தேவையில்லை இலவசங்கள்!


தேவையில்லை இலவசங்கள்! 

சமூக நல விரும்பிகள், அறிஞர் கள், ஆய்வாளர்கள், விஞ்ஞானிகள், கல்வியாளர்கள், பொருளாதார வல்லுனர்கள், உற்பத்தியாளர்கள், அரசியல் விமர்சகர்கள், எழுத்தாளர்கள், பத்திரிகையாளர்கள், அரசியல்வாதிகள், சிந்தனையாளர்கள் ஆகியோர் அவ்வப்போது நடைபெறும் நிகழ்வுகள் குறித்து தமது கருத்துகளை வாசகர்களுடன் பகிர்ந்து கொள்ளும் பகுதி இது. 

ஞாயிறு தோறும் வெளிவரும்.தமிழக அரசியல் கட்சிகள், தேர்தலை முன்னிட்டு, தலையே கிறுகிறுக்கும் அளவிற்கு இலவச அறிவிப்புகளை வெளியிட்டு, மக்களை திக்குமுக்காட வைக்கின்றன. இவை மக்களுக்குத் தேவை தானா என்பதை விட, நடுத்தர மக்களின் கவலைகளைத் தீர்க்கும் அம்சங்கள், இவர்களது தேர்தல் வாக்குறுதிகளில் இல்லை.

உலக பொருளாதார மயத்திற்குள், என்று இந்தியா நுழைந்ததோ, அன்றே அன்னிய பொருளாதாரம் நம்மை ஆக்கிரமித்துவிட்டது. தகவல் தொழில்நுட்பம் நுழைய, நுழைய, அதில் ஈடுபட்டு பணம் சம்பாதிக்கும் மக்களின் வாழ்க்கை வசதிகள் மாறின. இவர்களின் எண்ணிக்கை, மக்கள் தொகையில், வெறும் 3 சதவீதமே. ஆனால், இவர்களால், நாட்டின் ஒட்டு மொத்த பொருளாதாரமே புரட்டி போடப்பட்டது; பாதிக்கப்பட்டது 97 சதவீத மக்கள்.

இந்த 97 சதவீத மக்களைக் குறி வைத்து, அரசியல்வாதிகள் செய்யும், "அலம்பல்களை' நம்மால் தாங்க முடியவில்லை. 

தமிழக சட்டசபைத் தேர்தலில் வெற்றி பெறுவதற்காக, இவர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் அறிக்கை

களைப் படித்தால், தலை, "கிறுகிறு'க்கிறது.

"இன்று, வயிறு நிறைந்தால் போதுமா, நாளைக்கு...?' என்ற கேள்வியை எழுப்புபவனுக்கு, அரசிடமிருந்து பதில் இல்லை.

"அதான் அரிசி கொடுக்கிறோமே... இலவச வேட்டி, சேலை கொடுக்கிறோமே... பொழுது போக, கலர் "டிவி' கொடுக்கிறோமே... சோறு சாப்பிட்டு, "ஹாயாக' வீட்டில்,"டிவி' பார்க்க வேண்டியது தானே...' என்ற ரீதியில், அரசியல்வாதிகள் செயல்படும்போது, "வேலை தேவை, வேலைக்கு அடிப்படையான கல்வி தேவை, படிக்க மின்சாரம் தேவை, நான்கு சுவர் அமைந்த வீடு தேவை' என்று நாம் சொல்வதெல்லாம் அவர்கள் காதில் விழுமா?

மேலே சொன்னவற்றில், பின்னிருந்து ஒவ்வொன்றாக செல்வோம். முதலில், ரியல் எஸ்டேட். இதனால் பெரிய அளவில் பாதிக்கப்பட்டவர்கள் நடுத்தர மக்கள் தான். குடும்ப வருமானம் உயர்ந்திருக்கிறது என்று புள்ளி விவரங்கள் கூறினாலும், குடும்ப பாரத்தை சுமக்க வேண்டிய சூழ்நிலையில், பெண்களும் வேலைக்கு செல்ல வேண்டிய கட்டாயம் உள்ளது.

சமுதாயத்தில் ஒரு தட்டு மக்களின் சம்பள உயர்வால், ரியல் எஸ்டேட் விலை, நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு அதிகரித்தது. புல் முளைக்காத, பூச்சிகள் கூட நடமாடாத இடங்களின் விலை இன்று வானத்தை தொட்டு விட்டது.

நகரங்களில் இன்று, நடுத்தர மக்கள் வீடு வாங்குவது கனவாகவே உள்ளது. இருவர் வேலைக்கு சென்று, வாடகை கொடுத்து, குழந்தைகளை படிக்க வைத்து, "ஷாக்' அடிக்கும் அளவிற்கு, நம்மை சுடும் மின்கட்டணங்களை கட்டி, இப்படியே செலவினங்கள் உயர்ந்து மூச்சு திணற வைக்கிறது.

