.மின் சிக்கனம் காலத்தின் கட்டாயம்


அப்பப்பா... கரன்ட் இல்லாம இருக்கறப்போ...! என்று, மானாவரியாக "கரன்ட்-கட்' ஆகும் சமயங்களில், பற்களை தாண்டி வந்து விழும் சொற்கள் ஏராளம். ஏன் இப்படி பெருமூச்சு விடுகிறீர்கள். நாங்கள் சொல்வதைக் கேளுங்கள்; மின்சக்தியை சேமியுங்கள் என்று, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம், கோவை வட்டம் தெரிவிக்கிறது. சொன்னதோடு மட்டுமல்லாமல், மாற்று எரிசக்தியை பயன்படுத்துவதில், தமிழகத்துக்கே முன்னுதாரணமாக திகழ்கிறது, கோவை மாவட்டம்.

சிறு, குறு தொழில்கள் நிறைந்தது, கோவை மாவட்டம். இங்கு, மின் சக்தியின் பயன்பாடு மற்ற நகரங்களைக் காட்டிலும் அதிகம். 24 மணி நேரத்தில், ஒரு மணி நேரம், இரண்டு மணி நேரம் என்றிருந்த மின் தடை, இப்போது தலைகீழாக மாறிவிட்டது. ஒரு மணி நேரமோ, இரண்டு மணி நேரமோ மின்சாரம் இருந்தாலே பெரிய ஆச்சரியம். இந்த குறுகிய கால மின்சார வினியோகத்தால், பலர், தொழில்களைத் தொடர முடியாமல் தவிப்பது வேதனை.ஏனிந்த மின் தடை என்று காரணம் கேட்டால், மின் உற்பத்தி இல்லை; இயற்கை பொய்த்துவிட்டது; அனல் மின் நிலையங்கள் சீராக இயங்கவில்லை; காற்றாலை மின் உற்பத்தி இல்லை; மத்திய தொகுப்பில் இருந்து மின் உதவி இல்லை என, பலப்பல காரணங்கள். தமிழ்நாடு மின்சார வாரியமும் இப்படித்தான்; இது தான் முடியும் என தெரிவித்து விட்டது. இதனால், மாற்று எரிசக்தியை பயன்படுத்துங்கள் என, யோசனையும் கூறி உள்ளது. சூரிய மின் சக்தியை பயன்படுத்தினால், மின்சாரத் தேவை குறையும்; சூரிய மின்சக்தி திட்டத்தை மக்கள் இயக்கமாக மாற்றுங்கள் என, அரசும் உத்தரவிட்டு விட்டது.

தமிழகமெங்கும், டிச., 14 முதல் 20ம் தேதி வரை, மின் சிக்கன வாரம் கடைப்பிடிக்கப்படுகிறது. இந்த வாரத்தில், மின்சேமிப்பை வலியுறுத்தி வரும் மின் வாரியமே, முன்னோடியாக இருந்து, மக்களுக்கு வழிகாட்டினால் என்ன? என்ற யோசனை தோன்றி, அதை நடைமுறைப்படுத்தி உள்ளது, கோவை வட்ட, தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மானக் கழகம்.
இக்கழகத்தின், கோவை முதன்மைப் பொறியாளர் தங்கவேலு, தங்கள் அலுவலகத் தேவைக்கு, சூரிய மின் ஆற்றலைப் பயன்படுத்தி வருகிறார். 

