உணவை வாங்கும் டிப்ஸ்

உணவை வாங்கும் டிப்ஸ்
மாதம் முதல் தேதியானதும் மளிகைக் கடைக்குப்போய் அண்ணாச்சியிடம் லிஸ்ட்டைக் கொடுத்துவிட்டு, அந்த லிஸ்ட்டில் உள்ளதை மட்டும் வாங்கிக்கொண்டு வீடு திரும்பிய காலம் மலையேறிவிட்டது. இது சூப்பர் மார்க்கெட் காலம். சிறு நகரங்களில் மட்டும் அல்ல, சிற்றூர்களிலும் சூப்பர் மார்க்கெட்டுகள் பெருகிவிட்டன. மக்கள் நேரடியாகப் பொருட்களைப் பார்த்து, தங்கள் கைகளாலேயே ரேக்கில் இருந்து எடுத்துக்கொண்டு வந்து பில் போடும் சுதந்திரம் வந்துவிட்டது.

`உண்மையில் இது சுதந்திரமா அல்லது, வாடிக்கையாளர்களுக்கு விரிக்கப்படும் வலையா?’ என்றொரு கேள்வி எழுகிறது. இப்படி, சந்தையில் நிறைந்து கிடக்கும் பொருட்களுக்கு இடையே நம்மை உலவ வைப்பது, நமது வாங்கும் உணர்வைத் தூண்டிவிடுகிறது.வண்ணமயமான, பளபளப்பான பேக்கிங்கைப் பார்த்ததும் அதில் மயங்கி, தேவை இருக்கிறதோ இல்லையோ, வாங்கி வந்துவிடுகிறோம். தேவையற்ற பொருள்கள் வீட்டுக்குள் நுழைவதால் காசுக்குக் கேடு. அதுவே, வயிற்றுக்குள் நுழைவதால் நம் உடல் நலனுக்குக் கேடாகிறது.

ஒருகாலத்தில், நாம் வாங்கும் உணவுப் பொருளில் என்ன இருக்கிறது என்று நமக்குத் தெரியாது. ஆனால், தற்போது பாக்கெட் உணவுகளில் கட்டாயம் அதில் உள்ள மூலப்பொருட்கள், ஊட்டச்சத்துப் பட்டியல் இடம்பெற வேண்டும் என்று சட்டமே உள்ளது. வாங்கும் உணவில் என்ன இருக்கிறது என்று தெரிந்துவாங்க வேண்டியது அவசியம் என்ற விழிப்புஉணர்வு மிகமிகக் குறைவாகவே காணப்படுகிறது. நியூட்ரீஷியன் லேபிளில் பொடி எழுத்துக்களில் எழுதப்பட்டிருப்பதைப் படித்துப் பார்த்து வாங்க, யாருக்கும் பொறுமை இருப்பது இல்லை. அப்படியே பார்த்தாலும், பலருக்கு அது புரியாது. உற்பத்தி தேதி, காலாவதியாகும் தேதியைப் பார்த்து வாங்கும் விழிப்புஉணர்வே இப்போதுதான் கொஞ்சம் கொஞ்சமாக உருவாகியுள்ளது.பாக்கெட் உணவுப் பொருட்களை வாங்கும்போது கவனிக்கவேண்டிய விஷயங்கள் என்னென்ன என்பதை ஒவ்வொருவரும் தெரிந்துகொள்ள வேண்டியது மிகவும் அவசியம்.

லேபிளில் என்னென்ன இருக்கும்?
பொதுவாக, ஒவ்வொரு பொருளிலும் மேற்பகுதியில் பரிமாரப்படும் உணவின் அளவு, கலோரி, ஊட்டச்சத்து மதிப்பு போன்றவை குறிப்பிடப்பட்டிருக்கும். இவை, பொருளுக்குப் பொருள் மாறுபடும். கீழ்ப் பகுதியில், ஒரு நாளைக்கு தேவையான கலோரிக்கு (தோராயமாக 2,000 கலோரி) இந்த உணவின் மூலம் கிடைக்கும் பங்களிப்பு  குறிப்பிடப்பட்டிருக்கும். இதில், கொழுப்பு, சோடியம், நார்ச்சத்து ஆகியவை குறிப்பிடப்பட்டிருக்கும். 

