ஈவ்_டீசிங்_கேலி_வதைத்_தடுப்புச்_சட்டம்

*#ஈவ்_டீசிங்_கேலி_வதைத்_தடுப்புச்_சட்டம்*

பொதுவாக கொலை, கொள்ளை, ஏமாற்றுதல் போன்ற குற்றச் செயல்களுக்கு ஆண்களைப் போல பெண்கள் பலி ஆனாலும், சில குற்றங்கள் பெண்களுக்கு எதிராக மட்டுமே நடைபெறுகின்றன. இந்தக் குற்றங்கள் பெரும்பாலும் ஐபிசி என்று சொல்லக்கூடிய இந்திய தண்டனை சட்டத்தின் கீழ் வருகிறது.

1. கற்பழிப்பு.

2. ஆள்கடத்தல் (விபசாரத்துக்குப் பயன்படுத்துதல்).

3. வரதட்சணை மரணம்.

4. கணவர் மற்றும் அவர் குடும்பத்தார் மனதாலும் உடலாலும் கொடுமை செய்தல்.

5. மானபங்கப்படுத்துதல்.

6. பாலியல் வன்முறை.

7. அமில வீச்சு மற்றும் அதனால் ஏற்படக்கூடிய பாதிப்பு மற்றும் மரணம்.

8. ஒரு பெண்ணின் அந்தரங்க வாழ்க்கையை ஊடுருவுதல் அல்லது படம் பிடித்தல்.

9. ஒரு பெண்ணை பின்தொடர்தல் அல்லது கணினி மூலம் தொல்லை கொடுத்தல்.

சமீபத்தில் மேற்கூறிய குற்றங்களில் பெரும்பாலானவை 2013ம் ஆண்டு குற்றவியல் சட்டத் திருத்தத்தால் புதுப்பிக்கப்பட்டு, சில புதிய குற்றங்களும் சேர்க்கப்பட்டுள்ளன.

இவை தவிர...

Immoral traffic (prevention) act 1956

வரதட்சணை தடுப்புச் சட்டம் 1961

Indecent representation of women(prohibition) act 1986

சதி தடுப்புச் சட்டம் 1987

- ஆகிய சட்டங்களும் உள்ளன.

 இவ்வளவு சட்டங்கள் இயற்றப்பட்டு இருப்பினும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் வளர்ந்து கொண்டுதான் உள்ளன.பெரும்பாலான குற்றங்கள் பதிவு செய்யப்படாமலேயே உள்ளன. காரணம்... பெண்கள் தங்களுக்கு எதிராக நடைபெறும் அவலங்களை வெளியே சொல்லத் தயங்குவதுதான். அவ்வாறு வெளியே சொல்லும் பெண்கள் மீதான சமுதாயத்தின் பார்வை... 

அதோடு சட்டத்துக்கு முன் குற்றவாளிகளை உரிய ஆதாரங்களுடன் நிறுத்துவது கடினமான செயல். மேலும் வழக்குகளின் காலதாமதம் போன்றவை அவர்கள் புகார் அளிப்பதை ஊக்குவிப்பதில்லை. 

பதிவு செய்யப்படும் குற்றங்களின் புள்ளிவிவரங்களைப் பார்க்கும்போது ஆண்டுதோறும் பெண்களுக்கு எதிரான குற்றங்கள் பெருகிக் கொண்டிருப்பது புரியும்.

ஒரு சராசரி இந்தியப் பெண் பெரும்பாலும் படிப்புக்காகவோ, அலுவல் காரணமாகவோ, வேறு ஏதாவது ஒரு காரணமாகவோ, தனியாகவோ, கூட்டாகவோ - ஆணின் துணை இல்லாமல் வெளி இடங்களுக்கு செல்லும்போது கேலி வதைக்கு ஆளாவது ஏன்? 

