*வருவாய் நிர்வாகத்தில் கிராம நிர்வாக அதிகாரியால்* கையாளப்படும் அ. *பதிவேடு , பட்டா , சிட்டா , அடங்கல் முதலியன பற்றி*
கிராமக் கணக்குகளைப் பராமரித்தல்
கிராமக் கணக்குகள் பராமரித்தல் பற்றி அரசானை எண். 581 – நாள் 3-04-1987-இன் படி பணிகள் அட்டவணை உருவாக்கப்பட்டது.இக்கணக்குகள் அனைத்தும் நிலம் சம்பந்தப்பட்டது ஆகும்.புல எண் (Survey Number):ஒவ்வொரு மாவட்டமும் பல வட்டங்களாகவும் (Taluk), வட்டங்கள் பல கிராமங்களாகவும் பிரிக்கப்பட்டிருக்கும்.
கிராமங்களின் கீழ் நிலங்கள் பல பகுதிகளாகப் பிரிக்கப்பட்டு ஒவ்வொரு பகுதிக்கும் ஒரு இலக்கம் இடப்படும். அதற்குப் புல எண் (survey Number) என்று பெயர்.நிலம் தொடர்பான விவரங்கள் இருதுறைகளில் பராமரிக்கப்படுகின்றன.
1. பதிவுத்துறை
2. வருவாய்த்துறைஅதைப் பற்றி சுருக்கமாக காண்போம்.
1. பதிவுத்துறை:
நாம் சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப்பத்திரத்தை (Sale Deed) சார்பதிவாளர் (Sub- Registration Office)அலுவலகத்தில் தான் பதிவு செய்ய வேண்டும்.
2. வருவாய்த்துறை:
இந்த துறையில்தான் நிலத்திற்கான விவரங்கள் கீழ்க்கண்ட பதிவேட்டில் இருக்கும்.பட்டா (Patta)சிட்டா (Chitta)அடங்கல் (Adangal)அ’ பதிவேடு (‘A’ Register)நிலத்திற்கான வரைபட எல்லை (FMB)
பட்டா (Patta) :
நிலத்தின் உரிமை நமக்கு தான் இருக்கிறது என்பதற்கான ஆதாரம் பட்டாவாகும். பட்டாவை வைத்துதான் ஒரு நிலத்தின் உரிமை யாருக்கு என்பதை முடிவு செய்யப்படுகின்றது. பின்வரும் விவரங்கள் பட்டாவில் இருக்கும்
:-1. மாவட்டத்தின் பெயர், வட்டத்தின் பெயர் மற்றும் கிராமத்தின் பெயர்
2. பட்டா எண்
3. உரிமையாளர் பெயர்
4. புல எண்ணும் உட்பிரிவும் (Survey Number and Subdivision)
5. நன்செய் நிலமா அல்லது புன்செய் நிலமா6. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை
சிட்டா (Chitta) :
ஒரு தனி நபருக்குக் குறிப்பிட்ட கிராமத்தில் எவ்வளவு நிலம் இருக்கிறதென்று அரசாங்கம் வைத்திருக்கும் பதிவேடு. இதில் சொத்தின் உரிமையாளர் பெயர், பட்டா எண்கள், நிலம் நன்செய் அல்லது புன்செய் பயன்பாடு, தீர்வை கட்டிய விவரங்கள் எல்லாம் இருக்கும்.
அடங்கல் (Adangal) :
ஒரு கிராமத்தில் இருக்கிற மொத்த சர்வே எண்கள் அடங்கிய பதிவேடு. இதில் குறிப்பிட்ட சர்வே எண்ணுக்கு உரிய நிலம் யார் பெயரில் இருக்கிறது, பட்டா எண் மற்றும் நிலத்தின் பயன்பாடு என்பன போன்ற விவரங்கள் இதில் இருக்கும்.
அ’ பதிவேடு (‘A’ Register) :
இப்பதிவேட்டில்
1. பழைய நில அளவை எண், உட்பிரிவு எண், (Survey Number and Subdivision)
2. ரயத்துவாரி(ர), சர்க்கார் (ச), அல்லது இனாம் (இ),
3. நன்செய் (ந), புன்செய் (பு), மானாவாரி (மா), தீர்வு ஏற்படாத தரிசு (தீ.ஏ.த), புறம்போக்கு,
4. பட்டா எண் மற்றும் பதிவு பெற்ற உடைமையாளரின் பெயர்,
5. நிலத்தின் பரப்பு மற்றும் தீர்வை, போன்ற விவரங்கள் இருக்கும்.
நிலத்திற்கான வரைபட எல்லை (FMB) :
நிலத்திற்கான வரைபடம். இது இடம் எவ்வாறு பல பகுதிகளாக பிரிக்கப்பட்டுள்ளது என்பதைக் காட்டுகிறது .
கிரயப் பத்திரம் (Sale Deed) :
சொத்து வாங்கும் போது அல்லது விற்கும் போது அந்தக் கிரயப் பத்திரத்தைச் சார் பதிவாளர் அலுவலகத்தில் (Sub- Registration office) பதிவு செய்ய வேண்டும். கிரயப் பத்திரத்தில் கீழ்க்கண்ட முக்கியமான விவரங்கள் இருக்கும்.
1. எழுதிக் கொடுப்பவரின் பெயர், முகவரி
2. எழுதி வாங்குபவரின் பெயர், முகவரி
3. எவ்வளவு அளவு
4. எவ்வளவு தொகைக்கு விற்கப்படுகிறது
5. சொத்து விவரம்சொத்து விவரத்தில் நாம் வாங்கும் நிலத்தின் அளவு, அது எந்தப் புல எண்ணில் அமைந்திருக்கிறது, பட்டா எண், அது எந்தக் கிராமத்தில் இருக்கிறது மற்றும் வட்டம், மாவட்டம் பற்றிய விவரங்கள் இருக்கும். நிலம் வீட்டு மனையாக இருந்தால் அதனுடைய அங்கீகாரம் பெற்ற விவரங்கள் மற்றும் பிளாட் எண் முதலியவை இருக்கும்.
கிரயப் பத்திர முதல் தாளின் பின் பக்கம் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யப்பட்ட முழு விவரங்கள் இருக்கும்.
1. பதிவு எண் மற்றும் வருடம்
2. சொத்து எழுதிக் கொடுப்பவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
3. சொத்து எழுதி வாங்குபவரின் புகைப்படம், கைரேகை, கையெழுத்து, முகவரி
4.புகைப்படங்களில் சார் பதிவாளரின் கையொப்பம்
5. பதிவு செய்யப்பட்ட நாள், விவரம், பதிவு கட்டணம் செலுத்திய விவரம் சார்பதிவாளர் அலுவலகத்தின், விவரம் ஆகியவை
6. இரண்டு சாட்சிகளின் கையொப்பம் மற்றும் முகவரி
7. மொத்தம் எத்தனை பக்கங்கள்
8. மொத்தம் எத்தனை தாள்கள்
9. தமிழ்நாடு அரசின் ஸ்டிக்கர்.
Land document
01.07.06 முதல்தான் கிரயப் பத்திரத்தில் சொத்து விற்பவர் மற்றும் வாங்குபவர்களின் புகைப்படங்கள் ஒட்டும் முறை அரசால் நடைமுறைப்படுத்தப்பட்டது. சொத்து வாங்குபவர் புகைப்படம் இரண்டும் சொத்து விற்பவரின் புகைப்படம் ஒன்று ஒட்டப்பட்டு இருக்கும். இதற்கு முன் பதிவு செய்யப்பட்ட ஆவணங்களில் புகைப்படங்கள் இருக்காது. 18.05.09 முதல் இந்த முறையிலும் மாற்றம் செய்யப்பட்டு சொத்து வாங்குபவரின் புகைப்படம்.
இரண்டிற்குப் பதிலாக ஒன்று ஒட்டினால் போதும் என்ற முறை நடைமுறைக்கு வந்தது.இது தவிர ஒவ்வொரு தாளின் இரு பக்கமும் இந்தக் கிரயப் பத்திரம் மொத்தம் எத்தனை பக்கங்கள் (Sheet) கொண்டது மற்றும் அந்தப் பக்கத்தின் எண், ஆவண எண், வருடம் போன்ற விவரங்கள் சார்பதிவாளர் அலுவலகத்தினரால் குறிக்கப்பட்டிருக்கும்.ஒவ்வொரு தாளின் பின்புறமும் இந்தக் கிரயப் பத்திரம் எத்தனை தாள்களைக் கொண்டது. அந்த தாளின் நம்பர், ஆவண எண், வருடம் முதலியவை குறிக்கப்பட்டு சார்பதிவாளர் கையொப்பம் இருக்கும்.
நாம் பதிவு விவரங்கள் முத்திரைத் தாள்களில் டைப் செய்யும் போது அதன் முன்பக்கம் மட்டும் தான் டைப் செய்ய வேண்டும். ஒவ்வொரு பக்கத்திற்கும் 1ல் இருந்து ஆரம்பித்து வரிசையாக இலக்கம் இடப்படும்.. அதனால் தாள்களின் எண்ணிக்கையும் பக்கமும் சமமாக இருக்கும். எடுத்துக்காட்டாக 16 முத்திரைத் தாள்களில் டைப் செய்தால் 16 பக்கங்கள் இருக்கும்.
ஆனால் சார்பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்யும் போது பதிவின் விவரங்கள் அனைத்தும் முதல் தாளின் பின்புறம் குறிக்கப்பட்டிருக்கும்.சார்பதிவாளர் அலுவலகத்தில் இதையும் ஒரு பக்கமாக கணக்கில் எடுத்துக் கொண்டு இலக்கம் கொடுப்பரார்கள்.
அதனால் மொத்தம் 16 தாள்கள்தான் இருக்கும். ஆனால் பக்கங்கள் மட்டும் 17 ஆகிவிடும்.
பதிவு செய்யும் முறை:
நாம் வாங்கும் இடம் ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட புல எண்களில்அமைந்திருக்கலாம். ஒவ்வொரு புல எண்ணிற்கும் அது அமைந்திருக்கும் இடத்தை பொறுத்து அரசாங்கம் மதிப்பீடு செய்து ஒரு விலை நிர்ணயம் செய்யும். அதற்கு பெயர் Guide line value .நாம் பத்திரம் பதிவு செய்யும் போது இந்த பெயர் Guide line valueக்கு 8% முத்திரை தாள்களாக வாங்கி அதில் கிரயப் பத்திரத்தின் விவரங்கள் டைப் செய்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.
முழு மதிப்பிற்கும் (8%) முத்திரைத்தாள்கள் வாங்க முடியாத நிலையில், ஏதாவது ஒரு மதிப்பிற்கு முத்திரைத் தாள் வாங்கிவிட்டு மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தலாம்.இதற்கு 41 என்ற படிவத்தை பூர்த்தி செய்ய வேண்டும். அதில் வாங்க வேண்டிய முத்திரைத் தாள்களின் மதிப்பு, நாம் வாங்கிய முத்திரைத் தாளின் மதிப்பு,, மீதி செலுத்த வேண்டிய தொகை முதலிய விவரங்களை பூர்த்தி செய்து கிரயப் பத்திரத்துடன் இணைத்து சார்பதிவாளர் அலுவலகத்தில் தாக்கல் செய்ய வேண்டும். மீதி செலுத்த வேண்டிய தொகை ரூபாய் ஆயிரம் வரை இருந்தால் பணமாக செலுத்தி விடலாம்.
