எலிகள் குடும்பம் நடத்தின மோட்டல்…’

எலிகள் குடும்பம் நடத்தின மோட்டல்…’
இப்போது எப்படியிருக்கிறது?
நேரடி ஆய்வு!

பயணவழி உணவகங்களில் நடக்கும் தில்லுமுல்லுகளை, ‘மோசடி மோட்டல்கள்’ என்ற தலைப்பில்  04.10.17 அன்றைய தேதியிட்ட'ஜூனியர் விகடன்' இதழில் விரிவாக எழுதி இருந்தோம். தமிழகம் முழுவதும் மோட்டல்களில் நடக்கும் மோசடிகள், சுகாதாரச் சீர்கேடுகள் ஆகியவற்றை அம்பலப்படுத்தியது அந்தக் கட்டுரை.
அதைத் தொடர்ந்து உணவுப் பாதுகாப்புத் துறை மூலமாக நடவடிக்கைகள் எடுத்து வரப்படுகின்றன. 

முதல் கட்டமாகக் காஞ்சிபுரம் மாவட்டம் சென்னை - திருச்சி தேசிய நெடுஞ்சாலையில் உள்ள தந்தை பெரியார் பயணவழி உணவகத்துக்குத் தடை ஆணை உத்தரவு வழங்கி அதிரடி காட்டி இருக்கிறார் உணவு பாதுகாப்புத் துறை மற்றும் மருந்து நிர்வாகத் துறை ஆணையர் அமுதா.

இதையடுத்து மாமண்டூர் பயணவழி உணவகத்தில்  மராமத்துப் பணிகள் நடைபெற்று வருகின்றன. ''அனைத்துப் பணிகளும் நிறைவடைந்தால்தான் மோட்டலை இயக்க முடியும்'' என காஞ்சிபுரம் உணவுப்பாதுகாப்புத் துறை அதிகாரிகள் கறார் காட்டி வருகிறார்கள்.

''குறை இருந்தது என்பது உண்மைதான்!''

இந்த நிலையில் மாமண்டூர் மோட்டலுக்குச் சென்றோம். பேருந்துகள் இல்லாமல் வெறிச்சோடிக் கிடந்தது மோட்டல். சமையல்கூடங்களில் டைல்ஸ் ஒட்டிக்கொண்டும், டேபிள்களுக்குப் பெயின்ட் அடித்துக்கொண்டும் இருந்தனர்.

மோட்டல் ஒப்பந்ததாரர் ராஜ்குமாரிடம் பேசினோம். “20 வருடமாக இருந்த இந்த மோட்டலில் இவ்வளவு புகார்கள் வந்ததில்லை. இப்போதுதான் அதிகமாகப் புகார்கள் வந்திருப்பதாகச் சொல்கிறார்கள்.

இதுவரை இலவசமாக இருந்த கழிப்பறையைச் சில மாதங்களுக்கு முன்புதான் கட்டணக் கழிப்பறையாக மாற்றினார்கள்.

இங்குள்ள கழிவறைக்குத் தனியாக டெண்டர் விட்டுவிட்டார்கள். சிறுநீர் கழிக்க 5 ரூபாய் என்பதால், மக்களுக்குக் கோபம் வந்திருக்கலாம். எங்கள் தரப்பிலும் குறை இருந்தது என்பது உண்மைதான்.

அதை நாங்கள் சரிசெய்து வருகிறோம். பழைய பில்டிங் என்பதால் தண்ணீர் ஒழுகுகிறது.  'ஏழு அடி உயரத்துக்கு டைல்ஸ் ஒட்டவேண்டும்' என்றார்கள் அதிகாரிகள். தற்போது அவற்றைச் சரிசெய்து வருகிறோம். இந்த மோட்டலைப் பொறுத்தவரை, எல்லா விலையுமே குறைந்த அளவில்தான் இருக்கிறது.

தமிழ்நாடு முழுவதும் உள்ள மோட்டல்களில் நாங்கள் மட்டும்தான் எம்.ஆர்.பி விலையில் உணவுப்பொருள்களை விற்கிறோம். மற்ற எந்த மோட்டலிலும் இதுபோல் விற்பனை செய்வது கிடையாது. இங்கு மட்டும்தான் அம்மா வாட்டர் எந்த நேரத்திலும் கிடைக்கும். கட்டணக் கழிப்பிடத்தை இலவசமாகக் கொடுக்க அரசு முன்வர வேண்டும்” என்றார்.

''எலிகள் குடும்பம் நடத்தின!''

காஞ்சிபுரம் உணவுப் பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ராமகிருஷ்ணனிடம் பேசினோம். “தினமும் 400 பேருந்துகள் மாமண்டூர் பெரியார் பயணவழி உணவகத்துக்கு வந்து போகின்றன. 