ஆண்கள் மட்டுமல்ல... பெண்களும் அதனை சகஜமாக எடுத்துக் கொள்ள வேண்டிய சூழ்நிலை. பெரும்பாலான ஈவ் டீசிங் குற்றங்களின் புகார்கள் பதிவு ஆகாமல் இருப்பது வேதனையே...

ஈவ் டீசிங் போன்ற குற்றங்கள் ஏதோ மிகவும் அழகான கவர்ச்சியான இளம்பெண்களுக்கு எதிராக மட்டும் நடைபெறுவதல்ல. 

உண்மையில் இது வயது வித்தியாசம் இல்லாமல், ஏழை-பணக்காரர், படித்தவர்-படிக்காதவர், திருமணம் ஆனவர்-ஆகாதவர் என்று எல்லாத் தரப்பு பெண்களுக்கும் ஏற்படும் கொடுமையே. 

சிலர், பெண்களின் நடை உடை பாவனை ஆண்களை வசீகரிக்கும் நிலையில் இருக்கும் பட்சத்தில் இது போன்ற வன்முறை செயல்கள் நடைபெறுவதாகக் கூறுகிறார்கள். இரவு நேரங்களில் பெண்களுக்கு பாதுகாப்பு இல்லை என்றும் ஒரு கருத்து உண்டு. 

ஒரு வழக்கறிஞராக நான் அறிந்தபடி, பெண்கள் எந்த உடை உடுத்தியிருந்தாலும், எந்த நேரத்திலும், எந்த இடத்திலும் வன்முறை அரங்கேறிக் கொண்டிருப்பதுதான் உண்மை.

பெண்களின் மீது கேலி வதை செய்வது என்ற செயல் ஆணாதிக்கச் சிந்தனையின் வெளிப்பாடு... தனிமனிதனின் மனம் சார்ந்த செயல். ஈவ் டீசிங் என்ற வார்த்தை இந்திய தண்டனைச் சட்டத்தில் குறிப்பிடப்படவில்லை என்றாலும் சட்டத்தின் சில பிரிவுகள் அதனை குறிக்கிறது என்பதுதான் உண்மை.

பெண்களுக்கு எதிரான கேலி வதை மட்டுமல்ல... எல்லாவித குற்றங்களும், நம் அரசியல் சாசனத்துக்குப் புறம்பான ஒரு செயலாகவே உள்ளன. இந்திய குடிமகனுக்கு வழங்கும் அடிப்படை உரிமைகள் அனைத்தும் பெண்களுக்கும் உரியதே. 

எனினும், இந்தச் சமுதாயம் அவர்களுக்கு அந்த சம உரிமையை மறுப்பது போன்ற ஒரு தோற்றத்தை ஏற்படுத்துகிறது. ஆண் என்ற ஒரு காரணத்துக்காக பெண்ணினத்தை எள்ளி நகையாடி, அவர்களை வதை செய்து பலவகை இன்னல்களுக்கு ஆளாக்கும் அரக்கர்களுக்கு சட்டம் கொடுக்கும் பதிலடிதான் என்ன? பெண் என்ற

காரணத்தால் சகிப்புத் தன்மையோடு தன்மானத்தை அடகு வைத்துதான் வாழ வேண்டுமா?

*சட்டம்*

1998ம் ஆண்டு, சென்னையில் புகழ்பெற்ற பெண்கள் கல்லூரியில் பயின்ற மாணவி சரிகா ஷா, கல்லூரியின் அருகிலேயே அவ்வழியில் சென்ற வன்மம் மிகுந்த வாலிபர்கள் சிலரால் ஈவ் டீசிங் என்ற பெயரால் நசுக்கப்பட்டு உயிரை விட்டார். இதன்பிறகே ‘ஒயிட் ப்ரிகேட்’ என்கிற பெண் காவல் படையின் கண்காணிப்பு, புகார் பெட்டிகள் உள்பட பாதுகாப்பு வளையம் உருவாக்கப்பட்டது. 

