அன்னை. ஐடா ஸ்கடர்

சிஎம்சி உருவானது எப்படி?
- - - - - - - - - - - - - - - - - - - - - - - -
திண்டிவனம் என்றும் போல காரிருளில்
மூழ்கியிருந்தது  அது இரவு நேரம்
மின்சாரம் இல்லாத காலம் வருடம் 1870 !
அந்த மிஷன் பங்களாவில் சிம்னி விளக்கு
வெளிச்சத்தில் ஒரு இளம் அழகிய அமெரிக்க
நங்கை ஆங்கில நாவல் படித்துக்
கொண்டிருந்தாள் .
அவளின் பெயர் ஐடா ஸோஃபியா ஸ்கடர் ( Ida
Sophia Scudder ) வயது 20
அமெரிக்காவில் இறைத் தூதர்
( missionary ) பயிற்சியும் பெற்றவள்
ஆனால் அதில் ஆர்வம் இல்லாதவள்.
இந்தியாவில் நிலவிய வறுமை,
பஞ்சம், வியாதி அவளை விரக்திக்குள்ளா
க்கியது .
அவளுடைய தந்தை ஒரு மருத்துவ இறைத்
தூதர் ( Medical Missionary ) பெயர்
மறைத்திரு டாக்டர் ஜான் ஸ்கடர்
திண்டிவனம் பகுதியில் ஏசுவின்
இறைப்பணியுடன் மருத்துவப்
பணியிலும் ஈடுபட்டிருந்தார்.