அதற்கு மேல் இருக்கும் பட்சத்தில் காசோலையாக (Demand Draft) செலுத்த வேண்டும். காசோலை யார் பெயரில் எடுக்க வேண்டும் என்ற விவரம் அந்தந்த சார்பதிவாளர் அலுவலகத் தகவல் பலகையில் குறிக்கப்பட்டிருக்கும்.பதிவுக் கட்டணமாக Guide line valueவில் இருந்து (1%) மற்றும் கணினி கட்டணம் ரூபாய் 100ம் பதிவு செய்யப்படும் போது சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
இதுவும் ரூபாய் ஆயிரம் வரையில் பணமாகவும் அதற்கு மேல் காசோலையாகவும் செலுத்த வேண்டும்.முத்திரைத் தாள்களில் கிரயப் பத்திர விவரங்கள் டைப் செய்து, ஒவ்வொரு பக்கத்திலும் கீழ்பகுதியில் ஒரு புறம் சொத்து வாங்குபவரும் மறுபுறம் சொத்து விற்பவரும் கையொழுத்து இட வேண்டும்.
பின்பு சார்பதிவாளரிடம் இந்தக் கிரயப் பத்திரத்தைப் பதிவு செய்வதற்காக தாக்கல் செய்ய வேண்டும்.சார்பதிவாளர், சொத்து வாங்குபவர் மற்றும் விற்பவரின் புகைப்படம், அடையாள அட்டை முதலியவைகளையும், மற்ற எல்லா விவரங்களையும் சரி பார்த்து விட்டு கிரயப் பத்திரத்திற்குப் பதிவு இலக்கம் கொடுப்பார். நாம் செலுத்த வேண்டிய பதிவுக் கட்டணத்தைச் செலுத்திய பின் நிலம் விற்பவர் மற்றும் வாங்குபவரின் புகைப்படங்கள் முதல் முத்திரைத் தாளின் பின்புறம் ஒட்டப்பட்டு அவர்களுடைய கையொப்பம், முகவரி, கைரேகை முதலியவை வாங்கப்படும்.
புகைப்படங்களின் மேல் சார்பதிவாளர் கையொப்பம் இடுவார். சாட்சிகள் கையொப்பமிடுவர் இத்துடன் பதிவு நிறைவு பெறும்.பதிவுக் கட்டணம் செலுத்திய இரசீதில், சார்பதிவாளர் மற்றும் சொத்து வாங்குபவர் கையொப்பம் இட வேண்டும். சொத்து வாங்குபவர் பதிவு செய்யப்பட்ட பத்திரத்தைக் குறிப்பிட்ட சில நாட்களுக்குப் பிறகு, இந்த இரசீதைக் காட்டி சார்பதிவாளர் அலுவலகத்தில் சென்று பெற்றுக் கொள்ளலாம்.
அவரைத் தவிர வேறு யாராவது சென்று வாங்க வேண்டியதிருந்தால், இரசீதில் அந்த நபரும் கையொப்பமிட வேண்டும்.பத்திரப்பதிவின் போது Guide line value-விற்கு 8% முத்திரைதாள் வாங்க வேண்டும். அரசாங்கத்தால் நிர்ணயிக்கப்பட்ட Guide line value அதிகமாக இருக்கிறது என எண்ணும் பட்சத்தில் நாமே சொத்திற்கு ஒரு மதிப்பு நிர்ணயம் செய்து அந்த மதிப்பிற்கு 8% முத்திரைத்தாள் வாங்க வேண்டும்.
அதை சார்பதிவாளர் பதிவு செய்து விட்டு pending document என முத்திரை இட்டு விடுவார். மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில்(Collector office) இதற்கென்று ஒரு பிரிவு இருக்கிறது. அங்கிருந்து அரசாங்க அலுவலர் ஒருவர் வந்து இடத்தை பார்வையிட்டு, அதைச் சுற்றி உள்ள சர்வே எண்களின் மதிப்பை வைத்து Guide line value சரியானதா என்பதை முடிவு செய்வார்.
அல்லது அவரே ஒரு மதிப்பை நிர்ணயம் செய்வார்.Guide line value சரியாக இருக்கிறது என்று அவர் முடிவு செய்யும் பட்சத்தில் Guide line value-விற்கும் நாம் நிர்ணயித்த மதிப்பிற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும் அல்லது அவர் நிர்ணயம் செய்த மதிப்பிற்கும், நாம் நிர்ணயம் செய்த மதிப்பிப்ற்கும் உள்ள வித்தியாசத் தொகையில் 8% பணமாக கட்ட வேண்டும்.
அப்பொழுது தான் நாம் பதிவு செய்த document நம்மிடம் ஒப்படைக்கப்படும். இந்த முறை 47A பிரிவு என்பதாகும். ஒரு குறிப்பிட்ட காலத்திற்குள் மீதி தொகையை சார்பதிவாளர் அலுவலகத்தில் செலுத்தி பத்திரத்தைப் பெற வேண்டும்.
இல்லை என்றால் அது அந்த மாவட்டத்தின் மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு அனுப்பப்படும். நாம் அங்கு சென்று அந்த வித்தியாசத் தொகையை செலுத்தி பெற்று கொள்ளலாம்
நிலையான ‘அ’ பதிவேடு:
இப்பதிவேடு நில உட்பிரிவையும், அவற்றில் ஏற்படும் மாறுதல்களையும் காண்பிக்கும் நிலையான பதிவேடு ஆகும்.நிலவரி திட்டப் பணிகள் முடிக்கப்பட்டு, பின்னர் பராமரிப்புக்காக ஒவ்வொரு வருவாய்க் கிராமத்திற்கும் தனித்தனியாக ‘அ’ பதிவேடு முதலில் கையால் எழுதப்பட்ட பிரதி வட்டாட்சியார் அலுவலகத்தில் ஒப்படைக்கப்பட்டு கிராம நிர்வாக அலுவலர்களுக்கு வழங்கப்பட்டது.
பின்னர் அந்தப் பிரதி ஒன்று அச்சிடப்பட்டு அனைத்து கிராமங்களுக்கும் கெட்டி அட்டை போட்ட பதிவேடுகளாக வழங்கப்பட்டுள்ளது.இப்பதிவேட்டில் முதல் பகுதியாக வருவாய்க் கிராமத்தின் வரலாற்றுக் குறிப்பு(Descrptive Memoir) வழங்கப்பட்டுள்ளது.
இந்த வரலாற்றுக் குறிப்பில் முதல்பகுதியில் வருவாய்க் கிராமத்தின் வருவாய்க்குண்டான அனைத்து விவரங்களும் அடங்கும்.
நிலையான ‘அ’ பதிவேட்டின் விபரம்
கிராமத்தின் பெயரும், உரிமை முறையும்.அமைவிடம்,பரப்பும் எல்லையும்.வெவ்வேறு வகைப்பாட்டின் பரப்பு.எல்லை வரையறுத்தல்.மக்கள்தொகை.நில உடைமைகள்.புன்செய் தொகுதிகள்.பாசன விவரங்கள்.குடி மரமாத்து.கிணறுகள்.வகைப்பாடும், வரிவிதிப்பும்.மீன்வளம்.பொதுக்குறிப்பு.’அ’ பதிவேடு நடைமுறையில் கீழ்க்கண்ட 11-கலங்களில் பராமரிக்கப்பட்டு வருகிறது.-புல எண், உட்பிரிவு எண்.-பழைய புல எண், உட்பிரிவு எண்-ரயத்துவாரி(ர) அல்லது இனாம்(இ)-வகைப்பாடு(நன்செய்/புன்செய்)-இருபோக நன்செய் எனில் மொத்தத் தீர்வை வீதம்.-மண் வளமும், ரகமும்.-தரம்.-ஹெக்டேர் ஒன்றுக்கு தீர்வை வீதம்.-பரப்பளவு.-பட்டா எண் மற்றும் பதிவுபெற்ற நில உடைமையாளரின் பெயர்.-குறிப்பு
’அ’ பதிவேட்டைப் பராமரிப்பது
இப்பதிவேடு இரண்டு பிரதிகளாக வட்டாட்சியர் அலுவலகத்தில் ஒன்றும், VAO விடம் ஒன்றும் பராமரிக்கப்படும்.
’அ’ பதிவேட்டினை மாற்றம் செய்யும்போது
இப்பதிவேட்டில் நிலையாக மாற்றம் செய்யும் புல உட்பிரிவு மாறுதல்கள், நில எடுப்பு, நில ஒப்படைப்பு, நில மாற்றம் சம்பந்தப்பட்ட மாறுதல்கள் ஏற்படும் போது வட்டாட்சியர் கிராம நிர்வாக அலுவலரிடம் உள்ள பிரதியிலும் பதிய வேண்டும்.மேற்கண்ட மாறுதல்களை ‘அ’ பதிவேட்டில் பதியும் போது அம்மாறுதலுக்கு – உண்டான ஆணை எண் மற்றும் யாரால் வழங்கப்பட்டது அல்லது கீழ்நிலையில் உள்ள வருவாய் ஆய்வாளர் நிலைக்கு மேற்பட்டவர்கள் மட்டுமே இதற்கு சாட்சியாய் ‘அ’ பதிவேட்டில் – சுருக்கொப்பம் செய்ய வேண்டும்.
எக்காரணத்தை கொண்டும் கிராம நிர்வாக அலுவலர் இப்பதிவேட்டில் மாற்றம் செய்யக்கூடாது.தற்போது விவசாய நிலங்களுக்கு ஒரு பதிவேடும், கிராம நத்தத்திற்கு ஒரு பதிவேடும் என ஒரு கிராம்த்திற்கு இரண்டு ‘அ’ பதிவேடுகள் பராமரிக்கப்படுகிறது.
நகரங்களில் ‘அ’ பதிவெடு பராமரிப்பு:
நகர நிலை அளவைக் கணக்கெடுக்கப்பட்ட நகராட்சியில் முழுவதும் சேர்த்துக் கொள்ளப்பட்ட கிராமங்களின் பகுதி வார்டு வாரியாகவும், நில அளவை வாரியாகவும் நிலை பதிவேடு “அ“- வில் எழுதப்பட வேண்டும்.’அ’ பதிவேட்டில் ஒவ்வொரு நகர நில அளவை எண், அதனுடைய உரிமை முறை, பரப்பளவு ஆகிய விவரங்கள் எழுதப்பட வேண்டும்.’அ’ பதிவேட்டில் நகர்ப் பகுதியாக இருந்தால் நகர்ப் பகுதி என்றும், கிராமப் பகுதியாக இருந்தால் கிராமப் பகுதி என்று குறிப்பிட வேண்டும்.
தமிழ்நாடு அரசினால் இராணுவப் பகுதிக்கு ஒதுக்கப்பட்ட இடமாக இருந்தால் – அத்தகைய நிலஅளவை எண் எதிரே குறிப்பு கலத்தில் “இராணுவ நிலம்” என்று குறிப்பிட வேண்டும் இதே போன்று ‘ இரவில்வேக்கு‘ சொந்தம் ஊராட்சிக்கு சொந்தம் என்பது குறிப்பிட வேண்டும்.
ஜமாபந்தியின் போது ‘அ’ பதிவேடு சோதனைஜமாபந்தியின் போது வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் ‘அ’ பதிவேட்டுடன் கிராமத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டினை ஒப்பிட்டுப் பார்த்து அதற்குண்டான சான்று வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.இதனை ஜமாபந்தி அலுவலர் தணிக்கை மேற்கொள்ள வேண்டும்.
