தமிழகத்தில் உள்ள மாவட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் பல இடங்களில் தலைவர், உறுப்பினர் மற்றும் ஊழியர்கள் பணியிடங்கள் நிரப்பப்படாததால் வழக்குகள் தீர்க்கப்படாமல் நுகர்வோர் பாதிக்கப்பட்டு வருகின்றனர்.
நேர்மையற்ற வணிகத்தால் நுகர்வோர் வாங்கிய பொருள்களில் உள்ள பாதிப்புகளையும், பெற்ற சேவைகளில் உள்ள பிரச்னைகளையும் விசாரித்து, நுகர்வோருக்கு உரிய தீர்வை வழங்கும் வகையில் நுகர்வோர் பாதுகாப்புச் சட்டம் இயற்றப்பட்டது.
இந்த சட்டத்தின்படி தமிழகத்தில் மாநில அளவில் குறைதீர் ஆணையமும், ஒவ்வொரு மாவட்டத்திலும் குறைதீர் மன்றங்களும் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஒரு தலைவர் (ஓய்வு பெற்ற நீதிபதி), 2 உறுப்பினர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தில் குறையுள்ள பொருளை சரிசெய்து வழங்கவோ அல்லது பணத்தை திரும்ப வழங்கவோ கோரும் உரிமை, சேவையால் ஏற்பட்ட பாதிப்புகளுக்கு நஷ்டஈடு கோரும் உரிமை, பாதிப்பால் ஏற்பட்ட மனஉளைச்சலுக்கு பரிகாரம் கேட்கும் உரிமை, வழக்குச் செலவை வழங்கக் கோரும் உரிமை என பல்வேறு உரிமைகள் நுகர்வோருக்கு உள்ளன.
நுகர்வோர் பாதுகாப்புச் சட்டத்தின்படி குறைதீர் மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கை 90 நாள்களுக்குள் முடிக்க வேண்டும்.
நுகர்வோர் ஆணையத்துக்கும், மாவட்ட குறைதீர் மன்றங்களுக்கும் நுகர்வோரைப் பாதுகாக்க ஏராளமான அதிகாரங்கள் உள்ளன. ஆனால், இவற்றை செயல்படுத்த தலைவருடன் ஒரு உறுப்பினராவது இருக்க வேண்டும். ஆனால், தமிழகத்தில் உள்ள 30 மாவட்ட குறைதீர் மன்றங்களில் 21 மாவட்டங்களில் 2 உறுப்பினர் பதவியிடங்களும், 7 மாவட்டங்களில் ஒரு உறுப்பினர் பதவியிடமும் பல ஆண்டுகள், மாதங்களாகக் காலியாக உள்ளன. தேனி, திருவள்ளூர், நாகர்கோவில் ஆகிய மாவட்டங்களில் தலைவர் பணியிடங்கள் காலியாக உள்ளன. இதேபோல, சென்னையில் உள்ள மாநில குறைதீர் ஆணையம் மற்றும் மாவட்ட குறைதீர் மன்றங்களில் அலுவலகப் பணியில் ஈடுபடும் ஊழியர்களின் பணியிடங்களில் ஏறத்தாழ 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.
நுகர்வோர் குறைதீர் மன்றங்களில் பல மாதங்களாக உறுப்பினர் பணியிடங்களுக்கு நேர்காணல் வைத்தும் நியமனம் செய்யப்படவில்லை. விழுப்புரம், ராமநாதபுரம், புதுக்கோட்டை, தூத்துக்குடி, திருவண்ணாமலை ஆகிய மாவட்டங்களில் இதுவரை நிரந்தர குறைதீர் மன்றங்கள் அமைக்கப்படாமல், பகுதி நேரமாகவே செயல்படுகின்றன.
குறைதீர் மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் இல்லாததால், நுகர்வோர் பாதுகாப்பு சட்டத்தின்படி நுகர்வோர் பயன்பெற இயலாத நிலையே நீடிக்கிறது.
சில வழக்குகளில் குறைதீர் மன்றம் தீர்ப்பு வழங்கியும், அதை நிறைவேற்றக் கோரி அளிக்கப்படும் மனுக்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படாமல் உள்ளது. இதனால், குறைதீர் மன்றத்துக்கு நுகர்வோர் வருகையும் குறைந்து வருகிறது.
மேலும், உறுப்பினர்கள் நியமனத்துக்கென பல மாவட்டங்களில் நேர்காணலுக்கு அழைக்கப்பட்டாலும், ஆட்சியாளர்களுக்கு ஆதரவானவர்கள்தான் நியமிக்கப்படுகின்றனர். இதைவிடுத்து, அரசியல் சார்பற்று, நுகர்வோர் நலனில் உண்மையில் அக்கறையுள்ளவர்களை உறுப்பினர்களாக நியமிக்க வேண்டும் என்றார் அவர். நுகர்வோர் நலன் காக்க அமைக்கப்பட்ட நுகர்வோர் குறைதீர் மன்றங்கள் குறையில்லாத மன்றங்களாக செயலாற்ற வேண்டும் என்பதுதான் நுகர்வோரின் எதிர்பார்ப்பு.
2 உறுப்பினர்களும் காலியாக உள்ள மாவட்டங்கள்:
சென்னை (வடக்கு), கடலூர், திண்டுக்கல், ஈரோடு, கரூர், மதுரை, நாகப்பட்டினம், பெரம்பலூர், ராமநாதபுரம், சேலம், சிவகங்கை, ஸ்ரீவில்லிப்புத்தூர், தஞ்சாவூர், திருவள்ளூர், திருவண்ணாமலை, திருவாரூர், வேலூர், விழுப்புரம், புதுக்கோட்டை, தர்மபுரி, திருச்சி.
ஒரு உறுப்பினரே உள்ள மாவட்டங்கள்: செங்கல்பட்டு, சென்னை (தெற்கு), கோவை, தர்மபுரி, நாகர்கோவில், நாமக்கல், தூத்துக்குடி.
மாநில ஆணையம் மற்றும் மாவட்ட குறைதீர் மன்றங்களில் காலியாகவுள்ள பணியிடங்கள் விவரம்: நீதிமன்ற அலுவலர் 1, தலைமை எழுத்தர் 2, நீதிமன்ற மேலாளர் (மாஸ்டர்) 4, தட்டச்சர் 16, உதவியாளர்கள் 11, இளநிலை உதவியாளர் 4, அலுவலக உதவியாளர் 3 என ஏறத்தாழ 43 பணியிடங்கள் காலியாக உள்ளன.
No comments:
Post a Comment