ரேஷன் கார்டு வழங்க புதிய நடைமுறை அமல்


புதிய ரேஷன் கார்டு வழங்கும் பணியில் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து, மாநில உணவுப் பொருள் வழங்கல் மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு துறை ஆணையர், அனைத்து மாவட்டங்களுக்கும் புதிய உத்தரவினை பிறப்பித்துள்ளார்.

சுற்றறிக்கை விவரம்:


புதிய ரேஷன் கார்டு பெற, உரிய படிவத்தில் மட்டும் விண்ணப்பிக்க வேண்டும். விண்ணப்பத்துடன், ரேஷன் கார்டில் பெயர் நீக்கம் செய்த சான்று, பிற மாநிலத்தை சேர்ந்தவர் எனில், அங்கு பெற்ற கார்டு ஒப்புவிப்பு சான்று, முன்னர் வசித்த பகுதியில் கார்டு பெறாமல் இருந்தால், கார்டு பெறப்படவில்லை என்பதற்கான சான்று, விண்ணப்பிக்கும் முகவரியில் ஐந்து ஆண்டுகளுக்கு மேல் குடியிருந்தால், இதுவரை கார்டு பெறாததற்கு தக்க ஆதாரத்துடன் காரணம்.முகவரியை உறுதிப்படுத்த, வீட்டு வரி ரசீது, வாரிய வீடு எனில் ஒதுக்கீடு உத்தரவு, வாடகை ஒப்பந்த பத்திரம், மின் கட்டண ரசீது அல்லது வங்கிக் கணக்கு பாஸ் புக், போன் பில் ரசீது, வாக்காளர் அடையாள அட்டை, அஞ்சல் துறை அடையாள அட்டை, அரசு அலுவலர் அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவது ஒரு சான்று இணைக்க வேண்டும். இதன்படி இல்லாத மனுக்கள் மீது குறிப்பு எழுதி, மேலொப்பம் இட்டு, திரும்ப வழங்க வேண்டும். கூட்டுக் குடும்பமாக இருந்து தனி குடித்தனம் வந்தால், தல தணிக்கை செய்து, தனி சமையல் அறையுள்ளதா என்பதை உறுதி செய்ய வேண்டும். இதற்கான அட்டையில் மறைவுக்குறியீடு செய்து, கண்காணிக்க வேண்டும். 5 ஆண்டுகளுக்குள் திருமணமாகியிருந்தால், திருமணப் பதிவு சான்று வேண்டும்.

அனைத்து மனுக்களும், 100 சதவீதம் களப்பணியாளர் மூலம் தல தணிக்கை செய்ய வேண்டும். இதில், 20 சதவீத மனுக்களை உதவி ஆணையர் அல்லது வட்ட வழங்கல் அலுவலர் மேல் தணிக்கை செய்ய வேண்டும். 10 சதவீத மனுக்களை, ஆர்.டி.ஓ., மாவட்ட வழங்கல் அலுவலர் அல்லது துணை கலெக்டர் தணிக்கை செய்ய வேண்டும். தகுதியான நபர்களுக்கு 60 நாட்களுக்குள் கார்டு வழங்க வேண்டும். எக்காரணத்துக்காகவும் இது தளர்த்தப்படக் கூடாது. கார்டு அச்சடித்து வந்தவுடன், அதன் விவரம், மனுதாரருக்கு "போஸ்ட் கார்டு' மூலம் தெரிவிக்க வேண்டும். புதிய அட்டை விபரங்களை உரிய ரேஷன் கடை, வட்ட வழங்கல் அலுவலகம் ஆகியவற்றில் பொதுமக்கள் பார்வைக்கு வைக்க வேண்டும். 

புதிதாக திருமணம் செய்தவர்கள், தங்கள் பெற்றோரின் ரேஷன் கார்டிலிருந்து பெயர் நீக்கம் செய்ய இயலாத நிலையில், அதற்கான காரணத்தை குறிப்பிட்டு, திருமண பதிவு சான்று, ரேஷன் கார்டு குறித்த விபரங்களுடன் மனு அளிக்க வேண்டும். சிறப்பு இனமாக கருதி, இந்த நீக்கல் விபரங்கள், ரேஷன் கார்டு தகவல் கம்ப்யூட்டர் பதிவில், மாற்றம் செய்து, பதிவேட்டில் பதியப்படும். 

விபரம், குடும்ப தலைவருக்கு தபால் மூலம் தெரிவிக்க வேண்டும். விவாகரத்து பெற்றோருக்கு, கோர்ட் ஆணையின் அடிப்படையில் தனி கார்டு வழங்கலாம். அதைக் கொண்டே பெயர் நீக்கமும் செய்யலாம் என்பன உட்பட பல்வேறு நடைமுறைகள் தெரிவிக்கப்பட்டுள்ளன.ரேஷன் கார்டு தொடர்பான பணிக்கு வருவோரிடம் அலுவலர்கள் கனிவுடன் நடந்து கொள்ள வேண்டும். அதிகபட்ச மானியத்தில் பொருட்கள் வழங்கப்படுவதால், தகுதியற்றோருக்கு ரேஷன் கார்டு வழங்குவதை தவிர்க்க வேண்டும். உண்மையான நபர்களுக்கு சிரமமின்றி கார்டு கிடைப்பதையும் உறுதி செய்யும் வகையில் அனைவரும் பணியாற்ற வேண்டும்.இவ்வாறு, சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...