நேரு

இந்திய சுதந்திர போராட்டத்தின் முன்னணி தலைவர்களில் ஒருவரான ஜவகர்லால் நேரு, சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக இந்தியாவை வழிநடத்தியவர் ஆவார்.

அணி சேரா இயக்கத்தை உருவாக்கியவரில் ஒருவராகவும், சுதந்திரப்போராட்ட வீரராகவும், இந்தியா முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி முன்னேற்றம் குறித்துப் பல்வேறு திட்டங்களை நிறைவேற்றியவரும், “நவீன இந்தியாவின் சிற்பி” எனவும் கருதப்படும் ஜவகர்லால் நேருவின் வாழ்க்கை வரலாறு மற்றும் சாதனைகளைப் பற்றி விரிவாக காண்போம்.
பிறப்பு: நவம்பர் 14, 1889
இடம்: அலகாபாத், உத்திரப் பிரதேசம் (இந்தியா)
பணி: சுதந்திர போராட்ட வீரர், அரசியல் தலைவர்
இறப்பு: மே 27, 1964
நாட்டுரிமை: இந்தியா
பிறப்பு
ஜவகர்லால் நேரு அவர்கள், இந்தியாவின் உத்திரப்பிரதேசம் மாநிலத்தில் அமைந்துள்ள அலகாபாத் மாவட்டத்தில் பெரிய செல்வந்தரும், வழக்கறிஞருமான மோதிலால் நேருவுக்கும், சுவரூப ராணி அம்மையாருக்கும் மூத்த மகனாக ஒரு பிராமண குடும்பத்தில் பிறந்தார். நேருவுக்கு, விஜயலட்சுமி பண்டிட் மற்றும் கிருஷ்ணா என்ற இரு சகோதரிகள் இருந்தனர்.
ஆரம்ப வாழ்க்கை மற்றும் கல்வி
இங்கிலாந்திலுள்ள ஹர்ரோவில் தனது பள்ளிப்படிப்பை தொடங்கிய நேரு அவர்கள், ட்ரினிட்டி கல்லூரியில் இயற்கை அறிவியல் படித்து 1910ல் “திரைபோசில்” இரண்டாவது மாணவனாகப் பட்டம் பெற்றார். கேம்ப்ரிட்ஜ் மற்றும் ட்ரினிட்டி கல்லூரியில் சட்டப்படிப்பை முடித்த அவர், 1912ல் இன்னர் டெம்பிலில்  சட்டம் பயில பதிவு செய்துக்கொண்டார். 1962 ல், வெற்றிகரமாக சட்டப் படிப்பை முடித்த நேரு தனது சட்டப் பணியைத் தொடங்க இந்தியா திரும்பினார்.
திருமண வாழ்க்கை
நேரு அவர்கள், 1916 ல் கமலா கவுல் என்ற பிராமணப் பெண்ணைத் திருமணம் செய்துகொண்டார். திருமணத்திற்குப் பிறகு, கமலா நேருவும் சுதந்திர இயக்கத்தில் தன்னை ஈடுபடுத்திக்கொண்டார். திருமணம் ஆன அடுத்த ஆண்டில் இந்திராபிரியதர்ஷனி என்ற மகள் பிறந்தாள் (பின்னாளில் பெரோசு காந்தியை திருமணம் செய்துகொண்ட அவர், ‘இந்திரா காந்தி’ என்றழைக்கபட்டார்). இருபது ஆண்டுகாலம் நேருவுடன் வாழ்ந்த கமலா நேரு, 1936ல் புற்று நோயால் இறந்துப்போனார். கமலா நேருவின் இறப்பிற்குப் பிறகு, கடைசிவரை தனியாகவே வாழ்ந்தார்.