சொந்த வீடு கனவு பலிக்காதவர்கள் வாடகை வீட்டில். வாடகையும் ஒவ்வொரு 11 மாதத்திற்கும், உயர்த்தப்படுகிறது. வாடகை குறைப்பு பற்றியோ, ரியல் எஸ்டேட் விலையை கட்டுக்குள் கொண்டு வருவது பற்றியோ, அரசியல் கட்சிகளின் தேர்தல் அறிக்கைகளில் இடம் பெறவில்லை.

அடுத்து மின்சாரம். சென்னையில் வசிப்பவர்களுக்கு, அதிக சிரமம் தெரியாது. கிராமத்திற்கு வந்து பாருங்கள்... விவசாயிகளும், தொழிற்சாலைகளும், தேர்வு நேரங்களில் மாணவர்கள் படும் வேதனைகளை சொல்லி மாளாது. தேர்தலின்போது, சம்பந்தப்பட்ட அமைச்சரை கண்ணிலேயே காட்டாமல் விட்டால், பிரச்னை, "அமுங்கி'ப் போகும் என்று, ஒரு கட்சி கணக்குப் போடுகிறது. கணக்கு, சரியா, தவறா? மக்கள் தான் முடிவு செய்ய வேண்டும்.


அடுத்து, விண்ணைத் தொடும் பள்ளி, கல்லூரிப் படிப்புக்கான கட்டணங்கள். மெட்ரிக், சி.பி.எஸ்.இ., ஆங்கிலோ இந்தியன், ஐ.சி.எஸ்.இ., என்று பல்வேறு கல்வி முறைகள். தமிழகத்தைத் தவிர வேறு எங்கு சென்றாலும், மக்களிடம் பேச பொதுவான மொழி ஒன்று தெரிந்திருக்க வேண்டும் என்பது அடிப்படைத் தேவையாகி விட்டது. அந்த வகையில், பரம ஏழையாக இருந்தாலும், ஆங்கில வழிக் கல்வி அவசியமாகிறது.

தமிழகத்தில் கல்வி கட்டணத்தை கட்டுப்பாட்டிற்குள் கொண்டு வருகிறேன் பேர்வழி என, ஓய்வு பெற்ற நீதிபதி கோவிந்தராஜன் தலைமையில் கமிட்டி அமைக்கப்பட்டது. இக்கமிட்டி எல்.கே.ஜி.,யில் இருந்து, 12ம் வகுப்பு வரை வசூலிக்க வேண்டிய கட்டணம் நிர்ணயம் செய்தது. நகரம், கிராமம் என, 3,500 ரூபாயிலிருந்து, 11 ஆயிரம் ரூபாய் வரை கட்டணம் நிர்ணயித்தது.

"இக்கமிட்டி, கல்வி துறை அதிகாரிகளிடம், குறிப்பிட்ட நிர்வாக செலவு விவரங்களை மட்டுமே பெற்றுள்ளது. அரசு நிர்ணயித்த கட்டணத்தில் சம்பளம் வழங்க முடியாது' என்று பள்ளி சங்க நிர்வாகிகள் தெரிவித்தனர்.விவகாரம், கோர்ட் வழக்காக மாறியது.

பிரச்னை தீர்ந்ததா? குழம்பிய குட்டையில், கல் எறிந்த கதை ஆகி விட்டது. கல்வி நிறுவனங்களையும், பெற்றோரையும் சம நோக்கோடு கையாண்டிருந்தால், பிரச்னை, சுப்ரீம் கோர்ட் வரை செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டிருக்காது. பல மெட்ரிக் பள்ளிகளும், சி.பி.எஸ்.இ., முறையைப் பின்பற்ற வேண்டிய கட்டாயமும் ஏற்பட்டிருக்காது.

கல்லூரிப் படிப்பும் இதற்கு விதிவிலக்கல்ல. அரசு, சுயநிதி, தனியார் என, ஏகப்பட்ட கல்லூரிகள் இருந்தும், "டப்பு வை... சீட் இந்தா...' கதை தான். தமிழகத்தில் கல்வியை மேம்படுத்தும் வகையிலான தேர்தல் அறிக்கையைத் தயாரிக்கத் தெரியவில்லை.

அடுத்தது, வேலை. வெளிநாட்டு நிறுவனங்களை, சென்னையில் மட்டும் வரிசையாக நிறுவி, மற்ற மாவட்ட மக்களின் வயிற்றில் அடித்த கொடுமையை என்னவென்று சொல்ல!