அவர் கூறியதாவது: மின் சேமிப்பு குறித்து, முதலில் மாணவர்களிடம் புகுத்தினால் தான், நல்ல பலன் கிடைக்கும். வீட்டில் அவர்கள் இருக்கும் நேரத்தில், மின் சிக்கனத்தை கடைப்பிடிக்கும்போது, சேமிக்கப்படும் மின்சாரம், பிற தேவைகளுக்கு பயன்படும். ஆகையால், கோவையில் மட்டும், இன்று வரை ஐம்பது பள்ளிகளில், மின் சக்தி சேமிப்பு பற்றி பேசி விட்டோம். குண்டு பல்புகளை பயன்படுத்துவதால், மின்சாரம் அதிகம் வீணாகிறது. சாதாரண டியூப் லைட் 40 வாட்ஸ் என்றாலும், அதில் உள்ள சோக் 20 வாட்ஸ் மின்சாரத்தை இழுக்கும். மொத்தம் 60 வாட்ஸ் மின்சாரம் செலவாகும். ஆதலால், எலக்ட்ரானிக் சோக் கொண்ட டியூப்லைட் பயன்படுத்த வேண்டும்.மாற்று எரிசக்தியான, சூரிய சக்தியை பயன்படுத்துவதை ஊக்குவிக்க, கோவையில் எனது அறைக்கு தேவைப்படும் மின்சாரத்தை, சூரிய சக்தியைக் கொண்டே உற்பத்தி செய்து பயன்படுத்துகிறேன். தமிழகத்திலேயே, இங்கு தான், முதன் முறையாக, மின்வாரிய அலுவலகத்தில், சூரிய சக்தி பயன்படுத்தப்படுகிறது. அலுவலகத்தின் மேல் மாடியில், தனியார் நிறுவனம் சூரிய கலன் (பேனல்) அமைத்து கொடுத்துள்ளது. இதிலிருந்து 400 வாட்ஸ் மின்சாரம் உற்பத்தியாகிறது. இதற்கு, சுமார் ஒரு லட்சம் ரூபாய் செலவாகி உள்ளது. இந்த மின்சாரம் தான், அலுவலக செயல்பாடுக்கு பயன்படுகிறது.
ஆண்டில் 365 நாளில், குறைந்தது 300 நாள் வரை கிடைக்கும் சூரிய சக்தியில், மின்சாரம் உற்பத்தி செய்யலாம். இதைக் கொண்டு, வீட்டில் ஹீட்டர் முதலியவற்றுக்கு பயன்படுத்தலாம். கோவைக்கு இப்போது, 2000 மெகா வாட் மின்சாரம் தேவைப்படுகிறது. ஆனால், 1500 முதல் 1600 மெகா வாட் மின்சாரம் தான் கிடைக்கிறது. பற்றாக்குறை தேவையான 400 மெகா வாட்டில், சூரிய சக்தியை பயன்படுத்தினால், 100 மெகா வாட் வரை பற்றாக்குறை குறையும்.இவ்வாறு, அவர் கூறினார்.

மின்வாரியத்தை மட்டுமே நம்பி இருக்காமல், இயற்கையில் கொட்டிக்கிடக்கும் சக்தியை, மனித ஆற்றலின் மூலம் தேவைக்கேற்ப மாற்றி பயன்படுத்துவது காலத்தின் கட்டாயம்.



மின்சேமிப்பு யோசனைகளில் சில...


:* சாதாரண குமிழ் பல்புகளுக்கு பதிலாக, கையடக்க குழல் பல்புகளை (சிஎப்எல்/எல்இடி) விளக்குகளை உபயோகிக்கலாம்.
* பகல் நேரத்தில் முடிந்தளவு, மின்விளக்குகளை பயன்படுத்துவதை தவிர்க்க வேண்டும்.
* மின் விசிறிகளின் இறக்கைகளை அவ்வப்போது சுத்தம் செய்யவும்.
* மின் சக்தி சேமிப்பான்களை குளிர்சாதன கருவிகளில் உபயோகிக்கவும்.