தன் பிறந்த நாளான ஜூலை 23 அன்றே, ஈவ் டீசிங் கொடுமையால் உயிரை இழந்த சரிகா ஷாவின் மரணம் மிகப்பெரிய அதிர்ச்சி அலையை ஏற்படுத்தியது. தன் உயிர் கொடுத்து கேலி வதையிலிருந்து பெண்களைக் காக்க தமிழகத்தில் சட்டம் இயற்ற அவள் வழிவகை செய்ததால் Tamil Nadu Prohibition of Eve Teasing act 1998 என்ற சட்டம் உருவானது.

*விளக்கமும்_தண்டனையும்*

2002ம் ஆண்டு சட்டத் திருத்தத்தின்படி ஈவ் டீசிங் என்ற வார்த்தைக்குப் பதிலாக Harassment of Women என்று மாற்றப்பட்டது. வன்கொடுமை என்பதற்கு இந்தச் சட்டத்தில் கொடுக்கப்பட்டிருக்கும் விளக்கம்...

 ஒரு ஆணின் முறை தவறிய நடத்தை அல்லது செயலால் ஒரு பெண்ணுக்கு அச்சமோ, பயமோ, அவமானமோ, தொல்லையோ, வேறு ஏதாவது உடல்ரீதியான தாக்குதலோ ஏற்படுதல். இச்சட்டத்தின் கீழ் இவ்வாறான செயல்களை ஒரு பெண்ணுக்குச் செய்யத் தூண்டுவதோ, அந்தத் தவறை விளைவிப்பதோ, மேலும் கல்வி வளாகத்திலோ, கோயில் போன்ற வழிபாட்டுத் தலத்திலோ, பேருந்து நிறுத்தத்திலோ, புகைவண்டி நிலையத்திலோ, சாலையிலோ, திரையரங்கிலோ, பூங்காக்கள், கடற்கரை, திருவிழாக்கள் போன்ற பொதுமக்கள் கூடும் இடங்களிலோ, பேருந்து ரயில் போன்ற பொது ஊர்தியிலோ... 

மேற்கூறிய தவறுகளை செய்யும் ஆண்களுக்கு 3 ஆண்டுகள் வரை சிறைத் தண்டனையோ, ரூ.10 ஆயிரம் ரூபாய் அபராதமோ விதிக்கப்படலாம்.

சில வேளைகளில் இத்தகைய வன்கொடுமையில் ஈடுபடும் ஆண், அந்தப் பெண்ணுக்கு மரணம் சம்பவிக்க வேண்டும் என்ற எண்ணத்தில் வன்கொடுமையில் ஈடுபடும் பட்சத்தில் அவருக்கு ஆயுட்காலம் வரை சிறைத் தண்டனை மற்றும் ரூ.50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படலாம்.

 ஒரு ஆண் தன்னுடைய வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு மரணம் ஏற்படும் என்று அறிந்திருந்தும், உயிர் கொல்லும் எண்ணத்தில் செயல்படும் பட்சத்தில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படலாம்.

எந்தவிதத் தவறான எண்ணமும் இல்லாமல் ஒரு ஆணின் வன்கொடுமையால் ஒரு பெண்ணுக்கு மரணம் சம்பவிக்கும் பட்சத்தில் 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.25 ஆயிரம் அபராதமோ விதிக்கப்படலாம். 

இந்த வன்கொடுமையால் ஒரு பெண் தற்கொலை செய்துகொள்ளும் பட்சத்தில் அந்த வன்கொடுமையை செய்த ஆணுக்கு 10 ஆண்டு சிறைத் தண்டனையும், ரூ.50 ஆயிரம் அபராதமும் விதிக்க சட்டம் வழிவகை செய்துள்ளது.