தாய்க்கு உடல் நலம் குன்றிய காரணத்தினால்
ஐடா ஸ்கடர் அப்போது திண்டிவனம்
வந்திருந்தாள்
தந்தையின் மருத்துவப் பணியின்போது
உதவி வந்த தாய்க்கு உடல் நலம் குன்றிய
காரணத்தால் இவள் உதவ வேண்டிய நிர்ப்பந்தம்
உண்டானது.
பாமர மக்கள் இவளையும் ஒரு
மருத்துவராக எண்ணினர்.
இறைத் தூதர் பணியில் அவளுக்கு
நாட்டமில்லாமல் போனதற்கு இந்தியாவின்
பின்தங்கிய நிலை ஒரு காரணம்.
அவளுடைய குடும்ப உறுப்பினர்
அனைவருமே இறைப் பணியாளர்கள் என்பது
இன்னொரு காரணம். அவருடைய ஏழு
சகோதரர் அனைவருமே இறைப்
பணியாளர்கள்தான்! அதோடு அவளின் இளமை.
பிடித்த ஒருவரை திருமணம் புரிந்து
அமெரிக்காவில் சொகுசாக வாழ
வேண்டும் என்ற கனவு!
ஆனால் அன்றைய இருண்ட இரவு அவளுடைய
உள்ளத்தில் ஒரு உள்ளொளியை
உண்டுபண்ணியதை இறைவனின் செயல்
என்றுதான் கூறவேண்டும்!
நாவலில் மூழ்கியிருந்தவளின் கவனத்தை
கதவை வெளியில் யாரோ தட்டும் சத்தம்
கலைத்தது  நள்ளிரவை நெருங்கும் நேரம்
பெற்றோர் அயர்ந்து தூங்கிக்
கொண்டிருந்தனர். எழுந்து சென்று
கதவைத் திறந்தாள்
லாந்தர் ஒளியில் ஒரு இஸ்லாமியர்
தலையில் சமய குல்லா அணிந்தவாறு
நிற்பது கண்டாள் அவரைப் பார்த்து அவள்
திரு திருவென விழித்தாள். வந்தவர்
பதற்றத்துடன் காணப்பட்டார்.
” மிஸ்ஸியம்மா . நீங்கள்தான் என் மகளைக்
காப்பாற்றணும்! ” அவர் மன்றாடினார்.
” உங்கள் மகளுக்கு என்ன? ” எனும் அர்த்தம்பட
தமிழில் கேட்டாள் அந்த அமெரிக்க மங்கை.
” தலைப் பிரசவம்! வலியால்
துடிக்கிறாள்! உடனே வாருங்கள் அம்மா ”
அவர் கெஞ்சுகிறார்.
” I am sorry  நான் டாக்டர் இல்லே.
பிரசவம் பாக்க எனக்கு தெரியலே . ”
+ அப்படி சொல்லாதீங்க மிஸ்ஸியம்மா.
ஏதாவது செய்யுங்கள். ‘ அவரின் நிலை
அப்படி.
” இருங்கள். அப்பாவை எழுப்புறேன். அவர்
உடன் வருவார். ” என்றவாறு மாடி
அறைக்குச் செல்ல திரும்பினாள்.
” வேண்டாம் மிஸ்ஸி. அவரை
எழுப்பவேண்டாம். ” அவர் உரக்க கூறி
தடுத்தார்.
” ஏன் வேண்டாம்? உங்களுடைய மகள் ? ”
” வேண்டாம் அம்மா வேண்டாம்! ஒரு முஸ்லீம்
பெண்ணுக்கு ஆண் பிரசவம் பார்க்க எங்களின்
வேதத்தில் இடம் இல்லை  அதைவிட அவள்
செத்தாலும் பரவாயில்லை நான்
வருகிறேன் தாயே! ” கைகள் கூப்பி
விடை பெற்று இருளில்
மறைந்துபோனார்.
அவள் செய்வதறியாது வியந்து நின்றாள்.
கதவைத் தாழிட்டுவிட்டு நாவலைக்
கையில் எடுத்தாள்  விட்ட இடத்தில் தொடர
முயன்றாள்  ஆனால் முடியவில்லை.
மனதில் ஒரு நெருடல்
அதிக நேரம் ஆகவில்லை
மீண்டும் கதவு தட்டப்பட்டது.
ஒருவேளை அவர்தான் மனம் மாறி மீண்டும்
வந்துள்ளாரோ என்ற எண்ணத்தில் கதவைத்
திறந்து பார்த்தாள்
அது வேறொருவர் நடுத்தர வயதுடையவர்
நெற்றியில் பட்டை தீட்டியிருந்தது அவர்
ஒரு இந்து  வணக்கம் கூறிவிட்டு அவர்
சொன்னது அவளை வியப்பில் ஆழ்த்தியது.
” மிஸ்ஸியம்மா என் மனைவி பிரசவ
வலியால் துடிக்கிறாள் உடன் என்னோடு
வாருங்கள் அம்மா  அந்த இரு உயிரையும்
காப்பாற்றுங்கள் தாயே! ” அவரும்
கெஞ்சினார்.
மீண்டும் அதே பதிலைத்தான் அவள்
கூறினாள் தந்தையை அழைக்கவா என்று
கேட்டாள்.
” வேண்டாம் தாயே! எங்கள் ஹிந்து
சாஸ்த்திரத்தில் அதற்கு இடமில்லை என்
மனைவி செத்தாலும் சாகலாமே தவிர ஒரு ஆண்
அவளுக்கு பிரசவம் பார்க்க முடியாது
தாயே ” அவரும் ஏமாற்றத்துடன்
திரும்பினார்.
அவர் சென்றபின்பு அவள் அமைதி இழந்து
போனாள்  நாவலை மூடிவிட்டு படுக்கச்
சென்றாள்  உறக்கம் வரவில்லை  அப்போது
மீண்டும் கதவு தட்டப்படும் சத்தம் கேட்டு
குதித்தெழுந்தாள்.
கதவைத் திறந்து பார்த்தபோது
வேறொரு நபர்! அவரும் ஒரு இந்துதான்.
” மனைவிக்கு பிரசவ வலியா? ” இவளே
கேட்டாள்.
” ஆமாம் தாயே  அது எப்படி உங்களுக்குத்
தெரிந்தது? உடனே வந்து என் மனைவியைக்
காப்பாற்றுங்கள் மிஸ்ஸி. ” அவரின் கெஞ்சல்
” அப்பாவை எழுப்பவா? ” என்ன பதில் வரும்
என்று தெரிந்துதான் கேட்டாள்.
” அப்பாவா? வேண்டாம் தாயே  அது எங்கள்
சம்பிரதாயத்தில் இல்லை தாயே. நீங்கள்தான்
வரணும். ” அவர் உறுதியாகக் கூறினார்.
” இல்லை. நான் டாக்டர் இல்லையே? அப்பாதான்
வர முடியும் ” அவள் உண்மையைக்
கூறினாள்.
” அதை விட என் மனைவி சாகலாம். ”
என்றவாறே வந்த வழியே திரும்பினார்.
அதன்பின்பு அவளின் தூக்கம்
பறந்தோடியது.

