக தமிழகத்திற்கு கிடைக்கும் மொத்த நிலத்தடிநீர் அளவு 20. 76 பில்லியன் கன மீட்டர் ஆகும். இதில் வேளாண்மைக்கும் குடிநீர் மற்றும் தொழிற்சாலைகளுக்கு உபயோகப்படுத்தப்படும் நிலத்தடிநீரின் அளவு 17. 65 பில்லியன் கன மீட்டர். ஆனால் இந்த நீர் சமநிலை எப்போதும் மிகச்சரியாக தமிழகத்தில் நிலவுவதில்லை. எல்லா வருடமும் சரியான அளவு பருவ மழை கிடைக்காத காரணத்தால் மண்ணிலிருந்து உறிஞ்சப்படும் நீரில் 85 சதவீத அளவே மண்ணிற்கு திரும்ப சென்றடைகிறது. எனவே தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் நிலத்தடி நீர் மட்டம் குறைந்து கொண்டே வருகின்றது. தமிழகம் மொத்தம் 385 நிலத்தடிநீர் மண்டலங்களாகப் பிரிக்கப்பட்டு நீர் அளவினை ஆராய்ந்ததில் 145 மண்டலங்கள் பாதுகாப்பானவை எனவும், 57 மண்டலங்கள் மோசமான அளவில் உறிஞ்சப்படுபவை எனவும், 33 மண்டலங்கள் மிக மோசமான அளவில் உறிஞ்சப்படுபவை எனவும், 142 மண்டலங்கள் அதி மோசமாக உறிஞ்சப்பட்டவை எனவும் தெரியவந்துள்ளது. நிலத்தடிநீர் அதிக அளவில் உறிஞ்சப்படுவதன் மூலம் நிலத்தடிநீர் மட்ட அளவு குறைந்துபோய் கடந்த 20 வருடங்களில் பல்லாயிரக்கணக்கான கிணறுகள் வற்றி வறண்டு போயின. கோவை மாவட்டத்தில் குறிப்பிடத்தக்க அளவு பாசனக்கிணறுகள் வறண்டுபோனதன் பின்னணி இதுவே. தொழிற்சாலைகள், சாயப்பட்டறை கழிவுநீர் நிலத்தடிநீரை எட்டும்போது நிலத்தடிநீர் மாசுபட்டு பயனற்றதாகி விடுகிறது. எனவே நீரை மாசுபடுத்தும் பணி தமிழகத்தில் கண்மூடித்தனமாக நடந்தேறி வருகிறது.
தமிழகத்தின் மொத்த தண்ணீர் தேவை 1921 டி.எம்.சி. ஆனால் நமக்கு கிடைத்து வரும் நீரின் அளவு 1643 டி.எம்.சி. இது 2001- ஆம் ஆண்டின் புள்ளி விவரம். 2050-ஆம் ஆண்டுகளில் புதிய தொழிற்சாலைகளுக்கும் வேளாண்மை உற்பத்திக்கும் அதிகமாக நீர் தேவைப்படும். தமிழகத்தில் உயர்ந்துவரும் மக்கள்தொகை மற்றும் நகரமயமாதல் மூலம் சுமார் 4 முதல் 6 சதவீதம் வரை குடிநீர் தேவை உயர வாய்ப்புள்ளது.
தமிழகத்தின் 34 நதிகளில் 17 பெரிய நதிகளும் 17 துணை நதிகளும் அடங்கும். நதிகள் மூலம் தமிழகத்திற்கு கிடைக்கும் நில மேற்பரப்பு நீர் சுமார் 853 டி.எம்.சி. இதில் 261 டி.எம்.சி. தண்ணீர் நமது அண்டை மாநிலங்களிலிருந்து பெறப்படுகிறது. அதுவும் நீதிமன்றங்கள் சென்று போராடி பெறவேண்டிய நிலை. காவிரி நதிநீர் பிரச்சினை, பானாசுரசாகர் பாசனத்திட்டம், முல்லைப் பெரியார் நதிநீர் பிரச்சினை (கேரளா), பாலாறு நதி பிரச்சினை (ஆந்திரா), நெய்யாறு பாசனத்திட்டம் (கேரளா), செண்பகவள்ளி அணைக்கட்டு (கேரளா), பரம்பிக்குளம்- ஆளியாறு திட்டம்- ஒப்பந்தம் (கேரளா), பம்பை- அச்சன் கோவில்- வைப்பாறு இணைப்பு ஆகிய நதிநீர் பிரச்சினைகளை தமிழகம் எதிர்நோக்கியுள்ளது. இவ்வனைத்து நதிநீர் பிரச்சினைகளிலும் தமிழகத்தின் உரிமை நிலைநாட்டப்பட வேண்டும். என்றாலும் தமிழகத்தின் தண்ணீர் தேவையை முழுமையாக பூர்த்தி செய்வதென்பது கேள்விக்குறியே. நதிநீர் இணைப்பு திட்டங்கள் எதிர்காலத்தில் பயன்தரலாம். ஆனால் அந்தந்த மாநில மக்களின் எதிர்பார்ப்புகளையும் மீறி நடைமுறைக்கு வர விசால சிந்தனை கொண்ட, உறுதியான முடிவுகள் எடுக்கப்பட வேண்டும். தமிழகத்தின் பல நதிநீர் இணைப்பு திட்டங்கள் இன்னும் திட்டமிடப்பட்ட நிலை யிலேயே உள்ளது. எனவே எதிர்கால நீர் தேவையை மனதில் கொண்டு நாமே முன்னோடியாக இருந்து நதிநீர் இணைப்பு திட்டத்தை செயல்படுத்த வேண்டும். வெள்ளப்பெருக்கின்போது வீணாக கடலில் கலக்கும் நீரை பயன்படத்தக்க வகையில் செய்யமுடியும். மேலும் புயல் போன்ற இயற்கை சீற்றங்களின்போது விளைநிலங்கள் நீரினுள் மூழ்கி பயிர்சேதம் ஏற்படுகின்றது. அதனை தடுக்க கால்வாய்கள் அமைத்து வீணாகும் நீரை சேமித்து பயன் பெறலாம்.
தமிழகத்திற்கு தேவையான மழைநீர் பெற வீணாக கிடக்கும் தரிசு நிலங்கள், சிறு மற்றும் பெரிய மலைத்தொடர்கள் போன்ற புவி பரப்புகளில் திட்டமிடப்பட்ட சமூகக் காடுகளை வளர்ப்பதில் இன்னும் அதிக செயல்திறன் தேவைப்படுகிறது. பெயரளவில் இருக்கும் திட்டங்களை தூக்கி தூர எறிந்துவிட்டு செயல்திறன் கொண்ட திட்டங்களை செயல்படுத்த வேண்டும். மரம் வளர்ப்பதினால் விழையும் மழையினைப் பற்றி விழிப்புணர்வு குறிப்பாக தமிழக மக்களுக்கு அதிகமாகவே தேவைப்படுகிறது. என்றாலும் தமிழகத்திற்கு தண்ணீர் தேவையினை ஓரளவேணும் பூர்த்தி செய்ய இயலும்.
No comments:
Post a Comment