’A’ பதிவெட்டின் உள்ளடக்கம்
இது ஒவ்வொரு வகையின் கீழ் உள்ள நிலத்திப் பரப்பயும், தீர்வை வீதத்தையும் காட்டுகிற ‘A’ பதிவெட்டின் தொகுப்பாகும்.அரசு நிலம்(வகைப்பாடு)அரசின் கட்டுபாட்டில் உள்ளவைஅரசின் கட்டுபாட்டில் இல்லாதவைஎன தனித்தனியே காட்ட வேண்டும். இவற்றை ஆண்டுதோறும் ஜமாபந்தியின் போது காட்ட வேண்டும். நிலவரித் திட்டத்திற்குப் பின்னர் ஒவ்வொரு பசலியிலும் ஏற்படும் மாற்றங்கள் குறித்து இதில் ஆண்டுதோறும் குறிப்பிட வேண்டும்.
‘B’ பதிவேடு
இது இனாம்களின் நிலப்புல பதிவேடு ஆகும்.பல்வேறு வகை இனாம்களின் கீழ் அதாவது சமய, அறக்கட்டளை, சொந்தப்பணி மற்றும் தசபந்தம் ஆகிய இனாம்களின் கீழ் உரிமை பட்டயம் முறைப்படுத்தப்பட்டு அவற்றுக் நேராக ஒவ்வோர் உரிமைப் பட்டயத்தின் கீழ் வரும் புலங்களையும் இதன் கீழ் காட்ட வேண்டும்.1963- ஆம் ஆண்டு தமிழ்நாடு இனாம் ஒழிப்புச் சட்டம் மூலன்=ம் இவை நீக்கப்பட்டது.இவை 1963-க்கு பிறகு இனாம் நிலங்கள் ரயத்துவாரி நிலங்களாக மாற்றப்பட்டு அதற்கான நடவடிக்கைகள் முடிந்துவிட்டன.
நிலப்பதிவேடு B1:
இது நில உரிமை பட்டயத்திற்கான நிலப்பதிவேடு – ‘B’ பதிவேட்டிலிருந்து வேறுபட்டது ஆகும்.தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு மற்றும் இரயத்துவாரி மாற்றம் சட்டம் 1948 – இன் கீழ் முடிவு செய்யப்பட்ட கிராமங்களுக்கு உரியதாகும்.இவை இரண்டு பாகங்களாக பராமரிக்கப்பட வேண்டும்.
பாகம் 1
தமிழ்நாடு ஜமீன் ஒழிப்பு – மற்றும் ரயத்துவாரியாக மாற்றம் சட்டம் – 1948(1948 – ஆம் வருட XXVI ஆவது சட்டம்)-இன் கீழ் பிரிவு 17(1) (பி) மற்றும் (2) இன் கீழ் ஒப்புதல் அளிக்கப்பட்ட இனங்களைக் கொண்டதாகும்.
பாகம் 2
இந்து சமய அறக்கட்டளைச் சட்டம் 1951(1951 ஆம் வருட XIX ஆவது சட்டம்)-இன் பிரிவு 34(2)-இன் கீழ் உரிமை அளிக்கப்பட்ட தேவதாசி இனாம்களைக் கொண்டதாகும்.
பாகம் 1:
கீழ்க்கண்டவாறு ஐந்து பிரிவுகளாகப் பராமரிக்கப்பட்டு வருகிறது:சமயக் கொடைகள்அறக் கொடைகள்கிராம பணிக்கொடைகள்தசபந்தம் கொடைகள்மேற்கண்ட 4-லிலும் அடங்காத ஏனைய கொடைகள்.
பாகம் 2:
1951 – தமிழ்நாடு இந்து சமய அறக்கட்டளைச் சட்டப் பிரிவு 34(2)-இன் கீழ் விவரிக்கப்பட்ட தேவதாசி இனாம்கள் சம்பந்தப்பட்டதாகும்.கிராமத்தில் பராமரிக்கப்படும் இப்பதிவேட்டை ஜமாபந்தியில் வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டுடன் சரிபார்க்க வேண்டும்.
*நிபந்தனைக்குட்பட்ட நில ஒப்படைகள் மற்றும் நீண்ட கால நிலக் குத்தகைகள்(Cowles) பதிவேடு*
இப்பதிவேடு எட்டு பிரிவுகளாக பராமரிக்கப்பட வேண்டும்.
பிரிவு – 1 :
“Shedule Caste” – இனத்தவருக்கு வழங்கப்பட்ட சிறப்பு நிபந்தனைக்குட்பட்ட ஒப்படைகளைக் குறித்ததாகும்.
பிரிவு – 2 :
இராணுவத்தினருக்கும், முன்னாள் இராணுவத்தினருக்கும் அளிக்கப்பட்ட நிபந்தனையுடன் கூடிய ஒப்படைகளைக் குறிப்பதாகும்.
பிரிவு – 3 :
நீர்ப்பாசனத் திட்டங்களால் பாதிக்கப்படும் நில ஒப்படைகளை பற்றியதாகும்.(இவை வருவாய்த் துறை ஆணை நிலை எண் 15-22(3) இன் கீழ் கூறப்பட்டுள்ளது)பிரிவு –
4 : சிறப்பு வீட்டுமனை விதிகளின் கீழ் உள்ள கொடையைக் குறிக்கும்
.பிரிவு – 5 : நீண்டகால குத்தகை மற்றும் இதர நிபந்தனைகளுக்கு உட்பட்ட கொடைகளுக்கு உரியதாகும்.(வருவாய்த் துறை நிலை ஆணை எண். 19 பத்தி 1- இன் கீழ் கூறப்பட்டுள்ளது)பிரிவு –
6 : அரசியல் தியாகிகளுக்கு வழங்கப்படும் ஒப்படைக்குரியதாகும். (அரசு ஆணை எண், 3102 வருவாய்த் துறை, நாள் 23-12-1947 – இன் படி)
பிரிவு – 7 : நீண்டகால நிலக்குத்தகை நிலங்களைக் குறிக்கும்.
பிரிவு – 8 : SC –இனத்தவருக்கு நில எடுப்பு செய்து ஒப்படை செய்யப்பட்ட வீட்டுமனைகளுக்கு உரியதாகும்.
பட்டா:
கிராமக் கணக்கு எண் 3:
புலங்களின் பதிவுகளின் மாறுதல்களை காண்பிக்கும் வருடாந்திர பதிவேடு ஆகும். இவை நான்கு பிரிவுகளைக் கொண்டவை.
பிரிவு – 1 :
உரிமையை விட்டுவிடுதல்(Relinquishment
)பிரிவு – 2 : ஒப்படை(Assignment)
பிரிவு – 3 : பட்டா மாறுதல்
பிரிவு – 4 : இதர மாறுதல்கள்ஒவ்வொரு பிரிவு சம்பந்தப்பட்ட மாறுதல்களை அந்தந்தப் பிரிவின் படிவத்தின் தலைப்புக்கு ஏற்றார்போல் எழுத வேண்டும்.மாறுதலுக்கான உத்தரவு விவரங்களைக் கலம் 8-இல் குறிப்பிட வேண்டும்.
பிரிவு – 3 : பட்டா மாறுதல்கள் சம்பந்தமான விவரத்தைப் பொருத்தமட்டில் பதிவு பெற்ற கைப்பற்றுதாரரின் பட்டா எண், பெயர் முன்னும், பின்னும் தவறாமல் குறிப்பிடப்பட வேண்டும்.பிரிவு – 3 – இல் கீழ்க்கண்ட 5 உட்பிரிவுகள் அடங்கும்.
வருவாய் பாக்கிக்காக விற்பனை செய்யப்பட்டவை
(A) அரசால் வாங்கப்பட்டவை
(B) தனி நபரால் வாங்கப்பட்டவைநீதிமன்ற ஆணையின் பெயரில் விற்பனை அல்லது மாற்றம் செய்யபட்டது.தனியார் விற்பனை அல்லது கொடை ஆகியவற்றின் பேரில் மாற்றப்பட்டது.வாரிசு முறையினரால் மாற்றப்பட்டது.12 – ஆண்டுகளுக்கு அல்லது அதற்கு மேல் தொடர்ந்தாற்போல் அனுபோகம் செய்ததினாலும் அது போன்ற காலத்திற்கு பட்டாதாரர் காணப்படாது போனாதினாலும் மாற்றப்பட்டவை.வாரிசு இன்றி அரசினை சேர்ந்த நிலங்கள்ஜமாபந்தியின் போதும், ‘அ’ பதிவேடு,அடங்கல்,10-இல் 1-சிட்டாவில் மாறுதல்கள் செய்யப்பட வேண்டும்.
சிட்டா:
பட்டாவாரியான நிலவரி திட்டத்தினை காண்பிக்கும் சிட்டாவாகும்.நிலவரித் திட்டம் முடிந்தவுடனேயே இக்கணக்கினை மேற்கொண்டு வருவாய்த்துறைக்கு பராமரிப்புக்காக இரண்டு பிரதிகள் வழங்கப்படுகிறது.முதல் பிரதி VAO – விடமும்2 – ஆம் பிரதி வட்டாட்சியர் அலுவலகத்திலும் பராமரிக்கப்பட வேண்டும்.இப்பதிவேடு பட்டாவாரியாக எழுதப்பட வேண்டும்.
ஒரு பட்டாவில் அடங்கிய கைப்பற்றுதாரர்கள் பெயர்கள், சர்வே எண், புன்செய், நன்செய், விஸ்தீரணம், தீர்வை ஆகியவற்றை தொகுத்து அந்தப் பட்டாவில் ஒரு கைப்பற்றில் உள்ள மொத்த புன்செய், நன்செய்ப் பரப்புகள் மற்றும் மொத்தத் தீர்வை ஆகிய விவரங்கள் அடங்கியிருக்கும்.கிராம நிலங்களில் ஏற்படும் மாறுதல்களாவன நில ஒப்படை, நில எடுப்பு, நில எடுப்பு, பதிவு மாற்றம் ஆகிய விவரங்களை கிராமக் கணக்கு எண் 3-இல் குறிப்பிட்டுள்ளபடி, இதில் அவ்வப்போது மாற்றம் செய்ய வேண்டும்.
இந்தத் மாற்றம் எந்த ஆணையின் அடிப்படையில் செய்யப்படுகிறது என்பதற்கு ஆணை எண் மற்றும் நாள் முதலிய விவரங்கள் குறிப்பிட வேண்டும்.இதனை சோதனை செய்ததின் அடையாளமாக வருவாய் ஆய்வாளர் அல்லது நில அளவர் கையொப்பம் பெற வேண்டும்.
பொதுவாக பட்டா மாற்றங்கள் செய்யும் போது எந்த பட்டாவில் இருந்து வரவு வைக்கப்பட்டது மற்றும் எந்த பட்டாவில் தாக்கல் செய்யப்பட்டது என்ற விவரங்கள் கட்டாயமாகப் பதிவு செய்யப்பட வேண்டும்.இப்பதிவேட்டின் மாறுதல்களின் படி வட்டாட்சியர் அலுவலகத்தில் பராமரிக்கப்படும் பதிவேட்டிலும் பதிவு செய்யப்பட வேண்டும்.
