கண் தானம் - தேவை விழிப்புணர்வு !
|
அ. போ. இருங்கோவேள்
இந்திய அரசாங்கத்தின் சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், ஒவ்வொரு ஆண்டும் ஆகஸ்ட் 25 முதல் செப்டம்பர் 8 வரை 'தேசிய கண் தான இரு வார விழா'வாக அறிவித்துள்ளார்கள். இந்த இரண்டு வாரங்களும் மத்திய சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சகம், கண் வங்கிகள், கண் மருத்துவமனைகள் பொது மக்களிடையே கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து வருகின்றன. செப்டம்பர் 8 தேசிய கண் தான நாளாக கொண்டாடப்படுகின்றது. சென்னை, சங்கர நேத்ராலயா கண் மருத்துவமனையின் மருத்துவ சமூகவியலாளன் மற்றும் மேலாளர் (நோயாளிகள் கல்வி மற்றும் ஆலோசனை) (Medical Sociologist and Manager - Patients Education and Counseling) என்ற முறையில் கண் தானம் பற்றிய விழிப்புணர்வை மேம்படுத்தும் வகையில் சில செய்திகளை விகடன் வாசகர்களோடு பகிர்ந்து கொள்கிறேன். 1. இன்றைய அறிவியல் மற்றும் தொழில்நுட்ப வளர்ச்சிக்கேற்ப நமது பிறப்பு, வாழ்க்கை மற்றும் மரணம் என அனைத்து சூழ்நிலைகளிலும் அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தை பயன்படுத்திக் கொள்கிறோம். அந்த வகையில் மரணத்திற்கு பிறகும் நாம் செய்யக்கூடிய ஒரு புண்ணிய காரியமாக கண் தானம் அமைந்துள்ளது. 2. உலகின் பார்வையிழப்பு என்னும் சுமையை மிக அதிகமான அளவில் தாங்கிக் கொண்டிருக்கும் தேசம் நமது தேசம். உலகின் ஒவ்வொரு நான்காவது பார்வையிழந்தவனும் இந்தியன். நமது நாட்டைப் பொருத்தமட்டில் பார்வையிழப்பிற்கு முதல் காரணம் கண் புரை, இரண்டாவது அல்லது மூன்றாவது காரணமாக இருப்பது கார்னியல் பார்வைக் கோளாறுகள். கண்ணின் பாகங்கள் கார்னியா பாதிக்கப்படும் நிலையில், பார்வை என்னும் புலனைப் பெறுவதற்கான முதல் செயலான ஒளிக்கதிர்களைப் பெற்று கண்ணுக்குள் செலுத்தும் பணி தடைபடுகிறது. இதுவே கார்னியல் பார்வைக்கோளாறு எனப்படுகிறது. இதனை கார்னியா மாற்று ஆபரேஷன் மூலம் சரி செய்ய முடியும். கார்னியாவின் அடுக்குகள் 5. மரணமடைந்தவர்களின் கண்களை தானமாகப் பெற்றுக் கொள்ள,மரணமடைந்தவர்களின் உறவினர்கள் உடனடியாக கண் வங்கிக்கு தகவல் அனுப்பி, மரணமடைந்தவர்களின் கண்களை தானமாகப் பெற்றுக் கொள்ள அனுமதி அளிப்பதுதான் கண் தானம். 6. கண் தானம் செய்வதற்கு ஜாதி, மதம், இனம், மொழி, கலாச்சாரம், ஆண் / பெண் பாகுபாடு ஏதும் கிடையாது. மரணமடைந்த அனைவரது கண்களும் தானமாக ஏற்றுக் கொள்ளப்படும். அனைத்து மதங்களும் கண் தானம் உட்பட அனைத்துவிதமான தானங்களையும் போற்றுகின்றன. 7. கண்ணாடி அணிந்திருந்தாலும்,கேட்டராக்ட் ஆபரேஷன் செய்திருந்தாலும் அவர்களும் தாராளமாக கண் தானம் செய்யலாம். 8. கண் தானம் செய்ய,ஒருவர் மரணமடைந்த ஆறு மணி நேரத்திற்க்குள் அவரது கண்களை அகற்றியாக வேண்டும்.