எதில் தயாரிக்கப்பட்டது?
ஒரு தயாரிப்புப் பொருளில் என்னென்ன சேர்மானங்கள் (Ingredients) உள்ளன என்பது கொடுக்கப்பட்டிருக்கும். அதை முதலில் பார்க்க வேண்டும். பொதுவாக, எது அதிகமாகச் சேர்க்கப்பட்டுள்ளதோ, அதுதான் அந்தப் பட்டியலின் முதலில் இடம்பெற்றிருக்கும். சேர்க்கப்பட்டுள்ள விகிதத்துக்கு ஏற்பவே பட்டியல் வரிசை இருக்கும். உங்களால் உச்சரிக்க முடியாத, உங்களுக்குத் தெரியாத பொருட்கள் ஆரம்ப இடங்களில் இருந்தால், அந்தப் பொருளை வாங்குவதைப் பற்றி பரிசீலனை செய்யுங்கள்.

சர்க்கரை அளவு
`ஷுகர்’ என்று எழுதப்பட்டிருப்பது மட்டுமே சர்க்கரை அல்ல. ஹை ஃபிரக்டோஸ் கார்ன் சிரப், கார்ன் சிரப், ஃப்ரக்டோஸ், குளுக்கோஸ், டெக்ஸ்ட்ரோஸ், சுக்ரோஸ், தேன், மொலாசஸ் (Molasses), கரும்புச்சாறு (Evaporated cane juice) என்றெல்லாம் எழுதப்பட்டிருப்பவையும் இனிப்புகளே. இவற்றில் ஒன்றுக்கும் மேற்பட்டவை ஒரு பொருளில் இருந்தால் , அதைத் தவிர்ப்பது நல்லது.

சோடியம் அளவு
சோடியம் உப்பின் அளவைக் கவனிப்பது நல்லது. உப்பு அதிகரிப்பதால் உயர் ரத்த அழுத்தம், இதயநோய்கள், வலிப்பு போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன.  ஒருநாளைக்கு 5-8 கிராம் என்ற அளவில் உப்பை எடுத்துக்கொள்ளலாம். பொதுவாக, சோடியமும் கலோரியும் 1:1 என்ற விகிதத்தில் இருக்க வேண்டும். அதாவது, 1,000 கலோரி உணவில் 1,000 மி.கி சோடியம் இருக்க வேண்டும். அதற்கு சற்றுக் குறைவாக இருந்தாலும் தவறு இல்லை; அதிகமாக இருக்கக் கூடாது.

கொழுப்பின் அளவு
எல்லா வகைக் கொழுப்புகளுமே உடலுக்கு அவசியம் என்றாலும், அவை தேவைக்கு அதிகமாக உடலில் சேராமல் பார்த்துக்கொள்ள வேண்டும். உணவுப்பொருளில் இருந்து கிடைக்கும் கலோரி அளவை மட்டும் அல்ல, கொழுப்பில் இருந்து கிடைக்கும் கலோரி அளவையும் கவனிக்க வேண்டும். `ஒரு பொருளில் கிடைக்கும் கலோரி அளவில் 30 சதவிகிதத்துக்கு மேல் கொழுப்பில் இருந்து கிடைப்பதாக இருந்தால், அது உடலுக்கு நல்லது அல்ல. பேக்கிங் ரேப்பரின் முன்புறம் ‘99 சதவிகிதம் ஃபேட் ஃப்ரீ’’ என எழுதி இருப்பதை நம்பி ஏமாறாதீர்கள். அது எடையை அடிப்படையாகக் கொண்ட சதவிகிதம். கலோரியை அடிப்படையாகக் கொண்டது அல்ல.