இவை தற்போது கணினி மயமாக்கப்பட்டதால் அவ்வப்போது செய்யப்படும் மாற்றங்களை கணினியிலும் பதிவு செய்ய வேண்டும்.இந்த கணக்கு 5-ஆண்டுகளுக்கு ஒரு முறை புதிதாக எழுதப்பட வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 1:
இது கிராமத்தின் மாதவாரி-சாகுபடி கணக்கு ஆகும்.VAO பயிராய்வு செய்து ஒவ்வொரு மாதமும் எந்தெந்தப் புலங்களில் பயிர்கள் எந்த மாதத்தில் சாகுபடி செய்யப்படுகிறதோ அதன் விவரங்களை அடங்கலில் பதிய வேண்டும்.
கிராம கணக்கு எண் 1-A:
இது சாகுபடி செய்யப்பட்ட வெவ்வேறு பயிரக்ளின் பரப்பையும், விளைச்சல் மதிப்பையும் பற்றிய சுருக்கமான விவரப்பட்டியல் ஆகும்.நீர் பாய்ச்சப்பட்ட, நீர் பாய்ச்சப்படாத பரப்புகளின் விவரங்கள் தனித்தனியே கலம் 2 முதல் 10 வரை குறிக்க வேண்டும்.இந்தக் கணக்கை கணக்கு எண்1 உடன் பிரதி மாதம் 25-ஆம் தேதிக்குள் வருவாய் ஆய்வாளருக்கு கிராம நிர்வாக அலுவலர் அறிக்கை அனுப்ப வேண்டும்.
கிராம கணக்கு எண் 2:
இது கிராம அடங்கல் கணக்கு எனப்படும்.அடங்கல் என்பது கைப்பற்று நிலத்தையும், மற்ற அனைத்து வகையான நிலங்களையும் பிரிவுகளாக புலம் உட்பிரிவு வாரியாக அனைத்து விவரங்களும் காட்டும் ஓர் அதிமுக்கியமான கிராமக் கணக்கு ஆகும்.ஒவ்வோர் ஆண்டும் ஏப்ரல் மாதம் முதல் மார்ச் மாதம் வரை உள்ள காலத்திற்கு இக்கணக்கை பராமரிக்க வேண்டும்.
கிராமக் கணக்கு எண் 2-க்கு C உள்ளடக்கம்
வருவாய்த் துறையின் பொறுப்பின் கீழ் உள்ள அரசு புறப்போக்கில் உள்ள மர விவரங்களை காட்டும் பதிவேடு ஆகும்.இது நான்கு பிரிவுகளாகப் பராமரிக்கப்படும்.
அரசுத் தோட்டங்கள்குடிகளுடைய சொந்தத் தோப்புகள்(வருவாய் நில எண். 19-இன் கீழ் அறிவிக்கப்பட்ட நீண்ட கால நிலக் குத்தகைகள், குடிமக்களுடைய சொந்தத் தோப்புகளில்ன் கீழ் வரும்)அரசால் வரிவிதிக்கப்பட்டு அல்லது குத்தகைக்கு விடப்பட்டு, ஆனால் ஆங்காங்கே சிதறிக் கிடக்கும் தனி மரங்கள்உள்ளாட்சி நிறுவனங்களுக்கு ஒப்படைக்கப்பட்ட ஆனால் உள்ளாட்சி மன்றங்கள் தங்கள் உரிமைகளை விட்டுவிட்ட புறம்போக்கில் உள்ள மரங்கள்.
*குறு வட்டம்....*
குறு வட்டம் அல்லது உள் வட்டம் அல்லது பிர்கா (ஆங்கிலம்:
FIRKA) என்பது தமிழ்நாடு மாவட்டங்களில் வருவாய்த்துறையில் சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 'குறு வட்டம் (REVENUE FIRKA) அமைக்கப்படுகின்றன.[1][2] வருவாய் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக [[மண்டல துணை வட்டாட்சியர்] இருப்பார்.
இவர் பதவி உயர்வு வழியாகவும், தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையத்தின் மூலம் நடத்தப்படும் தேர்வில் தேர்ச்சி பெறுவதின் வழியாகவும் நியமிக்கப்படுகிறார்.
பணிகள்வருவாய் வட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர், வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளிடம் கையொப்பம் பெற வேண்டிய சில சான்றிதழ்களுக்கு கிராம நிர்வாக அலுவலர், பரிந்துரைகளின்படி வட்டாட்சியர் அலுவலகத்திற்கு பரிந்துரைக்கப்படும்.மாவட்ட அளவில், வருவாய்க் கோட்ட அளவில் நடைபெற்ற ஏதாவது சம்பவத்தால் சட்டம் மற்றும் ஒழுங்கு பிரச்சனைகள் பாதிக்கப்படும் நிலையில் அதை விசாரிக்க நியமிக்கப்படும் மேல் அலுவலருக்கு உதவி செய்வதும், அதுகுறித்த தகவல்கள், அறிக்கைகள் அனுப்பி வைக்கப்படும்.
மாவட்ட ஆட்சியாளர், வருவாய் கோட்டாட்சியர், வருவாய் வட்டாட்சியர் அறிவுறுத்தும் அனைத்துப் பணிகளும் இவ்வலுவகம் வாயிலாக இந்த அலுவலகத்தின் கீழுள்ள கிராமநிருவாக அலுவலகங்களின் மூலம் செய்யப்படுகிறது.
நில அளவை
சில வருவாய் கிராமங்களை உள்ளடக்கி 'குறுவட்டம் (REVENUE FIRKA) அமைக்கப்படுகின்றன. இந்த வருவாய் குறுவட்டம் நில அளவைத் துறைக்கென அலுவல் சார்ந்த அலுவலராக குறுவட்ட அளவர் இருப்பார்.
இவரால் நில அளவை குறித்த அரசு மற்றும் அரசு சாரா அனைத்து நில அளவைப் பணிகளையும் செய்து வரைபடம் தயாரித்து, அறிக்கையுடன் வருவாய் வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
பணிகள்வருவாய் வட்ட அலுவலகங்களில் வட்டாட்சியர், வட்டாட்சியர் நிலைக்கு மேல் இருக்கும் அதிகாரிகளின் இடத்தணிக்கைக்கு உதவுவார். அவசியமேற்பட்டால் வரைபடம் தயாரித்து வட்டாட்சியர் மூலமாக அனுப்பி வைக்கப்படும்.ஒவ்வொரு வருவாய் கிராமத்திலுள்ள நில உடைமையாளர்கள் பெற்ற கிரைய ஆவணத்தின் அடிப்படையிலும், உரிய வரைபடம் தயாரித்து அறிக்கைகளுடன் பட்டா மாறுதலுக்கு அனுப்பி வைக்கப்படும்.
அரசு சார்ந்த நில பரிவர்த்தனை, நில எடுப்பு, நில ஒப்படை போன்ற பணிகளை செய்து வரைபடத்துடன் அறிக்கையை வட்டாட்சியருக்கு அனுப்பி வைக்கப்படும்.
*சான்றுகள் வழங்குவதில் கிராம நிர்வாக அலுவலரின் கடமைகள்....*
கிராமப் பஞ்சாயத்துக்கான பிறப்புகள் மற்றும் இறப்புகள் பதிவாளராக கிராம நிர்வாக அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர்.
சாதிச்சான்று (Community Certificate)
மக்களின் நலனுக்காக 1988-ஆம் ஆண்டு முதல், அச்சடித்த சாதிச்சான்றை அரசு அளித்து வருகிறது.
சாதிச்சான்றின் பயன்:
மாணவர்கள் அனைத்து கல்வி உதவித்தொகையை பெறுவதற்கும்.அரசு மாணவ / மாணவியர் விடுதியில் தங்குவதற்கும்.பொதுமக்கள் அரசின் பல்வேறு திட்டத்தின் கீழ் வழங்கப்படும் கடன்கள், கூட்டுறவு நிறுவனங்கள், வங்கிகள் தாட்கோ மூலம் கடனுதவி பெறுவதற்காகவும்மத்திய / மாநில பொதுத்துறையில் பணியில் சேர்வதற்கும்.தனியார் நிறுவனங்களில் வேலைவாய்ப்பு பெறுவதற்கும் இந்த சாதிச்சான்றுகள் பெரிதும் உதவியாக உள்ளன.
OBC சான்றிதழ்
மத்திய அரசு அலுவலகங்களில் அல்லது துறைகளில், பொதுத்துறை நிறுவனங்களில் வேலைவாய்ப்புக்காக மத்திய அரசு, இதர பிற்பட்ட வகுப்பு (OBC) சாதி சான்றிதழ் வரையறுக்கப்பட்டு அதனைத்தான் பின்பற்ற வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. (அரசாணை எண். 12 பிற்பட்ட வகுப்பு, மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை நாள் 28-03-1994)-இல் உள்ளது.
சாதிச்சான்று வழங்குவதற்காக அனுப்பப்படும் மனுக்கல் மீதான நடவடிக்கையை மேற்கொள்ளும் போது கிராம நிர்வாக அலுவலர்கள் கவனத்தில் கொள்ள வேண்டியவைகள் :-
சாதிச்சான்று வழங்கும் அதிகாரம் பெற்ற அலுவலர்களுக்கு சாதிப்பிரிவைப் பொறுத்து VAO தனித்தனி அதிகாரிகளுக்குப் பரிந்துரை செய்வார்.
வகுப்புஅதிகாரம் பெற்ற அலுவலர்பிற்பட்டோர், மிகவும் பிற்பட்டோர், சீர் மரபினார்தலைமையிடத்து துணை வட்டாட்சியர் / மண்டல துணை வட்டாட்சியர் / துணை வட்டாட்சியர்கள்ஆதி திராவிடர் மற்றும் இதர பிற்பட்ட வகுப்புவட்டாட்சியர்பழங்குடியினர்வருவாய்க் கோட்ட அலுவலர் / சார் ஆட்சியர் / மாவட்ட ஆதிதிராவிட அலுவலர்
சாதிச்சான்று கோரும் மனு மற்றும் விசாரணை
சாதிச்சான்று வழங்கக் கோரும் விண்ணப்ப மனுவில் நீதிமன்ற கட்டண வில்லை ஒட்ட வேண்டியதில்லை (அரசாணை (நிலை) எண் 97, வருவாய் – நாள் 15-2-1994).
அரசாணை (நிலை) எண் 2240, வருவாய்த் துறை, நாள் 30-11-1988-இல் கூறியபடி :-
அரசால் வரையறுக்கப்பட்டுள்ள 14 கலங்கள் கொண்ட ஒரு பதிவேட்டினை, கிராம நிர்வாக அலுவலர் பராமரித்து அப்பதிவேட்டில் விசாரணை மேற்கொண்ட விவரங்களைப் பதிந்த பின் தனது அறிக்கையை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு, குறுவட்ட வருவாய் ஆய்வாளர் (RI – Revenue Inspector) மூலம் அனுப்புதல் வேண்டும்.
ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு சான்று வழங்குமாறு கோரப்படும் மனுக்களை தொகுத்து, அதன் பட்டியல் நகல்களை ஊராட்சிமன்ற அலுவலகம் மற்றும் கிராமச் சாவடிகளில் விளம்பரப்படுத்தி மேற்காணும் சான்றிதழ் வழங்குவதற்கு ஆட்சேபணைகள் எதுவும் இருந்தால் விசாரணைக்கு முன் கண்டறியலாம்.
