2020-ல் இந்தியாவில் 59,000 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி


2020-ல் இந்தியாவில் 59,000 மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி


வரும் 2020-ம் ஆண்டு இந்தியா 59 ஆயிரம் மெகாவாட் மின் உற்பத்தி செய்யக் கூடிய அளவுக்கு காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனை பெற்றிருக்கும் எனவும், அதன் மூலம் 98 ஆயிரம் பேர் அத்துறையில் வேலைவாய்ப்பை பெற்றிருப்பார்கள் எனவும் "சர்வதேச காற்றாலை மின்சக்தி கண்ணோட்டம் 2012 (ஜி.டபிள்யு.இ.ஒ)' புள்ளிவிவரம் தெரிவித்துள்ளது.
சென்னையில் நடைபெற்று வரும் "இந்திய காற்றாலை மின்சக்தி- 2012' கருத்தரங்கில் இந்திய காற்றாலை மின்சக்தி கண்ணோட்டம் - 2012 என்ற தலைப்பிலான அறிக்கை வெளியிடப்பட்டது. மத்திய மரபுசாரா எரிசக்தி துறை அமைச்சர் பரூக் அப்துல்லா இதை வெளியிட்டார்.
இதில், இடம்பெற்றுள்ள புள்ளி விவரங்கள் அந்தந்த நாட்டு அரசின் கொள்கைகள், முதலீடு திட்டங்கள், வளர்ச்சி விகிதம் என்பன உள்ளிட்ட பல்வேறு காரணிகளின் அடிப்படையில் வகுக்கப்பட்டுள்ளன.
உலக வெப்பமயமாதலைத் தடுப்பதற்காக கரியமிலவாயு வெளியாவதை கட்டுப்படுத்துவதற்காக பல்வேறு முயற்சிகளை உலக நாடுகள் எடுத்து வருகின்றன. இதன் ஒரு பகுதியாக பசுமை எரிசக்தி உற்பத்தியை ஊக்குவிப்பதற்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டு வருகிறது.
இந்தியாவும் இதுபோல் பசுமை எரிசக்தி உற்பத்திக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. இந்தியா இப்போது 2.1 லட்சம் மெகாவாட் மின்உற்பத்தி நிறுவு திறனைக் கொண்டுள்ளது.
இதில் பசுமை எரிசக்தியான புதுப்பிக்கத்தக்க எரிசக்தி உற்பத்தி நிறுவு திறன் மட்டும் 25 ஆயிரம் மெகா வாட் ஆகும். இதில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் மட்டும் 17,500 மெகா வாட் அளவுக்கு உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலக்கை காட்டிலும் கூடுதல் நிறுவு திறன்: இந்திய காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் வரலாற்றைப் பொருத்தவரை, இதுவரை நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிட கூடுதல் நிறுவு திறனையே இந்தியா நிறுவி வந்துள்ளது.
2002 - 2007 வரையிலான 10-வது ஐந்தாண்டு திட்ட காலத்தில் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் 1500 மெகா வாட் அளவுக்கு செய்திருக்க வேண்டும் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், 5,427 மெகா வாட் மின் உற்பத்தி அளவுக்கான நிறுவு திறன் செய்யப்பட்டது.
இதுபோல் 11-வது ஐந்தாண்டு (2007 - 2012) திட்ட காலத்தில் 9,000 மெகா வாட் மின் உற்பத்தி அளவுக்கு நிறுவ இலக்கு நிர்ணயிக்கப்பட்டு, 10,260 மெகா வாட் மின் உற்பத்தி செய்யும் அளவு நிறுவு திறனைப் பெற்றது.
இப்போது 12-வது (ஏப்ரல் 2012 - மார்ச் 2017) ஐந்தாண்டு திட்ட காலத்தில் மொத்த காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறன் இலக்கு 25 ஆயிரம் மெகா வாட் என இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
2020-ல் 59 ஆயிரம் மெகா வாட் நிறுவு திறன்: காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனில் உலகிலேயே 3-வது பெரிய நாடாக இந்தியா திகழ்ந்து வருகிறது.
இந்த நிலையில், வருகிற 2020-ல் 59 ஆயிரம் மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனை இந்தியா பெற்றிருக்கும் என "சர்வதேச காற்றாலை மின்சக்தி கண்ணோட்டம் - 2012' (ஜி.டபிள்யு.இ.ஒ)- புள்ளிவிவரம் (மாடரேட்) தெரிவிக்கிறது.
மேலும் இதன் மூலம் 5 கோடி டன் கரியமில வாயு வெளியேற்றம் தடுக்கப்படும் எனவும், அத்துறையில் 98 ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு கிடைக்கும் எனவும் புள்ளிவிவரம் தெரிவிக்கிறது.
2030-ல் 1.24 லட்சம் மெகா வாட் காற்றாலை மின் உற்பத்தி நிறுவு திறனை இந்தியா பெற்றிருக்கும் எனவும், அதன் மூலம் 1.26 லட்சம் பேர் வேலைவாய்ப்பை பெற்றிருப்பர் எனவும் அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...