இது இந்திய நாடு
இங்குள்ள கலாச்சாரமே வேறு பெண்கள்தான்
பிரசவம் பார்க்கவேண்டும் என்பதில்
நம்பிக்கைக்கொண்ட மக்கள் வாழும் நாடு.
இதற்கு என்னதான் தீர்வு ? பெண் டாக்டர்களே
இந்தியாவில் இல்லாத காலமாயிற்றே ?
தீவிரமாக யோசித்தாள் ஐடா என்ற அந்த
இருபது வயதுடைய அமெரிக்க இள நங்கை!
மறு நாள் மாலையில் பங்களா தோட்டத்தில்
ஐடா அமர்ந்து நாவல் படித்துக்
கொண்டிருந்த போது வீதியில் ஒன்றன்
பின் ஒன்றாக மூன்று சவ ஊர்வலங்கள் சென்று
கொண்டிருப்பதைப் பார்த்தாள் . அந்த
மூவரும் பிரசவ சிக்கலில் இரவில்
இறந்துபோன பதின்ம வயது பெண்மணிகள்
என்பதைத் தெரிந்து கொண்டபின் மனம்
வெதும்பினாள்.
இரவில் தோன்றிய உள்ளொளி அப்போது
முழு வடிவம் பெற்றது!
அப்போதே தனது கனவான அமெரிக்காவின்
சொகுசு வாழ்க்கையை தியாகம்
செய்து விட்டாள் ஐடா!
இந்தியப் பெண்மணிகளுக்கு உடனடி தேவை
பெண் மருத்துவர்கள் என்பதை அன்றே உணர்ந்து
கொண்டாள்.
அவர்களுக்காக தன்னையே
அப்போது அர்ப்பணம் செய்து கொண்டாள்.
அதை கடவுளின் அழைப்பாகவும் நம்பினாள்
அவள் திருமணம் பற்றிய எண்ணத்தையும் அன்றே
கைவிட்டாள்.

அதன்பின் நடந்தவை வரலாறு
1899 ஆம் வருடம் நியூ யார்க் நகரில்
கார்நெல் பல்கலைக்கழகமருத்துவக்
கல்லூரியில் ( Cornell Universty Medical
College ) சேர்ந்தாள் அதிலும் ஒரு
சிறப்பு  பெண்கள் மருத்துவம் பயில
அனுமதிக்கப்பட்ட முதல் வகுப்பு அது!
1899 ஆம் ஆண்டில் அவர் தேர்ச்சியுற்று
மருத்துவரானார் .
உடன் தமிழ் நாடு திரும்பி மருத்துவப்
பணியை பிணியாளிகளுக்கு,
குறிப்பாக பெண்களுக்கு செய்யவேண்டும்
என்ற ஆர்வம் கொண்டார். பலரிடம் தனது
திட்டத்தைக் கூறினார்.
மான்ஹாட்டான் நகரைச் சேர்ந்த வங்கியாளர்
ஷெள் ( Schell ) என்பவர் தமிழ் நாட்டு
பெண்களின் நலனுக்காக 10,000 அமெரிக்க
டாலர்களை அவரின் மனைவியின்
நினைவாக ஐடாவிடம் வழங்கினார்.
( அப்போது அதன் மதிப்பு மிகவும்
அதிகமாகும் )
அவர் தமிழ் நாடு திரும்பியபோது
அவரின் தந்தை வேலூரில் மருத்துவப்
பணியில் ஈடு பட்டிருந்தார்  அவர்
குடியிருந்த மிஷன் பங்களாவில் இரண்டு
வருடங்கள் டாக்டர் ஐடாவும் 2000
நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்தார் ..
1900 ஆம் ஆண்டில் அவரின் தந்தை மரணமுற்றார்
மருத்துவப் பணியின் முழுப்
பொறுப்பையும் ஐடா ஏற்றுக்கொண்டார்.
அமெரிக்காவிலிருந்து கொண்டு
வந்திருந்த நன்கொடையைப் பயன்படுத்தி
1902 ஆம் வருடம் ஒரு சிறு
மருத்துவமனையை வேலூரில் அமைத்து
அதற்கு ஷெல் மருத்துவமனை ( Schell
Hospital ) என்று பெயரிட்டார் .
சிகிச்சையும் மருந்துகளும் இலவசமாக
தரப்பட்டன.( தற்போது இது Mary Tabler
Schell Eye Hospital ) என்று கண்
மருத்துவமனையாக பெரிய அளவில்
இயங்கி வருகின்றது )
சுற்று வட்டார மக்கள் அதிக அளவில் அங்கு
வந்து பயன் பெற்றனர். வருடத்தில் 40,000
நோயாளிகளுக்கு சிகிச்சை
அளித்தார் .
அப்போது தமிழகத்தில் பரவலாக காணப்பட்ட
ப்ளேக் ( plague ) , காலரா , தொழுநோய்
ஆகியவற்றிலிருந்து மக்களைக்
காப்பாற்றப் போராடினார்.
தமிழ் நாட்டு பெண்களின் நல்வாழ்வுக்காக
தான் ஒருவர் மட்டும் முயற்சியை
மேற்கொள்வது இயலாத காரியம் என்பதை
அவர் உணர்ந்தார்.
பெண்களுக்கான தாதியர் பயிற்சிப் பள்ளி
நிறுவ எண்ணினார்  அப்போது
ஆசியாவிலேயே இது கேள்விப் படாத
ஒன்றாகும் சென்னைப் பல்கலைக்கழக
சம்மதத்துடன் இந்தியாவிலேயே முதல்
தாதியர் பயிற்சிப் பள்ளியை
நிறுவினார்.
1909 ஆண்டில் அவர் ஆரம்பித்த வீதியோர
கிளினிக் ( roadside clinic ) திட்டம்
கிராம மக்களிடையே பெரும்
வரவேற்பைப் பெற்றது  அவர் கிராமம்
கிராமமாகச் சென்று மரத்தடியிலும்,
குளத்தங்கரையிலும் அமர்ந்து ஏழை
எளியோருக்கு மருத்துவச் சேவை
புரிந்தார்.
ஆனால் அவருக்கு அப்போதும் திருப்தி
உண்டாகவில்லை. தானும் தன்னால்
உருவாக்கப்பட்ட தாதியராலும்
பெண்களுக்குத் தேவையான மருத்துவ
சேவையை வழங்குவது இயலாத காரியம்
என்பதை உணர்ந்தார்.
பெண் மருத்துவர்களை உருவாக்குவதே
அதற்கு ஒரே வழி என்பதை உணர்ந்தார்.
இந்த விபரீத எண்ணத்தைக் கேட்டவர்கள் இது நடக்கவே
நடக்காது அவரிடம் மூன்று மாணவிகள்
வந்தாலே பெரிய ஆச்சரியம் என்று கேலி
பேசினர். அப்போதிருந்த சமுதாய
அமைப்பு அப்படி! பெண் கல்வியே இல்லாத
காலம் அது! அந்த நிலையில் பெண்கள்
மருத்துவம் பயில்வதா ?
அரசு அனுமதியுடன் சென்னைப்
பல்கலைக்கழக அங்கீகாரத்துடன் 1918 ஆம் வருடம்
பெண் மருத்துவர்களுக்கான கல்லூரி
நிறுவப்பட்டது  அதில் சேர 151 பெண்கள்
மனு செய்திருந்தனர். அவர்களில் 17 பெண்கள்
தேர்வு செய்யப்பட்டு வகுப்பில்
சேர்க்கப்பட்டனர்  இதுவே கிறிஸ்துவ
மருத்துவக் கல்லூரியின் ஆர்ம்பம்.