சர்விங் சைஸ்
ஒவ்வொரு பொருளிலும் அதன் சர்விங் சைஸ் எவ்வளவு என்பதும், உணவு எத்தனை சர்விங் சைஸ் வரும் என்பதும் குறிப்பிடப்பட்டிருக்கும். சர்விங் சைஸ் என்பது கப் மற்றும் எண்ணிக்கையில் இருக்கும். அதனைத் தொடர்ந்து எத்தனை கிராம் அல்லது லிட்டர் என மெட்ரிக் அளவு குறிப்பிடப்பட்டிருக்கும். உதாரணமாக, வெண்ணெய் கலந்த மக்காச்சோள பாக்கெட் ஒன்றில் ‘சர்விங் சைஸ் ஒன் கப் (228 கி) – சர்விங்ஸ் பெர் கன்டெய்னர் 2’ என்று எழுதி இருந்தால் அந்த பாக்கெட்டில் இருக்கும் மக்காச்சோளம் முழுவதையும் உண்டால், நீங்கள் இரண்டு கப் மக்காச்சோளம் உண்டதாக அர்த்தம். எனவே, அதில் குறிப்பிட்டுள்ள ஊட்டச்சத்து விகிதங்கள், கலோரிகளை இரண்டு மடங்காக உட்கொண்டிருப்பீர்கள். சர்விங் சைஸின் அளவு என்பது அந்த உணவின் கலோரிகள், ஊட்டச்சத்து மதிப்பு போன்றவற்றையும் தீர்மானிக்கும். எனவே, ஒரு பொருளை உண்ணுவதற்கு முன்பு `எவ்வளவு சர்விங் சைஸ் நான் எடுத்துக்கொள்ளப்போகிறேன்?’ என்று கேட்டுக்கொள்ளுங்கள். 

கலோரி
ஒரு சர்விங்கில் எத்தனை கலோரி கிடைக்கிறது என்பதை இந்த கலோரி அளவு குறிக்கிறது மேலும், எத்தனை கலோரிகள் கொழுப்பில் இருந்து கிடைக்கின்றன என்பதையும் குறிப்பிட்டிருப்பார்கள். கலோரி அளவு ஒரு நாள் தேவைக்கு அதிகமாகக் கூடும்போது, உடல் அதைக் கொழுப்பாக மாற்றிச் சேமித்துவைக்கும். இதனால், தொப்பை, உடல்பருமன் போன்ற பிரச்னைகள் ஏற்படுகின்றன. எனவே, கலோரியைக் கவனித்து வாங்குவது நல்லது.

ஒரு லேபிளில் கலோரி பகுதியில் ‘அமெளன்ட் பெர் சேவிங்: கலோரி – 250, ஃபேட் கலோரி – 125’ என்று குறிப்பிடப்பட்டிருந்தால், அந்த உணவுப்பொருளில் இருந்து கிடைக்கும் கலோரியில் பாதி கொழுப்பில் இருந்து கிடைக்கிறது என்று அர்த்தம்.

ஊட்டச்சத்துக்கள்
இந்தப் பகுதியில் மொத்தக் கொழுப்பு, சாச்சுரேட்டட் கொழுப்பு, கொலஸ்ட்ரால், சோடியம் போன்றவை மேற்பகுதியில் இருக்கும். அதைத் தொடர்ந்து நார்ச்சத்து, வைட்டமின்கள், கால்சியம், இரும்புச்சத்து போன்ற தாதுஉப்புக்கள், நுண்ணூட்டச் சத்துக்கள் எவ்வளவு உள்ளன என்பன குறிப்பிடப்பட்டிருக்கும். இவை அனைத்தும் தினசரித் தேவையில் எவ்வளவு பங்களிப்பு என சதவிகிதத்தில் கொடுத்திருப்பார்கள்.