சூரியனுக்கு நெருக்கமான குஜராத் :


குஜராத்தில், தொடர்ந்து மூன்றாவது முறையாக, முதல்வர் பதவியை அலங்கரித்திருப்பவர் நரேந்திர மோடி. காரணம், குஜராத் மாநிலம் எல்லா வகையிலும் முன்னிலையில் உள்ளது. கடந்த 10 ஆண்டுகளில், குஜராத்தில் ஏற்பட்டுள்ள வளர்ச்சி பிரமிப்பை தருகிறது. இம்மாநிலம், மின்சார உற்பத்தியில் தன்னிறைவை தாண்டி, மற்ற மாநிலங்களுக்கு விற்பனை செய்யும் அளவுக்கு முன்னேற்றம் அடைந்துள்ளது. எதிர்கால தேவைகளை, கருத்தில் கொண்டு நீண்டகால திட்டங்கள் அங்கு செயல்படுத்தப்படுகின்றன. குறிப்பாக, மேலும், மேலும் மின்சார உற்பத்தியை அதிகரிக்கும் நடவடிக்கையில் குஜராத் நிர்வாகம் ஈடுபட்டு வருகிறது. வீட்டு கூரைகளில், சூரிய ஒளி மின்சார உற்பத்தி அமைப்புகளை அமைக்க, மக்களை அரசு ஊக்கப்படுத்தி வருகிறது. மாநிலத்தில் சுற்றுச்சூழலுக்கு கேடு விளைவிக்காத சூரிய ஒளியில் இருந்து, மின்சாரம் தயாரிக்கும் முறையை பிரபலப்படுத்தி வருகிறது. இதற்காக, காந்தி நகரில் மாதிரி சோலார் சிட்டியை உருவாக்கியுள்ளது. இதன் ஒரு அம்சமாக, மெக்ஸானா மாவட்டம் சந்த்ராசன் கிராமத்தில், சோலார் அமைப்பு ஏற்படுத்தப்பட்டுள்ளது. 

இதன் சிறப்பு அம்சம் என்னவெனில், வாய்க்காலுக்கு மேலே அமைக் கப்பட்டு இருப்பது தான். சூரிய ஒளியை மின் சக்தியாக மாற்றும் கூரை, தண்ணீர் வாய்க்காலை வெயில் தாக்காத வகையில் போடப்பட்டுள்ளது. சர்தார் சரோவார் அனைத்து திட்டத்தின் சனாந்த் கிளை வாய்க்காலில், 750 மீட்டர் நீளத்துக்கு சூரிய ஒளி மின்சார கூரை அமைக்கப்ட்டிருக்கிறது. 
இதன்மூலம், ஆண்டுக்கு 16 லட்சம் யூனிட் மின்சாரம் தயாரிக்க முடியும் என்பதுடன், வாய்க்காலில் ஓடும் தண்ணீர் ஆவியாவதில் இருந்து, 90 லட்சம் லிட்டர் நீர் தடுக்கப்படும் என்பது சிறப்பு அம்சமாகும். இத்திட்டத்தை, குஜராத் மாநில மின் உற்பத்தி கழக நிறுவனம் உருவாக்கி இருக்கிறது. சோலார் மின் உற்பத்தி குறித்து, மத்திய அரசின் எரிச்தி மற்றும் பெட்ரோ கெமிக்கல்ஸ் துறையின் முதன்மை செயலாளர் கூறுகையில், ""நாட்டின் மின் தேவையை கருத்தில் கொண்டு, சூரிய ஒளி மின்சார திட்டத்துக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. அரசு மற்றும் தனியார் பங்களிப்புடன் வீட்டு கூரைகளில், சோலார் மின் உற்பத்தி அமைப்புகள் ஏற்படுத்தப்பட்டு வருகின்றன. இதன் மூலம் கிடைக்கும் மின்சாரத்துக்கு, வீட்டு உரிமையாளருக்கு யூனிட்டுக்கு 3 ருபாய் தரப்படும். அரசு கட்டடங்களில் 4 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யும் வகையில், சோலார் பேனல்கள் அமைக்கப்பட இருக்கிறது. சூரிய ஒளி மின்சார உற்பத்தியில் குஜராத் மாநிலம் தான் முன்னிலையில் இருக்கிறது. மெஹ்சானா, ராஜ்கோட், சூரத், வதோரா போன்ற நகரங்களில், குஜராத் மாநிலத்துடன் இணைந்து, சோலார் சிட்டியை அமைக்க முயற்சி எடுத்து வருகிறோம்,'' என்றார்.