1928 ஆம் வருடத்தில் வேலூர் டவுனுக்குள்
பெரிய மருத்துவமனை உருவாக்கப்பட்டது
அதுதான் இன்றைய சி.எம்.சி.
மருத்துவமனை
1928 ஆம் வருடத்தில் பாகாயத்தில் மலைகள்
சூழ்ந்த அழகிய பள்ளத்தாக்கில் பரவலான
நிலப்பரப்பில் மருத்துவக் கல்லூரியின்
வளாகம் அமைக்கப்பட்டது.
அப்போது நாட்டின் தந்தை மகாத்மா
காந்தி அவர்களும் கல்லூரியையும்
மருத்துவமனையையும் விஜயம் செய்து
சிறப்பித்தார்!
இன்று கிறிஸ்துவ மருத்துவக் கல்லூரி
இந்தியாவின் தலைசிறந்த மருத்துவக்
கல்லூரியாக விளங்குவதை நாடறியும்!
ஒரு தனிப்பட்ட பெண்மணி இவ்வளவு பெரிய
சாதனைப் புரிய நிறைய
பொருளாதாரம் தேவை இவரின்
மருத்துவப் பணியை இறைப்பணியாகவே
ஏற்று 40 கிறிஸ்துவ சபைகள் ஓரளவு
உதவின  ஆனால் அது போதாததால்
நன்கொடைகள் திரட்டும் நோக்கில் 1941 ஆம்
வருடம் அமெரிக்கப் பயணம் மேற்கொண்டார்.
தேவையான நிதி திரட்ட அவர்
அமெரிக்காவின் அனைத்து
பகுதிகளுக்கும் ( மாநிலங்களுக்கும் )
பிரயாணம் செய்தார்.அங்குள்ள
திருச்சபைகள் அவரின் நற்பணிக்கு ஆதரவு
நல்கியதோடு ஆண்டுதோறும் பொருள்
உதவிகள் செய்யவும் ஆர்வம்
காட்டின.
பொதுமக்களும் அவருடைய
புனிதப் பணியைப் பாராட்டி உதவினர்.
2 மில்லியன் அமெரிக்கப் பெண்மணிகளிடம்
ஆளுக்கு ஒரு டாலர் என்று 2 மில்லியன்
அமெரிக்க டாலர்கள் திரட்டினார்!
அதுபோன்று பல மில்லியன் டாலர்களுடன்
வேலூர் திரும்பி,
மருத்துவமனையையும் மருத்துவக்
கல்லூரியையும் நவீனப் படுத்தினார்.

