வத்தலக்குண்டில் பள்ளி அருகில் உள்ள கடைகளில் சிறுவர், சிறுமியர்களின்,
உயிருக்கு ஆபத்தை உண்டாக்கும் "பேட்டரி லைட்' மிட்டாய்கள்
விற்கப்படுகின்றன. உணவு கட்டுப்பாட்டு துறையினர் அனைத்து கடையிலும் சோதனை
செய்து, அத்தகைய மிட்டாய் விற்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும்.
பள்ளி செல்லும் சிறுவர்களை கவர்ந்திழுப்பதற்கு சில "டுபாக்கூர்' நிறுவனங்கள் வித்தியாசமான தின்பண்டங்களை விற்பனை செய்து வருகின்றன. இந்த வகையில், சூயிங்கம், பாலீதீன் பைகளில் அடைத்து வைத்துள்ள தின்பண்டங்களை கடைகளில் விற்கக் கூடாது, என உணவு பாதுகாப்பு சட்டம் கூறுகிறது.
திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் பள்ளிகளின் அருகில் உள்ள கடைக்காரர்கள், புதிதாக பேட்டரி பொருத்திய சிறிய விளக்குடன் "லிப்ஸ்டிக் கேண்டி லைட்' என்ற மிட்டாய்களை விற்கின்றனர். ஒரு மிட்டாய் 5 ரூபாய்க்கு விற்கப்படுகிறது.
மிட்டாயின் அடிப்பகுதியில் பட்டன் உள்ளது. அதை அழுத்தினால், விளக்கு எரிகிறது. மிட்டாயின் கலருக்கு ஏற்ப வித,விதமான கலர்களில் விளக்கு எரியும்படி தயாரித்துள்ளனர். விளக்கை எரிய வைத்துக்கொண்டே, சிறுவர்கள் சாப்பிடுகின்றனர். விளக்கிற்கும், மிட்டாய்க்கும் அரை இஞ்ச் கூட இடைவெளி இல்லை. சிறுவர்கள் ஆர்வத்தில் விளக்கையும் சேர்த்து சாப்பிட வாய்ப்பு உள்ளது. பேட்டரி இருக்கும் பகுதி தனியாக மூடப்பட்டாலும், சுலபமாக திறந்து பேட்டரியை வெளியே எடுத்து விடலாம். பேட்டரியை வாயில் வைத்து கடிக்கவும் வாய்ப்பு உள்ளது.
உணவு கட்டுப்பாட்டுத்துறையினர் இவற்றை கண்டுகொள்வதில்லை. அப்படியே சோதனையிட வந்தாலும், நல்ல "கவனிப்பு' கிடைப்பதால், தடை செய்யப்பட்ட திண்பண்டங்கள் விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுப்பதில்லை. இத்தகைய மிட்டாய்களை கடையில் விற்பதற்கு தடை விதிக்க வேண்டும்.
வட்டார உணவு கட்டுப்பாட்டு அதிகாரி ரமேஷ் கூறுகையில், "பேட்டரி லைட் மிட்டாய்கள் விற்பது குற்றம். அந்த மிட்டாய்கள் பறிமுதல் செய்யப்பட்டு, அவற்றை விற்கும் கடைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும்,''என்றார்.
No comments:
Post a Comment