மூர் மக்களின் உணவுப்பட்டியலில் மிக முக்கியமான இடத்தைப் பெற்றிருக்கும் அசைவ உணவுப்பொருள் சிக்கன். அதற்காக மக்கள் செய்யும் செலவும் அதன்மூலம் கிடைக்கும் சத்துகளும் மிக அதிகம். அதேநேரத்தில் சிக்கன்மீதும் முட்டையின்மீதும் நமக்கிருக்கும் சந்தேகங்கள் எக்கச்சக்கம்.
நாட்டுக்கோழி சிறந்ததா, பிராய்லர் கோழி சிறந்ததா, போலி முட்டைகளை எப்படிக் கண்டறிவது உள்ளிட்ட ஏகப்பட்ட சந்தேகங்கள் இவற்றைச் சுற்றி உலவுகின்றன. இந்தச் சந்தேகங்கள் அனைத்தையும் தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக் கழகத்தில் இயங்கும், கோழியின ஆராய்ச்சி நிலையத்தின் பேராசிரியர் ஆ.வே.ஓம் பிரகாஷிடம் கொண்டு சென்றோம்.
“நாட்டுக்கோழியில் இருக்கும் சத்துகள் மற்றும் பிராய்லர் கோழி வளர்ப்பு முறைகள் போன்றவை பற்றி ஏகப்பட்ட வதந்திகள் உலாவருகின்றன. முதலில் அவற்றிலிருந்து மக்கள் வெளியே வர வேண்டும். உணவுக்கான கோழிகளை நாட்டுக்கோழிகள், பிராய்லர் கோழிகள், முட்டைக்கோழிகள் (லேயர் கோழிகள்) என மூன்று வகைகளாகப் பிரிக்கலாம். இவற்றில் நாட்டுக்கோழிகளை வீட்டிலேயே வளர்க்க முடியும்.
பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமே வளர்க்கப்படுபவை. அதேபோல லேயர் கோழிகள் பெரும்பாலும் முட்டை களுக்காக மட்டுமே வளர்க்கப்படுகின்றன. முட்டை உற்பத்தி குறைந்ததும் பின்னர் இறைச்சிக்காகப் பயன்படுத்துவார்கள். இவற்றில் பிராய்லர் கோழி மற்றும் லேயர் கோழி இவை இரண்டுக்கும் இடையேதான்  குழப்பங்கள் ஏற்படலாம். சந்தைக்கு வருவதும், நாம் உண்பதும் பிராய்லர் கோழி முட்டைகள் கிடையாது. அவை அனைத்தும் லேயர் கோழிகளின் முட்டைகளே. பிராய்லர் கோழி என்பது இறைச்சிக்காக மட்டுமேதான் வளர்க்கப்படுகின்றது.
நாட்டுக்கோழிகளை 12 வாரங்கள் வளர்த்தப் பின்பே இறைச்சிக்காக அனுப்ப முடியும். முட்டைக்காக வளர்த்தால் 20 வாரங்கள் முதல் 72 வாரங்கள் வரைக்கும் காத்திருக்க வேண்டும். இந்த இடைவெளியில் நாட்டுக்கோழிகள் சுமார் 80 முதல் 150 வரையிலான முட்டைகளைத் தரும். வீடுகளில் வளர்க்கப்படும் நாட்டுக்கோழிகள் கம்பு, சோளம், அரிசி, பூச்சிகள் என்று தனக்குக் கிடைத்த அனைத்தையும் உண்ணும். அதேசமயம் அவற்றுக்குச் சமச்சீர் தீவனங்கள் அளிப்பதன் மூலம்தான் அனைத்துச் சத்துகளும் கிடைக்கும். அப்படி கிடைத்தால்தான் முட்டைகளின் எண்ணிக்கை, கோழியின் உடல் எடை ஆகியவை அதிகரிக்கும். நாட்டுக்கோழிகள் வளர்ப்போர் இந்த விஷயத்தில் கூடுதல் கவனம் செலுத்துவதன்மூலம் நல்ல லாபம் அடையலாம்.
