ரெய்டை காரணம் காட்டி கூடுதல் தொகைக்கு விற்பனை: தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் விலை 3 மடங்கு அதிகரிப்புby SENTHIL |
தமிழகத்தின் முக்கிய நகரங்களில், போலீசார், உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகளின் ரெய்டை காரணம் காட்டி, தடை செய்யப்பட்ட குட்கா, ஹான்ஸ் விலையை, மூன்று மடங்கு அதிகரித்து விற்பனை செய்கின்றனர்.
போலீஸ் உயரதிகாரிகள், குட்கா வியாபாரிகளுடன் கை கோர்த்ததாக எழுந்த புகாரையடுத்து, தமிழகம் முழுவதும் போலீசார், உணவு பாதுகாப்பு அதிகாரிகள் அதிரடி ரெய்டு நடத்தினர். ஒரு பக்கம் ரெய்டு, வழக்குப்பதிவு, கைது நடவடிக்கை தொடர்ந்த நிலையில், மறு பக்கம் அதிகாரிகளுக்கு மாமூல் கொடுத்து விட்டு, வழக்கமான விற்பனை நடந்து வருகிறது. தமிழகத்தின் முக்கிய நகரங்களுக்கு, குட்கா, ஹான்ஸ் உள்ளிட்ட பொருட்கள் சேலத்தில் இருந்து அனுப்பப்படுகிறது. போலீஸ் ரெய்டை காரணம் காட்டி, குட்காவின் அதிக பட்ச விற்பனை விலையை தயாரிப்பு நிறுவனம், மூன்று ரூபாய் என நிர்ணயித்து, மொத்த வியாபாரிகளுக்கு, 2.10 ரூபாய்க்கு வழங்குகின்றது. தற்போது அதன் விலையை மொத்த வியாபாரிகள், ஐந்து ரூபாயாகவும், சில்லரை வியாபாரிகள், ஏழு ரூபாயாகவும் உயர்த்தி உள்ளனர். ஹான்ஸ் அதிகபட்ச விலை, 10 ரூபாய் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ள நிலையில், 7.90 ரூபாய்க்கு வாங்கும் மொத்த வியாபாரிகள், 20 ரூபாய்க்கு விற்கின்றனர். சில்லரை வியாபாரிகள், 30 ரூபாய்க்கு விற்கின்றனர். இதேபோல், பான்பராக்கின் அளவை பொறுத்து விலை, ஐந்து ரூபாய் முதல், 10 ரூபாயாக உள்ள நிலையில், 30 ரூபாய்க்கு விற்பனை செய்கின்றனர். டிரைவிங் பணியில் ஈடுபடுபவர்கள் மற்றும் இரவு நேர பணியில் ஈடுபடுபவர்கள், அதில் கிடைக்கும் போதை, தூக்கம் வராமல் இருப்பதற்காக, அதிக விலை கொடுத்து வாங்கி பயன்படுத்துவது தொடர்வதால், தமிழகத்தில் திருட்டு விற்பனை கனஜோராக நடக்கிறது.
இது குறித்து வியாபாரிகள் கூறியதாவது: தமிழகத்தில் குட்கா, ஹான்ஸ் பொருட்களை உண்மையிலேயே போலீஸ் தடை செய்ய நினைத்தால், குடோன்களில் ஸ்டாக் வைத்துள்ள, பெரிய வியாபாரிகள் மீது நடவடிக்கை எடுத்தால் மட்டுமே, முழுமையாக தடை செய்ய முடியும். ஆனால், பெரிய வியாபாரிகள் பெரும்பாலும், வடமாநிலத்தை சேர்ந்தவர்களாக உள்ளதால், போலீஸ் உயரதிகாரிகளை வளைத்து போட்டு, தங்கு தடையின்றி விற்பனை செய்கின்றனர். கணக்கு காட்டுவதற்காக, சிறிய வியாபாரிகள் மீது, போலீசார் கைது நடவடிக்கை மேற்கொள்கின்றனர். இவ்வாறு அவர்கள் கூறினர்
No comments:
Post a Comment