அப்போதுதான் அந்தக் கண்களை ஆபரேஷனுக்கு பயன்படுத்த முடியும். எனவே எவ்வளவு விரைவாக கண்களை அகற்ற முடியுமோ அவ்வளவு விரைவாக அதற்குரிய விஷயங்களைச் செய்து தானமாக அளிப்பது நல்லது. 9. ஒருவரது மரணத்தின் பின்னணியில் ஏதேனும் தொற்று நோய்க்கிருமிகள், வெறிநாய்க்கடி, கல்லீரல் அழர்ச்சி, கண்களில் புற்றுநோய், உடலில் ஒன்றுக்கும் மேற்பட்ட இடங்களில் புற்று நோய் பரவிய நிலை, எய்ட்ஸ், மஞ்சள் காமாலை போன்ற பிரச்னைகள் இருந்தால் அவர்களது கண்கள் ஆராய்ச்சிகளுக்கு மட்டுமே ஏற்றுக் கொள்ளப்படும். 10. முழுக் கண்ணையும் அப்படியே வேறொருவருக்கு மாற்றி ஆபரேஷன் செய்வது கிடையாது. தானமாகப் பெறப்பட்ட கண்களில் கார்னியா எனப்படும் விழி வெண் படலம் மட்டுமே கார்னியா மாற்று ஆபரேஷன் எனப்படும் கார்னியல் டிரான்ஸ்ப்ளாண்டேஷன் ஆபரேஷனுக்கும், ஸ்க்ளீரா எனப்படும் விழி வெளிப்படலம் க்ளகோமா நோயினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு மால்ட்டினோ இம்ப்ளாண்ட் எனபடும் ஆபரேஷனுக்கும் கண்களில் செய்யப்படும் பிளாஸ்டிக் சர்ஜரிகளுக்கும், மற்ற பகுதிகள் கண் குறித்த பல்வேறு ஆராய்ச்சிகளுக்கும் பயன்படுத்தப்படும். 11. கண்ணின் தர மதிப்பீட்டிற்காக மரணமடைந்தவரின் உடலிலிருந்து 10 சிசி அளவு வரை இரத்தமும் சேகரித்துக் கொள்ளப்படும். தரமான கண்கள் பார்வை பாதிக்கப்பட்டவர்களுக்கு ஆபரேஷனுக்கு பயன்படுத்தப்படும். தரம் குறைந்தவைகளை கண்கள் குறித்த ஆராய்ச்சிகளுக்கே பயன்படுத்த இயலும். முழுமையான கண்கள் தர மதிப்பீடு என்பது கண்களை தானமாகப் பெற்று வந்த பிறகு கண் வங்கியிலும் ஆய்வுக்கூடத்திலும் மட்டுமே சாத்தியம். மரணமடைந்தவர்களின் கண்களை தானமாக அளிப்பதற்கான முக்கியமான குறிப்புகள் : 1. நமக்கு தெரிந்து யாரேனும் ஒருவர் மரணமடைந்துவிட்டால்,அந்த வேளையில் நெருங்கிய உறவினர்கள் வேதனை மற்றும் அதிர்ச்சியில் இருப்பார்கள். அவர்களுக்கு ஆறுதல் கூறி, மரணமடைந்தவர் உடல் உறுப்புகள் அல்லது கண்களை தானம் செய்ய உறுதிமொழி ஏதேனும் எடுத்திருந்தால் உடனடியாக கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். கண்தான உறுதிமொழி எடுத்திருக்கவில்லை என்றால் நெருங்கிய உறவினரிடத்தில் பக்குவமாக எடுத்துச் சொல்லி "அவரது கண்களை தானம் அளிப்பதால், இரண்டு பேருக்கு பார்வை கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறதே.. அவரது ஆத்மா சாந்தியடையுமே" என்று ஊக்குவித்து அவர்களது சம்மதம் பெற்று கண் வங்கியை தொடர்பு கொள்ளலாம். 2. கண் வங்கியை தொடர்பு கொண்டு மரணமடைந்தவரின் பெயர், வயது, ஆண்/பெண், மரணத்தின் காரணம், மரணமடைந்த நேரம், தற்போது உடல் இருக்கும் இடத்தின் முகவரி மற்றும் லேண்ட்மார்க் (அருகில் உள்ள இடத்தின் அடையாளம் உ.ம். கோயில், திரைஅரங்கு, கடைகள், போன்ற விவரங்கள்) ஆகியவற்றுடன், தகவல் அளிப்பவரின் பெயர் மற்றும் தொலைபேசி எண்கள் போன்ற விவரங்களை அளித்தால் உரிய நேரத்திற்குள் கண் வங்கி மருத்துவர் குழு வர வசதியாக இருக்கும். 