பிராய்லர் கோழிகளை 35 முதல் 38 நாள்களிலேயே இறைச்சிகளுக்காக அனுப்பிவிடுவார்கள். அப்போதே ஒன்றரை முதல் இரண்டு கிலோ வரை எடை இருக்கும். முட்டைக்கோழிகளைப் பொறுத்தமட்டில் அதன் 20 முதல் 72-வது வார இடைவெளிகளில் முட்டைகளை இடும். இந்தக் காலகட்டத்தில் மட்டுமே சுமார் 320 முதல் 330 வரையிலான முட்டைகள் கிடைக்கும். 72 வாரங்களுக்கு பின்புதான் இந்த முட்டைக்கோழிகளை இறைச்சிக்காக அனுப்புவார்கள். ஆனால், பிறந்து வெறும் 35 நாள்களே ஆன கோழிக்கும், சுமார் ஒன்றரை வருடம் ஆன கோழிக்கும் இடையே நிறைய வேறுபாடுகள் இருக்குமல்லவா? அதனால் கறியின் சுவை, தன்மை ஆகியவற்றில் நிறைய மாறுபாடுகள் இருக்கும். இந்தக் காரணத்தால் முட்டைக்கோழிகளின் கறி, பிராய்லர் கோழியின் கறியை விடவும் விலை குறைவாக இருக்கும்.
நாட்டுக்கோழிகளுக்கு இயற்கையோடு இயைந்து வாழும் பண்பு அதிகம். அதனால் பிராய்லர் கோழிகளை விடவும், அதிகமான வெப்பத்தைத் தாங்கும் திறன் கொண்டது. பிராய்லர் கோழிகளை விடவும் நோய் எதிர்ப்பு சக்தியும் அதிகம். நாட்டுக்கோழிகளில் எலும்பு அதிகமாகவும், இறைச்சி குறைவாகவும் இருக்கும். பிராய்லர் கோழிகளைவிட கறியின் அளவு குறைவாக  இருக்கும். மற்றபடி பிராய்லர் கோழியில் இருக்கும் சத்துகளுக்கும் நாட்டுக்கோழிகளில் இருக்கும் சத்துகளுக்கும் இடையே பெரிய அளவில் வேறுபாடுகள் கிடையாது. இதுதான் உண்மை. பிராய்லர் கோழிகளை விடவும், சிலருக்கு நாட்டுக்கோழிகள் சுவையாகவும் ஆரோக்கியமாகவும் தெரியலாம். அது அவர்களின் சுயவிருப்பம் சார்ந்தது. அதேபோல பிராய்லர் கோழிகள் பற்றி உலவும் மற்றொரு வதந்தி ஹார்மோன் ஊசிகள். ஒரு கிலோ சிக்கன் சுமார் 120 - 140 ரூபாய் என்ற அளவில் கிடைக்கிறது.
ஆனால், வதந்திகளில் சொல்லப்படுவது போல ஹார்மோன் ஊசிகள் செலுத்தப்படுமேயானால் இந்த விலையில் சிக்கனைத் தர முடியாது. காரணம், ஹார்மோன் ஊசிகளே நூறு ரூபாய் அளவுக்கு வரும். அதுமட்டுமின்றி ஹார்மோன் ஊசிகள் என்பவை நம் நாட்டில் சட்டவிரோதமானவையும்கூட. வீணாக இப்படி வதந்திகளைப் பரப்பி மக்களை அச்சத்துக்குள்ளாக்குகிறார்கள். அதேபோல சிக்கன் சாப்பிட்டால் சூடு, வெயில் காலத்தில் சிக்கன் சாப்பிடக் கூடாது போன்ற விஷயங்களும் வதந்திகளே. பிராய்லர் கோழிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்திக்காகத் தடுப்பூசிகள் செலுத்தப்படும். மற்றபடி தீவனங்கள், மூலிகைப்பொருள்கள் போன்றவை மட்டுமே வழங்கப்படும். எனவே, இதுபோன்ற வீண் வதந்திகளை நம்ப வேண்டாம்.