சாதிச்சான்று வழங்கும் முன் விசாரணையின் போது கவனத்தில் கொள்ள வேண்டியவைகள்:
மனுதாரரின் சாதியை உறுதிப்படுத்த கீழ்க்கண்ட சான்றாவணங்களைச் சரிபார்த்தல்.
i) நிரந்தர முகவரி மற்றும் இடம்
ii) பெற்றோரின் சாதிச்சான்றை சரிபார்த்தல்
பெற்றோர்கள் இல்லாத நிலையில் உடன்பிறந்த சகோதர / சகோதரிகள் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கு சாதிச்சான்று வழங்கப்பட்டிருப்பின் அவற்றின் மெய்த்தன்மையை சரிபார்த்து உறுதி செய்தல் வேண்டும்.
அரசுப் பணியில் பணிபுரியும், பெற்றோர்களின் பணிப்பதிவேட்டின் சாதிக்குறிப்பு கொண்ட முதல் பக்க நகல், உரிய அலுவலர்களால் மேலொப்பம் செய்யப்பட்டுள்ளதா என சரிபார்த்துக் கொள்ள வேண்டும்.
சான்றுகளுக்கு பழைய பத்திரம் அல்லது பெற்றோர்கள் / உறவினர்களின் பள்ளிச்சான்று, பெற்றோர், மற்றும் மூதாதையர் வாழ்ந்த இடம், நிலையானச் சொத்துகள் உள்ள இடம், தாய்மொழி, திருமணம், கல்வி, பயிலும் இடம் அல்லது பயின்ற இடம் ஆகியவைகளை பரிசீலிக்கலாம். (அரசாணை (பல்வகை) எண் 2510, சமூக நலத்துறை, நாள் 23-09-1986)
உள்ளூர் விசாரணை, செய்யும் தொழில், பெறுகின்ற வருமானம்.
பழக்கவழக்கங்கள் மற்றும் பின்பற்றப்படுகின்ற சாதிக்குரிய வம்சாமுறை, கலாச்சாரம் போன்றவற்றை கண்டறிந்து உறுதிப்படுத்திக் கொள்ளுதல், தகவலளிக்கக்கூடிய ஏனையோரையும் முறையாகவும், முழுமையாகவும் விசாரிக்க வேண்டும்.
மனுதாரரிடம் நேரடி விசாரணை மற்றும் தாக்கல் செய்யும் சான்றாவணங்களைப் பரிசீலித்தல்.
நிலங்கள், வீட்டுமனைகள் ஆகியவற்றின் ஒப்படை தொடர்பான ஆவணங்களில் மனுதாரர் அல்லது பெற்றோர்கள் வகுப்பு குறிப்பிடப்பட்டிருக்கும், இதனையும் சரிபார்க்கலாம்.
பெற்றோர்கள், தமிழ்நாட்டில் வசிக்கிறார்களா அல்லது தமிழ்நாட்டிற்கு வெளியே வசிக்கிறார்களா?
கிராம நிர்வாக அலுவலர் தனிப்பட்ட முறையில் விசாரணை (Independent Enquiry)மேற்கொள்ள வேண்டும். சாதிச் சங்கங்கள் வழங்குகின்ற சான்றுகளை பரிசீலனைக்கு எடுத்துக் கொள்வதைத் தவிர்க்க வேண்டும்.
அரசு அங்கீகரித்து வெளியிட்டுள்ள பழங்குடியினர் / அட்டவணை வகுப்பு / மிகப் பிற்பட்ட வகுப்பு / சீர் மரபினர் பட்டியலில் இடம் பெறாத எந்த சாதியினருக்கும் சான்றுகள் வழங்கக் கூடாது. (அரசு கடித எண் 11832 / பி.வ. / 92-5, பிற்பட்ட வகுப்பு மற்றும் மிகவும் பிற்பட்ட வகுப்புத் துறை, நாள் 29-10-1992).
சாதிச்சான்று வழங்கும் போது
பழங்குடியினர் ஒருவர் எந்த மதத்தை பின்பற்றினாலும் அல்லது எந்த மதத்தைச் சார்ந்திருந்தாலும் அவர் பழங்குடி வகுப்பை சார்ந்தவராகவே கருதப்பட வேண்டும்.
சாதி மற்றும் சாதிச்சான்று மெய்த்தன்மை சரிபார்க்கும் விழிப்புக் குழுக்கள்:
மாவட்ட விழிப்புக் குழு:இதன் தலைவர் - மாவட்ட ஆட்சியர்உறுப்பினர் - மானிடவியல் நிபுணர்செயல் உறுப்பினர் - மாவட்ட ஆதி திராவிடர் நல அலுவலர் (ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் வகுப்பு) (பிற்பட்ட வகுப்பு, மிகவும் பிற்பட்ட வகுப்பு மற்றும் சீர்மரபினர்)மாநில விழிப்புக் குழு:மாவட்ட விழிப்புக் குழு ஆணைக்கெதிராக மாநில விழிப்புக் குழுவிற்கு மேல்முறையீடு செய்யலாம்.
மாநில விழிப்புக்குழு உறுப்பினர்கள்.தலைவர் – அரசு செயலர், ஆதி திராவிடர் நலத்துறை.உறுப்பினர் – இயக்குநர், பழங்குடியினர் ஆராய்ச்சி மையம், உதகை.செயல் உறுப்பினர்(ஆதி திராவிடர் வகுப்பு) – ஆதி திராவிடர் நலத்துறை இயக்குநர்
.(பழங்குடியினர் வகுப்பு) – பழங்குடியினர் நலத்துறை இயக்குநர்(அரசாணை எண். 19, ஆதி திராவிடர் நலத்துறை, நாள் 24-01-2005)பிற்பட்ட வகுப்பு, பிற்பட்ட மற்றும் சீர் மரபினர் வகுப்பு : சாதிச்சான்று ஆய்வுதலைவர் : அரசு செயலர், பிற்பட்டோர் மற்றும் மிகவும் பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை.செயல் உறுப்பினர்கள் : பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சிறுபான்மை நல இயக்குநர். மிகவும் பிற்படுத்தப்பட்டோர் மற்றும் சீர்மரபினர் நல இயக்குநர்.
சாதிச்சான்று தவறுதலாக வழங்கும் நிலையில் VAO:
ஒரு கிராமத்தில் நன்கு ஆராய்ச்சி செய்து சாதிச்சான்று வழங்க VAO முழு பொறுப்பு உள்ளவர் ஆகிறார்.தவறுதலாக சாதிச்சான்று பரிந்துரைக்கும் பட்சத்தில் கடுமையான தண்டனைக்கு VAO ஆட்படுவார்.
பிறப்பிட/இருப்பிடச் சான்று (Nativity Residential Certificate)
பிறப்பிடம் : பிறப்பிடம் என்பது ஒருவர் பிறந்த இடத்தைக் குறிக்கும். (அரசாணை (பல்வகை) எண் 111ம், ஆதி திராவிடர் நலத்துறை, நாள் :06-07-2005)
இருப்பிடம் : இருப்பிடம் என்பது ஒருவர் தொடர்ந்து வசிக்கும் இடத்தைக் குறிக்கும்.
இச்சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:
இச்சான்று வேண்டுபவர் ரூ.2க்கான கட்டண வில்லையுடன் விண்ணப்பிக்க வேண்டும்.பிறப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து 5 ஆண்டுகள் ஒரே இடத்தில் வசிக்க வேண்டும்.இருப்பிடச் சான்று வேண்டுமாயின் தொடர்ந்து ஓர் ஆண்டுக்கு மேல் அந்த இடத்தில் வசிக்க வேண்டும்.வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ செலுத்தி இச்சான்றை பெறலாம்.
வருமானச் சான்று (Income Certificate)
இச்சான்று கல்வி உதவித்தொகை பெறவும், பள்ளி & கல்லூரிகளிலும் மாணவர் விடுதியில் சேரவும் இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
வருமானச் சான்று வழங்குவதில் VAO–வின் கடமைகள்:
வறுமைக்கோட்டிற்கு மேல் உள்ளவர்கள் ரூ.10/ கட்டணம் செலுத்தி இச்சான்றை பெற வேண்டும்.உள்ளூர் விசாரணை மேற்கொள்ள வேண்டும்குடும்ப அட்டையில் காண்பிக்கப்பட்டுள்ள வருமானம்வாடகை வாயிலாக ஈட்டும் வருமானம்பணிபுரியும் நிறுவனம், அல்லது பணி வழங்கியவர் தரும் வருமானச் சான்றுகுடும்பச் சொத்தாக வைத்திருக்கும் நிலச்சொத்துக்கள் மற்றும் அதன் வாயிலான வருமானம்.வருமான வரி / வேளாண்மை வருமான வரி விதிப்பு / விற்பனை வரி விதிப்பு ஆணை.இதர வருமானம் ஏதேனும் இருப்பின்
வருமானச் சான்று வழங்கும் காலம் & செல்லுபடி ஆகும் காலம்:
இச்சான்று 15-நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
இவை 6-மாத கால அளவு மட்டுமே செல்லத்தக்கது ஆகும். (அரசாணை (பல்வகை) 1509 – வருவாய்த் துறை நாள் 27-11-1991 படி ஆகும்)
நாட்டினச் சான்று (Nationality Certificate)
ஒருவர் இந்த நாட்டினைச் சேர்ந்தவர் என்று வட்டாட்சியரால் முறையான விசாரணைக்குப் பின் வழங்கப்படும் சான்றாகும்.
இச்சான்று கடவுச்சீட்டு (Passport) மற்றும் நுழைவு இசைவு (Visa) ஆகியவற்றை பெற பயன்படும்.
நாட்டினச் சான்று வழங்கும் போது VAO கவனிக்க வேண்டியவைகள்:
மனுதாரர் இந்திய நாட்டைச் சேர்ந்தவரா? கிராமத்தில் நிரந்தர குடியிருப்பு கொண்டுள்ளாரா? என்று தேவையான சான்றாவணங்கள் மற்றும் உள்ளூர் விசாரணை மூலம் உறுதி அறிக்கை செய்ய வேண்டும்.
குடும்ப அட்டை, வாக்காளர் பட்டியல், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நிரந்தர சொத்துகள் இருக்கும் இடம், வரி கட்டிய ரசீது போன்றாவணங்களைப் சரிபார்த்து VAO அறிக்கை வழங்க வேண்டும்.
VAOவின் பரிந்துரை, RI-யின் பரிந்துரையின் படி – வட்டாட்சியர் இச்சான்றிதழை குறிப்பிட்ட படிவத்தில் விண்ணப்பதாரருக்கு வழங்குவார்.
வாரிசுச் சான்று(Legal Certificate)
ஒரு குடும்பத்தின் தலைவரோ அல்லது அந்த குடும்பத்தின் உறுப்பினரோ எவரேனும் இறந்துவிட்டால் அவரது பெயரில் உள்ள மின் இணைப்பு, வீட்டு வரி, தொலைபேசி இணைப்பு, பட்டா, வங்கி கணக்கு ஆகியவற்றை மாற்றம் செய்ய வழங்கப்படுகிறது.