தினசரி மதிப்பு (Daily value)
இது ஒரு நாளைக்குத் தேவையான ஊட்டச்சத்து அளவில் எவ்வளவு அந்தப் பொருளில் உள்ளது என்பதைக் குறிக்கும். இவை, பெரும்பாலும் மைக்ரோகிராம், மில்லிகிராம், கிராம் என மெட்ரிக் அளவுகளில் இருக்கும். இது, பொருளுக்குப் பொருள் மாறுபடும். ஏனெனில், ஒவ்வொரு பொருளிலும் ஒவ்வொரு விகிதத்தில் ஊட்டச்சத்து மதிப்பு இருக்கும்.

ஆர்கானிக் அறிவோம்!
டிபார்ட்மென்ட்டல் ஸ்டோர்களில் பொருட்கள் வாங்கும்போது, சில பொருட்களில் `ஆர்கானிக்’ என்றும், சில பொருட்களில் `மேட் வித் ஆர்கானிக்’ என்றும், சிலவற்றில் `ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்’ என்றும் குறிப்பிடப்பட்டிருப்பதைப் பார்த்திருப்போம். இவற்றுக்கெல்லாம் என்ன அர்த்தம் என்று தெரியாது.  

100 சதவிகிதம் ஆர்கானிக்:
முழுமையான ஆர்கானிக் பொருட்கள். இவற்றில் இந்திய ஆர்கானிக் லோகோ, அமெரிக்க, ஐரோப்பிய நாடுகளின் ஆர்கானிக் ஏஜென்சிகளின் லோகோக்கள் இடம்பெற்றிருக்கும்.

ஆர்கானிக்:
இவற்றில் 95 சதவிகிதம் ஆர்கானிக் பொருட்களாக இருக்க வேண்டும். எஞ்சி உள்ள 5 சதவிகிதத்தில்  (உப்பையும் நீரையும் தவிர) குளோரின் (பாக்கிங் பொருட்கள் சுத்தம் செய்யப்பட்டிருப்பதால்), நிறமூட்டிகள் போன்ற ஆர்கானிக் அல்லாத பிராஸசிங் பொருட்கள் இருக்கலாம். ஆனால், அவை அங்கீகரிக்கப்பட்ட பொருட்களாக இருக்க வேண்டும்.

மேட் வித் ஆர்கானிக்:
இது 70 சதவிகிதம் ஆர்கானிக் உணவு. அதாவது, ஊறுகாய் என்றால், அதில் உள்ள மாங்காய் இயற்கை முறையில் விளைந்ததாக இருக்கும். ஆனால், இவற்றில் சில சுவையூட்டிகளும் உப்புகளும் செயற்கையானவையாக இருக்கும்.

ஆர்கானிக் இன்கிரிடியென்ட்ஸ்:
இதில், 70 சதவிகிதத்துக்கும் குறைவான ஆர்கானிக் பொருள் இருக்கும். இவற்றை ஆர்கானிக் உணவு என்று சொல்ல முடியாது. ஆனால், இவற்றின் லேபிளில் ஆர்கானிக் பொருட்களால் ஆன இன்கிரிடியென்ட்ஸ் உள்ளதெனக் குறிப்பிட்டுக்கொள்ளலாம். உதாரணம் ஜாம்கள், சாஸ்கள் மற்றும் சப்ளிமென்ட்டுகள்.

நேச்சுரல்:
இந்தியாவில் நேச்சுரல், ஹெர்பல் போன்றவற்றுக்கு எந்தவிதமான முறைசார்ந்த அங்கீகாரச் சான்றிதழ்களும், கண்காணிப்புகளும் கிடையாது. இவற்றில் குறைந்த அளவு பிராசஸ்டு பொருட்கள் இருக்கக்கூடும் அல்லது இவை போலியானவையாகவும் இருக்கக்கூடும்.