இந்தச் சட்டத்தின் கீழ் கல்வி நிறுவனங்கள், வழிபாட்டுத் தலங்கள், திரையரங்குகள் போன்றவை பெண்கள் மீதான வன்கொடுமை ஏற்படுவதை தடுப்பதற்கான உரிய பாதுகாப்பு ஏற்பாடுகள் மேற்கொள்ள வேண்டும். அதனை மீறி ஒரு பெண்ணுக்கு பொது இடங்களில் இவ்வாறான வன்கொடுமை ஏற்படும்போது, 

இந்த இடங்களின் பொறுப்பாளருக்கு அல்லது மேலாளருக்கு தெரிய வரும்போது அருகில் உள்ள காவல்நிலையத்துக்குத் தகவல் கொடுத்து உரிய நடவடிக்கை எடுக்க அந்தப் பெண்ணுக்கு உதவவேண்டும். அவ்வாறு செய்யத் தவறும் பட்சத்தில் தவறு இழைப்பவருக்கு ரூ. 2 ஆயிரம் வரை அபராதம் விதிக்கப்படும். 

பேருந்து போன்ற பொதுமக்களுக்கான ஊர்திகளில் இந்தச் சட்டத்தில் கூறப்பட்டுள்ள பெண்களுக்கு எதிரான வன்கொடுமைகள் நடைபெற்றால் அந்தச் செயல் அந்த ஓட்டுனருக்கும் நடத்துனருக்கும் தெரியவரும் பட்சத்தில், அந்த வாகனத்தை அருகில் உள்ள காவல் நிலையத்துக்கு ஓட்டிச் சென்று, புகார் கொடுத்து அந்தப் பெண்ணிற்கு உதவ வேண்டும். செய்யத் தவறும் பட்சத்தில் ஆயிரம் ரூபாய் அபராதமாக விதிக்கப்படும்.

ஒருவேளை பொதுமக்களுக்கான வாகனத்தில் பெண்ணுக்கு எதிரான வன்கொடுமை ஏற்படும் பட்சத்தில், காவல் நிலையத்திற்கு புகார் கொடுக்காத பட்சத்தில் அந்த ஊர்தியின் ஓட்டுநரும் இந்த வன்செயலுக்கு உடந்தையாக இருந்தார் என்று இந்தச் சட்டத்தின்கீழ் 3 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் ரூ.5 ஆயிரம் அபராதமும் விதிக்கப்படலாம். 

 அந்த வாகனத்தை பறிமுதல் செய்யவும் சட்டத்தில் வழிசெய்யப்பட்டுள்ளது.

 இச்சட்டத்தில் விதிக்கப்பட்டுள்ள அபராதத் தொகையை பாதிக்கப்பட்டவருக்கு நஷ்டஈடாகக் கொடுக்கவும் வழிவகை செய்யப்பட்டுள்ளது. 

 இந்தக் குறிப்பிட்ட சட்டத்தால் பொதுவாக இருக்கும் சட்டத்துக்கு எந்தவித பங்கமும் கிடையாது. பொதுச்சட்டத்துடன் இணைந்தே செயல்படுத்தப்படும்.

*முக்கிய_வழக்கு*

Rupan deol bajaj and another vs K.P.S.Gill  

  1995 (vi scc) 194

இந்த வழக்கில்தான் நாகரீகமான சமுதாயம், ஒரு பெண்ணுக்கு எந்த அளவு பாதுகாப்பு தரவேண்டும் என்பதை வலியுறுத்தப்பட்டிருக்கிறது. ஒரு பெண்ணின் தன்மானத்தை காப்பது ஒரு சமுதாயத்தின் இன்றியமையாத கடமை என்பதையும் வலியுறுத்தியுள்ளது. 

போலீஸ் உயர் அதிகாரி ஒருவர் பொதுநிகழ்ச்சியில் ஒரு பெண்ணின் பின்புறத்தை தன் கையால் தட்டுதல் பெண்ணுக்கு எதிரான வன்முறையில் அடங்கும் என்று இந்த வழக்கில் தீர்ப்பு கூறப்பட்டது.

கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம்

நீலகிரி மாவட்டம்

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...