ஒரு பேருந்துக்கு 10 பேர் எனக் கணக்கிட்டாலே தினமும் 4,000 பேர் அங்கே சாப்பிடுவார்கள்.
அத்தகைய இடங்களில் தயார் செய்யப்படும் உணவுகள் மிகவும் சுத்தமான முறையில் இருக்க வேண்டும். 'ஜூனியர் விகட'னில் செய்தி வெளியிட்டதைக் கண்டு நேரில் சென்று பார்த்தோம். 

அப்போது சமையல் கூடமும் சேமிப்பு அறையும் மிகவும் மோசமான நிலையில் இருந்தன.
குடிப்பதற்கும் சுத்தமான தண்ணீர் வழங்கவில்லை. எலிகள் குட்டிப் போட்டு குடும்பம் நடத்திக்கொண்டிருந்தன. உணவுப் பொருள்கள் தரையில் சிதறிக்கிடந்தன. கழிவு நீர் போகாமல் சமையல்கூடத்திலேயே தேங்கி இருந்தது. சமைக்கும் இடமும் பாத்திரம் கழுவும் இடமும் ஒரே இடத்தில் இருந்தது.

ஆணையர் நடவடிக்கை!

ஆய்வுக்குப் பின், ‘இனி, இதுபோல் செய்யக்கூடாது. மீறினால் நடவடிக்கை எடுப்போம்’ என அறிவுறுத்திவிட்டு வந்தோம்.
ஆனால், அதை அவர்கள் கண்டுகொள்ளவே இல்லை. அதைத் தொடர்ந்தும் புகார்கள் வந்துகொண்டிருந்தன. 

இதனால் மீண்டும் அந்த உணவகத்துக்குச் சென்று ஆய்வு நடத்தினோம். நாங்கள் கூறியது எதையுமே அவர்கள் செய்யவில்லை.
இதனால் தமிழ்நாடு உணவுப் பாதுகாப்புச் சட்டம் 2006, பிரிவு 32-ன்படி அவர்களுக்கு இம்ப்ரூவ்மென்ட் நோட்டீஸ் கொடுத்தோம். அதற்கான கால அவகாசம் முடிந்தபின், மீண்டும் அங்கு ஆய்வு நடத்தினோம். 

அப்போதும் தந்தை பெரியார் பயணவழி உணவகம் தரப்பில்  எதுவும் செய்யாமல் அலட்சியம் காட்டினார்கள்.
பிரிவு 34-ன்படி அவசரத் தடை ஆணை உத்தரவு வழங்க உணவுப் பாதுகாப்புத் துறை ஆணையருக்குப் பரிந்துரை செய்தோம். நாங்கள் குறிப்பிட்டுள்ளவற்றைப் பார்த்துவிட்டு ஆணையரும் அதற்கு அனுமதி கொடுத்தார்.

அதன்பிறகு, ‘நாங்கள் எல்லாக் குறைகளையும் சரிசெய்துவிடுகிறோம்’ என மோட்டல் தரப்பில் உறுதியளித்தார்கள். அதன்பிறகே தற்போது வேலை நடந்துவருகிறது. நாங்கள் குறிப்பிட்டுள்ள குறைகளை நிவர்த்தி செய்தால்தான் தடை உத்தரவை ரத்து செய்வோம். 

புகாருக்கு வாட்ஸ்அப் எண்!

இதுபோன்ற மோட்டல்களில் உணவு சாப்பிடுபவர்கள் தமிழ்நாடு முழுவதும் பயணிப்பவர்களாக இருக்கிறார்கள். மஞ்சள்காமாலை, டைபாய்டு போன்ற தொற்றுநோய்கள் ஏற்படும்போது அது தமிழகத்தின் மற்ற பகுதிகளுக்கு எளிதில் பரவ வாய்ப்பு அதிகம்.
காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து மோட்டல்களையும் தீவிரமாகக் கண்காணித்து வருகிறோம். 

தமிழகத்தில் உள்ள மோட்டல்கள், முன்னெச்சரிக்கையாக இந்த நடவடிக்கையை எடுத்துக்கொள்ளலாம்.
இனி அடுத்தடுத்த மோட்டல்களுக்கும் இந்த அதிரடி தொடரும். மோட்டல்களில் சுகாதாரமற்ற உணவுப்பொருள்கள் வழங்கினால், 

அவற்றை எங்களுக்குத் தெரிவிக்கும் வகையில் 9444042322 என்றவாட்ஸ்அப் எண்ணை அறிமுகப்படுத்தி இருக்கிறோம்.

காஞ்சிபுரம் மாவட்டத்தில் இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட புகார்கள் வந்திருக்கின்றன” என எச்சரிக்கிறார்.

பயணிகளின் உடல்நலத்தையும் மோட்டல்கள் நிர்வாகத்தினர் கவனத்தில்கொள்ள வேண்டும்.

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...