இறந்தவர் அரசு ஊழியராக இருப்பின் அவரது வாரிசுதாரர் கருணை – அடிப்படையில் பணிநியமனம் பெறவும், குடும்ப ஓய்வூதியம் பெறவும், இறந்தவரின் நேரடி வாரிசுகளுக்கு அல்லது கணவர், மகன், மகள், தாய் ஆகியோருக்கு விசாரணைக்கு பின் வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
வாரிசுச் சான்று வழங்குவதில் VAOவின் பங்கு :
விண்ணப்ப மனுவில் ரூ.2-க்கு – வில்லை ஒட்ட வேண்டும்.உரிய அலுவலர்களால் வழங்கப்பட்ட அசல் இறப்புச் சான்றுகுடும்ப அட்டையில் குறிப்பிடப்பட்டுள்ள குடும்ப உறுப்பினர்கள்இறந்த நபர் குடியிருந்த கிராமத்தில் அக்கம்பக்கத்தினரிடம் விசாரணை மற்றும் உள்ளூர் பிரமுகர்களிடம் விசாரணை.
சந்தேகம் ஏற்படின் இறப்புச் சான்றின் மெய்த்தன்மையை, எந்த அலுவலகத்தால் வழங்கப்பட்டதோ அங்கு சென்று அறிந்து கொள்ளலாம்.வாரிசுச் சான்று அரசாணை (பல்வகை) 2906-இன் படி (04-11-1981) வட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.நேரடி வாரிசு அல்லாத கீழ்க்கண்ட இனங்களைப் பொருத்தவரை, வாரிசுச் சான்றிதழ் வழங்குவதைத் தவிர்த்து, உரிமையியல் நீதிமன்றங்கள் மூலமாகப் பெற்றுக் கொள்ள மனுதாரர்களை அறிவுறுத்தவும் என வட்டாட்சியருக்கு அறிக்கை அனுப்ப வேண்டும்.
இறந்தவர்களுக்கு ஒன்றுக்கு மேற்பட்ட மனைவி / கணவன் இருந்தாலும் குழந்தைகள் இருந்தாலும் பாகப்பிரிவினை தகராறு அவர்களுக்குள் இருப்பதாக தெரிய வரும் போதும்.ஏழு ஆண்டுகளாக குடும்பத்தை விட்டு காணாமற் சென்றுவிட்ட நபர்களை இறந்தவர்களாக கருதி சான்று வழங்கும் நிலைமை ஏற்படும் போதும்.
வட்ட எல்லைக்குள் குடியிருப்பு இல்லாமலும், வீடு மற்றும் சொத்து இல்லாமல் வெளி மாவட்டங்களில் வசித்துக் கொண்டு வட்டாட்சியரிடம் வாக்குமூலம் கொடுக்க விசாரணைக்கு வராத நிலை ஏற்படும் போதும்இறந்தவர்களுக்கு குழந்தை இல்லாத நிலையில் மற்ற குழந்தைகளை வளர்த்து வரும் நிலையில் அரசுக் கடித (நிலை) எண் 1534, வருவாய்த்துறை நாள் 28.11.1991-இன் படி, வாரிசுச்சான்று வட்டாட்சியரால் 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும் என்பதால் விசாரணையை VAO-காலதாமதம் செய்யக்கூடாது.
சொத்து மதிப்புச் சான்று
ஒப்பந்தக்காரராக பதிவு செய்யவும், ஒப்பந்தப்புள்ளி மற்றும் ஏலங்களில் பங்கு பெறவும் இச்சன்று தேவைப்படும்.
சொத்து மதிப்புச் சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு:
இம்மனுவில் ரூ.10க்கான கட்டண வில்லை ஒட்டி வட்டாட்சியருக்கு விண்ணப்பிக்க வேண்டும்.சொத்து மதிப்பு ரூ.50,000 வரையில் ரூ.100/-ம் அதற்கு மேல் ஒவ்வொரு 50,000/-க்கும் ரூ.200 வீதம் கட்டணமாக கருவூலத்தில் செலுத்த வேண்டும்.மனுதாரர் மனுவில் குறிப்பிட்ட முகவரியில் வசிக்கிறாரா?
சொத்து மதிப்பு கோரும் மனுவில் குறிப்பிடப்பட்ட சொத்துகள் கிராமக் கணக்குகளில் மனுதாரரின் பெயரில் உள்ளனவா என்பதைச் சரிபார்க்க வேண்டும்.இம்மனுவை வட்டாட்சியருக்கு அனுப்பும்போது, அடங்கல், சிட்டா, A-பதிவேடு நகல்களை பரிசீலனை செய்து அவற்றை மேலொப்பம் இட்டு அனுப்ப வேண்டும்.
மனுதாரர் சொத்தை தனியாக பயன்படுத்துபவரா அல்லது கூட்டாக அனுபவிப்பவரா என்பதன் விபரத்தை தெரிவிக்க வேண்டும்.கூட்டாக அனுபவித்தால் அவருடைய ஈவுக்கு மட்டுமே, சிட்டா, அடங்கல், A-பதிவேடு ஆகியவற்றில் வழியாக குறிப்பிட வேண்டும்.சொத்து, கட்டடமாக இருந்தால் – தகுதி பெற்ற பொறியாளரால் மதிப்பீடு செய்யப்பட்டுள்ளதா என அறியப்படவேண்டும்.
வரையறுக்கப்பட்டுள்ள மதிப்பின் அடிப்படையில் இருக்க வேண்டும்.சொத்துகளுக்கான பத்திரத்தின் மெய்த்தன்மையை சரிபார்க்க வேண்டும்.சமீபத்திய 13-ஆண்டுகளுக்கான வில்லங்கச் சான்று அல்லது வேறு வில்லங்கம் இருக்கிறதா எனக் காண வேண்டும்.
அடமான பத்திரங்களை சரிபார்த்தல், மற்றும் விசாரணை செய்யப்படும் சொத்தின் பேரில் அடமானம் இருப்பின் அந்த மதிப்பினை சொத்து மதிப்பிலிருந்து கழித்துக் கணக்கிட வேண்டும்.சொத்துவரி ரசீதுகள் மற்றும் நிலவரி ரசீதுகள்.மனுதாரரின் வாக்குமூலம்.சொத்து மதிப்புச் சான்றிதழ் நிலையான சொத்துக்களின் மதிப்பீட்டில் வழங்கப்பட வேண்டும்.
அசையும் சொத்துகளை கணக்கில் கொள்ளக் கூடாது.விவசாய நிலங்களின் சந்தை மதிப்பு, சார்பதிவாளர் அலுவலகத்தால் பராமரிக்கப்படும் வழிகாட்டி மதிப்பு இவற்றை பரிசீலித்து தக்க பரிந்துரை செய்ய வேண்டும்.
இச்சான்று வழங்கும் காலம், செல்லுபடி காலம் :
இவை 15 நாள்களுக்குள் வட்டாட்சியரால் வழங்கப்படும்.
இவற்றின் செல்லுபடி காலம் வழங்கிய நாளிருந்து 6-மாதங்கள் மட்டும்.
ஆதரவற்ற குழந்தைச் சான்று
ஆதரவற்ற குழந்தைகள் கருணை/காப்பு இல்லங்களில் சேர்வதற்கு வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
இச்சான்று வழங்குவதில் VAOவின் பங்கு:
குழந்தையின் தாய், தந்தை பற்றிய முழு விபரங்கள். எப்பொழுது காலமானார்கள் என்பதனை இறப்புச் சான்று அல்லது பதிவேடு மூலம் சரிபார்த்தல்.
குழந்தை உண்மையில் ஆதரவற்றதா – என முக்கியப் பிரமுகர்களிடம் விசாரணை செய்ய வேண்டும்.
குழந்தைக்கு பாதுகாவலர் உள்ளனரா? என விசாரணை செய்து வட்டாட்சியருக்கு VAO தெரிவிக்க இச்சான்று 7 நாள்களுக்குள் வழங்கப்படும் (வட்டாட்சியரால்).
ஆதரவற்ற விதவைச் சான்று
ஆதரவற்ற விதவைகள் அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறுவதற்கு இச்சான்று கோட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
இச்சான்றின் மீதான விசாரணை மேற்கொள்ளும் போது VAO-வின் பங்கு
மனுதாரர் மனுவில் குறிப்பிட்டுள்ள முகவரியில் வசிக்கிறாரா?விண்ணப்பதாரரின் மனைவியின் இறப்புச் சான்று சரிபார்த்தல் இறப்பு – விபரம்.மனுதாரர் மறுமணம் புரிந்துள்ளாரா?உண்மையில் ஆதரவற்ற நிலையில் மனுதாரர் உள்ளாரா?கணவர் இறக்கும் போது, என்ன வேலை செய்தார்,
அவரின் சொத்துகள் மதிப்பு, அதன் வாயிலாக வரும் வருமானம் அவற்றின் வாயிலாக மனுதாரர் பெறக்கூடிய வருமானம் மற்றும் மனுதாரரின் தனிப்பட்ட வகையில் உரிமை கொண்டாடும் சொத்துகள், அவற்றின் மூலமான வருமானம்
.சுயமாய் செய்யும் தொழில், வேலை போன்றவற்றால் கிடைக்கும் வருமானம் போன்றவைகளை பரிசீலனை செய்து, உள்ளுர் விசாரணைமற்றும் கிராமப் பிரமுகர்களின் விசாரணை செய்து மனுதாரர் தகுதியுள்ளவரா என்பதனை VAO உறுதி செய்தல் வேண்டும்.
இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் காலம்:
இச்சான்று வருவாய் கோட்டாட்சியரால் வழங்கப்பட வேண்டும்.
இச்சான்று வழங்கும் கால அளவு – 30 நாள்கள் ஆகும்.
கலப்புத் திருமணச் சான்று
கலப்புத் திருமணம் என்றால் என்ன?
இரண்டு மாறுபட்ட சாதியை அல்லது மதத்தைச் சார்ந்தவர்கள் ஒருவர் ஆதிதிராவிடர் / பழங்குடியினர் இனமாகவும் – மற்றொருவர் வேறு சாதியைச் சேர்ந்தவராகவும் இருந்து புரிந்துகொள்ளும் திருமணம் கலப்புத் திருமணம் எனப்படும்.
கலப்புத் திருமணச் சான்றின் பயன்கள்
அரசு வேலைவாய்ப்பில் முன்னுரிமை பெறவும்இவர்களின் குழந்தைகளைப் பள்ளியில் சேர்க்கவும்அரசின் சலுகைகளைப் பெறவும் இவை பயன்படுகிறது.இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
இச்சான்று வழங்குவதில் VAO-வின் பங்கு
மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கின்றாரா? அதற்கான சான்றாவணங்களை சரிபார்த்தல்.இருவரும் வெவ்வேறு சாதியைச் சார்ந்தவர்கள் தானா?
சாதிச்சான்று ஏற்கனவே பெற்றிருந்தால் அதனை சரிபார்த்தல்.திருமணச் சான்று, திருமணம் நடைபெற்ற இடம், முறையாக சட்டப்படி திருமணம் நடைபெற்றுள்ளதா என்று சரிபார்த்தல்.
மேற்கண்ட தகவல்களை சரிபார்த்து, ஆதிதிராவிடர் வாழும் பகுதியிலுள்ள முக்கியப் பிரமுகர்களிடம் மற்றும் ஊர்மக்களிடம் விசாரணை நடத்தி அறிக்கையை VAO-வழங்கிய பின் வட்டாட்சியர் வழங்குவார்.
இச்சான்று வழங்கும் அதிகாரி மற்றும் கால அளவு:
இச்சான்றை வட்டாட்சியர் வழங்குவார்.