3. மரணமடைந்தவரின் கண்களை மூடி இரண்டு கண்களின் மீதும் ஈரமான பஞ்சினை வைப்பது நல்லது. முடியுமேயானால் ஏதேனும் ஆன்டிபயாட்டிக் கண் சொட்டு மருந்தினை (Ciplox அல்லது Norflox) போடலாம். இது ஏதேனும் நோய்த்தொற்று ஏற்படுவதை தவிர்க்கும். தலைக்கு நேர் மேலே மின்விசிறி சுற்றிக் கொண்டிருந்தால் அதனை நிறுத்தி விடுவது நல்லது. இவை கார்னியா ஈரப்பதத்திலும் ஆரோக்கியமாகவும் இருக்க உதவியாக இருக்கும். 4. மரணமடைந்தவரின் தலையை இரண்டு தலையணைகளை வைத்து சுமார் 6 அங்குலம் உயர்த்தி வைக்க வேண்டும். இது கண்களை அகற்றும்போது உதிரம் வெளியேறுவதைத் தவிர்க்கும். 5. அன்னாரது உடல் குளிர்சாதனப் பெட்டியில் (ஃப்ரீஜரில்) வைக்கப் பட்டிருந்தால் ஏதும் பிரச்னை இல்லை. 6. சில குடும்பங்களில் மரணமடைந்தவரின் கண்கள் மீது மஞ்சளை அரைத்து கெட்டியாக பூசி மூடி வைப்பார்கள். அதனை கண்களை தானமாக அளித்த பிறகு செய்வது நல்லது. 7. கண் வங்கியிலிருந்து மருத்துவர் குழு வரும் முன்பே அருகில் உள்ள நர்சிங் ஹோம் அல்லது குடும்ப மருத்துவரிடமிருந்து மரண சான்றிதழ் பெற்று வைத்துக் கொள்வது நல்லது. கண் வங்கி மருத்துவர் குழுவினருக்கு மரண சான்றிதழ் வழங்க உரிமை கிடையாது. 8. கண்களை மிகவும் நாகரீகமான முறையில் அதிகபட்சம் 20 முதல் 30 நிமிடத்தில் அகற்றி விடுவார்கள். கண்களை எடுத்த பிறகு கண்களை எடுத்த அடையாளமே தெரியாது என்பதே உண்மை. பார்வை வழங்கும் தூதுவராவோம்: 1. நமது கண்களை தானமாக வழங்க உறுதி மொழி எடுத்துக் கொள்வோம். http://cchepnlg.blogspot.in/ என்ற வலைத்தளத்திலும், கண் வங்கிகளில் படிவங்களைப் பெற்றும் உறுதி மொழி எடுத்துக் கொள்ளலாம். 2. நமது நண்பர்கள், உற்றார்,உறவினர்களையும் கண்தான உறுதி மொழி எடுத்துக் கொள்ள வேண்டிக் கொள்ளலாம். 3. நமக்கு தெரிந்து யாரேனும் மரணமடைந்து விட்டால் அவர் கண் தானம் செய்ய உறுதி மொழி எடுத்திருந்தாலும், இல்லாவிட்டாலும் அவரது நெருங்கிய உறவினரை சந்தித்து ஊக்குவித்து மரணமடைந்தவரின் கண்களை தானமாக வழங்கலாம். |
கண் தானம் - தேவை விழிப்புணர்வு !
Subscribe to:
Post Comments (Atom)
உயில் நடைமுறைகள்
*பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...
-
:1.காவல் நிலை ஆணைகள் மொத்தம் எத்தனை தொகுதிகளாக (Volume)உள்ளது? -மூன்று தொகுதிகளாக. 2.காவல் நிலை ஆணைகள் தொகுதி -1ல் மொத்தம் எத்தனை ஆணைக...
-
மின் நுகர்வோர் குறைதீர் மன்றம் / CONSUMER GRIEVANCE REDRESSAL FORUM ( CGRF ) ****************************************************** தமிழ்ந...
-
*#பணியிடத்தில்_பாலியல்_வன்முறை (தடுப்பு,பாதுகாப்பு, குறைதீர்ப்பு) #சட்டம், 2013* *#பாலியல்_வன்முறை_தடுப்பு* இந்தியாவில் பணியிடத்தில் பாலியல...
No comments:
Post a Comment