அரசியல் வாழ்க்கை
1919ல் நடந்த ‘ஜாலியன் வாலாபாக் படுகொலை சம்பவம்’, நேருவை சுதந்திர போராட்டத்தில் ஈடுபட வழிவகுத்தது எனலாம். இந்தியாவின் அம்ரித்சர் நகரில் ஜாலியன் வாலாபாக் என்ற இடத்தில் ஆயுதம் ஏதும் இன்றி கூட்டத்தில் பேச்சை கேட்டுக்கொண்டிருந்த ஆண்கள், பெண்கள், குழந்தைகள் என பாராமல் ஆங்கில அரசு ரெஜினால்ட் டையர் என்ற ராணுவ அதிகாரியின் தலைமையில் அப்பாவி மக்களைக் கொன்று குவித்தது. அப்பாவி மக்கள் மீது நடத்தப்பட்ட இந்த தாக்குதல் வெள்ளையர் ஆட்சி மீது நேருவுக்கு வெறுப்புணர்வை அதிகரித்தது மட்டுமல்லாமல் காங்கிரஸ் கட்சியில் அவரை ஈடுபடுத்திக் கொள்ளவும் காரணமாக அமைந்தது.
காந்தியின் கொள்கைகள் மீது அதிக ஈடுபாடுகொண்ட நேருவும் அவருடைய  குடும்பமும் விலையுயர்ந்த மேற்கு ஆடைகள் உடுத்துவதைத் தவிர்த்து கதர் ஆடையை உடுத்தினர். 
காந்தியின் நம்பிக்கைக்குரியவர்களில் ஒருவராக மாறிய நேரு, 1920ல் காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக 1921ல் முதன் முதலாக கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். சில மாதங்கள் கழித்து விடுதலை செய்யப்பட்ட அவர், 1924ல் அலகாபாத்து நகராட்சித் தலைவராக தேர்தெடுக்கபட்டார். 

இரண்டு ஆண்டுகள் தலைமை நிர்வாகியாகியாக சிறப்பாக பணியாற்றிய அவர், 1926ல் தனது பணியை ராஜினாமா செய்தார். பின்னர் 1926 முதல் 1928 வரை அகில இந்திய காங்கிரஸ் கமிட்டியின் பொது செயலாளராக பணியாற்றினார். 
முதன் முதலில் இந்திய தேசிய காங்கிரசை காந்தியின் வழிகாட்டுதலில், 1929  லாகூர் நிகழ்ச்சியைத் தலைமையேற்று நடத்தினார். 
பின்னர், ஜனவரி 26, 1930ல் சுதந்திரம் கோரி இந்திய சுதந்திரக் கொடி நேருவால் லாகூரில் பறக்கவிடப்பட்டது.
1945 ஆம் ஆண்டு, ‘வெள்ளையனே வெளியேறு’ இயக்கத்தில் பங்கெடுத்ததற்காக நேரு கைது செய்யப்பட்டுப் பின் விடுதலை செய்யப்பட்டார். 
பின்னர், நேரு இடைகால அரசைத் தலைமையேற்று நடத்திசெல்லும்போது மத வன்முறை அரசியல் சீரழிவு மற்றும் எதிர்க்கட்சியான முகமது அலி ஜின்னா தலைமையில் முஸ்லீம் லீகின் முஸ்லிம்களுக்கான தனிநாடு கோரியது ஆகியவற்றால் அவருடைய முன்னேற்றம் தடைப்பட்டது
மட்டுமல்லாமல் வேறுவழியின்றி 1947 ஜூன் 3ல் இங்கிலாந்து வெளியிட்ட திட்டத்தின்படி இந்தியாவின் பிரிவினைக்கு ஆதரவளித்தார். 
ஆகஸ்ட் 15, 1947 ஆம் ஆண்டு பிரிட்டிஷ் ஆட்சியிலிருந்து தனி சுதந்திர நாடாக இந்தியா விடுதலைப் பெற்றது. 
இந்தியா சுதந்திரம் பெற்றதும், சுதந்திர இந்தியாவின் முதல் பிரதமராக நியமிக்கப்பட்ட நேரு அவர்களுக்கு, ஆகஸ்ட் 15, 1947  புதுதில்லியில் சுதந்திர இந்தியாவின் கொடியை ஏற்றும் தனிப்பெருமை நேருவுக்கு வழங்கப்பட்டது. 

அன்று முதல், சுதந்திர இந்தியாவின் வளர்ச்சிக்குத் தன்னை முழுவதுமாக அற்பணித்துக்கொண்டார்.