மனுசெய்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
பள்ளிச்சான்று தொலைந்ததற்கான வழங்கப்படும் சான்று
பள்ளி / கல்லூரிகளில் வழங்கப்படும் அசல் சான்று தொலைந்துவிட்டால் அச்சான்றின் நகலைப் பெறுவதற்கு, சம்பந்தப்பட்ட துறைக்கு விண்ணப்பிக்க விண்ணப்பதாரருக்கு வட்டாட்சியரால் மேற்படி சான்று தொலைந்தது உண்மை என்று சான்று வழங்கப்படுகிறது.
இச்சான்றை வழங்குவதில் VAOவின் பங்கு:
காவல்நிலையத்தில் வழங்கப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் பிரதி (FIR Copy)
இச்சான்றிதழ் கிடைக்கப்பெறவில்லை என்ற காவல்நிலையத்தின் அறிக்கை.
மனுதாரரிடம் நேரடி விசாரணை எவ்வாறு சான்று தொலைந்தது என்பதை மனுதாரரிடம் விளக்கம் பெற்று VAO அறிக்கை அனுப்ப வேண்டும்.
இச்சான்று வழங்கும் அதிகாரி & காலம்:
வட்டாட்சியர் இச்சான்றை வழங்குவார்.
15 நாள்களுக்குள் வழங்க வேண்டும்.
கணவனால் கைவிடப்பட்டவர்
இது வட்டாட்சியரால் வழங்கப்படும் சான்று ஆகும்.
இச்சான்று வழங்கும் போது VAOவின் பங்கு :
மனுதாரர் கிராமத்தில் குடியிருக்கிறாரா?
மனுதாரருக்கும், அவர் கணவருக்கும் எப்போது திருமணம் நடைபெற்றது, அதற்கான சான்றாவணத்தை சரிபார்த்தல், உள்ளூர் விசாரணை மூலமும் உறுதிப்படுத்தல்.
மனுதாரர் ஏன் கணவனால் கைவிடப்பட்டுள்ளார் என்ற விசாரணை, கணவர் வேறு திருமணம் செய்து கொண்டு மனுதாரரை கைவிட்டு விட்டாரா? அப்படியானால் எப்போது கணவர் வேறு திருமணம் செய்து கொண்டார்? கணவருடன் வாழ்ந்து, மனுதாரருக்கு எத்தனை குழந்தைகள் பிறந்துள்ளன? அவர்கள் என்ன செய்கிறார்கள்?
பிரிந்து சென்ற கணவர், எங்கே சென்று விட்டார் என்பதையும் விசாரணை வாயிலாக அறிய வேண்டும்.
தற்காலிகமாக பிரிந்திருத்தலை சான்று வழங்குவதற்கு பரிசீலிக்கலாகாது.
இச்சான்று வழங்கும் போது கவனிக்க வேண்டியவைள்:
மனுதாரர் கணவனை விட்டுப்பிரிந்து அவரிடம் எவ்விதத் தொடர்புமின்றி தொடர்ந்து 5-ஆண்டுகளுக்கு மேலாக வாழ்கின்றாரா?
அவ்வாறு 5 ஆண்டுகளுக்கு மேல் தனித்து வாழ்ந்து வந்தால் கணவனால் கைவிடப்பட்டவராகக் கருதப்படுவார்.
இச்சான்றை வழங்கும் அதிகாரி & காலம்
இச்சான்று வட்டாட்சியரால் வழங்கப்படுகிறது.
இச்சான்று விண்ணப்பித்த நாளிருந்து 15-நாள்களுக்குள் வழங்கப்பட வேண்டும்.
*கிராம நிர்வாக அலுவலர்களுக்கான பணி நியமன விதிகள்*
தமிழ்நாடு அமைச்சுப்பணி விதி 38(பி) (ii) பிற்சேர்க்கை X
1. வருவாய்த்துறையில் கிராம நிர்வாக அலுவலர் பதவிக்கான பணி நியமனம், நேரடி நியமனம் மூலமாக அமைந்திருக்கும்.
2. இப்பதவிக்கான நியமன அலுவலர் சமபந்தப்பட்ட கிராமத்தின் அதிகார வரம்பு பெற்றிருக்கின்ற வருவாய் கோட்ட அலுவலராகும்.
3. பணி நியமனங்களில் பின்பற்றப்படும் இட ஒதுக்கீடு(பொது விதி 22) இப்பதவிக்கான நேரடி நியமனத்திற்கும் பொருந்தும்.
இந்த நேரடி நியமனத்திற்கு ஒவ்வொரு மாவட்டமும் ஒரு தனி அலகாகக் கருதப்படும்.
வயது வரம்பு:
நேரடி நியமனத்திற்கு தேர்வு செய்யப்படுகின்ற நபர் தேர்வு செய்யப்படுகின்ற ஆண்டின் ஜூலை மாதம் முதல் நாள் 21வயது நிறைவு பெற்றிருக்க வேண்டும்.
நேரடி நியமனத்திற்கு தேர்வு செய்யப்படுகின்ற ஆண்டின் ஜூலை மாதம் முதல் நாளென்று 30 வயது முடிவுற்ற (அல்லது) 30வயது முடிவுறக்கூடிய எந்த ஒரு நபரும் இப்பதவிக்கான நேரடி நியமனத்திற்கு தகுதியற்றவராவார்.
பிற்படுத்த்ப்பட்டோர் வகுப்பு அல்லது அட்டவணை வகுப்பு மற்றும் பழங்குடி இனத்தை சார்ந்தவர்களுக்கு அதிகபட்ச வயது வரம்பு 40 ஆண்டுகளாகும்.
மேற்சொன்ன வயது வரம்புகள் நேரடி நியமனம் செய்யப்படுகின்ற முன்னாள் கிராம அலுவலர்க்கோ (அல்லது) உயர் நீதிமன்ற தீர்ப்புகளின்படி ஏற்கனவே கிராம நிர்வாக அலுவலர்களாக ஈர்த்துக் கொள்ளப்பட்ட முன்னாள் கிராம அலுவலர்களுக்கோ பொருந்தாது.
கல்வித் தகுதி:
தமிழ்நாடு மாநில மற்றும் சார்நிலைப் பணிகள் விதி 12 (அ) (1) மற்றும் பகுதி இரண்டிலுள்ள அட்டவணை ஒன்றில் நிர்ணயிக்கப்பட்டுள்ள குறைந்தபட்ச பொதுக்கல்வி.
பிணைத்தொகை:
இப்பதவிக்கு நிர்ணயிக்கப்படும் ஒவ்வொருவரும் பணியில் சேர்ந்த நாள் முதல் ஒரு மாதத்திற்குள் பிணைத்தொகையாக ரூ.2000 செலுத்த வேண்டும்.
பிற்படுத்தப்பட்டோர் ரூ. 1000 பிணைத்தொகையாக செலுத்த வேண்டும்.
பிணைத்தொகை அஞ்சல் அலுவலகத்தில் வைப்புத் தொகையாக வைக்கப்பட்டு, கணக்கை மாவட்ட ஆட்சியர் பெயரில் ஈடு காட்ட வேண்டும்.
கிராம நிர்வாக அலுவர் ஒய்வு பெறும் போது, பணியிறவு (அ) பணி நீக்கம் செய்யப்படும்போது, ராஜினாமா செய்யும் போது சம்பந்தப்பட்ட மாவட்ட ஆட்சியரால் அந்தத் தொகை விடுவிக்கப்படும்.
அலுவலர் மரணமடைந்தால், அரசுக்கு அவர் செலுத்த வேண்டிய பாக்கித் தொகை ஏதுமிருப்பின், அதை பிடித்தம் செய்து கொண்டு மீதித் தொகை குடும்பத்தாரிடம் வழங்கப்படும்.
பயிற்சிகள்:
இப்பதவிக்கு நியமனம் செய்யப்பட்ட ஒவ்வொருவரும் நிர்ணயிக்கப்பட்ட காலங்களுள்(3 ஆண்டுகள்) அரசு அளிக்கும் கீழ்க்கண்ட பயிற்சிகளில் தேர்வு பெற்றிருக்க வேண்டும்.
நில அளவைப் பயிற்சி
கிராம நிர்வாக அலுவலர் பயிற்சி
கிராம நிர்வாக அலுவலர்களின் அதிகாரங்களும் கடமைகளும்
கிராம சுகாதாரம்
கிராமக் கணக்குகள் நடைமுறை நூல்
பயிற்சி முடிந்தபின்பு தேர்வில் தேர்ச்சி பெற முடியாமல், பணியிலிருந்து விடுவிக்கப்படும் நிலையில், பயிற்சிக்குண்டான செலவுகள், பயிற்சிக் காலத்தில் பெற்ற சம்பளம், படிகள் போன்றவற்றை திருப்பிச் செலுத்த வேண்டும்.
தமிழ்மொழி தவிர்த்து பிற மொழியைத் தாய்மொழியாகக் கொண்டவர்கள் கிராம நிர்வாக அலுவலராகப் பணியில் சேர்ந்த 2 வருடங்களுள் அரசுப் பணியாளர் தேர்வானைக் குழு மூலம் நடத்தப்படும் தமிழ்மொழித் தேர்வில் தேர்ச்சி பெறாவிடின், அவர்கள் எந்த முன்னறிவிப்பும் இன்றி பணி நீக்கம் செய்யப்படுவார்கள்.
பதவிக்கு நியமிக்கப்படும் ஒவ்வொருவரும் அவரது பொறுப்பு கிராமத்தில் குடியிருக்க வேண்டும்.
பணியிட மாற்றங்கள்....
கோட்டாட்சித் தலைவரால் கோட்டத்திற்குள்ளும்
மாவட்ட ஆட்சியரால் அந்த மாவட்டத்திற்குள்ளும்
நிர்வாகக் காரணங்களுக்காக, வருவாய் நிர்வாக ஆணையரால், அந்த மாவட்டத்திற்கு வெளியேயும் பணியிடத்திற்கு உட்பட்டவராவார்.
*கிராம நிர்வாக அலுவலகர்களின் பணிகள் மற்றும் கடமைகள்*
பகுதி நேர கிராம அலுவலர்களுக்கு மாற்றாக முழு நேர கிராம நிர்வாக அலுவலகர்கள் நியமனம் செய்யப்பட்ட பின்னர் இவர்களுக்கான பணிகள் மற்றும் கடமைகள் குறித்தான விவர அட்டவணை ஒன்று அரசாணை எண் 581. நாள்: 3-4-1987-இல் நிர்ணயம் செய்து வெளியிடப்பட்டது. அதன்படி கீழ்க்கண்ட கடமைகளைச் செய்ய கிராம நிர்வாக அலுவலர்கள் பொறுப்பானவர்கள் ஆவார்கள்.
கிராமக் கணக்குகளைப் பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி பார்த்தல்
நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்குச் சேர வேண்டிய தொகைகளை வசூலித்தல்
சாதிச்சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்புச் சான்று ஆகியவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்
பொதுமக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிருந்து கடன்கள் பெற சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்கள் வழங்குதல்.
பிறப்பு, இறப்புப் பத்வேடுகளைப் பராமரித்தல்
தீ விபத்து, வெள்ளம், புயல் முதலியவற்றின் போது உடனுக்குடன் மேல் அலுவலர்களுக்கு அறிக்கை அனுப்புதல் மற்றும் இயற்கை இன்னல்களால் ஏற்பட்ட சேதத்தை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடும்போது உதவி செய்தல்.
கொலை,தற்கொலை,அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் மற்றும் விசாரணைகளுக்கு உதவி புரிதல்.
காலரா, பிளேக் மற்றும் கால்நடை நோய்கள் பற்றி அறிக்கை அனுப்புதல்.