ஃபேர் ட்ரேடு:
என்.ஜி.ஓ-க்கள் மூலமாக சந்தைப்படுத்தப்படும் பொருட்கள். உற்பத்தியாளர்களிடமிருந்து நேரடியாகப் பெறப்பட்டு, சந்தைப்படுத்தப்படும் பொருட்கள் இவை. சில குறிப்பிட்ட ஊர்கள், சூழல்களில் மட்டும் இவற்றைக் காணலாம். உதாரணம், ஊட்டி டீத்தூள், காபிக்கொட்டை, காபி தூள். 

ஆர்கானிக் பை ட்ரஸ்ட்:
சிறிய விவசாயிகள் மற்றும் உற்பத்தியாளர்களுக்குச் சான்றிதழ் பெறுவது, பெரிய அளவில் சந்தைப்படுத்துவதெல்லாம் சாத்தியம் இல்லை. எனவே, அவர்கள் சந்தைப்படுத்தும் பொருட்கள் அல்லது அவர்களால் சில என்.ஜி.ஓ-க்களுக்கு விற்பனை செய்யப்படும் பொருட்களில், ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ எனக் குறிப்பிட்டுக்கொள்வார்கள். இது சுய சான்றிதழ் என்பதால், இவற்றின் தரத்தை நிர்ணயிப்பது கடினம். வாடிக்கையாளர்கள்தான் இவற்றின் நம்பகத்தன்மையைச் சோதித்து அறிந்துகொள்ள வேண்டும்.

கேஜ் ஃப்ரீ இறைச்சி:
இறைச்சி உணவில், கேஜ் ஃப்ரீ, நியர் ஆர்கானிக் போன்ற பதங்கள் மாறி மாறிக் குறிப்பிடப்படுகின்றன. கூண்டில் அடைக்கப்படாமல், ஒரு பெரிய கட்டடத்தில் சுதந்திரமாக இருக்கவிடப்பட்ட பறவைகளின் இறைச்சிகளை `கேஜ் ஃப்ரீ’ என்பார்கள். இதுவும் முறையான அங்கீகாரம் பெறப்பட்ட சான்று அல்ல.

கிராஸ் ஃபெட்:
தானியங்கள், புற்கள், இலை தழைகள் போன்ற இயற்கை உணவுகள் தந்து வளர்க்கப்பட்ட கால்நடைகள் மற்றும் பறவைகளின் இறைச்சி மற்றும் அவற்றிலிருந்து பெறப்படும் பால் பொருட்களில் `கிராஸ் ஃபெட்’  என குறிப்பிடப்பட்டிருக்கும். 

நோ ஆடட் ஹார்மோன்ஸ்
(No Added Harmones):
ஹார்மோன் ஊசிகள் போடப்படாத கால்நடைகளில் இருந்து பெறப்பட்ட பால்பொருட்கள் மற்றும் இறைச்சிகள் மேல் `நோ ஆடட் ஹார்மோன்ஸ்’ எனக் குறிப்பிடப்பட்டிருக்கும். இந்தியாவில்  முறையாக இந்தச் சான்றிதழ் பெற்றுள்ள நிறுவனங்கள் உள்ளன.

யார் சான்று தருவது? 
ஏபிஇடிஏ (Agricultural and Processed Food Products Export Development Authority) எனும் மத்திய அரசு நிறுவனம் ஆர்கானிக் பொருட்களுக்கான தரச் சான்றிதழை வழங்குகிறது. தற்போது, ஏற்றுமதிப் பொருட்களுக்கு மட்டுமே அரசின் அங்கீகாரம் கட்டாயம். மற்றவர்கள் விரும்பினால், இந்த அங்கீகாரத்தைப் பெற்றுக்கொள்ளலாம். உள்ளூர் பொருட்களுக்கு ஏற்கெனவே அக்மார்க் அங்கீகாரம் உள்ளது. ஆனால், இந்தச் சான்றிதழ் பெறுவதும் கட்டாயம் அல்ல. எனவே, இந்தியாவைப் பொறுத்தவரை ‘ஆர்கானிக் பை டிரஸ்ட்’ என்பதுதான் பொதுவான சந்தை அங்கீகாரமாக பெரும் அளவு உள்ளது.

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...