நேருவின் படைப்புகள்
வாழ்நாளில் ஒன்பது வருடங்கள் சிறையில் கழித்த நேரு அவர்கள், சிறையில் இருந்த நாட்களில் ஒரு சில நூல்களை எழுதினார்.
  • 1934 ல் “உலக வரலாற்றின் காட்சிகள்”
  • 1936 ல் “சுயசரிதை”
  • “இந்தியாவின் கண்டுபிடிப்பு”
இந்தப் படைப்புகள், ஒரு எழுத்தாளராக அவருக்குப் பெருமை சேர்த்தது மட்டுமல்லாமல், நற்பெயரையும் தேடித்தந்தது.
இந்தியாவின் முதல் பிரதம மந்திரியாக நேருவின் பணிகள்
இந்திய சுதந்திர இயக்கத்தின் முன்னோடியாக கருதப்படும் நேரு அவர்கள், ஆகஸ்ட் 15, 1947 முதல் மே 27, 1964, 
அதாவது தனது இறுதிக் காலம் வரைப் பிரதமராக பணியாற்றினார். அவரது ஆட்சியில், இந்தியாவின் வளர்ச்சிக்குப் பல திட்டங்களைத் தீட்டி, நாட்டை முன்னேற்றப் பாதையில் கொண்டு சென்றார் என்றால் அது மிகையாகாது.  
1951ல், இந்திய திட்டக் குழுவை உருவாக்கி, சுதந்திர இந்தியாவின் முதல் ஐந்தாண்டுத் திட்டத்தை வரைந்தார். பின்னர், 1952 ல் நடந்த தேர்தலில், நேருவின் தலைமையில் காங்கிரஸ் பெரும் வெற்றிப் பெற்றது. 
முதல் ஐந்தாண்டுத் திட்டம், அரசாங்கத்தின் தொழிற்சாலைகளின் முதலீடு மற்றும் விவசாயத்தை வரையறுத்தது. 
மேலும் தொழிற்சாலைகளை அதிகப்படுத்துதல், வருமான வரிகள் மூலம் கலப்புப் பொருளாதாரத்தை உருவாக்கி சுரங்கம், மின்சாரம் மற்றும் கனரக இயந்திரங்கள் தொழிற் சாலைகள், தனியாரிடம் போவதை தடுத்து, அரசாங்கமே நடத்தத் திட்டம் வகுத்தார். நில மற்றும் பங்கீட்டை முதன்மைப் படுத்தினார். 
விவசாயக் கிணறுகள், அணைகள் கட்டுதல், விவசாய உற்பத்தியைப் பெருக்க உரங்கள் உபயோகிக்கும் முறையை செயல்படுத்தியது மட்டுமல்லாமல், அணு ஆற்றலில் இந்தியா சிறந்து விளங்கவும் திட்டங்களைத் தீட்டினார்.
‘இந்தியாவின் எதிர்கால முன்னேற்றம், குழந்தைகள் மற்றும் இளைஞர்களின் கல்வியை மேம்படுத்துவதில் தான் இருக்கிறது’ என்பதை நன்கு உணர்ந்த நேரு அவர்கள், 
அனைத்திந்திய மருத்துவ அறிவியல் கழகம், 
இந்திய தொழில்நுட்பக் கழகங்கள், இந்திய மேலாண்மைக் கழகங்கள், தேசிய தொழில்நுட்பக் கழகங்கள் போன்ற 
அரசாங்க உயர் கல்வி நிறுவனங்களை ஏற்படுத்தி கவனித்து வந்தார். 
இலவச கட்டாய கல்வித் திட்டத்தை செயல்படுத்தி ஆயிரக்கணக்கான பள்ளிகளைக் கட்டினார். 
சிறந்த கிராமப்புறத் திட்டங்களை ஏற்படுத்தி, பள்ளிகளில் இலவச சத்துணவு திட்டத்தையும் அமல்படுத்தினார். 
தாழ்த்தப்பட்டோர் மற்றும் பிற்படுத்தப்பட்டோருக்கு, அரசுப்பணிகள் மற்றும் கல்வி நிறுவனங்களில் இடஒதுக்கீட்டினை ஏற்படுத்தினார்.
