பொதுத்தொல்லைகள்

 *பொதுத்தொல்லைகள்* 


இன்றைய சூழ்நிலையில் நாம் ரோட்டில் நடந்து செல்லும்போதோ அல்லது வாகனங்களில் செல்லும்போதோ பலவித தொல்லைகளை அனுபவித்துக் கொண்டேதான் செல்ல வேண்டியதிருக்கிறது. ஆனால், இதைப் பற்றி புலம்பிக் கொண்டே செல்கிறோமே தவிர இதற்கு யார் பொறுப்பு? இதற்கு பொதுமக்களாகிய நாம் என்ன செய்ய வேண்டும்? 

யாரிடம் புகார் அளிக்க வேண்டும்? என்பது குறித்து பொதுமக்களுக்கு சட்ட விழிப்புணர்வு இல்லை. அதனை தீர்க்கவே இதனை எழுதுகின்றேன்.


*நாள்தோறும் என்னென்ன பொதுத் தொல்லைகளை அனுபவிக்கிறோம்?*


⧭ சாலையின் நடுவே தோண்டப்பட்டு சரியாக மூடாமல் இருக்கும் குழிகள்

⧭ ரோட்டில் கொட்டப்பட்டுள்ள கட்டிடக்கழிவுகள்

⧭ ரோட்டை ஆக்கிரமித்து வைக்கப்பட்டுள்ள கட்டிட பொருட்கள்

⧭ திருவிழாக் காலங்களில் ஒலிபெருக்கிகளை சத்தமாக வைப்பது

⧭ வீட்டில் வளர்க்கப்படும் மரங்கள் ரோட்டில் செல்வோருக்கு இடைஞ்சல் தருவது

⧭ சரக்கு வாகனங்களை நிறுத்தி வைத்து போக்குவரத்து நெரிசல் உண்டாக்குவது

⧭ தங்கள் வாகனங்களை ரோட்டில் ஓரத்தில் நிரந்தரமாக நிறுத்தி வைப்பது.

⧭ சாலை ஓரங்களிலேயே மல, ஜலம் கழிப்பது

⧭ சாலைகளில் சாக்கடைத் தண்ணீர் தேங்கி கிடப்பது 

⧭ சாலை ஓரங்களிலேயே குப்பைகளை கொட்டுவது

⧭ பொது இடங்களில் புகைபிடிப்பது மற்றும் மது அருந்துவது

⧭ சாலை ஓரங்களில் கழிவுகளை எரிப்பது

⧭ சாலைகளில் கால்நடைகளை விட்டு வைப்பது 

⧭ அருகிலுள்ள வீடுகள் மற்றும் கடைகளில் இருந்து வரும் கழிவுகள், சப்தங்கள் 


 *யார் யார் புகார் அளிக்கலாம்* ?


மேற்கண்ட தொல்லைகளை ஆங்கிலத்தில் Public Nuisance என்று குறிப்பிடுகிறார்கள். இவற்றை தடுக்க சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன் கீழும், இந்திய தண்டணைச் சட்டம் 268 முதல் 294 வரையில் உள்ள பிரிவுகள் கீழும், குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133ன் கீழும் யார் வேண்டுமானாலும் நடவடிக்கை எடுக்கலாம்.


*சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91*


சிவில் நடைமுறைச் சட்டம் பிரிவு 91ன்படி மேற்கண்ட குற்றங்களுக்காக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றால், மேலும் சிலரை நம்முடன் சேர்த்துக் கொண்டு நீதிமன்றத்தில் வழக்கு தாக்கல் செய்து அதனை நடத்தி நாம் சந்திக்கின்ற தொல்லைகளை தடுக்க தடை உத்தரவு வாங்கலாம். இது கொஞ்சம் சிரமமானது மட்டுமல்ல, காஸ்ட்லியானதும் கூட. 


*இதனை தவிர்க்க என்ன செய்யலாம்?*


குற்ற விசாரணை முறைச் சட்டம் பிரிவு 133

மேற்கண்ட குற்றங்களை செய்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்க குற்ற விசாரணை முறைச் சட்டத்தினை (பிரிவு 133) பயன்படுத்தினால் நமக்கு அலைச்சலில்லை, செலவு அதிகமில்லை. மிக எளிதானது. 


*என்ன செய்ய வேண்டும்?*


நாம் பொது இடங்களில் சந்திக்கின்ற இடையூறுகளைப் பற்றி ஒரு புகாராக எழுதி, நாம் குடியிருக்கும் பகுதிக்குரிய வருவாய் கோட்ட அலுவலர் (Revenue Divisional Officer) அவர்களுக்கு பதிவுத்தபாலில் அனுப்பவேண்டும். அல்லது சப் கலெக்டர் எனப்படும் கோட்டாட்சியர் அவர்களுக்கும் அந்தப் புகாரை அனுப்பலாம். புகாரின் தலைப்பிலேயே, குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ் புகார்மனு என்று எழுதிவிட்டு அதற்குப் பிறகு அனுப்புனர் என்பதை எழுதுங்கள்.


*புகார் அனுப்பியதும் என்ன நடக்கும்?*


உங்கள் புகார் கிடைக்கப் பெற்றதும் உங்களுக்கு நோட்டீஸ் அனுப்பி விசாரணை நடத்தி, புகாரில் உண்மை இருந்தால் அந்த தொந்தரவுகளை அகற்ற உடனே உத்தரவுகளை பிறப்பிப்பார்கள். இந்த உத்தரவுகளில் சிவில் நீதிமன்றங்கள் தலையிட முடியாது என்பது விசேஷச் செய்தி ஆகும். இந்த உத்தரவின் கீழ் அந்த தொந்தரவு தருபவர்கள் அதனை அகற்ற அல்லது நிறுத்த மறுத்தால் இந்திய தண்டணைச் சட்டம், பிரிவு 188ன் கீழ் தண்டணைக்குள்ளாவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


*என்ன தண்டணை கிடைக்கும்?*


குற்ற விசாரணை முறைச் சட்டம், பிரிவு 133ன் கீழ் நடவடிக்கை எடுக்கப்பட்டு பிறப்பிக்கப் படுகின்ற உத்தரவின்படி பொதுமக்களுக்கு ஏற்படுகின்ற இடையூறுகளை சரிசெய்ய மறுத்தால், அந்த குற்றத்தின் தன்மைக்கேற்ப ஒரு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 200/- அபராதமும் அல்லது ஆறு மாதம் சிறைத் தண்டணை மற்றும் ரூபாய் 1000/- அபராதமும் விதிக்கப்படும்.


*காவல் துறையில் புகார் அளிக்கலாமா?*


பொதுத் தொல்லைகளால் பாதிக்கப்படுகின்ற பொதுமக்கள் இந்திய தண்டணைச் சட்டம் 268 முதல் 294 வரையில் உள்ள பிரிவுகள் கீழ் தாங்கள் வசிக்கும் பகுதியிலுள்ள காவல் நிலையத்திலும் புகார் அளிக்கலாம்.


கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...