இந்தியாவில் 1980-களுக்குப் பின்புதான் பிராய்லர் கோழிகளின் வரத்து அதிகரித்தது. அதற்குக் காரணம், சந்தையில் ஏற்பட்ட பற்றாக்குறைதான். கோழிக்கறி உண்பவர்களின் எண்ணிக்கை அதிகரிக்க இந்த பிராய்லர் கோழிகளும் ஒரு காரணம். மக்களிடம் ஏற்பட்ட ஊட்டச்சத்துக் குறைபாட்டுக்குத் தீர்வாக இருந்தது நாட்டுக்கோழிகளை விடவும் குறைவான விலையில் கிடைத்த பிராய்லர் கோழிகளே. இப்போதும் நம்மில் நாட்டுக்கோழிகள் உண்பவர்களை விடவும் பிராய்லர் கோழிக்கறி உண்பவர்கள் அதிகம். எனவே சுவைக்காக அல்லது சுயவிருப்பத்தின்பேரில் நாட்டுக்கோழிகளை நீங்கள் விரும்பலாம். ஆனால், அதற்காக பிராய்லர் சிக்கன் உண்பவர்களை வீண் காரணங்களைச் சொல்லி அச்சுறுத்தாதீர்கள்” என்றார்.
நாட்டுக்கோழி முட்டைகள் VS சாதாரண கோழிமுட்டைகள்
முட்டைகள் குறித்த சந்தேகங்களுக்கு பதில் அளித்த தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் இணைப்பேராசிரியர் சு.எழில்வளவன், “முட்டை உற்பத்தியைப் பொறுத்தவரை இந்தியா, உலகளவில் மூன்றாவது இடத்தில் இருக்கிறது. இந்த உலகில் மிகவும் மலிவாக அதேநேரம் கலப்படம் இல்லாமல் அனைவருக்கும் எளிதில் கிடைக்கக்கூடிய உணவு முட்டைதான். அதில் சந்தேகமே வேண்டாம். ஒரு கோழி முட்டையில் வைட்டமின் சி தவிர, மற்ற அனைத்து சத்துகளுமே இருக்கின்றன. எனவே, முட்டை என்பது நம் மக்களின் ஊட்டச்சத்து தேவையைப் பூர்த்தி செய்வதில் முக்கியப் பங்காற்றுகிறது.
‘ஒரு வருடத்துக்கு ஓர் இந்தியர் 180 முட்டைகள் சாப்பிட வேண்டும்’ என்கிறது இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (ICMR). வெளிநாடுகளில் முட்டையின் அளவைப் பொறுத்து கிரேடு வாரியாகப் பிரித்து விலை நிர்ணயம் செய்யப்பட்டு விற்பனைக்கு அனுப்பப்படும். நம்நாட்டில் அந்த முறை இல்லை. நாட்டுக்கோழி முட்டைகளுக்கும், சாதாரண முட்டைகளுக்கும் இடையே சத்துகளில் எவ்வித வேறுபாடும் கிடையாது. உருவத்திலும், தன்மையிலும் மட்டுமே சிறிய அளவில் வேறுபடும். சுயவிருப்பத்தின் பேரிலேயே நாட்டுக்கோழி முட்டைகள் வாங்கலாமே தவிர, அதில்தான் அதிக சத்துகள் இருக்கின்றன என நம்பி வாங்க வேண்டாம். ஏனெனில், சாதாரண கோழி முட்டைகளிலேயே அந்தச் சத்துகள் இருக்கின்றன” என்றார்.

இயற்கைக்கு எதிரானவை பிராய்லர் கோழிகள்!
