ஊட்டி : ஊட்டி சேட் மருத்துவமனையில், பிரசவம் முடிந்து வீடு திரும்பும் தாய்மார்கள், உடனடியாக உதவித் தொகையை பெற்று செல்லும் வகையிலான மாற்றங்களை செய்ய வேண்டும்.
ஊட்டி அரசு சேட் மருத்துவமனையில் பிரவச சிகிச்சைகள் மேற்கொள்ளப்படுகின்றன. 24 மணி நேரம் செயல்படும் தாய் சேய் நல மையம், பச்சிளம் குழந்தைகள் பாதுகாப்பு மையம் போன்றவை துவங்கப்பட்டு, தனியார் மருத்துமனைக்கு நிகரான உபகரண வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன. மருத்துவமனையை தரம் உயர்த்த மேற்கொள்ளப்படும் இத்தகைய முயற்சிகள் ஒரு புறமிருக்க, மருத்துமனையின் செயல்பாடுகள் மீது அதிருப்தி நிலவுகிறது.
அதிகரித்து வரும் சர்ச்சைகள்:
கூடலூர் நுகர்வோர் மனித வள சுற்றுச்சூழல் பாதுகாப்பு, மக்கள் மைய தலைவர் சிவசுப்ரமணியம், ஊட்டி சுகாதார துறை இணை இயக்குனருக்கு அனுப்பியுள்ள மனு:
மருத்துவமனையில் பிறக்கும் குழந்தைகள், பச்சிளம் குழந்தைகளை பாதுகாக்க, பராமரிக்க பல்வேறு தொழில்நுட்ப உபகரணங்கள், சிறப்பு அறை உட்பட வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன; இது பாராட்டுக்குரியது. இருப்பினும்,
இங்கு பிரசவித்த தாய்மார்களுக்கு வழங்கப்படும் உணவுகள் தரமற்றவையாக உள்ளன; காய்கறிகள் சரியாக வேகமாகல் இருப்பதால் தாய்மார்களால் அவற்றை உண்ண முடியவில்லை.
பிரசவத்திற்கு அனுமதிக்கப்படும் கர்ப்பிணிகளை பிரசவ அறையில் இருந்து பிரசவ வார்டு, மருந்து வழங்கும் அறை உட்பட பிற இடங்களுக்கு அழைத்து செல்லும் ஊழியர்கள், தாய்மார்களிடம் 10 - 50 ரூபாய் வரை பணம் கேட்கின்றனர்;
ஊழியர்களுக்கு அடையாள அட்டை இல்லாததால், இத்தகைய செயல்களில் ஈடுபடுபவர்களை அடையாளம் காண முடிவதில்லை. மருத்துவமனை ஊழியர்களுக்கு அடையாள அட்டை வழங்க வேண்டும்; நோயாளிகளிடம் அனுசரணையாக நடக்க ஊழியர்களுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.
மருத்துவமனையில் தேவைக்கேற்ப படுக்கை வசதி ஏற்படுத்த வேண்டும்; வார்டுகளில், உடைந்த ஜன்னல் கண்ணாடிகளை சரி செய்ய வேண்டும். குழந்தை பிறந்தவுடன் "ஜனனி சுரக்ஷா யோஜனா திட்டத்தின்' கீழ் 500 - 700 ரூபாய் வரை அரசால் வழங்கப்படும் நிதியை வழங்க, காசோலை தீர்ந்து விட்டது என்ற காரணம் கூறி, தாய்மார்கள் அலை கழிக்கப்படுகின்றனர். பிரசவம் முடிந்து வீடு திரும்பும் தாய்மார்கள், உடனடியாக உதவித் தொகையை பெற்று செல்லும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
குழந்தைகள், தாய்மார்களுக்கு எளிதில் ஸ்கேன் எடுக்கும் வசதியை ஏற்படுத்த வேண்டும். வாரந்தோறும் வெள்ளி கிழமைகளில் தடுப்பூசி போடும் போது அங்கேயே சிறப்பு மருத்துவர் அல்லது குழந்தை மருத்துவரை பணியமர்த்தி குழந்தைகளை பரிசோதித்து தடுப்பூசி போட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, சிவசுப்ரமணியம் கூறியுள்ளார்.
No comments:
Post a Comment