மருதமலையில் யாமிருக்க பயமேன்:


மன அமைதியை தேடி கோவிலுக்கு செல்வது தான், பெரும்பாலானோரின் விருப்பம். கோவிலுக்கு சென்று வந்த பின், மனதில் குப்பையாக கிடந்த சுமை, ஏதோ குறைந்தது போன்ற உணர்வு தென்படுவது இயல்பு. இப்படி, கோவையில், முக்கிய ஆன்மிக ஸ்தலமாக இருப்பது மருதமலை முருகன் கோவில். இங்கு, மின்சார விநியோகத்துக்கு "யாமிருக்க பயமேன்' என்று, முருகப் பெருமானின் மொழியிலேயே சொல்ல வைத்திருக்கிறது சோலார் சக்தி. சூரிய மின்சக்தியை பயன்படுத்தி, மின் தேவையை பெருமளவு பூர்த்தி செய்துகொண்டு, பிற கோவில்களுக்கு, சிறந்த உதாரணமாக திகழ்கிறது, இக்கோவில்.கோவையில் இருந்து சுமார் 12 கி.மீ., தொலைவில் இருந்தாலும், மலை மீது அமர்ந்து அருள்பாலிக்கிறார் சுப்ரமணிய சுவாமி. சுற்றிலும் வனம் சூழ்ந்துள்ளதால், அதிகாலை மற்றும் அந்தி மயங்கும் மாலையில், வெளிச்சம் குறைவாகத் தான் இருக்கும். "அடிக்கடி வரும்' மின்சாரத்தை மட்டுமே நம்பினால், பெரும்பாலான நேரங்களில், இருட்டில் இருக்க வேண்டும். ஜெனரேட்டர் உதவியுடன் நிலைமையைச் சமாளித்தாலும், அதற்கானச் செலவு கட்டுக்கடங்காமல் போனது. வன விலங்குகளின் அச்சுறுத்தலும் இருப்பதால், ஒரு வித பீதி நிலவி வந்தது. இதிலிருந்து விடை கொடுத்தது, மாற்று எரிசக்தியான சூரிய சக்தி.

மருதமலை கோவிலின் மொத்த பரப்பு 13 ஏக்கர். கோவில் பிரகாரத்தில் ஏழு விளக்குகளும், கோவிலின் அன்னதானம் மற்றும் பயணிகள் காத்திருப்பு மண்டபத்தில், சோலார் மின் ஆற்றலில் எரியும், சி.எப்.எல்., விளக்குகளும் அமைக்கப்பட்டன. சோலார் மின்விளக்கு ஒன்றுக்கு 30 ஆயிரம் ரூபாயும், மண்டபத்துக்கு 90 ஆயிரம் ரூபாயும் செலவிடப்பட்டுள்ளது.
திருக்கோவிலில், மொத்தம் 647 படிகள் உள்ளன. இனி வரும் காலங்களில், மலைப்பாதையைப் போலவே படிகளிலும், சோலார் விளக்குகள் அமைக்கும் திட்டமும் வைக்கப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. திருக்கோவில் நிர்வாகம் தற்போது, மாதம் ஒன்றுக்கு 40 ஆயிரம் ரூபாய், மின் கட்டணம் செலுத்துகிறது.சோலார் விளக்குகள் மூலம், மின் கட்டணம் வெகுவாகக் குறைவதோடு, மின் சேமிப்பும் கூடும். இங்கு அமைக்கப்பட்டுள்ள சோலார் விளக்குகள், மாலை சூரிய ஒளி குறையும் போது, தாமாகவே எரியத் துவங்கும்; அதிகாலை சுமார் 6.00 மணியளவில், அதுவே அணைந்து விடும். இந்த தானியங்கி அமைப்பின் காரணமாக, இவற்றைப் பராமரிக்க தனியாக ஆட்கள் தேவையில்லை. மருதமலை கோவில் பிரகாரம் மற்றும் மலைப்பாதையில், 30 சோலார் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. சூரிய சக்தி மூலம் மின்சாரச் செலவை கணிசமாக மிச்சப்படுத்தமுடியும். தமிழகத்தில் உள்ள மற்ற கோவில்களில், இத்திட்டத்தை நடைமுறைப்படுத்த, அரசு முன்வரலாமே?