நேருவின் வெளிநாட்டு கொள்கைகள்
நேரு அவர்கள், பல பிரச்சனைகளைத் திறம்பட சமாளித்து தீர்த்ததால், உலக பார்வையில், ‘சமாதானபடுத்துவதில் மன்னர்’ என்றும் ஐக்கிய நாடுகளின் வலுவான ஆதரவாளராகவும் போற்றப்பட்டார். 
“கூட்டுசேராக் கொள்கைகள்” மற்றும் “அணிசேரா இயக்கங்களை” உறவாக்கி, அமெரிக்கா, ரஷ்யா போன்ற நாடுகளுடன் நடுநிலைமை வகித்தார். 
மனித சமுதாயத்திற்கு அணுஆயுதங்கள் உண்டாக்கும் விளைவுகளை நன்கு அறிந்ததாலும், அவை நாட்டின் வளர்ச்சிக்குத் தடையாக இருக்கும் என கருதி அணுஆயுதக் கொள்கையை நேரு அவர்கள் ஆதரிக்கவில்லை என கூறப்படுகிறது. 
1954 ல், நடைபெற்ற திபெத்தின் மீதான சீன-இந்திய உடன்படிக்கை, பஞ்சசீலக் கொள்கைகளின் அடிப்படையாக இருந்தாலும், பல காரணங்களால் சீன இந்திய உறவு இன்றளவும் பிளவுப் பட்டுத்தான் காணப்படுகிறது. 
இருந்தாலும், மிக சக்திவாய்ந்த வெளியுறவுக் கொள்கைகளால் நவீன இந்திய அரசாங்கத்தை, அரசியல் காட்சாரத்தை வடிவமைப்பதில் முக்கிய பங்கு வகித்தார்.
நேருவின் பெயரை பறைச்சாற்றும் நினைவுச்சின்னங்கள்
  • இந்தியா முழுவதும் கல்விநிலையங்கள், விளையாட்டு அரங்கங்கள், தெருக்கள், சாலைகள் மற்றும் பல பொது நிறுவனங்களுக்கு நேருவின் பெயர் சூட்டப்பட்டு அவருடைய நினைவைப் பறைசாற்றுகின்றன.
  • 1989 ஆம் ஆண்டு, சோவியத் ஒன்றியத்தால் நேருவின் தபால் தலை வெளியிடப்பட்டது.
  • மும்பையில் உள்ள ஒரு துறைமுகத்திற்கு ‘நேரு துறைமுகம்’ என பெயர் சூட்டப்பட்டுள்ளது.
  • நேரு பிரதமாராக இருந்தபோது, அவர் வசித்து வந்த “தீன் மூர்த்தி பவன்”, தற்போது அவர் நினைவாக அருங்காட்சியகமாக மாற்றப்பட்டு, இன்றளவும் இந்திய அரசால் பராமரிக்கப்பட்டு வருகிறது.
  • லண்டனில் உள்ள ஆல்ட்விச்சில் நேருவுக்கு சிலை எழுப்பப்பட்டுள்ளது.
  • நேரு அவர்கள், வாழ்நாள் முழுவதும் குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் நலன், கல்வி மற்றும் அக்கறையுடன் பாடுபட்டதை நினைவூட்டும் வகையில் 
  • அவரின் பிறந்த நாளான, நவம்பர் 14ஐ இந்தியா முழுவதும் “குழந்தைகள் தினமாகக்” கொண்டாடுகிறோம்.
இறப்பு
1964 ஆம் ஆண்டு, மே மாதம் 27 ஆம் தேதி நேரு அவர்கள், மாரடைப்பால் மரணம் அடைந்தார். 
அவருடைய உடல், யமுனை நதிக்கரையில் உள்ள சாந்திவனத்தில் தகனம் செய்யப்பட்டது. 
ஒரு சுதந்திரமான, சமத்துவமான ஜனநாயக நாட்டை உருவாக்க வேண்டும் என்ற நேருவின் கனவுதான்
இந்தியாவிற்கு வலுவான அடித்தளத்தை அமைத்துக் கொடுத்தது என்றால் அது மிகையாகாது

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...