பிராய்லர் கோழிகள் தொடர்பான சர்ச்சைகள் குறித்து சித்த மருத்துவர் காசிபிச்சையிடம் கேட்டபோது, “பிராய்லர் கோழிகள் வளர்வதற்கு ஊசி போடுகிறார்கள், ரசாயனம் செலுத்துகிறார்கள் என்பதெல்லாம் உண்மைக்கு மாறான ஒன்றுதான். காரணம், அத்தனை கோழிகளுக்கும் ரசாயனம் செலுத்துவது என்பது இயலாத காரியம். ஆனால், பிராய்லர் கோழிகளில் இருக்கும் பிரச்னையே, அவை இயற்கைக்கு எதிராக இருப்பதுதான். அதாவது அதன் மரபணுக்களிலேயே விரைவாக வளரவும், அதிக சதைப்பகுதிகளைக் கொண்டிருக்கவும் ஏற்றவாறு மாற்றியமைக்கப்படுகிறது. இந்த மரபணு மாற்றம்தான் இங்கே பிரச்னை. இதனால் இயற்கையான கோழிகளில் இருக்கும் குணங்கள் எதுவும் இவற்றில் இருப்பதில்லை. சத்துகள் எனப் பார்த்தால் நாட்டுக்கோழி முட்டையில் இருக்கும் அனைத்துச் சத்துகளும் பிராய்லர் முட்டையிலும் இருக்கும். நாட்டுக்கோழியில் இருக்கும் அனைத்து சத்துகளும் பிராய்லர் கோழியிலும் இருக்கும்.
காலை சரியான நேரத்துக்குக் கூவுவது, முட்டைகளைக் கவனமாக அடைகாப்பது, குஞ்சுகளைக் கழுகுகளிடமிருந்து தாய்மை உணர்வோடு பாதுகாப்பது எனப் பல குணங்கள் நாட்டுக்கோழிகளின் மரபணுக்களிலேயே இருக்கின்றன. ஆனால், பிராய்லர் கோழியில் இதில் ஏதாவது ஒன்றாவது இருக்கிறதா? இயற்கையில் ஒவ்வோர் உயிருக்கும் பருவ முதிர்ச்சியடையும் காலம் என ஒன்று இருக்கும். ஆனால், இது பிராய்லர் கோழிகளுக்கு மனிதர்களால் நிர்ணயிக்கப்படுகிறது. 60 நாள்களில் வளர்க்கப்பட வேண்டிய பிராய்லர் கோழிகளை, அதற்கும் குறைவான நாள்களிலேயே வளர்க்க முடிகிறதென்றால், அது எப்படி நம் உடல்நலனுக்கு ஏற்றதாக இருக்க முடியும்? பிறகு எப்படி, இயற்கையோடு இணைந்த ஓர் உணவாக இருக்கும்? இயற்கைக்கு எதிராக இருக்கும் எந்த விஷயமுமே, இந்தப் பூமியில் வாழும் உயிர்களுக்கு எதிரானது.
அப்படித்தான் பிராய்லர் கோழிகளும், முட்டைகளும். அதிக உற்பத்திக்காகவும், ஊட்டச்சத்து குறைபாடுகளுக்கும் பிராய்லர் இறைச்சி மாற்று என்கிறார்கள். ஆம், உண்மைதான். இவற்றால் ஊட்டச்சத்து குறைபாடுகளால் ஏற்படும் நோய்கள் குறைந்திருக்கின்றன.
ஆனால், அதற்குப் பதிலாகப் புதிதாக பல்வேறு நோய்களும் மக்களுக்கு உருவாகிவிட்டதே? முன்னர் எப்போதாவது ஒருமுறை கோழி இறைச்சியை உண்டவர்கள்கூட, இன்று தினமும் உண்ணும் அளவுக்கு மாறிவிட்டார்கள். இது வணிகம் என்பதையும் தாண்டி, நம் ஆரோக்கியத்துக்கே கேடான ஒரு விஷயம். இதனால்தான் விரைவில் பூப்பெய்வது, விந்தணுக்கள் குறைவது உள்பட பல்வேறு பிரச்னைகளுக்கு மக்கள் ஆளாகிறார்கள்” என்றார்.
SENTHIL | 1,October, 2017 at 10:44 am | Categories: NEWS | URL: http://wp.me/peOH5-72W

No comments:

Post a Comment

உயில் நடைமுறைகள்

 *பதிவு செய்யப்பட்ட உயில் மீது நீதிமன்றத்தில் வழக்கு தொடுக்க முடியுமா?... சட்டம் கூறுவது என்ன*...✍🏻 ⚖️உயில் என்பது ஒரு நபர் தனது மரணத்திற்க...