மானியம் இருக்க... கவலை எதற்கு...?


ஒரு நாளைக்கு, மூன்று மணி நேரம் என ஆரம்பித்து, இன்று 12 மணி நேரம்... 16 மணி நேரம்... 18 மணி நேரம் என அதிகரித்துக் கொண்டே போகிறது, மின் தடை. "இனி, ஒரு பிரயோஜனமும் இல்லை' என உணர்ந்த மக்கள், "இன்வர்ட்டர்'களை வாங்கினார்கள். ஆனால் , அந்த இன்வர்ட்டரில் சேமிக்கும் அளவுக்கான மின்சார வினியோகம் கூட இல்லாத நிலையில், அதுவும் பல வீடுகளில் பயனற்றுக் கிடக்கிறது. மாற்று வழியாக, சூரிய ஒளி மூலம் அவரவர் வீடுகளுக்கான மின்சாரத்தை அவரவர்களே தயாரித்துக் கொள்ளும் சோலார் முறையை அரசாங்கம் பரிந்துரைத்து, மானியமும் வழங்குவதாக அறிவித்திருக்கிறது. மக்கள் மத்தியில், சோலார் பிளான்ட் மூலம் மின்சாரம் தயாரிக்கும் முறை பற்றிய விழிப்புணர்வு அதிகரிக்க ஆரம்பித்திருக்கிறது. தமிழகத்தில், சூரிய சக்தி அதிகளவில் கிடைக்கிறது. ஆனால், இதற்கு தேவைப்படும் அதிகப்படியான ஆரம்ப கட்ட முதலீடு சற்று அதிகம். அதனால் தான், மத்திய அரசாங்கம், அதற்கு அதிகபட்சம் 40 சதவீதம் வரை, மானியம் வழங்க முடிவெடுத்துள்ளது.

ஒரு நாளைக்கு 4 டியூப் லைட், ஒரு மின் விசிறி, ஒரு டி.வி, ஒரு ஏ.சி., ஒரு கம்ப்யூட்டர், சிறிது நேரம் மின் மோட்டார் என மின் சாதனங்களை சுமார் 12 மணி நேரம் பயன்படுத்த, ஒரு கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதை சூரியஒளி மூலம் பெற, சோலார் தகடுகள் மற்றும் பேட்டரி அமைப்பதற்கு, சுமார் இரண்டு லட்ச ரூபாய் செலவு பிடிக்கும். மானியமாக, 81 ஆயிரம் ரூபாய் வரை கிடைக்கும். மீதமுள்ள 1.19 லட்சத்தை நீங்களே செலவு செய்ய வேண்டும். பேட்டரி இல்லாமல் நேரடியாக மின்சாரம் பெற்று உடனுக்குடன் பயன்படுத்தும் வகையிலான சாதனத்தை அமைக்க, 25 ஆயிரம் மானியமாக வழங்கப்படும். ஒரு பேன், ஒரு லைட் என்று மின்சாரத் தேவையை குறைத்துக் கொண்டால், குறைந்தபட்சம் 20 ஆயிரத்தில் இருந்து சோலார் தகடுகள் அமைக்கலாம். கம்பெனிகள், கல்வி நிறுவனங்கள் உட்பட இடங்களுக்கு, அதிகபட்சமாக 100 கிலோ வாட் மின்சாரம் தேவைப்படும். இதற்கான சோலார் தகடுகள் அமைக்க 1.8 கோடி செலவாகும். மானியத் தொகையாக அதிகபட்சம் 72 லட்சம் கிடைக்கும். 