இருப்புப் பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
கால்நடைப் பட்டி மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்
கட்டடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்கள் போன்ற அரசுச் சொத்துகளைப் பாதுகாத்தல்.
புதையல்கள் பற்று மேல் அலுவலகர்களுக்குத் தகவல் கொடுத்தல்.
முதியோர் ஒய்வூதியம் வழங்குவது குறித்தான பணிகளைக் கவனித்தல்.
பொதுச் சொத்துகள் பற்றிய பதிவேட்டைப் பராமரித்தல்.
முதியோர் ஒய்வூதியப் பதிவேட்டைப் பராமரித்தல்.
வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற சேவை நிறுவனங்களுக்குத் தேவையான விவரங்களை அளித்தல் மற்றும் ஒத்துழைத்தல்.
இது தவிர கிராம நிர்வாக அலுவலர்கள் கீழ்க்கண்ட பணிகளும் செய்ய கடமைப்பட்டவர்களாவார்கள்.
கிராம பணியாளர்களுடைய பணியினை கண்காணிப்பது.
நில ஆக்கிரமிப்புகளை தடுப்பது மற்றும் மேல் அலுவலகர்களுக்குத் தெரிவித்து உடனடி நடவடிக்கை எடுப்பது.
சர்வே கற்களை பராமரிப்பது, காணாமல் போன கற்களைப் பற்றி அறிக்கை அனுப்புதல்.
கிராமத்தில் நிகழும் சமூகவிரோத செயல்கள் குறித்தான அறிக்கை அனுப்புதல்.
குற்றவாளிகளின் நடமாட்டத்தையும் சந்தேகத்திற்கிடமான அந்நியர்கள் வருகையையும் தெரிவிப்பது.
வருவாய்த்துறை அலுவலகர்களுக்கும் மற்ற துறை அலுவலகர்களுக்கும் ஒத்துழைப்பு அளித்தல்.
சட்ட-ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்றங்கள் நடந்த உடனே அறிக்கை அனுப்புதல், சட்ட – ஒழுங்கு பேணுதற்காகக் கிராம அளவில் அமைதி குழு கூட்டி முன்னேச்சரிக்கை நடவடிக்கை எடுத்தல்.
கள்ளத்தனமாக மணல் எடுப்பது மற்றும் கல் உடைப்புகளைத் தடுப்பது குறித்து அறிக்கை அனுப்புதல்.
தேர்தல் சம்பந்தப்பட்ட பணிகள் செய்வது.
கணக்கெடுப்பு மற்றும் புள்ளி விவரங்களைச் சேகரிப்பதில் ஒத்துழைத்தல்.
அரசு அவ்வப்போது தொடங்கும் நலத்திட்டங்களை நடைமுறைப்படுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
மனு நீதி நாள் நிகழ்ச்சி நடத்த வட்டாட்சியருடன் ஒத்துழைத்தல், நிலப் பட்டா / வீட்டுமனைப் பட்டா / முதியோர் உதவித் தொகை வழங்குதல் / மனுக்கள் மீது அறிக்கை அனுப்ப உரிய ஆவணங்களைத் தயாரித்தல்.
பாசன் ஆதாரங்களைக் கண்காணித்தல் – ஏரிகளிலும் நீர்வழங்கும் பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புகள் இல்லாமல் தடுப்பது – அவற்றை முறையாகப் பராமரித்தல்.
கிராம அளவில் மூன்று வருடங்களுக்கு விற்பனை புள்ளி விவரங்கள்(Sale Statistic Register) எடுத்து ஒரு பதிவேடு நாளது வரை பராமரித்தல்.
பதிவு மாற்றம்(Transfer of Registry) அதற்கு சம்பந்தப்பட்ட ஆவணங்களை நாளது வரையில் பராமரித்தல்.
நிலப் பதிவேடுகளைக் கணினிமயமாக்குதலுக்குண்டான(Computerisation) பணிகளில் ஒத்துழைப்பு கொடுப்பது.
அரசு ஆணை எண் 212, வருவாய்த் துறை, தமிழ்நாடு 29-4-1999-இன் படி நாட்குறிப்பு பராமரித்து வட்டாட்சியருக்கு அனுப்புதல்.
கிராம அளவில் கடன் பதிவேடு(Loan Ledgers) மற்றும் இதர வசூல் கணக்குகளைப் பராமரித்து இது சம்பந்தமாகக் காலாண்டுக்கு ஒருமுறை வட்ட கணக்குகளுடன் சரிபார்த்தல்.
கள்ளச் சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு அறிக்கை அனுப்புதல்.
உயர் அலுவலர்கள் அவ்வப்போது இடும் பணிகளைச் செய்வது.
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) V.A.O வின் பணிகள்....
கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ) என்பவர் வருவாய் ஆவணங்களைப் பராமரிப்பது, நில வரி உள்ளிட்ட வரி வசூல்கள், பிறப்பு மற்றும் இறப்பு பதிவு, சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று விநியோகம், விபத்துகள் குறித்த ஆய்வறிக்கை, புயல், மழை, வெள்ளம், போன்ற இயற்கை சீற்றங்களின் பாதிப்புகள் குறித்து மேல் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புவது உள்பட பொறுப்பு மிக்க ஏராளமான பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக உள்ளனர்.
கிராமத்தை நிர்வகிப்பதற்கு என கிராம நிர்வாக அலுவலர் ( வி.ஏ.ஓ ), கிராம காவலர், கிராமப் பணியாளர் மற்றும் பாசனக் காவலர் ( தலையாரி ) என நான்கு ஊழியர்கள் நியமிக்கப்படுகிறார்கள்.
பணிகள்
1. பட்டா பெயர் மாற்றுதல்.
2. கிராம கணக்குகளை பராமரித்தல் மற்றும் பயிராய்வுப் பணி செய்தல்.
3. நிலவரி, கடன்கள், அபிவிருத்தி வரி மற்றும் அரசுக்கு சேரவேண்டிய தொகைகளை வசூலித்தல்.
4. சாதிச் சான்று, வருமானச் சான்று, இருப்பிடச் சான்று, சொத்து மதிப்பு சான்று ஆகிவையவை வழங்குவது குறித்து அறிக்கை அனுப்புதல்.
5. பொது மக்களுக்கு வங்கிகள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து கடன்கள் பெறுவதற்கு சிட்டா மற்றும் அடங்கல்களின் நகல்களை வழங்குதல்.
6. பிறப்பு மற்றும் இறப்பு பதிவேடுகளை பராமரித்தல்.
7. தீ விபத்து, வெள்ளம், புயல் போன்ற இயற்கை பேரிடர்களின் பொழுது உயர் அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்புதல், இயற்கை பேரிடர்களின் பொழுது ஏற்பட்ட இழப்புகளை வருவாய் ஆய்வாளர் மதிப்பிடு செய்யும் பொழுது உதவி செய்தல்.
8. கொலை, தற்கொலை மற்றும் அசாதாரண மரணங்கள் ஆகியவை குறித்து காவல் துறைக்கு தகவல் தெரிவித்தல் மற்றும் விசாரணைக்கு உதவி புரிதல்.
9. காலரா, பிளேக் உள்ளிட்ட நோய்களும் மற்றும் கால்நடை தோற்று நோய்கள் பற்றிய அறிக்கை அனுப்புதல்.
10. இருப்பு பாதை கண்காணிப்பிற்கு ஏற்பாடு செய்தல்.
11. கிராம ஊழியர்களின் சம்பளப் பட்டியல் தயாரித்தல்.
12. கால்நடைப் பட்டியல் மற்றும் சாவடிகளின் கணக்குகளைப் பராமரித்தல்.
13. கட்டிடங்கள், மரங்கள் மற்றும் அரசு புறம்போக்கு நிலங்களைப் பாதுக்காத்தல்.
14. புதையல்கள் பற்றி மேல் அதிகாரிகளுக்கு தகவல் கொடுத்தல்.
15. முதியோர் ஓய்வு ஊதியம் வழங்குவது குறித்த பணிகளை கவனித்தல்.
16. பொது சொத்துக்கள் பற்றிய பதிவேட்டை பராமரித்தல்.
17. முதியோர் ஓய்வு ஊதிய பதிவேட்டை பராமரித்தல்.
18. வளர்ச்சிப் பணிகள் வெற்றிகரமாக நடைபெற, சேவை நிறுவனங்களுக்கு தேவையான விவரங்கள் அளித்தல் மற்றும் ஒத்துழைப்பு செய்தல்.
19. உழவர்கள் நிலப் பட்டாக்களை மாறுதல் செய்து பெறவும், புலங்களை உட்பிரிவு செய்துக் கொள்ளவும், தனிப் பட்டாக்காளை பெறவும், இயலும் வகையில் நிலப்பதிவேடு, நில அளவை ஆவணங்கள் தொடர்பாக கணக்குகளை முறையாகவும் சரியாகவும் வைத்து வருதல்.
20. பாசன வாயில்களை முறையாக பராமரித்தல், ஏரிகளிலும், நீர் வழங்கு பாசனக் கால்வாய்களிலும் ஆக்கிரமிப்புக்கள் இல்லாமல் பார்த்துக் கொள்வதன் மூலம் நீர்பாசனத்திற்கு வகை செய்தல்.
21. சட்டம் ஒழுங்கு பேணுதல், உரிய நேரத்தில் நடவடிக்கை எடுப்பதின் மூலம் குற்றங்களைத் தடுத்தல், குற்ற நிகழ்ச்சிகள் நடந்தவுடனே அவை தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு தகவல் அனுப்புதல்.
22. நிலச்சீர்திருத்த சட்டங்கள் தொடர்பான முறையான நடவடிக்கை எடுத்தல்.
23. முறையாக துப்புரவு பணிகளை பேணி வருதல்.
24. அரசாங்கம் அவ்வபொழுது தொடங்கும் ஏனைய நலத்திட்டங்கள் முதலியவற்றை நடைமுறைபடுத்த அளிக்கப்படும் பணிகளை நிறைவேற்றல்.
25. கள்ளச்சாராயம் காய்ச்சுவோர் பட்டியல் தயாரித்து வருவாய் அலுவலர்கள் மற்றும் காவல்துறையினருக்கு தகவல் கொடுத்தல் போன்றவை.
இப்படி ஏராளமானப் பணிகளைச் செய்ய வேண்டியவர்களாக வி.ஏ.ஓ. க்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.
"கிராம நிர்வாக ஊழியர்கள் பணி நியமன ஆணையில், எந்தக் கிராமத்தில் பணியாற்ற நியமிக்கப்படுகிறார்களோ அதே கிராமத்தில் வசிக்க வேண்டும்" என்ற கட்டுப்பாட்டின் கீழ்தான் பணியில் அமர்த்தப்படுகிறார்கள்.
தாங்கள் பணிபுரியும் கிராமத்திலேயே அவர்கள் குடியிருந்தால் மட்டுமே, இந்தப் பணிகள் அனைத்தையும் குறையின்றி செய்யமுடியும்.
கிராம நிர்வாக அதிகாரிகள் பற்றிய முழுமையான தகவல்கள் சேகரிக்கப்பட்டு வெளியிடப்படுகிறது.
நன்றி
என்றென்றும் மக்கள் பணியில்
இரா.கணேசன்
அருப்புக்கோட்டை
கூடலூர் நுகர்வோர் மனிதவள சுற்றுச்சூழல் பாதுகாப்பு மையம் நீலகிரி மாவட்டம்
No comments:
Post a Comment