அடுத்து, விவசாயம். நாட்டின் முதுகெலும்பு. விவசாயத்திற்கு அடிப்படை தேவை நீர் வளம். அந்த வளம் தமிழகத்தில் பெருக்கப்பட்டதா? இல்லை. பக்கத்து மாநிலங்கள் போட்டி போட்டு கொண்டு, நீர்வள ஆதாரத்தை பெருக்க, அணைகள் கட்டி வருகின்றன. 

ஆனால், தமிழகத்தில் அதற்கான சிந்தனை கூட இல்லை. விவசாயிகளுக்கு மின்சாரம் இலவசம் என்கின்றனரே... இந்த இலவசம் எங்கிருந்து வந்தது? மக்களின் வரிப்பணம் தானே! இலவசம் என்று கூறுவதை நிறுத்திவிட்டு, விவசாய உற்பத்தியை பெருக்க, தேவையான அடிப்படை ஆதாரம் பற்றி யோசிக்க வேண்டும்.

விவசாயத்திற்கு, சொட்டு நீர் பாசனம் மிகவும் முக்கியம். இதை அ.தி.மு.க., தேர்தல் அறிக்கையில் குறிப்பிட்டு இருக்கிறது. இதை தனியாருடன் இணைந்து அரசு சரியாக செய்தால், விவசாய உற்பத்தியை பெருக்கலாம். கூலி தொழிலாளர்கள் கிடைப்பதில்லை. காலத்தின் கட்டாயத்தை உணர்ந்து, தனியாரை விவசாயத்தில் ஈடுபடுத்தி, மேலை நாடுகளை பின்பற்றி, விவசாய உற்பத்தியை பெருக்க வேண்டும்.

நடப்பு ஆட்சியில், இலவச விவசாய நிலம் வழங்கப்பட்டது. விவசாயமே செய்ய முடியாத நிலம் எதற்கு? மலைப்பிரதேசங்களில், பழங்குடியினருக்கு என்று இலவசமாக நிலங்கள் கொடுக்கப்பட்டன. அதில், அவர்கள் விவசாயம் செய்தனரா? இல்லை. கிடைத்த விலைக்கு விற்று விட்டனர். வரிப்பணத்தில் இலவசம் என்ற பெயரில் கொடுப்பதும் தவறாக பயன்படுத்தப்படுகிறது.

இந்த அடிப்படைத் தேவை போக, இன்னொரு பிரச்னையும் உண்டு. பெண்களின் ஓட்டை கவருவதற்காக மிக்சி, கிரைண்டர், தையல் மெஷின், மின்விசிறி இலவசமாக கொடுக்கப்படும் என்று ஆசை காட்டி வலை வீசும் அரசியல் கட்சிகள் உண்மையிலேயே கொடுக்க வேண்டிய அரசியல் அங்கீகாரத்தை நடப்பு தேர்தலில் கொடுக்கவில்லை. தமிழகத்தில் மொத்த கட்சிகளும், 33 பெண் வேட்பாளர்களை மட்டுமே களத்தில் நிறுத்தியுள்ளன.

நாட்டில் பெண்கள் ஓட்டு சக்தி வாய்ந்தது. இவர்களை கவர்ச்சி செய்தால் நிச்சயம் வெற்றி கனியை பறிக்கலாம் என்பது அரசியல்வாதிகளின் கணக்கு. 

ஆனால், உரிய அரசியல் அங்கீகாரம் இவர்களுக்கு கொடுக்கின்றனரா? 33 சதவீதம் பற்றி பார்லிமென்டில் பேசும் அரசியல்வாதிகள் வெளியே வந்தால் மறந்து விடுகின்றனர். அரசியல் ஆதாயம் பெறுவதற்காக, அவ்வப்போது இப்பிரச்னையை கிளப்புவர்; பின் மறந்து விடுவர்.எதிர்பார்க்காத இலவசங்களை கொடுத்து அடிமைகளாக்குவதை பெண்களே விரும்பவில்லை. இதற்கு பதிலாக பெண்களுக்கு வாழ்வாதாரங்களை பெருக்கி கொடுக்க அரசியல் கட்சிகள் முன் வரவேண்டும். பெண்கள் உரிய அரசியல் அங்கீகாரம் பெற்றால் தான், வீட்டில் இருந்து, சமுதாயம் வரை அடிப்படை பிரச்னைகள் என்ன என்பது தெரிய வரும்; களைய முடியும்.சமுதாயத்தில் ஏற்றத் தாழ்வுகள் அதிகரிக்க அரசியல்வாதிகளே காரணங்களாக இருக்கக் கூடாது. செய்வரா நம் அரசியல்வாதிகள்...?

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...