பணத்தை மட்டுமல்ல... இதையும் சேமிக்கலாம்..!


எரிசக்தி, இன்று அபரிமிதமாக, பொதுமக்களுக்கு உதவி வருகிறது. இந்த சக்தியை சேமிக்க வேண்டுமென்றால், வீடுகளில் தேவையில்லாத சமயங்களில் விளக்குகளை அணைத்து விட வேண்டும். குழாய் மின் விளக்குகள் மற்றும் பல்புகள் ஆகியவற்றிலும், அவை பொருத்தும் பொருள்களிலும் சேரும் தூசுக்களை அவ்வப்போது சுத்தம் செய்யுங்கள். ஐ.எஸ்.ஐ., முத்திரையிட்ட மின்சார சாதனங்களையும், கருவிகளையுமே பயன் படுத்துங்கள். குழாய் விளக்குகளையும், பல்புகளையும் அதன் வெளிச்சம் தடைபடாத இடத்தில் பொருத்த வேண்டும். இன் கான்டசென்ட் (ஒளி இழைகள் சூடாவதால் வெளிச்சம் தருகிற) விளக்குகளான பல்புகளை விட, காம்பாக்ட் புளூரசண்ட் பல்பு, மூன்றில் ஒரு பங்கு குறைவாக மின் சக்தியை, எடுத்துக் கொள்கின்றன. வெளியிடும் வெளிச்சமும் குறைவதில்லை. காம்பாக்ட் புளூரசண்ட் பல்புகள், இன்கான்டசென்ட் பல்புகள் அளிக்கும் வெளிச்சத்தைப் போலவே, இதமாக இருக்கும். அதே சமயத்தில் 75 சதவீதம் குறைவான மின்சாரத்தையே எடுத்துக் கொள்ளும்.சி.எப்.எல்., சற்றே விலை கூடுதலானவையாக இருந்தாலும், அவற்றுக்கான முதலீடு பயனுள்ளது. அவை அளவில் சிறியவை. சிக்கனமானவை, அதிக வெளிச்சமும் கூடுதல் வண்ணத்தையும் தருபவை. ஒரு நாளைக்கு 4 மணி நேரங்களுக்கு மேலாக எரியும் விளக்குகள் உள்ள இடங்களில், காம்பாக்ட் புளோரசண்ட் பல்புகளை உபயோகியுங்கள். 75 வாட் சக்தியுள்ள இரண்டு பல்புகளுக்கு பதிலாக, இரண்டு 15 வாட் புளோரசண்ட் பல்புகளைப் பயன்படுத்தினால், ஒரு வருடத்துக்கு 18 கிலோ வாட் மணிநேர சக்தி மிச்சமாக்கலாம். சமையலில், எரிசக்தியைக் குறைவாக பயன்படுத்தும் அடுப்புகளைப் பயன்படுத்துங்கள். சமைக்கும்போது, பாத்திரங்களை மூடிவைப்பதனால் சமைக்கும் நேரமும் எரிசக்தி உபயோகமும் குறைகிறது. மறுசுழற்சி மூலம் உருவாகும் தாள்களை பயன்படுத்துங்கள். மறுசுழற்சித் தாள்களை, குறைவான இயற்கை வள ஆதாரங்களையும் குறைவான விஷத்தன்மையுள்ள வேதிப் பொருட்களையும் பயன்படுத்தித் தயாரிக்க முடிகிறது. விவசாயத்தில் எரிசக்தியை சேமிக்கும் முறைகள்: ஐ.எஸ்.ஐ. முத்திரையுள்ள பம்புகள் பயன்படுத்துவதன் மூலம், சிறியதும் பெரியதுமான பழுதுகளால் ஏற்படும் பாதிப்புகளைக் குறைத்து, பம்பின் திறனை 25 சதவீதத்திலிருந்து 35 சதவீதம் வரை மேம்படுத்தலாம். பெரிய வால்வு அமைப்பதால், கிணற்றிலிருந்து நீர் எடுக்க குறைவான எரிபொருளும், மின்சக்தியுமே தேவைப்படும் என்பதால், மின்சார, டீசல் உபயோகம் குறையும். குழாய்களில் வளைவுகளும் இணைப்பான்களும் எந்த அளவுக்கு குறைவாக உள்ளனவோ, அந்தளவுக்கு மின்சக்தியை அதிகமாகச் சேமிக்க முடியும். குழாய்களில், சாதாரணமான வளைவுகளை காட்டிலும், கூர்மையான வளைவுகளால் தேய்மானம் 70 சதவீதம் அதிகமாகும். குழாயின் நீளத்தை 2 மீட்டர் குறைத்தால், ஒரு விவசாயி ஒவ்வொரு மாதமும் 15 லிட்டர் டீசலை சேமிக்க முடியும். கிணற்றின் நீர்மட்டத்துக்கு மேல் 10 அடியைத் தாண்டாதவாறு பம்ப் பொருத்தப்பட்டால் அதன் திறன் அதிகரிக்கும். தரமான பிவிசி உறிஞ்சு குழாயை பயன்படுத்துவதன் மூலம், 20 சதவீத எரிபொருளையும், மின்சாரத்தையும் சேமிக்க முடியும்.

