பதிவுப் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே இனிப்புப் பொருட்களை வாங்க வேண்டும் – உணவு பாதுகாப்பு துறை அறிவுரை.by SENTHIL |
விருதுநகர்
விழாக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவுப் பெற்ற நிறுவனங்களில் மட்டுமே வாங்க வேண்டும் என்று மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா தெரிவித்தார்.
விருதுநகர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு நியமன அலுவலர் அனுராதா நேற்று செய்திக்குறிப்பு ஒன்றை வெளியிட்டார். அதில், “தற்போது விழாக்காலம் தொடங்கியுள்ளது. விழாக் காலத்தில் விதவிதமான இனிப்பு பலகாரங்கள், காரங்கள் மற்றும் கேக் போன்ற உணவுப் பொருள்களை மக்கள் விரும்பி வாங்குவர்.
தீபாவளிக்கு இனிப்பு மற்றும் கார பண்டங்களுக்கு சீட்டு நடத்துபவர்கள் உட்பட அனைத்து தயாரிப்பாளர்கள் மற்றும் விற்பனையாளர்களும் உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவு செய்து உரிமம் பெற வேண்டும்.
இனிப்பு மற்றும் பேக்கரி தயாரிப்பவர்கள் தரமான மூலப்பொருள்களைக் கொண்டு சுகாதாரமான முறையில் தயாரித்து வழங்க வேண்டும். கலப்பட பொருள்களையோ, அனுமதிக்கப்பட்ட அளவிற்கு அதிகமான நிறமிகளையோ உபயோகிக்கக் கூடாது.
பேக்கிங் செய்யப்பட்ட உணவுப் பொருள்களுக்கு, விவரச் சீட்டு வைத்து அதில் தயாரிப்பாளரின் முழுமுகவரி, உணவுப் பொருளின் பெயர், தயாரிக்கப்பட்ட, பேக்கிங் செய்யப்பட்ட தேதி, காலவதியாகும் காலம், சைவ மற்றும் அசைவ குறியீடு ஆகியவற்றை அவசியம் குறிப்பிட வேண்டும்.
மேலும், உணவுப் பொருள்களை ஈக்கள், பூச்சிகள் மற்றும் கிருமி தொற்று இல்லாத சுகாதாரமான சூழலில் மக்களுக்கு விற்பனை செய்ய வேண்டும்.
மக்களும் விழாக் காலங்களில் பலகாரங்கள் வாங்கும்போது, உணவுப் பாதுகாப்பு துறையில் பதிவுப் பெற்ற நிறுவனங்களில் மட்டும் வாங்க வேண்டும்.
இது தொடர்பாக புகார்கள் இருந்தால் விருதுநகர் மாவட்ட உணவுப் பாதுகாப்பு துறை நியமன அலுவலரிடமோ அல்லது மாநில உணவுப் பாதுகாப்பு துறை அலுவலகத்திற்கோ புகார் தெரிவிக்கலாம்” என்று அதில் குறிப்பிட்ட்டு இருந்தார்.
No comments:
Post a Comment