1945 ஆம் ஆண்டில் மருத்துவக் கல்லூரியில்
ஆண்களும் சேர்த்துக்கொள்ளப்பட்டனர்.
இன்று அனைத்து வசதிகளுடனும் , நவீன
சிறப்புப் பிரிவுகளுடனும் , 2000
படுக்கைகள் கொண்டு, ஆசியாவின் மிகப்
பெரிய மருத்துவமனையாகவும் , உலகின்
மிகப் பெரிய மிஷன் மருத்துவமனையாக
விளங்குகிறது!
ஐடாவின் பெயர் உலகெங்கும் பரவியது.
1952 ஆம் வருடம் உலகின் சிறந்த 5
டாக்டர்களில் ஒருவராக டாக்டர் ஐடா
ஸோஃபியா ஸ்கடர் தேர்ந்தெடுக்கப்
பட்டார் .
டாக்டர் ஐடா ஸ்கடர் வேலூர் நகர
மக்களாலும், வட ஆற்காடு மக்களாலும்
பெரிதும் போற்றப்பட்டார். அவரை
பாசத்துடன் ஐடா அத்தை ( aunt Ida ) என்றே
அழைத்தனர்.
இந்திய நாட்டின் பெண்களின்
நல்வாழ்வுக்காக தமது வாழ் நாளை
அர்ப்பணித்த தியாகச் செம்மல் அவர்.
தாதியர் கல்வியையும், பெண்களுக்கான
மருத்துவக் கல்வியையும் இந்தியாவில்
அறிமுகப் படுத்திய முன்னோடி அவர்.

அவர் தமது முதிர் வயதில் கொடைக்கானல்
மிஷன் பங்களாவில் ஓய்வு பெற்றார். தமது
85 வது வயதில் ஒரு நாள் வழக்கம்போல்
தபால்களைப் பார்த்துக் கொண்டிருந்தார்.
அமெரிக்காவிலிருந்து வந்திருந்த
ஒரு தபாலில் ” டாக்டர் ஐடா , இந்தியா. ”
என்று மட்டும் முகவரி எழுதப்பட்டிருந்
தது. நாடு தழுவிய நிலையில் அவர்
அறியப்பட்டிருந்தார்.
இந்தியப் பெண்களுக்காக அவர் செய்த
மாபெரும் தியாகத்தையும்
சேவையையும் பாராட்டும் வகையில்
அவருடைய் நூற்றாண்டு தினமான ஆகஸ்ட் 12,
2000 நாளன்று அவரின் படமும் சி.எம்.சி.
மருத்துவக் கல்லூரியும்,
மருத்துவமனையும் பொறிக்கப்பட்ட
சிறப்பு தபால் தலை வெளியிட்டு
பெருமை சேர்த்தது இந்திய அரசு!
1960 ஆம் வருடம் மே மாதம் 24 ஆம் நாள்
அதிகாலையில் வழக்கம்போல் எழுந்தார்.
அவருக்கு வயது 90.
வழக்கத்திற்கு மாறாக தலை
சுற்றுவதாகக் கூறினார்.
அவருக்கு உதவும் தாதி , ” காப்பி
குடியுங்கள் அம்மா தலை சுற்றல்
நின்றுவிடும் ” என்றாள் .
அவர் , ” வேண்டாம் ” என்று பதிலளித்தார்.
ஐந்து நிமிடங்களில் அவர் இறைவனடி
சேர்ந்துவிட்டார்!
இவர் போன்றவர்கள் இந்தியா வந்ததினால்தான்
மருத்துவ துறை இத்தகைய அசுர வளர்ச்சி
கண்டிருக்கிறது என்பதை யாராவது மறுக்கமுடியுமா?

அன்பரே!
அயல்நாட்டில் பிறந்த ஒரு பெண்மணிக்கு நம் நாட்டைக்குறித்த எத்தனை கரிசனை!!!
அன்னை. ஐடா ஸ்கடர் அம்மையாருக்கிருந்த அற்பணிப்பும் , தியாகமும் இந்நாட்டில் பிறந்த நமக்குண்டா??

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...