இடுப்பை ஒடிக்காத சோலார் அடுப்பு:


இப்போது, ஆண்டுக்கு ஆறு சிலிண்டர்கள் தான் என்று சொல்லி விட்டார்கள் வேறு. "இது, நடக்குமுன்னு எனக்கு அப்போதே தெரியும்; அதனால தா நாங்க விறகு அடுப்பு பயன்படுத்துறோம்' என்று ஏளனமாக பேசுவோர் பலர். சமையல் செய்வதா, வேண்டாமா? என்றும் சிலர் யோசித்து, ஓட்டல் சாப்பாடு மேல் என்று எண்ணியிருப்பவர்கள் பலர். இதற்கு மாற்றாக வந்து விட்டது. சமையல் பணிகளை எளிதாக்கவும், காஸ் தட்டுப்பாட்டுக்கு மாற்று ஏற்பாடாகவும், மின்சாரத்தில் இயக்கும் வகையில் இன்டக்ஷன் அடுப்பு மக்களிடையே பிரபலமானது. ஆனால், தற்போது நிலவும் மின்தடையால், இன்டக்ஷன் அடுப்பும், மக்களின் அவசர தேவைக்கு "கை' கொடுக்காததால், தற்போது மாற்று தேவையை எதிர்நோக்கி காத்துள்ளனர். மக்களின் இந்த தேவையை பூர்த்தி செய்யும் வகையில், சோலார் அடுப்பை தமிழ்நாடு எரிசக்தி மேலாண்மை நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. பெட்டி வடிவிலும், "டிஷ்' வடிவிலும் இந்த அடுப்பு கிடைக்கிறது.வீடு, ஓட்டல்கள், விடுதி, மருத்துவமனை ஆகியவற்றில் பயன்படுத்தும் வகையில், இந்த அடுப்பு வடிவமைக்கப்பட்டுள்ளது. புகையில்லாத, சத்தான சமையலை இதன் மூலம் தயாரிக்கலாம். நான்கு முதல் ஐந்து பேர் உள்ள குடும்பத்துக்கு, பெட்டி வடிவிலான அடுப்பு பரிந்துரைக்கப்படுகிறது. ஆயிரத்து 500 முதல் மூவாயிரம் ரூபாய் வரை இந்த அடுப்பு கிடைக்கிறது. முறையாக பயன்படுத்தினால், 10 முதல் 12 ஆண்டுகள் வரை பயன்படுத்தலாம். ஒன்பது முதல் 15 பேருக்கு சமைக்க, "டிஷ்' வடிவ அடுப்பு பரிந்துரைக்கப்படுகிறது. 5,000 முதல் 9,000 வரை அளவுக்கேற்ப இந்த அடுப்பு கிடைக்கிறது. 20 ஆண்டுகள் வரை உழைக்கக் கூடியது.சோலார் அடுப்பு வாங்க, அரசு சார்பில், 2,100 ரூபாய் மானியமாகவும் வழங்கப்படுகிறது. அடுப்பின் அளவை பொறுத்து மானியம் நிர்ணயிக்கப்படுகிறது. இந்த அடுப்பை பயன்படுத்துவதன் மூலம் ஓர் ஆண்டுக்கு 10 சமையல் காஸ் சிலிண்டர் மிஞ்சப்படுத்தப்படுகிறது. இந்த அடுப்பு குறித்து, அரசின் எரிசக்தி நிறுவனம் சார்பில், விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது. இதுகுறித்த மேலும் விபரங்களுக்கு, 044-28222973 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

முன்னணியில் நாடுகள்:


சூரியன் ஓர் அதிபயங்கர நெருப்பு பந்து. சோலாரின் செலவு, நாட்டுக்கு நாடு வேறுபடும். ஜப்பான், ஜெர்மனி, ஸ்பெயின் போன்ற நாடுகள், சூரிய சக்தியை உறிஞ்சுவதில் முன்னணியில் இருக்கின்றன. அமெரிக்க எரி சக்தி துறை, வரும் 10 ஆண்டுகளில், வீடுகளிலும், நிறுவனங்களிலும் ஒரு கோடி சூரிய சக்தி சிஸ்டம்களை நிறுவப் போகிறது. இதற்காக, "க்ரீன் ஜாப்ஸ்' என்று கமிட்டி போட்டு விவாதிக்கிறார்கள்.கடந்த 100 வருடங்களுக்கு மேலாக, நாம் அளவுக்கு மீறி ஹைட்ரோ கார்பனை எரித்து, மரங்களை வெட்டி, பூமியில் ருத்ர தாண்டவம் ஆடிக்கொண்டு இருக்கிறோம். இது, நீண்ட நாட்களுக்கு தாக்கு பிடிக்க முடியாது என்று எண்ணிய சிலர், பூஜ்ஜிய சக்தி கட்டடங்கள் கட்டிக்கொண்டு வசிக்கிறார்கள். தான் உபயோகிக்கும் மின்சாரத்தை தானே தயாரித்துக் கொள்ளும் கட்டடங்கள் இவை. விஞ்ஞான வாஸ்துப்படி கட்டப்பட்ட இந்த வீடுகளில், சுவர், கூரை முழுவதும் சன்ன சூரியப் படலத்தைப் போர்த்தியும், மொட்டை மாடியில் காற்றாலை அமைத்தும் வருகின்றனர். இது ஒருபுறம் இருக்க, வீட்டைக் கட்டும்போதே, இயற்கையான வெளிச்சத்தையும் காற்றையும் உபயோகிக்குமாறு டிசைன் செய்வதும் அவசியம்.சோலார் சிம்னி என்ற அமைப்பு, சூரிய சக்தியால், காற்றை சூடாக்கி, ஒரு எக்ஸாஸ்ட் பேன் மாதிரி மேலே இழுக்கக் கூடியது; வீடு குளிர்ச்சியாகி விடும். நவீன மேற்கத்திய ஆர்க்கிடெக்டுகள், சொலேரியம், சன் ரூம், க்ரீன் ஹவுஸ் என்றெல்லாம் அமைத்து, சூரிய வெளிச்சத்தை உள் வாங்கும் வீடு கட்ட சொல்லித் தருகின்றனர்

No comments:

Post a Comment

சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்*

 *Tips for Today* 🔖🔖🔖🔖🔖 *சாதிச் சான்று - community certificate தெரிந்ததும், தெரியாததும்* 🔖சாதிச் சான்று தற்போது இணைய வழியில் மட்டுமே வ...